Sunday, December 23, 2012

நானும் காரைக்குடிக்குப் போன கதை... 19


காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கம் வெற்றிகரமாக அமைந்ததில் ஏற்பாடு செய்த பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த துணைவேந்தர், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் ஆகியோரோடு தமிழ் மரபு அறக்கட்டளையைச் சேர்ந்த எங்களுக்கும் மனம் நிறைவளிப்பதாக அமைந்தது.

கருத்தரங்கம் முடிந்ததும் வேறு என்ன செய்யலாம் என திட்டமிடத் தொடங்கியபோது அன்று மாலை வழக்கறிஞர் திரு.மைக்கல் தான் சார்ந்திருக்கும் அமைப்பின் வழி பாலுவின் ஒரு சொற்பொழிவிற்காக ஏற்பாடு செய்திருந்த தகவல் கிடைத்தது. ஆக, அந்த நிகழ்வில் கலந்து  கொள்வது என்று அப்போதே முடிவானது.

பல்கலைக்கழகத்தை விட்டு புறப்பட்டு விருந்தினர் மாளிகை வந்து தயாராகியவுடன் எங்கள் மூவரையும்  மைக்கலும் காளைராசனும் நிகழ்ச்சி நடைபெறும் மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். காரைக்குடி நகர மையத்திலேயே அமைந்திருந்த ஒரு தங்கும் விடுதியில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்கு முன்னதாக எங்களுக்கு வயிற்றுக்கு நல்ல உணவை மைக்கலும் காளைராசனும் ஹோட்டலிலேயே ஏற்பாடு செய்ய நாங்கள் அங்கேயே உணவருந்தி விட்டு மண்டபத்திற்கு விரைந்தோம்.மைக்கல் உரையாற்றுகின்றார்
பாலு உரையாற்றுகின்றார்

பாலுவின் சொற்பொழிவு கடல் சார் அறிவியல் பற்றியது. அதற்கு முன்னராக சில வார்த்தைகள் கூறுமாறு என்னையும் ஏற்பாட்டுக் குழுவினர் அழைக்க சில நிமிடங்கள் பேசினேன். அதற்குப் பின்னர் நிகழ்ச்சி தொடங்கியது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பாலுவின் இந்த சொற்பொழிவு அமைந்திருந்தது. வந்திருந்த அனைவருமே சொற்பொழிவை மிகக் கவனமாகக் கேட்பதை நன்கு உணர முடிந்தது. பாலு தயார் செய்திருந்த  பவர் பாவிண்ட் ப்ரிசெண்டேஷன் மிக விளக்கமாக கடல் ஆய்வு, தமிழர் தொண்மை ஆகியனவற்றை விளக்குவதாக அமைந்திருந்தது. நலல்தொரு நீண்ட விளக்கம் மிகுந்த சொற்பொழிவைக் கேட்டதில் எனக்கும் மகிழ்ச்சி.


கூட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்த தமிழார்வலர்கள்


ஏற்பாட்டுக் குழுவினருடன் நாங்கள்

ஜனவரி 11ம் நாள் இவ்வகையாக அரியக்குடி பெருமாள் கோயில் தரிசனத்துடன் ஆரம்பித்து பல்கலைக்கழத்தில் கருத்தரங்கத்தை வெற்றிகரமாக முடித்து மாலை அரியதொரு சொற்பொழிவையும் கேட்கும் வகையில் மிகத் திருப்தியாக பயனுள்ள வகையில் அமைந்தது.

இவ்வகையாக காரைக்குடியில் இரண்டு நாட்கள் எனக்கு முழுக்க முழுக்க வெவ்வேறு விஷயங்களாக அமைந்து அலுப்பு என்பதையே மறக்க வைத்து விட்டது என்றே சொல்வேன். மூன்றாம் நாள்.. எனது காரைக்குடி பயணத்தின் இறுதி நாள்.. மூன்றாம் நாள் மாலை  நான் சென்னைக்குப் புறப்பட வேண்டும். ஆனால் அந்த மூன்றாம் நாளும் செய்து முடிக்க சில திட்டங்களைத் தீட்டினோம் நானும் காளைராசனும்.தொடரும்...

