Friday, September 12, 2014

காண்டெபெரி - யாத்திரை செல்வோமா..! - 4

யாத்திரை தொடர்கின்றது - 4

காண்டபெரி ராஜா ராணி கதையைத் தொடர்கிறேன்...

கி.பி 3ம் நூற்றாண்டு வாக்கிலே தற்போதைய காண்டபெரி நகரிலே அடிப்படையில் ஜெர்மனியின் வடக்குப் பகுதியிலிருந்து வந்து சேர்ந்த யூட்டஸ், சாக்ஸன்  இனக் குழுவினர் நிறைந்திருந்தனர். கி.பி. 407ம் ஆண்டு வாக்கில் காண்டபெரி நகரை விட்டு ரோமானியப் படைகள் சென்று விட்ட பின்னர் அங்கே இப்பகுதியில் ஒரு சில குடியானவர்கள் மட்டுமே விவசாயம் செய்து கொண்டு கோட்டைப் பகுதிக்கு உள்ளே வசித்து வந்தனர். இது ஒரு சிறு நகரமாக அப்போது உருவாகியிருந்தது. இந்த சாக்ஸன் இனக்குழுவைச் சேர்ந்தவர் கெண்ட் அரசர் ஏதல்பெர்ட்(Ethelbert).  இவர் அப்போதைய ப்ரான்ஸ் நாட்டின் இளவரசி   பெர்தா (Bertha) வை மணந்தார்

அப்போது ப்ரான்ஸ் கத்தோலிக்க மதத்தைத் தழுவி இருந்தது. ஆக மகாராணியார் பெர்தாவும் கத்தோலிக்க கிறிஸ்து மதத்தைச் சார்ந்தவர் என்பதை அறியலாம். சாக்ஸன் இனத்து மகாராஜா ஏதல்பெர்டோ இயற்கை  பேகன் வழிபாட்டு முறையை வழக்கமாகக் கொண்டிருந்தவர்.

ரோம் நகரின் கத்தோலிக்க  மடம் இங்கிலாந்தின்  கெண்ட் பேரரசுக்குப் பாதிரியார் ஆகுஸ்தீன் அவர்களை அனுப்பி வைத்தது. கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவரான பெர்தா தாமும் இதே மதத்தைச் சார்ந்தவர் என்ற அடிபப்டையில் பாதிரியாரை வரவேற்றார் என்பதோடு மட்டுமல்லாமல் கெண்ட் ஆட்சிக்குட்பட்டிருந்த பகுதிகளில் கத்தோலிக்க கிறிஸ்துவ மதம பரவ அரசு சார்ந்த உதவிகளையும் செய்தார். 

முதலில் காண்டெபெரி காத்தீட்ரல் காண்டெபெரி நகர கோட்டைக்குள் கி.பி 597ல் கட்டப்பட்டது.  இங்கே பாதிரியார் ஆகுஸ்தீன் சமய நடவடிக்கைகளை ஏற்படுத்தவும்  அது சமயம் இது முக்கிய இடமாகத் திகழ்ந்தது.


​கெத்தீட்ரல்


கி.பி 598ம் ஆண்டில் பாதிரியார் ஆகுஸ்தீனும் அவரோடு வந்து சேர்ந்த ஏனைய கத்தோலிக்க சாதுக்களும் காண்டெபெரி கோட்டைக்கு வெளிப்புறத்தில் ஒரு மடத்தை நிறுவினர். இந்தக் கட்டிடம் இன்னமும் இருக்கின்றது.  


St Augustine's Abbey

படிப்படியாக காண்டபெரி மிகப் பெரிய சமய மத போதனை நடைபெறும் நகரமாக உருபெற ஆர்மபித்தது. ரோம் நகரின் கத்தோலிக்க மத பீடத்திலிருந்து கொடுக்கப்பட்ட ஆணையின் படி கி.பி.603ம் ஆண்டு காண்டபெரி ஆர்ச்பிஷப் கொண்ட ஒரு தேவாலயத்தையும் உள்ளடக்கி ஒரு பெரும் கத்தோலிக்க சமய நகரமாக உயர்ந்தது.

