Friday, January 31, 2020

சதுரங்கப்பட்டினம் / சட்ராஸ் - ஊர் சுற்றியின் புராணம் - 4


19.1.2020

​ஊர்சுற்றி மாசுபடாத இயற்கையின் மத்தியிலும்​,​ அதன் உண்மையான வாரிசுகளின் இடையேயும் மாதங்கள் அல்லது சில ஆண்டுகள் கழித்​தால் அவனுக்கு எவ்வள​வோ மகிழ்ச்சி கிட்டும்​.​ அவன் ஒவ்வொரு நாளும் புதிய புதிய விஷயங்களை​த்​ தெரிந்து கொள்வான்​,. வரலாறு​,​ மனித இனம்​,​ மொழி அல்லது வேறு ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றிய ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பான்​.​ அவன் அங்கிருந்து வெகுதூரம் போய் விட்டால் ​பழைய நினைவுகள் இனிய நினைவுகளாக நிலைத்து விடுகின்றன​.​ அந்த இனிய நினைவுகள் அவனை​ப்​ பொறுத்தவரையில் அவனுடனே மறைந்து விடலாம்​.​ ஆனால் அவன் தன் நினைவுகளுக்கு எழுத்து வடிவம் தந்து விட்டுப் போனால் அவன் மறைந்த பின்னரும் லட்சக்கணக்கான வாசகர்களின் கண்களின் முன்னால் அ​வ்வினிய நினைவுகள் உயிர்பெற்று எழும்.
​-ஊர்சுற்றிப் புராணம், ராகுல் சாங்கிருத்யாயன்"​

சட்ராஸ் அல்லது சதுரங்கப்பட்டினம் என்ற பெயர் ​ஓரிரு முறை மட்டுமே ​சில டச்சு ஆவணங்களில் பார்த்த நினைவு எனக்கு உண்டு. ஆயினும் இப்பகுதிக்கு​ச்​ செல்லும் வாய்ப்பு எனக்கு இதுவரை ஏற்பட்டதில்லை​.​ இது ஒரு கடற்கரைப் பட்டினம் என்பதை வரைபடத்தில் பார்த்திருந்தேன்​.​ ஆனால் ஆழமாக மனதில் ஏனோ இது பதியவில்லை.​ தோழி ரேச்சல் எனது வரலாற்று ஆர்வத்தைப் புரிந்து கொண்டு இந்த இடத்திற்கு நான் வரவேண்டும் எனச் சொல்லியிருந்தார். ஆகஇந்த வரலாற்று முக்கியத்துவம் பெற்ற இச்சிற்றூரை எனக்கு அறிமுகப்படுத்திய ரேச்சலுக்கு நான் நன்றி சொல்வது கடமையாகும். ​

​தமிழக ​நில வரைபடத்தில் மாமல்லபுரத்தி​ற்கு அடுத்த நகரமாக சதுரங்கப்பட்டினம் வருவதை நினைவுபடுத்திக் கொண்டேன்​.​ மதியம் ஏறக்குறைய 12 நெருங்கிக்கொண்டிருந்தது​.​ நாங்கள் கோட்டையின் வாயில் பகுதி வந்தடைந்து உள்ளே அனுமதி உண்டா என்று தேடிப் பார்த்தோம்​.​ ​இந்தியத் தொல்லியல் துறையின் ஊழியர் ஒருவர் அங்கு அமர்ந்​திருந்தார்​.​ அவருடன் அவரது நண்பர் ஒருவரும் அமர்ந்திருந்தார்​.​ அவரிடம் இந்த​க்​ கோட்டையை நாங்கள் பார்க்கவேண்டும் என்று கூறிவிட்டு கோட்டையை​ப்​ பற்றி சற்று விசாரித்தோம்​.​ கோட்டையை​ப்​ பற்றிய விவரங்கள் அடங்கிய லேமினேட் செய்யப்பட்ட அட்டைகளை எனக்குக் கொண்டுவந்து கொடுத்தார்​.​ அதில் கோட்டையின் வரலாறு பற்றிய செய்திகள் வழங்கப்பட்டிருந்தன​.​ அதனை வாசித்து விட்டு ஒவ்வொரு பகுதியாகப் பார்த்துவர​க்​ கிளம்பினோம்.

இன்று நாம் காணும் சதுரங்கப்பட்டினம் கிபி 17ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது​. கி.பி. 1353ம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று இப்பகுதியை ராஜநாராயணன் பட்டினம் எனக் குறிப்பிடுகின்றது என்றும், இப்பகுதியைச் சோழ மன்னர்களின் கீழ் ஆட்சி செய்த சம்புவராயர்கள் ஆட்சி செய்தனர் என்றும், கி.பி.1337லிருந்து 1367ம் ஆண்டில் ஆட்சி செய்த சிற்றரசரின் நினைவாக இப்பெயர் அமைந்ததாகவும், கி.பி.15ம் நூற்றாண்டு விஜயநகர நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட இங்குள்ள பெருமாள் கோயில் கல்வெட்டு ஒன்று இப்பகுதியைச் சதிரவாசகன்பட்டினம் என்றும் குறிப்பிடுவதைத் தகவல் அட்டையில் உள்ளக் குறிப்புக்களின் வழியாக அறிந்து கொண்டோம். ​ கடற்கரை துறைமுகப் பட்டினமாக விளங்கிய இப்பகுதி மெல்லிய மஸ்லீன் துணிகள் மற்றும் முத்துக்கள் உற்பத்தி ஏற்றுமதி ஆகிய தொழிலுக்காகப் பிரசித்தி பெற்ற ஒரு நகரமாக அன்று விளங்கியது​.​