சுபா

Saturday, December 22, 2012

நானும் காரைக்குடிக்குப் போன கதை... 18


எனது தமிழகத்துக்கானப் பயணங்களை நான் சில மாதங்களுக்கு முன்னதாகவே எற்பாடு செய்து விடுவது வழக்கம். அந்த  வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே இவ்வாண்டு எனது ஜனவரி  தமிழக பயனத்திட்டத்தை ஏற்பாடு செய்தபோது காளைராசன் பணிபுரிகின்ற அழகப்பா பல்கலைக் கழகத்திலும் தமிழ் மரபு அறக்கட்டளையுடன் இணைந்த  ஒரு ஒரு நாள் கருத்தரங்கினை ஏற்பாடு செய்யலாமே என யோசனை தோன்ற அந்த ஏற்பாடுகளில் இறங்கினோம்.

பல்கலைக்கழக துணைவேந்தரின் சம்மதம் கிடைக்கப்பெற்ற பின்னர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்வதில் சிரமம் இருக்க வில்லை. பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையிலேயே தங்குவதற்கான ஏற்பாட்டினையும் துணை வேந்தர் அளித்தமையால் தங்குமிடம் தேடுவதிலும் பிரச்சனைகள் ஏற்படவில்லை. த.ம.அ -வை பிரதி நிதித்து நானும் கண்ணனும் பாலுவும் பேசுவது என்று முடிவானது. பல்கலைக்கழகத்தின் சார்பில், தமிழ்த்துறை, அறிவியல் துறை, கணினித் துறை ஆகியவற்றிலிருந்தும் மேலும் வேறு சில துறைகளிலிருந்தும் பேராசிரியர்களும் ஆசிரியர்களும் கலந்து கொள்ளும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடானது.

காலையில் 10 மணிக்கு கருத்தரங்கம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்குதல், பின்னர் அறிமுக உரை, மதிய உணவு என்றும் அதன் பின்னர் இரண்டு வெவ்வேறு மண்டபங்களில் கருத்தரங்கங்களுமாக ஏற்பாடுகள் செய்தோம். இந்த ஏற்பாட்டில் எல்லா பொறுப்புகளையும் எடுத்துக் கொண்டு திறமையாக செயலாற்றி ஏற்பாட்டினை விரும்பிய படியே செய்த காளைராசனை மனமாரப் பாராட்டித்தான் ஆக வேண்டும். அவர் இந்தக் கருத்தரங்கம் சிறக்க நிகழ்ச்சிகளை அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சம் மாற்றி சரியான தலைப்புக்களைத் தேர்ந்தெடுத்து எங்களுக்கு வழங்கியதோடு தமிழ்த்துறை அறிவியல்துறை பேராசியர்களையும் தொடர்பு கொண்டு, அவர்களையும் உடன் சேர்த்துக் கொண்டு இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமானதாக ஆக்கிக் கொடுத்தார்.

11ம் தேதி காலையில் அரியக்குடி ஆலயத்தில் பூஜையை முடித்துக் கொண்டு நேராக பல்கழகத்திற்குப் புறப்பட்டோம். நேராக எங்களை துணைவேந்தர் அறைக்கு அழைத்துச் சென்று எங்களை துணைவேந்தருக்கு அறிமுகம் செய்து வைத்தார் காளைராசன். சிறிது நேரம் அலவளாவிய உடன் அனைவருமாக சேர்ந்து கருத்தரங்கம் நிகழும் மண்டபம் வந்தோம். அங்கே ஏற்கனவே பாலுவும் மைக்கலும் வந்திருந்தார்கள். அவர்களுடன் உரையாடி விட்டு நிகழ்ச்சியை ஆரம்பித்தோம்.

