Friday, May 29, 2015

விரும்பாமல் சென்று.. விரும்பிய டர்பன்..! - 15

காலையில் புற்று மாரியம்மன் கோயிலில் வழிபாட்டை முடித்ததோடு கோயில் நிர்வாகத்தலைவர் திரு சீலன் ஆசாரியுடன் ஒரு பேட்டியையும் செய்து முடித்தேன். அத்தோடு, சாஸ்திரிய இசைபயின்று அதே வேளை தமிழிசை பாடி டர்பனில் இசைக் கச்சேரிகள் நடத்துபவரும் இசைப்பள்ளி நடத்தி வருபவருமான திரு.கதிரேசனையும் ஒரு பேட்டி கண்டேன். ஆலயத்தில், எனக்கும் என்னுடன் வந்திருந்த ஏனையோருக்கும் ஆலய நிர்வாகத்தினர் தேனீரும் பலகாரங்களும் வழங்கி அன்புடன் உபசரித்தனர்.

பேட்டிக்குப் பின்னர் ஆலய நிர்வாகத்தலைவர் திரு.சீலன் ஆசாரி, சாம் விஜய் (அமர்ந்திருப்போர்)
திரு.சின்னப்பன், ஆலயத்தின் மற்றும் ஒரு நிர்வாகத்தர் (நிற்பவர்கள்) 

அங்கிருந்து  சிவானியின் வாகனத்தில் சிலரும் கோகியின் வாகனத்தில் சிலரும் எனப் புறப்பட்டோம். எங்களின் அடுத்த இலக்கு டர்பன் முருகன் கோயில். 


​சிவானி 

புற்று மாரியம்மன் கோயிலிருந்து ஏறக்குறைய 7 நிமிட பயணத்தில் இந்தக் கோயிலை அடைந்து விடலாம். செல்லும் போதே டர்பன் நகர சாலைகள் வீடுகளின் அமைப்புக்களையும் பார்த்துக் கொண்டே வந்தேன்.

​ஆஸ்திரேலிய நண்பர் திரு.சுகுமாரன், சாம் விஜய், திரு.சின்னப்பன்

சிவானி இரண்டு முறை எங்களை அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது. முதல் பயணத்தில் மலேசிய நண்பர்களை முருகன் கோயிலில் கொண்டு வந்து விட்டு விட்டு, கோயிலில் பேட்டி செய்து கொண்டிருந்த எங்களை அழைத்துச் செல்ல மீண்டும் வந்திருந்தார். மிகப்பொறுப்புடன் எங்களை அழைத்துச் செல்ல வேண்டும் என நினைத்துக்கொண்டு எல்லா காரியங்களையும் கவனத்துடனும் பொறுப்புடனும் செய்வதைப் பார்த்து ரசித்தேன். எங்களுக்குப் பால் பாயசம் செய்ய வேண்டும் என சொன்னதில் இடையில் வாகனத்தை நிறுத்தி பால் பாக்கெட்களும் வாங்கிக் கொண்டார். 

​சாலையில் ஒரு வியாபாரி முருக்கு விற்றுக் கொண்டு செல்கின்றார்

வாகனத்தில் செல்லும் போதே சாலையோர வியாபாரிகள் வாகன ஓட்டிகளிடம் வியாபாரம் செய்வதையும் காண முடிந்தது. எங்கள் வாகனத்தின் அருகே முருக்கு தூக்கிக் கொண்டு வந்து விற்க வந்தார் ஒரு ஆப்பிரிக்கர். அவர் கையிலும் முருக்கா என பார்த்து வியந்து புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.

​டர்பன் சாலையில்

சில நிமிடங்களில் முருகன் கோயில் வாசலை வந்தடைந்து விட்டோம் என்பதற்கு அடையாளமாக சற்று தூரத்திலேயே நெடிய முருகன் சிலையைக் காண முடிந்தது. பின்புறமாகச் சென்று வாகனத்தை நிறுத்த, வாகனத்தில் வந்த  நாங்கள்  இறங்கிக் கொண்டோம்.
.


அப்போது மதிய வேளை. ஆயினும் கோயில் பூட்டப்படாமல் திறந்தே இருந்தது. ஆலயத்தில் பக்தர்கள் இல்லாத நேரம் அது. 

தொடரும்.