இன்று நாம் காணும் சிதிலமடைந்த கோட்டை டச்சுக்காரர்களால் ​ 17ம் நூற்றாண்டில் ​கட்டப்பட்டது.​ ​1818 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் படைகள் ​இக்கோட்டையைத் தாக்கி டச்சுக்காரர்களிடமிருந்து அதனை​க்​ கைப்பற்றிக் கொண்டது​.​ பின்னர் ​சதுரங்கப்பட்டினம் ஆங்கிலேயக் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது.

1620 தொடங்கி 1769 வரை இப்பகுதியில் பணியாற்றிய முக்கிய டச்சு அதிகாரிகள் சிலரது கல்லறைகள் இக்கோட்டையின் வலது புறத்தில் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கல்லறையின் மேற்பகுதியிலும் கல்வெட்டும் அரசு முத்திரையும் பதிக்கப்பட்டுள்ளன​.​ ஒவ்வொரு அரசு முத்திரையிலும் வெவ்வேறு சின்னங்கள் பொறிக்கப்பட்ட வகையில் கல்லறையின் மேற்பகுதி அமைந்திருக்கின்றது​.​ கல்லறை பகுதிக்கு அடுத்து ஒரு கட்டிடம் உள்ளது. சிதிலமடைந்த கட்டடத்தின் உள்ளே சென்று பார்த்தோம்​.​ பின்னர் வெளியே வந்து ஏனைய பகுதிகளையும் சுற்றிப் பார்த்துவிட்டு ஒவ்வொரு பகுதிகளிலும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்.

ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன் தென்னிந்தியப் பகுதியில் ஆளுமை செலுத்திய ஐரோப்பியர்களி​ன் வரிசையில் போர்த்துக்கீசியர்களும் டச்சுக்காரர்களும் முக்கியத்துவம் பெறுகின்றனர்​.​ அதிலும் குறிப்பாகச் சோழமண்டலக் கடற்கரை​ப்​ பகுதியான பழவேற்காடு​,​ மாமல்லபுரம்​,​ சதுரங்கப்பட்டினம்​,​ நாகப்பட்டினம்​,​ தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் டச்சுக்காரர்களின் ஆளுமை ஒரு நூற்றாண்டு​க்கும் மேல்​ பலம் ​பொருந்தியதாக அமைந்திருந்தது.

சதுரங்கப்பட்டினம் நெசவாளர்கள் நிறைந்த ஒரு பகுதியாக 16ஆம் நூற்றாண்டில் திகழ்ந்தது​.​ மிக முக்கியமாக மெல்லிய மஸ்லீன் துணிகள் ஐரோப்பியர்களின் கவனத்தை ஈர்த்ததன் விளைவாக இப்பகுதியில் டச்சுக்காரர்கள் ஒரு தொழிற்சாலையை ​ அன்று ​அமைத்தார்கள்​.​ சதுரங்க பட்டினத்தில் அமைக்கப்பட்ட தொழிற்சாலையில் உருவாக்கப்பட்ட மஸ்லீன் துணிகள் ஐரோப்பாவிற்கு​க்​ கப்பல்கள் வழியாக ஏற்றுமதி செய்யப்பட்டன​.​ வணிகம் மிகச் சிறப்பாக வளர்ந்ததால் டச்சுக்காரர்கள் அங்கு ஒரு கோட்டையைக் கட்ட முயன்று இன்று நாம் காணும் இக்கோட்டையை​க்​ கட்டினார்கள்.

டச்சுக்காரர்க​ளிடமிருந்து இக்கோட்டையை​க்​ கைப்பற்றிய ஆங்கிலேயர்கள் இதனை​ப்​ பாதுகாக்கவில்லை​.​ இன்று இக்கோட்டை இந்தியத் தொல்லியல் துறையின் பாதுகாப்பில் உள்ளது​.​ சதுரங்கப்பட்டினம் உள்ள பகுதிக்கு அருகில் தான் கல்பாக்கம் அணு​ ஆலை அமைக்கப்பட்டுள்ளது. ​

சிதிலமடைந்து காட்சியளித்தாலும் இக்கோட்டை இன்றும் தமிழக வரலாற்றில் முக்கியத்துவம் பெறுகின்ற ஒரு சின்னமாகவே திகழ்கின்றது. கோட்டைக்குள் உள்ள கல்லறையில் உள்ள சின்னங்கள் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட வேண்டியவை​.​ ஒரு கல்லறையில் கப்பல் வடிவமும் மற்றொரு கல்லறையில் சூலம்​,​ ருத்ராட்சம்​,​ விலங்கு சின்னமும்​,​ ​​​மற்றுமொரு கல்லறையில் புலியின் சின்னமும்​,​ மற்றுமொரு கல்லறையில் மீன் சின்னமும் என வெவ்வேறு சின்னங்கள் பொறிக்கப்பட்ட வகையில் கல்லறைகள் டச்சு மொழி கல்வெட்டுகள் இணைந்த வகையில் ​அமைக்கப்பட்டிருக்கின்றன​.​ இக்கல்வெட்டுகள் மற்றும் சின்னங்கள் சொல்லும் செய்திகளை ஆராய்ந்து ஆய்வுக் கட்டுரையாக ஆய்வு மாணவர்கள் சமர்ப்பிக்கலாம். ஆய்வுக்கு வழிவகுக்கும் சிறந்த களமாக இப்பகுதி உள்ளது என்பதை நானும் தோழி ​ரேச்சலும் பேசிக்கொண்​டே கொளுத்தும் மதிய வெயிலில் நடந்தோம்.