இந்தக் கருத்தரங்க நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்துடன் குத்து விளக்கேற்றி வைக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது.
மண்டபம் நிறைந்த மாணவர்கள், பேராசிரியர்கள். டாக்டர்.வள்ளியும், காளைராசனின் மகளும் கூட வந்திருந்தார்கள். மாணவர் முகங்களில் ஆவல். சொற்பொழிவுகளைக் கேட்டு புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்வதில் மாணவர்கள் ஆர்வத்துடன் இருந்தது முகத்தில் தெரிந்தது.


சுபா, நா.கண்ணன், துணைவேந்தர், தமிழ்த்துறைத் தலைவர்

துணைவேந்தரின் தொடக்க உரை, நா.கண்ணனின் உரை, பின்னர் எனது உரை ஆகியவை முடிந்து தமிழ்த்துறை தலைவரும் உரையாற்றினார்கள். இனிமையாக அந்தத் தொடக்க விழா நடந்தேறியது.


துணைவேந்தர் தொடக்க உரையாற்றுகின்றார்

மதிய உணவிற்குப் பின்னர் பட்டறைகள் நடைபெற்றன. பாலு கடல் ஆய்வு பற்றி பேச, நான் தற்கால கணினித்துறை தொழில்துறை வளர்ச்சி, தேவைகள் என்ற தலைப்பில் உரையாற்ற நா.கண்ண்ன த,ம.அ மின்னாக்கப் பணிகள் தொடர்பாக உரையாற்றினார்.மாணவர்களுடன் நான்நிகழ்ச்சி முடிந்து மாணவர்கள் என்னை சூழ்ந்து கொண்டனர். மாணவர்களுடன் இருப்பது எனக்கு மிக மிக பிடித்தமான ஒரு விஷயம். பல மாணவர்கள் கருத்தரங்கத்திற்குப் பின்னரும் கேள்விகள் கேட்டும் பேசிக்கொண்டும் என்னை தங்கள் அன்பினால் திக்கு முக்காடச் செய்தனர். பலர் என்னுடன் சேர்ந்து இருந்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். அன்றைய பொழுதின் நினைவுகள் என் மனதில் மகிழ்ச்சியான நினைவுகளைத் தருவதாக அமைந்தது.இந்த நிகழ்ச்சியின் வழி காரைக்குடி அழகப்பா பல்கலைகழகப் பேராசிரியர்கள் டாக்டர் சந்திரன், டாக்டர்.கண்ணன் இன்னும்பேராசிரியர்கள் பலரது அறிமுகமும் எனக்கு ஏற்பட்டது. அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த பொழுதுகளில் அவர்கள் மாணவர்களுக்காக செய்து வரும் திட்டங்கள் பற்றியும் அறிந்து கொள்ள முடிந்தது.  இந்த இனிய வாய்ப்பினை உருவாக்கிக் கொடுத்த நண்பர் காளைராசனுக்கு எனது நன்றிகளை இப்பதிவில் தெரிவித்துக் கொள்வது கடமைக்காக அல்ல என்பதை அவர் அறிவார்.


தொடரும்...
சுபா

Sunday, December 16, 2012

நானும் காரைக்குடிக்குப் போன கதை... 17


காரைக்குடியில் இரண்டாம் நாள் தமிழ் மரபு அறக்கட்டளையும் அழகப்பா பல்கலைக்கழகமும் சேர்ந்து ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கம் நிகழ இருந்தது. காலை பத்து மணிக்குக் கருத்தரங்கம் தொடங்குவதாக ஏற்பாடாகி இருந்தது. கருத்தரங்கம் செல்வதற்கு முன்னர் கோயில் தரிசனம் ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தார் நண்பர் காளைராசன்.அரியக்குடி பெருமாள் கோயில் தான் அது. பெருமாள் கோயில் என்றாலே நம் கண்ணனுக்கு மகிழ்ச்சி. அவர் முகமெல்லாம் புன்னகையுடன் அரியக்குடி பெருமாளைச் சேவிக்கச் செல்கின்றோம் என்ற பூரிப்பில் அன்று காலை இருந்தார். நான் பாலு, கண்ணன் மூவருமே காலையிலேயே தயாரானவுடன் எங்களை காளைராசன் வாகனத்தோடு வந்து அழைத்துச்  சென்றார்.