சுபா

Friday, May 22, 2015

விரும்பாமல் சென்று.. விரும்பிய டர்பன்..! -14

தென்னாப்பிரிக்காவிற்கான தமிழர்களின் குடியேற்றம் என்பது 1860களில் தொடங்குகின்றது. தென்னாப்பிரிக்காவின் நாட்டல் (Natal) பகுதியில் தமிழ் மக்களின் குடியேற்றம் என்பது நாட்டல் கரும்புத்தோட்டத்தோடு நெருங்கிய தொடர்பு உடையது. தென்னாப்பிரிக்காவின் பெரும்பாண்மை இனக்குழுவினராகிய சூலு(Zulu) இனமக்கள் கரும்புத்தோட்டங்களில் பணிபுரிவதைத் தவிர்க்க ஆரம்பித்து விட்ட நிலையில் அங்கு பணிபுரிய அப்போதைய பிரித்தானிய காலணித்துவ ஆட்சிக்கு மாற்று மனிதவளத் தேவை என்பது அத்தியாவசியமாகிப் போன சூழலில் அவர்களது பார்வை தென்னிந்தியாவை நோக்கிச் சென்றதன் அடிப்படையில் தென்னிந்தியாவைச் சேர்ந்த  உடல் உழைப்பு தொழிலாளர்களைத் தென்னாப்பிரிக்கா கொண்டு செல்லும் முயற்சி தொடங்கியது.

1860 ஆண்டு அப்போதைய  மட்ராஸிலிருந்து 16 நவம்பர்  டர்பன் துறைமுகத்தை வந்தடைந்த கப்பலில் முதல் தென்னிந்திய மக்கள் வந்து சேர்ந்தனர் என்று குறிப்புக்களிலிருந்து அறிகின்றோம். அப்படி வந்த மக்களில் தமிழகத்திலிருந்து வந்த மக்களே பெரும்பான்மையினர். இந்த தமிழக மக்கள் தென்னாப்பிரிக்காவிற்குப் புலம் பெயர்ந்த போது தங்கள் வாழ்க்கையில் கடைபிடித்த உணவு, வழிபாடு, குடும்ப முறை வழக்கங்கள ஆகியவற்றையும் டொடர்ந்து தக்க வைத்துக் கொள்வதில் தவறவில்லை என்பது தென்னாப்பிரிக்கத் தமிழர்களைக் காணும் போது தெரிகின்றது.




இடைபட்ட காலத்தில் தமிழ் மொழி என்பது படிப்படியாக மறைந்து விட்ட நிலை ஏற்பட்டது என்பதை மறக்க முடியாது.பல தென்னாப்பிரிக்க தமிழர்களுக்கு ஒரு சொற்களும் தமிழ் தெரியாத நிலையே இருப்பது கண்கூடு. ஆயினும் தாம் தமிழ் மக்கள், என்ற உணர்வினை அவர்கள் மறக்கவுமில்லை, ஒதுக்கவுமில்லை.

தமிழ் மொழி மறக்கப்படக்கூடாது என பல தமிழ்ச்சங்கங்கள் எவ்வாறு முயற்சி செய்து வருகின்றனவோ அதே போல ஆலயங்கள் பலவும் இங்கு தமிழர் வழிபாட்டு முறைகள் மக்கள் மத்தியில் மறைந்து போய் விடாமல் காப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன.




புற்றுமாரியம்மன் கோயிலைப் பார்க்கும் போது சிறிதும் மாற்றமில்லாது தமிழகத்து கோயில்களே நினைவுக்கு வரும் வகையில் அங்கே கிராமத்து வழிபாட்டு முறையைக் காண முடிகின்றது.



 
அர்ச்சனை தட்டை ஏந்தியவண்ணம் ஒரு பக்தர்

ஒரு பக்கம் மணலால் எழுப்பப்பட்ட அம்மன் சன்னிதி. அந்த மணல் பகுதியைச் சுற்றி எலுமிச்சை பழ மாலை. மணல்புற்றின் மேல் மலர்கள் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன. மலர் மாலைகளும் அணிவிக்கபப்ட்டிருக்கின்றன. கோழி முட்டைகளை புற்றின் மேல் பகுதியிலும் அடிப்பகுதியிலும் அடுக்கி வைத்திருக்கின்றனர்.

​வீரபத்திரன் சாமி

இன்னொரு பக்கம் வீரபத்திரன் சிலை குதிரையில் சவாரி செய்வது போன்ற தோற்றத்துடன் அமைக்கப்பட்டிருக்கின்றது. இதுவும் கிராமத்து வழக்கில் சிறிதும் மாற்றமில்லாத வகையில் அமைந்துள்ளது.


​பக்தர்களுக்கு வேப்பிலை சார்த்தும் பெண்கள்

மாரியம்மனுக்கு மஞ்சள் நீரும் வேப்பிலையும் சார்த்துவது எப்படி தமிழக கிராமப்புறங்களில் இன்னமும் வழக்கமாக இருக்கின்றதோ அதே போல இங்கேயும்  அம்மனின் அருள் கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு கிட்ட வேண்டும் என நினைத்து வந்து செல்வோர் அனைவருக்கும் வேப்பிலையை உடலில் சார்த்தி அனுப்புகின்றனர். இதற்காககோயிலில் பணியாற்றும் தன்னார்வலர்கள் குறிப்பாக இளைஞர்கள் இவ்வகை பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்கின்றனர்.