​இக்கோட்டை ​வளாகத்திற்குள்ளேயே ஒரு கிணறு இருக்கின்றது​.​ ​விரிந்த கிளைகளுடன் கூடிய 200 ஆண்டுகளுக்கும் மேலான ஒரு புளியமரமும் இருக்கின்றது. கோட்டையை முழுமையாகப் பார்த்துவிட்டு தொல்லியல் துறை பணியாளரிடம் ​நன்றி சொல்லி வருகைப்பதிவேட்டில் கையெழுத்திட்டு விட்டு​விடைபெற்று​ அங்கிருந்து புறப்பட்டோம்.

ஒரு காலத்தில் பெரும் வணிக நகரமாகவும்​,​ ஐரோப்பியர்கள் ​ விரும்பி வாழ்ந்த​​ ஒரு நகரமாக இருந்த சதுரங்கப்பட்டினம் இன்று ஆள் நடமாட்டம் குறைந்து முக்கியத்துவம் குறைந்த ஒரு நகரமாகக் காட்சியளிக்கின்றது​. ​ சதுரங்கப்பட்டினம் இயற்கை வளம் நிறைந்த ஒரு பகுதிதான்​.​ கடற்கரையும் இருப்பதால் மிகச் சிறப்பாக இப்பகுதியை ஒரு சுற்றுலாத்தலமாக அரசு மாற்றி அமைக்கலாம்​.​ அப்படிச் செய்யும் பொழுது உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்புகள் விரிவாக அமையும்​.​ சுயதொழில் பெருகும்​.​ அதேசமயம் வரலாற்றுச் சிறப்பும் பாதுகாக்கப்படும்.

தமிழகத்தின் உள்ளே ஒவ்வொரு இடத்திற்கு​ப்​ பயணிக்கும் போதும்​,​ இவ்வளவு ​இயற்கை ​வளத்தைப் பொருளாதார ரீதியாக வலுவாக மாற்றாமல் இருக்கிறார்களே என நினைத்து நான் வருந்துகின்றேன்​.​ இயற்கை வளம் இல்லாத எத்தனையோ நாடுகள்​ தமது​ தீவிர முயற்சியினால் நாட்டின் வளர்ச்சியை உயர்த்தி இருக்கின்றன​.​ ஆனால் தேவைக்கு அதிகமான மனித வளம்​,​ இயல்பான இயற்கை வளம்​,​ வணிகத்திற்கு ஏற்ற இயற்கை சூழல் என அமைந்த பல சிற்றூர்கள் தமிழகத்தில் அதன் சிறப்பும் பொலிவிழந்து பரிதாபமாகக் காட்சி அளிப்பது வேதனையை அளிக்கின்றது.

சதுரங்கப்பட்டின​த்திற்கான எனது பயணம் தமிழகத்தில் டச்சுக்காரர்களின் ஆளுமையை ஓரளவு நேரடியாகப் புரிந்து கொள்ளும் வாய்ப்பினை ​எனக்கு ​வழங்கியது. இதேபோல அடுத்து மற்றுமொரு தமிழகத்துக் கடற்கரையோர நகருக்கு விரைவில் செல்லவேண்டும் என்று மனதில் ​திட்டம் ​ஓடத்​தொடங்கிவிட்டது. வரலார்றுத் தேடல் நிறைந்த பயணத்திற்கும் ஆய்விற்கும் தான் முடிவில்லையே :-)





-சுபா

Wednesday, January 29, 2020

சதுரங்கப்பட்டினம் / சட்ராஸ் - ஊர் சுற்றியின் புராணம் - 3

19.1.2020

"சுயமரியாதை அற்ற எவனும் உயர்தரமான ஊர்சுற்றி ஆக முடியாது. உண்மையான ஊர்சுற்றி முகஸ்துதி விரும்பமாட்டான்‌‌. உலகத்தில் எவரையுமே தன்னைவிட தாழ்ந்தவர்களாகவும் எண்ணா மனோநிலையை ஊர்சுற்றி பெற்றிருக்க வேண்டும். சமநிலை பார்வையும் நெருக்கமான நட்புறவும் அவன் கொண்டிருக்கவேண்டும்.
-ஊர்சுற்றிப் புராணம், ராகுல் சாங்கிருத்யாயன்"


திருக்கழுக்குன்றம் வந்தடைந்தது எங்கள் ஷேர் ஆட்டோ. நாங்கள் இறங்கிக்கொண்டோம். எதிரே பிரமாண்டமான திருக்கழுக்குன்றம் கோவில் கண்களில் தென்பட்டது. உள்ளே சென்று கோயிலையும் அதிலுள்ள சிற்பங்களையும் கல்வெட்டுக்களையும் பார்க்க ஆவல் இருந்தாலும், அன்று நேரம் போதாது என்ற காரணத்தால் எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம்.