கெண்ட் பேரரசு அதன் ஆதிக்கத்தை விரிவாக்க இங்கிலாந்து முழுமையும் கத்தோலிக்க மதம் பரவியது. போப்பின் ஆணையின் படி தொடர்ந்து பல மத போதகர்கள் வருவதும் தேவாலயங்கள் கட்டப்படுவதும் என்று கொஞ்சம் கொஞ்சமாக கத்தோலிக்க மதத்தின் ஆதிக்கம் இங்கு நிலைபெற்றது. 

இது தான் இந்த ராஜா-ராணி கதை. அடுத்து கெண்டபெரிக்கே முக்கியமான தோமஸ் பெக்கட் கதையைச் சொல்கிறேன். கேட்க ஆவல் உண்டு தானே ?

தொடரும்...

Saturday, September 6, 2014

புத்தரின் பூமி....தாய்லாந்து! பயணத் தொடர் - 11

இந்தத் தாய்லாந்துப் பயணத் தொடரில் இன்னமும் நாம் அயோத்தையாவில் தான் இருக்கின்றோம். :-)

இதுவரை அயோத்தையாவில் நான் ஒரு நாளில் பார்த்த மூன்று புத்த விகாரைகளைப் பற்றி விளக்கியிருக்கின்றேன்.  அயோத்தையாவில் இந்த மூன்று பௌத்த ஆலயங்கள் மட்டும் தான் இருக்கின்றனவா எனக் கேட்டு விடாதீர்கள். மறக்க வேண்டாம்... அயோத்தையா 250 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு அரச நகரம். ஆக மிக அதிக எண்ணிக்கையிலான பௌத்த விகாரைகள் நிறைந்த ஒரு ஊர். ஆக செல்லும் இடமெல்லாம் பல்வேறு காலகட்டங்களில் கட்டப்பட்ட பௌத்த ஆலயங்களையும், மடங்களையும், சிதிலமடைந்த விகாரைகளையும் ஆங்காங்கே பார்த்துக் கொண்டே தான் செல்வோம்.



ப்ரா மங்கோன் போபிட் விகாரையைக் கடந்து நாங்கள் நடந்து எங்கள் பஸ் நிறுத்தியிருக்கும் இடம் வரும் வரையில் நடந்து வரவேண்டும். இந்தப் பகுதியில்  நடைபாதையின் இரு பக்கங்களிலும் மிக அதிகமான உணவுக் கடைகள் இரு புறங்களிலும் நிறைந்து காணப்படுகின்றன.


கோயிலுக்கு வரும் சுற்றுப் பயணிகளும் பக்தர்களும் செல்லும் போது வாங்கிச் செல்லும் வகையில் உணவுப் பொருட்கள் விற்கப்படுகின்றன. தாய்லாந்து உணவு வகையில் சைவ உணவு அசைவ உணவு என கடுமையான வித்தியாசத்தைக் காணமுடியவில்லை. கோயில் வளாகத்திலேயே அசைவ உணவுகள் விற்கும் கடைகள் பல கடல் உணவு வகைகளை வைத்து விற்பனை செய்வதையும் காணலாம்.




கடைகளில் பார்த்துக் கொண்டே வரும் போது நான் அறிந்த மலேசிய பலகாரங்கள் ஏதேனும் கிடைக்கின்றனவா என என் கண்கள் நோட்டமிட்டுக் கொண்டேயிருந்தன. மலேசிய பலகாரங்கள் பலவகை. அவற்றை சுவைத்தவர்கள் மீண்டும் மலேசிய உணவுகளையே நாடிச் செல்வர். ஆக எனக்கும் அங்கு ஏதாவது எனக்குப் பிடித்த சுவையில் ஏதேனும் கிடைக்குமா என அறிய ஆவல். அதே வேளை பயணத்தில் இருக்கும் போது அதிகமாக சாப்பிடுவதும் தேவையற்றது என்ற சிந்தனையும் மனதில் ஓடியதால் பார்த்துக் கொண்டேயாவது வருவோமே என எண்ணி நோட்டமிட்டுக் கொண்டு வந்தேன். 