Thursday, May 21, 2015

விரும்பாமல் சென்று.. விரும்பிய டர்பன்..! -13

டர்பன் புற்றுமாரியம்மன் ஆலயம் மூன்று பகுதிகளாக அமைக்கப்படிருப்பதைப் பற்றி முந்தைய பகுதியில் குறிப்பிட்டேன். நடுப்பகுதியில் மிகப்பிரமாண்டமாக உயர்ந்து நிற்கும் புற்றையே அம்மனாக வைத்து மக்கள் வழிபடும் இடம் இருக்கின்றது. இப்புற்றில் அம்மன் வடிவமாக அமைக்கப்பட்ட வடிவம் இந்த மண்டபத்தின் நடுப்பகுதியில் இருக்குமாறு செய்திருக்கின்றார்கள். நடுப்பகுதியில் அமைந்திருப்பதால் பக்தர்கள் அம்மன் வடிவத்தின் முன் நின்று தாமே தீபாராதனைக் காட்டி தாமே பிரார்த்தனை செய்து கொண்டு செல்ல இலகுவாக அமைந்துள்ளது. இக்கோயிலில் அர்ச்சனை செய்து வைக்க என்று தனியாக அர்ச்சகர்களோ குருக்கள்களோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் கூட்டம் நிறைந்திருந்த அன்றும் கூட பொது மக்கள் வரிசையாக நின்று ஒவ்வொருவரும் யாரையும் இடித்து தள்ளிக் கொள்ளாமல் தங்கள் வழிபாட்டினைச் செய்து விட்டு சென்று கொண்டிருந்தனர்.

புற்று வடிவத்தின் முன் பக்தர்கள் தாங்களே தாங்கள் கையோடு கொண்டு வந்திருந்த வழிபாட்டு பொருட்களை வைத்து சூடம் ஏற்றி குடும்பத்தோடு நின்று வழிபட்டு பின்னர் தங்கள் பொருட்களைக் கையோடு எடுத்துக் கொண்டு ஆலயத்தைச் சுற்றி செல்கின்றனர். அப்படி செல்லும் போது முதலில் ஒரு பெண்மணியிடம் மங்கலப் பொருட்களைப் பெற்றுக் கொள்கின்றனர்.



பின்னர் அங்கு நிற்கும் இரண்டு பெண்களிடம் வேப்பிலை போன்ற வடிவம் கொண்ட ஒரு இலையால் உடல் முழுவதும் படுவது போல செய்து கொண்டு அங்கிருந்து நகர்ந்து அடுத்த இடம் செல்கின்றனர். இங்கே இருக்கும் ஒரு பெண்மனி அவர்களுக்கு புனித நீரை ஒரு பெரிய கரண்டியில் எடுத்துக் கொடுக்க அதனை பக்தர்கள் பருகிச் செல்கின்றனர்.





இந்த மையப்பகுதியை அடுத்தார் போல வலது புறத்தில் ஒரு சிறிய விநாயகர் சன்னிதி இருக்கின்றது. இங்கேயும் மக்கள் வரிசையாக வருகின்றனர். முன்னால் நிற்கும் ஊழியர்கள் பக்தர்கள் கொண்டு வரும் தட்டில் சூடம் ஏற்றித் தர குடும்பத்தோடு மக்கள் விநாயகரை வழிபட்டு செல்கின்றனர். வெளியேறும் போது அங்கு நிற்கும் ஒருவர் விபூதியை அவரே  தாமாக நமது நெற்றியில் இட்டு விடுகின்றார். ஆலயத்தின் எல்லா இடங்களிலும் அவசரம், தள்ளிப்பிடித்தல் என்ற வகையில் இல்லாமல் மிக ஒழுங்காக காரியங்கள் நடைபெறுகின்றன.





இங்குள்ள விநாயகர் சிலையின் வடிவம் நம் கண்கள் பார்த்து பழகியனவற்றிலிருந்து மாறுபட்டவை. ஒல்லியான உடம்புடன் தொந்தியில்லாத விநாயகர் நமக்கு வித்தியாசமாகவே படுகின்றார். ஆயினும் அலங்காரங்களுடனும் பக்தர் கூட்டத்துடனும் பார்க்கும் போது நம் மனதைக் கவரத் தவறவில்லை. நான் என் வழிபாட்டை முடித்துக் கொண்டு கோயில் இடப்புரம் கச்சேரி நடந்து கொண்டிருந்த பகுதிக்குச் சென்றேன். அங்கே திரு.கார்த்திகேயன் இசைக்குழுவினர் தமிழிசை கச்சேரி செய்து கொண்டிருந்தனர்.