அங்கிருந்து மற்றொரு ஷேர் ஆட்டோ எடுத்து வெங்கம்பாக்கம் செல்ல வேண்டும் எனத் தோழி சொல்லி இருந்தார். அங்கு காத்திருந்த ஒரு ஷேர் ஆட்டோவில் ஏறிக்கொண்டோம். முந்தைய ஷேர் ஆட்டோ போல இது இல்லை. புறப்பட்டு சில நிமிடங்களில் ஏதோ இயந்திரக் கோளாறு. சாலையில் வந்து கொண்டிருந்த மற்றொரு ஷேர் ஆட்டோவை நிறுத்தி அதில் எங்களை ஏற்றிவிட்டார்கள். பத்து நிமிட பயணத்தில் வெங்கம்பாக்கம் வந்தடைந்தோம்.

அடுத்து அங்கிருந்து மேலும் ஒரு ஆட்டோ எடுத்து சதுரங்கப்பட்டினம் செல்ல வேண்டும். சாலையின் இடது புறத்தில் நின்றுகொண்டிருந்த ஒரு ஷேர் ஆட்டோவில் ஏறிக்கொண்டோம். எங்களைத் தவிர வேறு யாரும் அதில் இல்லை என்பதால் வாகன ஓட்டி ஷேர் ஆட்டோவை எடுக்காமல் காத்துக்கொண்டிருந்தார். பக்கத்தில் ஒரு குளிர்பானக் கடை இருந்தது. அதில் நான்கு 30 வயது மதிக்கத்தக்க ஆண்கள் நின்றுகொண்டிருந்தார்கள். அவர்களது உடை அவர்கள் ராணுவ வீரர்கள் என்பதை வெளிப்படுத்தியது.

5 நிமிடங்கள் காத்திருந்துவிட்டு எங்கள் வாகன ஒட்டி அவர்களிடம் சென்றார். அவர்களை அழைத்து வந்து எங்களோடு இணைத்துக் கொள்ளலாம் என்பது அவரது திட்டம். அவர்கள் தயங்கித் தயங்கி நின்று கொண்டிருந்தார்கள். இந்த குட்டி வாகனத்தில் ஏற்கனவே இரண்டு பேர் பெண்கள் இருக்கின்றோம். இதில் மேலும் 4 பெரிய பைகளுடன் இந்த 4 ஆண்களும் ஏறினால் வண்டியில் இடம் இருக்குமா என்பது அவர்கள் சந்தேகமாக இருந்திருக்கலாம்.

எங்களை அவர்கள் பார்க்க, நாங்கள் கையசைத்து வாருங்கள் சேர்ந்து பயணிக்கலாம் என்று அழைத்தோம். எங்களிடம் வந்து உள்ளே எப்படி இந்தப் பெரிய பைகளை வைப்பது எனக் கேட்க, தோழி ரேஷல் அவர்களுக்கு வழி காட்டினார். பைகளை ஒருவழியாக ஷேர் ஆட்டோவில் அடுக்கி வைத்துவிட்டு அவர்கள் நால்வரும் அமர்ந்து கொண்டார்கள். நான்கு பேருக்குமே தமிழ் தெரியாது. இந்தி மொழி மட்டுமே பேசுகிறார்கள்.

தனக்குத் தெரிந்த இந்தி மொழியில் தோழி ரேஷல் அவரிடம் பேச்சுக் கொடுத்தார். அவர்கள் கல்பாக்கம் செல்வதாகவும் தாங்கள் காத்திருந்த பஸ் வர தாமதமானதாகவும் தெரிவித்தார்கள். சில நிமிடங்களில் கல்பாக்கம் வந்து சேர, அவர்கள் இறங்கிக் கொண்டார்கள்.

தமிழகத்தில் வேலை செய்யும் போது தமிழ் மொழி தெரிந்துகொள்ள வேண்டாம் என்ற சிந்தனையுடன் இவர்கள் வேலை செய்வது வெளிப்படையாக தெரிகின்றது என நாங்கள் பேசிக்கொண்டோம்.

கல்பாக்கத்தில் இருந்து எங்கள் ஷேர் ஆட்டோ தனது பயணத்தைத் தொடர்ந்தது. சற்று நேரத்தில் சதுரங்கப்பட்டினம் வந்து சேர்ந்தோம். ஷேர் ஆட்டோவிற்கு மொத்தம் இருபது ரூபாய் கொடுத்துவிட்டு இறங்கிக் கொண்டோம். அருகிலேயே சாத்துக்குடி ஜூஸ் வண்டி ஒன்றை வைத்துக்கொண்டு ஒரு இளைஞர் நின்று கொண்டிருந்தார். அவரும் ஒரு வட இந்தியர். கொஞ்சம் கொஞ்சம் தமிழ் பேசுகின்றார். இருவரும் இரண்டு சாத்துக்குடி ஜூஸ் வாங்கிக்கொண்டோம். தமிழகத்தின் சிற்றூர்களிலும் வட இந்தியர்கள் நம்பிக்கையோடு தங்கள் வணிக முயற்சியை தொடங்கிவிட்டார்கள் என்பதை இது உறுதிபடுத்தியது.