அடிப்படையாகவே மலாய், இந்தோனீசிய, தாய்லாந்து உணவுகள் ஏறக்குறைய, தேங்காய், அரிசி மாவு, மரவள்ளிக் கிழங்கு மாவு, சர்க்கரை, கடலை போன்றவற்றால் செய்யப்படுவதால் சுவை அதிக வித்தியாசம் இருக்காது. ஆனால் செய்முறையில் வித்தியாசம் இருக்கும். உதாரணமாக பேங்காங் எனப்படும் பலகாரம் இந்தோனீசிய வகையின் சுவை செய்முறை வேறு, தாய்லாந்து வகையின் சுவை செய்முறை வேறு, மலேசிய வகையின் சுவை செய்முறை வேறு. ஆக ஏதேனும் சிறு மாற்றங்களுடன் இவை இருப்பதை வாங்கி சாப்பிட்டு பார்த்தால் மட்டுமே அறிந்து கொள்ள முடியும். 

இந்த எண்ணமும் மனதில் ஓட நானும் இருக்கும் இந்த பல்வேறு வகை பலகாரங்களில் எதனை வாங்கலாம் என யோசித்துக் கொண்டே வந்தேன்.  வாழைப்பழத்தில் செய்த பலகாரம் பிடிக்கும். அதோடு மரவள்ளிக் கிழங்கு, தேங்காய் ஆகியவற்றில் செய்தவையும் பிடிக்கும். ஆக இந்த வகைகளில் கொஞ்சமாக வாங்கிக் கொண்டேன்.பேருந்தில் பயணிக்கும் போது இல்லாவிட்டாலும் அடுத்தடுத்த நாட்களிலும் சாப்பிட்டுக் கொண்டே செல்லலாமே என முன்னேற்பாடாக!.



அந்தச் சந்தையில் நடந்து கொண்டே வரும் போது ஒரு சிறிய பகுதி என் கண்களைக் கவர்ந்தது. ஒரு இளம் பெண் அமர்ந்து கொண்டு தோசைக்கல் போன்ற ஒன்றில் கையால் மாவினை தோசை வார்ப்பது போல வார்த்து அது காய்ந்து வெந்ததும் அதனை அழகாக கையால் சுரண்டி எடுத்து காயவைத்து பின்னர் ஆறி காய்ந்தவற்றை   ஒரு ப்ள்ஸ்டிக் பைக்குள் வைத்து கட்டி கட்டி அடுக்கிக் கொண்டிருந்தார். இது வெள்ளை, பச்சை, இளம் சிவப்பு வர்ணங்களில் தயாராகிக் கொண்டிருந்தது. என் கவனத்தை இது ஈர்க்கவே இதில் பச்சையிலும் இளஞ்சிவப்பிலும் 2 பைகள் வாங்கிக் கொண்டேன்.  சாப்பிடும் போது ஆச்சரியப் பட்டுப் போனேன். நாம் நன்கு பழகிய சோன் பப்படி தான் அது. தூள் தூளாக மெலிதாக வரும் இந்த பதார்த்தத்தை ஓரிரு நாட்கள் வைத்திருந்து சிறிது சிறிதாக சாப்பிட்டு மகிழ்ந்தேன். 



இப்படி சந்தையைச் சுற்றி விட்டு வந்த எங்களுக்கு பேருந்தில் ஏறியதும் எங்கள் பயண வழிகாட்டியிடமிருந்து சுவைத்துப் பார்க்க சில பலகாரங்களும் கிடைத்தன. எல்லோரும் சுவைத்துப் பார்க்க வேண்டுமென நினைத்து சில மாறுபட்ட வகை இனிப்பு பதார்த்தங்களை எங்களுக்காக வாங்கி வைத்திருந்தார். இதனை சாப்பிடும் போதே அதிகமாகச் சாப்பிட வேண்டாம் எனவும், ஏனெனில் எங்களுக்காக ஓரிடத்தில் மதிய உணவு தயாராகிக் கொண்டிருக்கின்றது எனக் குறிப்பிட்டுச் சொல்லி பார்வையாலேயே பசி தீர்த்துக் கொள்ளுங்கள் என சொல்லாமல் சொல்லி விட்டார் :-)

பாங்காக் நகரில் காலையில் புறப்பட்டதிலிருந்து பல இடங்களுக்குச் சென்ற அசதி, பஸ் பயணம் என எல்லாம் சிறிது அசதியைக் கொடுத்துக் கொண்டிருந்தது. மதிய உணவு சாப்பிட்டால் தான் மீண்டும் தெம்பு வரும் என்று மனம் சொல்லிக் கொண்டிருந்தது.

தொடரும்...


சுபா