இடையில் எங்களை அழைத்துச் சென்ற திரு.சின்னப்பன் தம்பதியர் எங்கள் வருகையைப் பற்றிச் சொல்ல, உடனே எங்களில் யாரேனும் பாட விருப்பம் உள்ளதா என வினவினர். என்னுடன் வந்திருந்த திரு.நயினை விஜயன் அவர்கள் அற்புதமாக ஒரு தமிழைப்பாடலைப் பாடினார். அதனை அடுத்து நானும் பாடுகின்றேன் எனச் சொல்ல என்னையும் பாட அழைத்தனர். நான் ஒரு தேவாரப் பாடலை பாடினேன். அதற்கு பக்க வாத்தியம் மிக அருமையாக அமைந்திருந்தது. மத்தளம், ஹார்மோனியம் வயலின் இசை கலந்ததும் எனக்கு முன்னர் கச்சேரி செய்த நினைவுகள் மனதில் தோன்றின. ஆகையால் பாடலை சற்றே விரிவாக்கி பாடி முடித்து எழுந்த போது மீண்டும் ஒரு பாடலை பாடுமாறு கேட்டுக் கொண்டனர் இசைக்குழுவினர். எனக்கு இது மேலும் ஆர்வத்தையும்  மகிழ்ச்சியும் அளித்ததால் மேலும் ஒரு தமிழிசைப்பாடலை பாடினேன். பாடி முடித்து கீழே வரும்போது நண்பர்களின் புன்னகை கலந்த பாராட்டுதல்கள் எனக்கு நிறைந்த மன மகிழ்ச்சியை அளித்தன.





எதிர்பாராது நடந்த நிகழ்வு அது. மனதில் இன்னமும் நினைத்துப் பார்க்கும் போது அதே மகிழ்ச்சி மலர்கின்றது.

Wednesday, May 13, 2015

விரும்பாமல் சென்று.. விரும்பிய டர்பன்..! -12

புற்று மாரியம்மன் கோயிலில் எடுக்கப்பட்ட படங்களில் சில புகைப்படங்களை மட்டும் இப்பதிவில் இன்று பகிர்ந்து கொள்கின்றேன்.

இக்கோயிலில் வழிபாடு செய்து வைக்க என்று தனியாக குருக்கள் இல்லை. பொதுமக்களே கோயில் வழிபாட்டினை முழுமையாகச் செய்கின்றனர். ஆண் பெண் என்ற பேதமின்றி தூபம் காட்டுதல், மங்கல நீர்வழங்குதல் என்பது போன்ற பணிகளைப் பொதுமக்கள், கோயில் நிர்வாகத்தினர் ஆகியோர் செய்கின்றனர்.












Sunday, May 10, 2015

விரும்பாமல் சென்று.. விரும்பிய டர்பன்..! -11

ஏப்ரல் 5ம் தேதி மதியம் முக்கிய  நிகழ்ச்சிகள் அனைத்தும் முடிவடைந்ததால் எஞ்சிய மூன்று தினங்கள்  டர்பன் நகரைச் சுற்றிப் பார்க்கவேண்டும் என மனதில் நினைத்திருந்தேன்.  என்னோடு மலேசிய நண்பர்கள் திரு.ப.கு.ஷண்முகம் தலைமையிலான குழுவினர், இந்து, சாம் விஜய், கனடா நண்பர் திரு,ராஜரட்ணம் ஆகியோரும் இருந்தமையால் அனைவரும் இணைந்தே பயணம் செய்ய சம்மதம் தெரிவித்து விட்டனர். எங்கெங்கு செல்லலாம், எவற்றை பார்க்கலாம் எப்போது எப்படி என்று திட்டமிடம் பணி யாரும் திட்டமிட்டாமலேயே எனக்கு வந்து சேர்ந்தது.

தென்னாப்பிரிக்கத் தோழி கோகியும் அவர் கணவர் திரு.சின்னப்பனும் திங்கள் கிழமை அதாவது புனித வெள்ளி முடிந்த வாரத்தின் முதல் திங்கள்கிழமை அருகாமையில் இருக்கும் புற்று மாரியம்மன் ஆலயத்தில் விஷேஷம் இருப்பதாகவும் அங்கு வந்து பார்க்க விருப்பம் இருக்கின்றதா என்றும் கேட்டனர். வேறு இடங்களுக்குச் செல்வதற்கு முன்னர் ஆலயம் சென்று பார்த்து விட்டு வரலாமே என்று எனக்கும் அது சரியான யோசனையாகவே தோன்றியது. மாரியம்மன் ஆலயத்தைப் பார்த்து விட்டு அருகாமையில் இருக்கும் முருகன் கோயிலும் சென்று வரலாம் என்று அவர்கள் தெரிவித்தனர். ஆக அன்று காலை முதல் மாலை வரை கோயில் சுற்றுலா என்று முடிவெடுத்து ஏனைய நண்பர்களுக்கும் காலையில் சரியாக 10 மணிக்குத் தயாராக இருக்கும் படி கேட்டுக் கொண்டதோடு அவர்களை மீண்டும் ஞாபகப்படுத்தி தயார் நிலையிலும் வைத்துக் கொண்டேன். பள்ளிக் கூட ஆசிரியர் மாணவர்களை சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்வது போண்ற ஒரு உணர்வு தான் எனக்கு அப்போது தோன்றியது. ஏனைய நண்பர்களும் மகிழ்ச்சியோடும் ஆவலோடும் அலய சுற்றுலாவிற்குத் தயாரானார்கள்.