நாங்கள் இறங்கிய பகுதிக்கு எதிர்ப்புறத்தில் டச்சுக்காரர்கள் கட்டிய கோட்டை தனது பிரம்மாண்டம் குறையாமல் காட்சி அளித்துக் கொண்டு நின்றது. எதிர்ப்புறத்தில் அலைகள் ஆர்ப்பரிக்க கடல் காட்சி.

ஒவ்வொருமுறையும் கடற்கரையோரப் பகுதியை காணும்போது எனது பிறந்த ஊரான மலேசியாவின் பினாங்குத் தீவு மனதில் காட்சியாக வந்து செல்லத் தவறுவதில்லை. இளம் வயதில் மனதில் பதிந்து வைத்த காட்சிப் பதிவு மனக்கண்ணில் ஓட எதிரிலிருந்த கடல் காட்சி என்னை இயல்புநிலைக்கு மீண்டும் கொண்டு வந்தது.

சுனாமி அலை தாக்கியபோது இப்பகுதியில் பெருத்த சேதம் ஏற்பட்டதாகவும், தனது சமூக சேவை அமைப்பு வழியாக இப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தாங்கள் வழங்கிய உதவிகள் பற்றி தோழி விவரித்துக் கொண்டே வர, நாங்கள் கோட்டையை நோக்கி நடக்கத்தொடங்கினோம்.





தொடரும்
-சுபா

Wednesday, January 22, 2020

சதுரங்கப்பட்டினம் / சட்ராஸ் - ஊர் சுற்றியின் புராணம் - 2

19.1.2020

தடைகளைத் தகர்த்தெறிந்து வெளிவர வேண்டியது ஊர்சுற்றிக்கு மிகவும் அவசியமாகும். உலகம் புரிந்த எந்த வாலிபருக்கும் ஊர் சுற்ற வேண்டும் என்ற ஆசை தோன்றாமல் இருக்குமா? தம் நரம்புகளில் சூடான ரத்தம் ஓடும் எவரும் தம் வீட்டு மதில் சுவர்களைத் தகர்த்தெரிந்து வெளியில் போக வேண்டுமென்று விரும்பாமல் இருக்கமாட்டார்கள் என்பது அடியேனின் தாழ்மையான கருத்தாகும். இவர்களுடைய முன்னேற்ற பாதையில் தடைகள் ஏராளம். வெளி உலகத்தின் தடைகளை விட மனிதரின் உள்ளத்தில் தான் அதிக தடைகள் இருக்கின்றன.
-ஊர்சுற்றிப் புராணம்; ராகுல் சாங்கிருத்யாயன்

செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இறங்கிக் கொண்டேன். படிகளில் ஏறி வரும்போது இடதுபுறத்தில் கடலைக் காண்பது போன்ற ஏரி. தூரத்தில் சிறிய குன்றுகள், பசுமையுடன். ஏரிக்கரை மேல் ஏராளமான குப்பைகள். இயற்கையை பாழ்படுத்தும் மனிதர்களை மனதிற்குள் சபித்துக் கொண்டேன்.

படிகளின் மேல் ஏறி வரும் போது ஒரு பகுதியில் நின்று ஏரியை ரசிக்கத் தோதாக படிகள் உள்ளன. நான் அங்கு நின்று புகைப்படங்கள் எடுத்துக் கொண்டேன். ஏரியைப் பார்த்து ரசித்தேன். ஒரு குடும்பத்தினர் புகைப்படங்கள் எடுத்துக். கொண்டிருந்தார்கள். அவர்கள் இயற்கையின் பின்னணியில் தங்களை ஐக்கியப்படுத்திக் கொள்ளும் வகையில் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்கள்.

மனிதர்கள் இயற்கையின் ஒரு பகுதி. அதனால்தான் ஏரி, குளங்கள், ஆறுகள், கடல், மலைகள், குன்றுகள், தாவரங்கள், விலங்குகள் ஆகியவற்றைக் காணும்போது நமது மனித மனம் நெகிழ்கிறது; மகிழ்ச்சி அடைகின்றது. நீண்ட நேரம் இந்த இயற்கையோடு நமது நேரத்தைச் செலவிட வேண்டும் என்றும் முயற்சிக்கின்றது. ஆனால் பல்வேறு பணிகளுக்கு இடையே மாட்டிக் கொள்ளும் இக்காலத்து மனிதர்களாகிய நாம் நம்மைச் சுற்றி இருக்கின்ற இயற்கையைக் காணவும் ரசித்து அனுபவிக்கவும் கூட என்றாவது ஒரு நாள் தான் நேரத்தை ஒதுக்கிக்கொள்கின்றோம் என்பது பெரும் குறைதான். நாம் நமக்கு நன்மை செய்து கொள்ள வேண்டுமென்றால் எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு இயற்கையோடு நமது காலத்தைச் செலவிட வேண்டும். நம் மன மகிழ்ச்சிக்கு அதுதான் அடிப்படையாக அமையும்.