அரியக்குடி என்றாலே பெருமாள் கோயிலும் சங்கீத வித்வான் சங்கீத கலாநிதி அரியக்குடி ராமானுஜ ஐயங்காரும் ஞாபகத்திற்கு வராமல் இருக்க முடியாது. சங்கீதத்தில் சாதனை படைத்தவர் அவர். (அவரது சாமஜ வரதா என்ற பாடல் சுத்தசாவேரி ராகத்தில் கேட்டுப் பாருங்கள். http://www.youtube.com/watch?v=Ibfewrcwbaw )

காலை எட்டு மணி வாக்கிலேயே கோயிலை அடைந்து விட்டோம். பழமையான கோயில். வெளியே தோற்றத்தில் சிறிதாகத் தெரியும் கோயில் உள்ளே செல்ல செல்ல நீண்டு கொண்டும் விரிவாகியும் ப்ரமிக்க வைத்தது. வைஷ்ணவ சம்ப்ரதாயத்தைப் ப்ரதிபலிக்கும் வைஷ்ண சின்னங்கள் கோயில் முழுதும் நிறைந்திருக்கின்றன.  இந்தக் கோயில் நிர்மானிப்பில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட செட்டியார்களின் உருவச் சிலைகளும் பதிக்கப்பட்டிருக்கின்றன.சிறுகுளத்துடையான் முருகன் செட்டியார் மகன் சேவுகன் செட்டியார்

இந்தச் சேவுகன் செட்டியார் திருவேங்கடமுடையானின் தீவிர பக்தராக இருந்திருக்கின்றார். இவரே உடையவரால் ஆராதிக்கப்பட்டதிருவேங்கடமுடையான் சிலையை இங்கே கொண்டு வந்து இக்கோயிலை கட்டி அமைத்ததாக தினமலர் பதிவு குறிப்பிடுகின்றது.  

தென் திருப்பதி என்றும் சொல்லப்படும் இந்த ஆலயத்தின் மூலவர் திருவேங்கடமுடையான்; தாயார் அலமேலு மங்கை. கோயிலின் எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்து ஆலயத்தின் கலை நேர்த்தியுடன் அமைந்திருந்த சிற்பங்களைக் கண்டு ரசித்தோம்.இந்த ஆலயத்தின் மூலைக் கருடன் சின்னம் சிறப்பு வாய்ந்தது. எங்களை அங்கும் அழைத்துச் சென்று மூலைக் கருடனைக் காட்டி வணங்கிக் கொள்ளச் செய்தார் காளைராசன்.

ஆலயத்தின் வாசல் புறத்தில் நேர்த்தியான ஒரு சிறு தோட்டத்தை ஆலய நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருக்கின்றனர். அங்கே செழித்து வளர்ந்திருந்த பச்சை பசேலென்ற புல் தரையும் அங்கு தாய் பசுவிடம் பால் குடித்துக் கொண்டிருந்த கன்றையும் பார்த்து நாங்கள் நால்வருமே எங்கள் மனதைப் பறி கொடுத்தோம். தாய்மை பரிவுடன் அந்தப் பசு தன் கன்றை பார்க்கும் பார்வையில் இறையருளின் கருணையையும் அனபையும் நாங்கள் உணர்ந்து மகிழ்ந்தோம்.ஆலயத்தின் வெளிப்புறத்தில் தெப்பக்குளம் ஒன்றும் இருக்கின்றது. இயற்கை சூழல் அந்தக் காலை பொழுதில் மனதிற்கு மிக இதமாக அமைந்திருந்தது. அந்த எழில் மிகு சூழலும் இறை தரிசனமும் எங்கள் பணிகளுக்கு ஆசீர்வாதம் வழங்கியதாக உணர்ந்து அழகப்பா பல்கலைக்கழகத்தை நோக்கி வாகனத்தைச் செலுத்தினோம்.


தொடரும்...