திரு.சின்னப்பன் அவர்களின் மகள் சிவானியும் ஒரு கார் வைத்திருக்கின்றார்.ஆக எங்களை  இவர்கள் இருவரும் ஹோட்டலிலிருந்து கோயிலுக்குத் தங்கள் காரிலேயே அழைத்துச் சென்று விட்டனர். ஒரு பயணத்தில் எல்லோரும் செல்ல முடியாததால் சிவானி எங்களை இரண்டு முறை வந்து அழைத்துச் சென்றார். நல்ல உதவும் மனம் கொண்ட பெண் சிவானி. நாட்டியப்பள்ளி வைத்து நடத்தி வரும் சிவானி ஒரு வக்கீலாகவும் படித்து பட்டம் பெறும்  நிலையில் இருக்கின்றார்.

கோயிலுக்குச் செல்லும் போது டர்பன் நகர சாலைகளைக் கவனித்துக் கொண்டே வந்தேன். சாலைகள் நேர்த்தியாகவும் தூய்மையாகவும் இருக்கின்றன. ஆசிய நாடுகளைப் போன்ற சீதோஷ்ணம் இருப்பதால் பசுமையான சூழலைக் காணமுடிகின்றது.




கோயிலை நெருங்கும் போதே தூரத்திலிருந்தே கோயில் கோபுரம் கண்களுக்குப் புலப்பட்டது. தென்னாப்பிரிக்காவில் நான் பார்க்கும் முதல் இந்து ஆலயம் என்ற மகிழ்ச்சியும் மனதில் நிறைந்திருந்தது.

ஆலயத்தின் வாசல் முழுக்க வாகனங்கள் நிறைந்து இருந்தமையால் வாகனத்தை நிறுத்திவதில் சற்றே சிரமம் ஏற்பட்டது. தென்னாப்பிரிக்க தமிழர்கள் ஆலயத்தில் நிறைந்திருந்தார்கள். கண்கொள்ளா காட்சியாக அது அமைதிருந்தது.



மாரியம்மன் ஆலயம் என்பது மனதில் ஒலித்துக் கொண்டிருந்ததால் அம்மன் சிலை எவ்வகையில் இருக்கும் என்ற ஒரு கற்பனை மனதில் ஓட ஆரம்பித்திருந்தது. காமாட்சியம்மன் அல்லது துர்கை வடிவில் அம்மன் சிலை இருக்குமோ? அல்லது மலேசியாவில் இருக்கும் மாரியம்மன் வடிவில் இங்கு மூலஸ்தான தெய்வ மடிவம் இருக்குமோ என மனதில் கேள்விகள் ஓட உள்ளே சென்று பார்க்க மனதில் ஆவல் அதிகரித்துக் கொண்டிருந்தது.

எல்லோரும் ஆலயத்திற்கு வெளிப்பகுதி வழியாகச் சுற்றிக் கொண்டு வந்து ஆலயத்தின் நேர் வாசல் பகுதியை அடைந்தோம்.



நடுப்பகுதியில் இருப்பது பிரதான ஆலயம். அதற்கு இடப்புறமும் வலப்புறமும் மேலும் ஒரு மாரியம்மன் ஆலயமும் ஒரு வினாயகர் ஆலயமும் இருக்கின்றன. மையப்பகுதியில் அமைந்திருக்கும் ஆலயத்தின் முன் வாசல் பகுதிக்கு வந்தேன். அங்கு நான் கண்ட காட்சி என்னை அதிசயத்தில் மலைக்க வைத்தது.

கற்பகிரகம் மூலஸ்தானம் என இல்லாமல் ஆலயத்தின் நடுப்பகுதியில் பிரமாண்டமான மணல் புற்று நேராக நிமிர்ந்து நிற்க அதன் மேல் மாலைகள் குவிந்து கிடக்க மையப்பகுதியில் வெள்ளியால் ஆன அம்மன் வடிவத்து முகம் மட்டும் வைத்தாற்போன்ற ஒரு அமைப்பு அங்கே கண்முன்னே காட்சியளித்தது.





நான் எதிர்பாராத ஒரு காட்சி அது.ஆச்சரியத்திலும் அக்காட்சியின் அழகிலும் மெய்மறந்து போனேன்

Tuesday, May 5, 2015

விரும்பாமல் சென்று.. விரும்பிய டர்பன்..! -10

தென்னாப்பிரிக்காவில் தமிழர்கள் குடியேற்றம் என்பது இன்றைக்கு ஏறக்குறைய 250 ஆண்டுகள்​ பழமை வரலாற்றைக் கொண்டது. அப்போதைய  தென்னாப்பிரிக்க ஆங்கிலேய காலணித்துவ அரசின் ஆட்சியில் கரும்புத் தோட்டங்களில் பணி புரிய தென்னிந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட மக்களில் பெரும்பாலோர் தமிழக நிலப்பரப்பைச் சார்ந்தோர். ஒப்பந்த தொழிலாளர்களாக வந்த இவர்களில் ஒரு சிலர் சில ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியா திரும்பினாலும் பலர் தென்னாப்பிரிக்காவிலேயே தங்கிவிட்டனர். இவர்களின் சந்ததியினரே இன்று தென்னாப்பிரிக்காவில் வசிக்கும் தென்னாப்பிரிக்கத் தமிழர்கள்.