சற்றுநேரம் ஏரியைப் பார்த்து ரசித்துவிட்டு படிகளில் கீழே இறங்கி நடக்கத் தொடங்கினேன். வழி எங்கும் சிறுநீர் துர்நாற்றம். கடந்து செல்லும் ஒவ்வொருவரும் இந்த துர்நாற்றத்தை அனுபவித்துக்கொண்டே தான் செல்ல வேண்டிய சூழல். மக்கள் துர்நாற்றத்தை இயல்பாகப் பழகி விட்டார்கள்; ஏற்றுக் கொண்டு விட்டார்கள். இல்லையென்றால் இதனை தடுத்து சுத்தப்படுத்த வேண்டும்; மாற்றம் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் தோன்றியிருக்கும் அல்லவா?!

செங்கல்பட்டு ரயில் நிலையத்தின் வாசலில் நிறைய ஆட்டோ வாகனங்கள் காத்திருந்தன. ரயில் நிலையத்திற்கு முன்னே மகாத்மா காந்தியின் உருவச்சிலை. அதை சுற்றி சிறிய பூங்கா.. பார்ப்பதற்கு மனதிற்கு இதமான காட்சியாக அது இருந்தது. சற்று நேரத்தில் தோழி ரேஷல் வந்து சேர்ந்தார். முதலில் ஒரு காப்பியும் பசிக்கு ஏதாவது உணவும் சாப்பிட வேண்டும் என்று சொல்ல, ஒரு சிறு கடைக்குள் சென்றோம். ஒரு தோசை ஆர்டர் செய்தேன். நேரமாகி இருந்ததால் சட்னி-சாம்பார் அனைத்தும் சுவையில்லாமல் இருந்தது. ஆனால் காப்பி சுவையாகவே இருந்தது.

அங்கிருந்து புறப்பட்டு முதலில் திருக்கழுக்குன்றம் செல்லலாம் என முடிவாகியது. ஷேர் ஆட்டோ சவாரி செல்லலாம் என்று முடிவெடுத்தோம். தமிழகத்தில் ஷேர் ஆட்டோவில் எனது முதல் அனுபவம் இது. ஷேர் ஆட்டோவில் பின் இருக்கையில் அமர்ந்து கொண்டோம். எங்களுக்கே தயாரித்தது போன்ற ஒரு ஆட்டோ. சுற்றுப் பயணிகளுக்கு மிகத் தோதாக பின்பக்கம் மறைப்பு ஏதுமில்லாமல் திறந்து இருந்தது.
வெளியே தெரியும் சாலைக் காட்சி, சாலையில் செல்லும் மாடுகள், அவற்றை ஓட்டிச் செல்லும் மக்கள் என பார்த்துக்கொண்டே வந்தோம்.

ஓரிடத்தில் ஆட்டோ நின்றது. சில பெண்கள் ஏறிக்கொண்டார்கள். அந்த இடத்தில் சாலையின் இடதுபுறத்தில் ஆட்டு இறைச்சி விற்கும் சிறிய கடை ஒன்று இருக்கின்றது. ஆட்டு இறைச்சியை வெட்டிவிட்டு தோலை கட்டி வரிசையாக தொங்க விட்டிருந்தார்கள். நான் புகைப்படம் எடுத்துக்கொண்டேன். காலை வேளை என்பதால் ஆட்டிறைச்சி வாங்க சிலர் வந்திருந்தார்கள்.

நாங்கள் பயணித்துக்கொண்டிருந்த ஷேர் ஆட்டோ மிக அழகாக ஜோடிக்கப்பட்டுடிருந்தது. ஆட்டோ வாகனத்திலேயே பாடல் கேட்டு ரசித்து கொண்டு வரும் வகையில் ரேடியோ, சிடி என்ன அசத்தியிருந்தார் அந்த ஓட்டுனர். 90களின் இறுதியில் வந்த இசையமைப்பாளர் தேவா மற்றும் இளையராஜா இசையமைத்த பாடல்கள்.. இந்தப் பயணத்தை எனக்கு தேவலோகத்தைச் சுற்றி பார்ப்பது போல மிக இனிமையான அனுபவமாக மாற்றி தந்தது.

ஷேர் ஆட்டோவில் எங்களுடன் பயணித்துக்கொண்டிருந்த மேலும் ஐந்து பெண்கள் எங்களுடன் பேசிக் கொண்டே வந்துகொண்டிருந்தார்கள். முதல் முறை பார்த்தாலும் உறவுக்காரர்கள் போல பேசும் அந்தப் பண்பு என் மனதை மகிழ வைத்தது. அவர்களிடம் பேசிக்கொண்டும் பாடல் கேட்டுக்கொண்டும் புகைப்படம் எடுத்துக் கொண்டும் வந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. திருக்கழுக்குன்றம் வந்து சேர்ந்தோம். இரண்டு பேருக்குமே சேர்த்து 30 ரூபாய் தான்.