தென்னாப்பிரிக்காவின் மக்கள் தொகையில் பெரும்பாண்மையினர் உள்ளூர் சூலு இன மக்கள். இவர்கள் தென்னிந்தியாவிலிருந்து உழைக்க வந்த இந்தியர்களை முழு மனதுடன் ஏற்றுக் கொள்ளவில்ல என்பதனை உள்ளூரில் நிகழ்ந்த பல சம்பவங்கள் சாட்சிகளாக காட்டுகின்றன. தற்போதும் கூட டர்பன் நகரத்திலும் அதன சுற்று வட்டாரத்திலும்  இந்தியர்கள் வாழும் பகுதி என்று பீனிக்ஸ் பகுதியும் அதற்கு எதிர்புறமாக உள்ள பகுதி சூலு மக்கள் வாழும் பகுதி என்றும் அறிந்து கொண்டேன். ஆயினும் பெரிய அளவிலான பிரச்சனைகளோ, இனக்கலவரமோ என்பது இங்கு இல்லை என்பது ஒரு மிக நல்ல விசயம்.

சூலு மக்களின் உணவு வகைகளை நான் சுவைகும் வாய்ப்பே இந்தப் பயணத்தில் எனக்கு அமையவில்லை. தமிழ் பண்பாட்டு இயக்க நிகழ்வின் மூன்று நாட்களும் சரி.. பினன்ர் தங்கியிருந்த இரண்டு நாட்களும் சரி, ஹோட்டலில் வழங்கப்பட்ட உணவு விருந்து என பெரும்பாலும் தென்னிந்திய வகை உணவையே அதில் நான் காண முடிந்தது. இந்திய வகை உணவோடு ஐரோப்பிய உணவு வகைகளான பாஸ்டா, ரொட்டி, சீஸ் போன்றவைகளும் உணவுத் தேர்வில் இடம்பெற்றிருந்தன. ஐரோப்பாவில் எப்போதும் அதிகம் ஐரோப்பிய உணவை சுவைக்கும் வாய்ப்பே எனக்கு அமைவதால் தென்னாப்பிரிக்க இந்திய வகை உணவைச் சாப்பிடுவதே எனக்குப் பிடித்திருந்தது. அதனால் கிடைத்த தோசை, உப்புமா, சாம்பார், சட்னி, பொறியல், கூட்டு, கீரை, பாயசம் என இந்திய உணவுகளை சுவைத்தேன். முற்றும் முழுதும் தென்னிந்திய வகை உணவு என்றில்லாமல், சற்றே வித்தியாசமாக  ஒரு வகையில் மலேசிய வகை தென்னிந்தியச் சமையல் சாயலும் இவர்கள் சமையலில் இருந்தது போன்ற ஒரு உணர்வும் எனக்கு ஏற்பட்டது.

சுற்றுலா சென்ற போதும் இடையில் திரு.திருமதி சின்னப்பன் இல்லத்தில் மிகத் தரமான இந்திய உணவைச் சாப்பிடும் வாய்ப்பும் அமைந்தது. பின்னர் இந்திய உணவுக்கடையில் ஓரிரு முறை சாப்பிடவும் சென்றிருந்தோம். ஆக முழுமையாக இந்த தென்னாப்பிரிக்கப் பயணத்தில் இந்திய வகை உணவுகளையே பெரும்பாலும் காண நேர்ந்தது. ஒரே ஒரு முறை மட்டும் தென்னாப்பிரிக்காவில் மிகப் பிரபலமான பன்னி சோவ் (Bunny Chow)  வாங்கி சாப்பிட்டு மகிழ்ந்தேன்.

பன்னி சோவ் என்பது தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் உருவாக்கிய ஒரு ரெசிப்பி. 2ம் உலகப்போர் காலத்திலேயெ இது பிரபலமாகிவிட்டது என்றும் பின்னர் தென்னாப்பிரிக்காவின் டர்பன்  தவிர்த்து  க்லெல்லோ, ரொடேசியா போன்ற பகுதிகளிலும் பிரபலமாகிவிட்ட ஒரு துரித உணவு இது.

அடிப்படையில் பெரிய ரொட்டி ஒன்றிற்குள் கறி வகைகள் அல்லது பீன்ஸ் வகைகளைத் தினித்து சுற்றித் தருவது தான் பன்னி சோவ் எனப்படுகின்றது.

என் தென்னாப்பிரிக்கத் தோழி கோகி எனக்கு முதலில் இதனைப் பற்றி தெரிவித்தார். பன்னியில் காய்கறிகள் சேர்த்த பன்னியும் உண்டு, ரசம் பன்னியும் உண்டு என்று மேலும் ஆச்சரியப்படுத்தினார். இது மனதிலேயே இருக்க ஜெர்மனி திரும்புவதற்குள் ஒரு நாளாவது பன்னியை வாங்கிச் சாப்பிட வேண்டும் என ஆவல் இருந்தது. பயணத்தின் இறுதி நாளுக்கு முதல் நாள் 'இன்று எப்படியாவது ஓரிடத்தில் எல்லோரும் பன்னியை வாங்கிச் சாப்பிடுகின்றோம்' எனச் சொல்லி என்னுடன் வந்த மலேசியக் குழுவினர், கனடாவின் திரு.ராஜரட்னம், இந்து, எல்லோரையும் ஒரு ஷாப்பிங் மாலுக்குள் அழைத்துச் சென்று அங்கு தேடியதில் ஒரு ரெஸ்டாரண்டில் பன்னி விற்பனை செய்யப்படுவது தெரிந்தது.


​பன்னி மடித்து வைக்கப்பட்டுள்ளது

அங்கேயே நண்பர்கள் ஒவ்வொருவரும் ஆளுக்கு ஒரு பன்னி ஆர்டர் செய்து வாங்கிக் கொண்டோம். அசைவப் பிரியர்கள் அசைவ பன்னி வாங்கிக் கொண்டனர். சைவ உனவு பிரியர்கள் சைவ பன்னி வாங்கிக் கொண்டோம்.


​மேல் பகுதி மூடப்பட்ட நிலையில்

எனக்கு காய்கறி குருமா திணித்த பன்னி சாப்பிட விருப்பம் இருந்ததால் அதனையே ஆர்டர் செய்து வாங்கினேன்.

பன்னியில் மூன்று அளவுகள் உள்ளன. பெரிது, நடுத்தர அலவு, சிறியது என முன்று அளவுகளில் இவை கிடைக்கின்றன. நடுத்தர அளவே போதும் என வாங்கிய எனக்கு அது இரண்டு பேர் சாப்பிடக்கூடிய அளவு என்ரு நேரில் பார்த்ததும் தான் தெரிந்தது.

மலேசியாவில் வங்காளி ரொட்டி என்று சொல்வோம். அப்படிப்பட்ட ஒரு ரொட்டி வகை தான் இது. அதன் மேல் பகுதியை வெட்டி வைத்து விடுகின்றனர் இது மூடி போல பயன்படுகின்றது. பின்னர் ரொட்டியின் நடுப்பகுதியில் குழி மாதிரி செய்து அதற்குள் குருமாவை திணித்து விடுகின்றனர். பின்னர் வெட்டிய மூடி போன்ற பகுதியை வைத்து மூடி கொடுத்து விடுகின்றனர். ஒரு வகையில் பார்க்க வெட்டிய இளநீரின் வடிவத்தில் இந்த ரொட்டி இருக்கும்.



​மேல் பகுதியைத் திறந்ததும் உள்லே காய்கறி குருமாவுடன் பன்னி

ஒரு முறை சாப்பிட்டவர்கள் மறு முறைபன்னி சாப்பிட வேண்டும் என நிச்சயம் விரும்புவர். மிக நல்ல சுவை என்பதில் சந்தேகமில்லை.

புலம்பெயரும் மக்கள் தங்கள் வாழ்வியல் சூழலுக்கேற்ப இவ்வகை புதுமைகளை உருவாக்கிக் கொண்டேயிருக்கும் நிலையை உலகில் பல இடங்களில் காண்கின்றோம். தென்னாப்பிரிக்கத் தமிழர்களின் வெற்றிகரமான ஒரு புதுமை உணவு இந்த பன்னி சோவ் என நிச்சயம் சொல்லலாம்.

தொடரும்..

Monday, May 4, 2015

விரும்பாமல் சென்று.. விரும்பிய டர்பன்..! -9

பட்டமளிப்பு விழா நடைபெற்ற நாளின் மாலை வேறு எந்த திட்டமும் எனக்கு இல்லை. மறுநாள் உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தில் செயலவைக் கூட்டம் நடைபெற இருந்ததால் மாலை ஹோட்டலிலேயே இயக்கத்தின் உறுப்பினர்கள் சிலரோடு பேசிக் கொண்டிருந்ததில் அன்றைய மாலைப் பொழுது இனிதே கழிந்தது.