அதிர்ச்சியா.. ஆச்சரியமா..? இவ்வளவு குறைந்த தொகையில் பயணம் செய்ய முடிகிறதே. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு வார இறுதி நாட்களில் அருகாமையில் இருக்கும் பல ஊர்களுக்கும் தமிழக மக்கள் பயணித்து வரலாம்.. இதனால் புதிய புதிய இடங்களை நாம் பார்த்து ரசிக்கலாம் என்பதோடு ஷேர் ஆட்டோ, உணவகங்கள், சிறு சிறு வியாபாரங்கள் என தமிழக மக்களின் சுய உற்பத்தி வணிகமும் பெருக வாய்ப்பாகுமே என தோழியிடம் மனதில் பட்டதைத் தெரிவித்துக் கொண்டேன்

சுற்றுலா செல்வது, பயணம் செல்வது என்றால் அது வெளிநாடுகளுக்குத் தான், என்று நாம் நினைக்க வேண்டியதில்லை. நமது பக்கத்து ஊரில் உள்ள ஏராளமான இயற்கை பகுதிகளுக்குச் சென்று வருவதும், வரலாற்று சிறப்புமிக்க இடங்களைச் சென்று பார்த்து வருவதும் கூட சுற்றுலா தான்.
பயணம் சென்று ஓர் இடத்தைப் பார்ப்பதை யாராவது நேர விரயம் என்று சொன்னால் அவர்களை நான் கண்டிக்கத் தயங்கமாட்டேன். ஏனெனில், பயணம் செல்வது மட்டும்தான் நம் அறிவினை விசாலமாக்கும்; நம் சிந்தனையை விரிவாக்கும்; நம்மை இந்த இயற்கையின் அங்கமாகக்கிக் கொள்ள நமக்குத் தகுதியை அளிக்கும்.





தொடரும்
-சுபா

Tuesday, January 21, 2020

சதுரங்கப்பட்டினம் / சட்ராஸ் - ஊர் சுற்றியின் புராணம் - 1

19.1.2020

நீங்கள் உங்கள் நகரைத் துறக்கத் தயாரானால் ஆயிரக்கணக்கான நகரங்கள் உங்களை வரவேற்க முன்வரும். நீங்கள் உங்கள் கிராமத்தை விட்டு வெளியேறுங்கள். ஆயிரக்கணக்கான கிராமங்கள் உங்களை வரவேற்கத் தயாராக இருக்கும். ஒருசில நண்பர் சுற்றத்தாருக்குப் பதிலாக ஆயிரக்கணக்கான நண்பர்களும் சுற்றத்தாரும் உங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
-`ஊர்சுற்றிப் புராணம்`, ராகுல் சாங்கிருத்யாயன்

தமிழகத்தில் கடற்கரை பகுதி நகரம் என்பதோடு அதிகம் பேசப்படாத மீனவர்கள் வாழ்கின்ற சதுரங்கப்பட்டினம் நகரிலுள்ள டச்சுக் கோட்டை இன்று இந்திய தொல்லியல் துறையினால் பாதுகாக்கப்படும் தொல் சின்னங்களுள் ஒன்றாக உள்ளது. டச்சுக்காரர்கள் தமிழகத்தில் தங்கள் வணிகத்தையும் சமய முயற்சிகளையும் நிலைநாட்ட முயற்சித்த கி.பி. 17, 18 ஆகிய காலகட்டங்களில் இப்பகுதி டச்சுக்காரர்கள் நிறைந்த ஒரு பகுதியாக அமைந்திருந்தது. இப்பகுதியைக் கண்டுவரும் நோக்கில் நேற்று ஒரு நாள் பயணம் சென்றிருந்தேன்.

எப்போதும்போல வாகனத்தில் செல்வதைவிட பொதுவாகனத்தில் பயணம் சென்று இப்பகுதியை அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் இருந்தது. அதனால் ரயில், ஷேர் ஆட்டோ, பேருந்து என பயணம் செய்து மக்களின் வாழ்வியலையும் அறிந்து கொள்ளும் வகையில் பயணத்தை அமைக்கலாம் என்று தோன்றியது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லும் ரயில் பயணம் முதலில். அதில் பெண்களுக்கான பகுதியில் ஏறிக்கொண்டேன். 100-க்கும் மேற்பட்ட பெண்கள் அந்தப் பகுதியில் இடித்துக் கொண்டு அமர்ந்திருந்தார்கள். பலர் நின்றுகொண்டிருந்தார்கள்; சிலர் ரயில் பெட்டியில் தரையிலேயே அமர்ந்திருந்தார்கள். கூட்டம் அதிகமாக இருந்ததால் நான் நின்றுகொண்டே பயணிக்கும் சூழல். ஆயினும் கையில் ராகுல் சாங்கிருத்தியாயன் எழுதிய ஊர் சுற்றிப் பயணம் நூல் இருந்ததால் வாசிக்கத் தொடங்கினேன். பயனம் சுவாரசியமாகத் தொடங்கியது.

அவ்வப்போது ரயில் நிற்கும் ஸ்டேஷனில் சிலர் ஏறுவதும் இறங்குவதும் இயல்பான நடவடிக்கை. கூட்டம் அதிகரித்துக் கொண்டே சென்றது. மல்லிகைப் பூவின் மணமும், கலவையான பல உணவு பொட்டலங்கள் திறந்து சாப்பிடுவதின் அடையாளமாக உணவின் மனமும் கலந்து ரயில் பெட்டியை நிறைத்தது. ரயில் பெட்டியில் பயணக்கும் போது சாப்பிடுவதைத் தவிர்க்கலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து. ஆனால் தமிழகத்தில் இயல்பாகவே பயணத்தில் பசிக்கு உணவு சாப்பிடுவது அத்தியாவசியம் என்பது ஒருபுறமிருக்க, உணவு சாப்பிடுவதும் ஒரு பொழுதுபோக்கு என்ற நிலை இருக்கின்றது என்பதை நான் உணர்கிறேன்.

ரயிலில் இருந்த ஒரு பெண்ணின் கையிலும் நூல் ஏதும் இல்லை. இது ஐரோப்பாவில் நாம் ரயில் பயணம் செல்லும் போது காணும் காட்சியிலிருந்து மாறுபாடான ஒரு காட்சி. ஏனெனில் ரயில் பயணங்களில் ஐரோப்பிய மக்களில் பெரும்பாலானோர் கைகளில் ஏதாவது ஒரு நூலோ அல்லது பத்திரிக்கையோ இருப்பது மிக இயல்பு. ஆனால் இங்கோ ஒருவரது கைகளிலும் ஒரு பத்திரிக்கை கூட காணவில்லை. தமிழகப் பெண்களின் வாசிப்பு நிலை குறித்த சிந்தனை என் மனதில் கேள்விக்குறியாக நிற்கின்றது.

நான் பயணித்த ரயில் பகுதியில் பெரும்பாலான பெண்களின் கைகளில் செல் போன் இருந்தது. அதில் காமெடி நடிகர்களின் வீடியோக்கள், பாடல் காட்சிகள் ஓடிக் கொண்டிருந்தன. சிலர் சாட் செய்து கொண்டும் குருஞ்செய்தி பரிமாறிக் கொண்டுமிருந்தனர்.

ரயிலில் பயணத்தின் ஊடே வணிகமும் நடைபெறுகிறது. ஒரு குறவர் பெண் ஒரு ஸ்டேஷனில் ஏறிக்கொண்டார். உரத்த குரலில் பாசி மணிகளையும் பிளாஸ்டிக் பொருட்களையும் கைகளில் ஏந்திக் கொண்டு உரத்த குரலில் கூவிக் கொண்டு வந்தார். சில பெண்கள் அவரிடம் பொருட்கள் வாங்கிக் கொண்டார்கள். சற்று நேரத்தில் பதினெட்டு வயது மதிக்கத்தக்க கந்தலான ஒரு சுடிதார் உடை அணிந்த இளம்பெண் சமோசா கூடையைத் தூக்கி கொண்டு உள்ளே நுழைந்தார். `ஐந்து சமோசா பத்து ரூபாய்` என்று உரத்த குரலில் கூவி வியாபாரம் செய்து கொண்டு வந்தார். சில பெண்கள் அவரிடம் வாங்கினார்கள். ஒரு பெண்மணி அவரிடம் இன்னொரு ஸ்டேஷனில் 7 சமோசா பத்து ரூபாய்க்கு கிடைக்கிறது என்று பேரம் பேசினார். `ஐயாயிரம் ரூபாய்க்கு கவலைப்படாமல் பட்டுச்சேலை வாங்கும் பெண்கள் பத்து ரூபாய்க்கு 5 சமோசா வாங்குவதில் கூட பேரம் பேசுகிறார்களே`, என்ற எண்ணம் என் மனதில் தோன்றாமல் இல்லை.

இடையில் ஒரு மூன்றாம் பாலினப் பெண் ஒருவர் ஏறிக்கொண்டார். அவரும் உரத்த குரலில் ஏதோ கூற, ஒரு சில பெண்கள் கையில் இருந்த காசுகளை அவரது கையில் வைக்க, இவர் காசு கொடுத்த பெண்ணின் தலையில் கையை வைத்து ஆசீர்வாதம் கொடுப்பது என்ற ஒரு சடங்கு நடந்தது. அவர் மிகுந்த உரிமையோடு காசு கேட்பது போல அந்தச் சூழல் எனக்குத் தோன்றியது. அடுத்து, கண்பார்வையற்ற ஒரு இளைஞர் ஒரு இளம் பெண்ணையும் அவள் கையில் குழந்தையுடன் என அழைத்துக் கொண்டு ஒரு ஸ்டேஷனில் ஏறிக்கொண்டார். அவர் தன் பார்வை குறைவைக் காரணம் சொல்லி தனக்குக் காசு கொடுக்க உரத்த குரலில் கேட்டுக்கொண்டார். சில பெண்கள் காசு கொடுத்தனர்.

இப்படி பலதரப்பட்ட நிகழ்வுகள் அந்த மகளிர் ரயில் பகுதிக்குள் நிகழ்ந்து கொண்டிருந்தன. நூல் வாசிப்பிற்கு இடையே இந்த நிகழ்வுகளையும் நான் கவனித்துக் கொண்டிருந்தேன்.

பல வண்ணக் கலவையாக கண்களை நிறைந்திருந்த ரயில் பெட்டியில் இருந்து செங்கல்பட்டு ஸ்டேஷனில் நான் இறங்கிக் கொண்டேன். என்னுடன் சதுரங்கப்பட்டினம் செல்ல வந்திருந்த தோழர் ரேஷல் என்னை செங்கல்பட்டில் சந்திக்க வந்திருந்தார்.





தொடரும்
-சுபா