எங்களுக்கு ஏற்பாடு செய்திருந்த தங்கும் விடுதி மிக நேர்த்தியான மாடர்ன் வடிவில் அமைக்கப்பட்டது. உள்ளேயே ஸ்பா வசதிகள் நீச்சல்குளம்,ரெஸ்டாரண்ட் எல்லாம் அமைந்த நான்கு நட்சத்திர ஹோட்டல் அது. அறைகளும் மிக விசாலமாக மிகுந்த வசதிகளுடன் மிகத் தூய்மையாக இருந்தன. அதிலும் நான் தங்கியிருந்த அறையிலிருந்து கண்ணாடி ஜன்னல் வழியாக நோக்கினால் இந்தியப் பெருங்கடலை பார்க்க அக்காட்சியே மிக ரம்மியமாகக் காட்சியளித்துக் கொண்டிருந்தது. அறையில் தோழி பொன்னியுடன்  மலேசியக்கதைகளைப் பேசிக் கொண்டிருந்ததும் அன்றைய மாலைப் பொழுது  மகிழ்ச்சி நிறைந்ததாக  அமைத்தது.




மறுநாள் காலை உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தில் செயலவைக் கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்க இருந்ததால் காலையில் 8 மனியிலிருந்து ஹோட்டல் உணவகத்தில் உணவருந்த ஏற்பாடாகியிருந்தது. காலை உணவாக உப்புமா, சட்னி சாம்பார் ஆகியவற்றோடு மேற்கத்திய வகை காலை உணவுகளும் இருந்தன. காலையில் ஒரு காப்பி சாப்பிட்டால் ஏற்படும் மகிழ்ச்சியே தனி. அதிலும் நல்ல தென்னிந்தியவகை உப்புமா, சட்னி, சாம்பார் ஆகியவற்றோடு காப்பியும் சேர்த்துப் பருக வயிற்றையும் மனத்தையும் நிரப்பியது காலை உணவு.

உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தின் செயலவைக் கூட்டம் தென்னாப்பிரிக்க கிளையின் தலைவர்.திரு.மிக்கி செட்டி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் குறிப்புக்களை என்னை பதியக் கேட்டுக் கொண்டனர் முக்கிய நிர்வாகஸ்தர்கள்,. இப்படி திடீரென ஒரு பணி அமைய அதில் கடமையே கண்ணாக மூழ்கிப்போனேன்.



40 வருட கால பழமை கொண்டது இந்த உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கம். உலகின் பல நாடுகளில் கிளைகளைக் கொண்டு இயங்கி வரும் இந்த இயக்கத்தின் இந்த செயலவைக் குழு கூட்டத்தில் கலந்து கொள்ள அன்று தென்னாப்பிரிக்க, ப்ரான்ஸ், ஜெர்மனி, இலங்கை, இந்தியா, சுவிஸர்லாந்து, மொரிஷியஸ், கனடா, ஆகிய நாடுகளிலிருந்து பிரதினிதிகள் வந்திருந்தனர்.

அன்று நடைபெற்ற கூட்டத்தில் இயக்கத்தின் யாப்பினை அமைக்கும் குழுவிற்கு தலைமை தாங்க பொறுப்பேற்றுக் கொண்ட டாக்டர். பொன்னவைக்கோ என்னையும் அக்குழுவில் இணைத்துக் கொண்டார். ஒரு முக்கிய இயக்கத்திற்கு நம்மால் முடிந்த  வகையில் உதவ வாய்ப்பு அமைந்தது ஒரு நல்ல நிகழ்வாகவும் எனக்கு மனதில் தோன்றியது. கூட்டத்தின் இடையிலேயும் உணவுகள் வரும் வகையில் ஏற்பாடு செய்திருந்தனர் தென்னாப்பிரிக்க குழுவினர். உணவு  பருக நீர்  என எவ்விதப் பிரச்சனையுமில்லாமல் வந்திருந்த அனைவரும் மன நிறைவு கொள்ளும் வகையில் மிக நேர்த்தியாக அந்தக் கூட்டத்தை நடத்திச் சென்றது திரு.மிக்கி செட்டியின் குழு.




மதியம் மூன்று மணிவாக்கில் இந்தச் செயலவை உறுப்பினர் சந்திப்புக் கூட்டம் முடிய மாலை அவரவர் விருப்பப்படி பொழுதைக் கழிக்கலாம் என உறுதியானது. எனக்கு நண்பர்களோடு பேசிக் கொண்டிருப்பதில் அதிக நாட்டம் இருந்ததால் என் மாலை பொழுதை அன்று  ஹோட்டல் ரெஸ்டாரண்டிலேயே நண்பர்களுடன் செலவிட்டேன்.

பல்வேறு நாடுகளிலிருந்து வந்திருந்த இந்த உறுப்பினர்களுடன் பேசுவதற்கு இது ஒரு நலல் வாய்ப்பாக அமைந்தது.  உலகத் தமிழர்களின் நிலை, சமூக இயக்கக்களின் நடவடிக்கைகள், செயல்பாடுகள், தமிழர் வாழ்வியல் என பல விஷயங்களைத் தொட்டுப் பேசி மகிழ்ந்தோம்.