அன்புடன்
சுபா

Saturday, December 15, 2012

நானும் காரைக்குடிக்குப் போன கதை... 16


காரைக்குடிக்கு வந்து விட்டு செட்டி நாட்டு சேலை வாங்கிச் செல்லாமல் போவதற்கில்லை என்று என் மனதிற்குள் முடிவெடுத்து விட்டேன். காரைக்குடியை நெருங்கும் போதே மணி 7க்கும் மேலாகி விட்டது. டாக்டர் வள்ளியிடம் என் மனதில் உள்ள ஆசையை தெரிவித்தேன். அவருக்கும் உடன் வர ஆசை. ஆனால் நேரம் குறைவாக இருக்கின்றதே என்று வருத்தம். எனக்கு 30 நிமிடம் கிடைத்தால் போதும் தேவையான சேலைகளை வாங்கி விடுவேன் என்று சொன்னேன். அவர் நம்பவில்லை. சரி உங்கள் ஆசையை நான் ஏன் கெடுக்க வேண்டும் என்று சொல்லி காளைராசனையும் கண்ணனையும் பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் விட்டு விட்டு அவர்கள் காரிலேயே கடைத்தெருவுக்குச் சென்று வருவது என்று முடிவெடுத்தோம்.

கடைத்தெருவுக்கு அருகிலேயே அவர்கள் வீடும் இருந்ததால் நாங்கள் சாலையில் இறங்கிக் கொண்டு வாகனத்தை திருப்பி அனுப்பி விட்டோம். எங்களுக்காகக் காலையிலிருந்து வாகனமோட்டிய வாகனமோட்டிக்கும் ஓய்வு தேவையில்லையா?

சாலையில் பல கடைகள் அதற்குள் சாத்தி விட்டார்கள். சற்று நடந்து வருகையில் இரண்டு பெரிய கடைகள் இருந்தன. ஒன்றில் நுழைந்தோம். எனக்கு எப்போதுமே பிடித்தது கைத்தறி சேலைகள் தான். அதனால் எனக்கு கைத்தறி சேலைகள் சிலவற்றை காட்டச் சொன்னேன். அவர் சட சட வென்று பல சேலைகளை அள்ளிக் குவித்து விட்டார்.

மனதில் சுங்குடி சேலை வாங்க வேண்டும் என்றும் எண்ணமிருந்தது. ஆனால் எத்தனை சேலைகளைத் தான் வாங்குவது? சுங்குடிச் சேலையை எடுத்துக் காட்டச் சொன்னேன். அதில்  20 வகைகள் எடுத்துப் போட்டார். அதில் மனதைக் கவர்ந்த  ஒரு நீல நிறச் சேலையை உடனே எடுத்துக் கொண்டேன். அடுத்து எனக்கு செட்டி நாட்டு கைத்தறியைக் காட்டுங்கள் அது தான் முக்கியமாக வேண்டும் என்று சற்று அழுத்திச் சொல்ல உடனே சில சேலைகளை எடுத்து வைத்தார்.

என் ரசனைக்கேற்ற சேலைகள். அதில் ஒரே டிசைனில் மூன்று சேலைகள் எடுத்துக் கொண்டேன். எனக்கு ஒன்றும் ஸ்டெல்லாவிற்கு ஒன்றும் டாக்டர்.பத்மாவிற்கு ஒன்றும் என்று மூன்று சேலைகள் ஒரே டிசைனில் வெவ்வேறு வர்ணங்களில். பின்னர் மேலும் ஒரு சேலை என் கண்களை மிகக் கவர்ந்தது. அழுத்தமான நீலத்தில் வெளிர் நீல நிறத்து செட்டி நாட்டுக் கைத்தறி சேலை. அதனையும் எடுத்துக் கொண்டேன். ஒரு சுங்குடி சேலையும், 4 செட்டிநாட்டு கைத்தறிகளும் எடுத்துக் கொண்டு அவரிடம் பில்லை கொடுத்து பணம் கட்டும் போது 20 நிமிடம் தான் ஆகியிருந்தது. டாக்டர் வள்ளிக்கு ஒரே ஆச்சரியம். இவ்வளவு சீக்கிரத்தில் 5 அழகான சேலைகளை தேர்ந்தெடுத்து விட்டீர்களே என்று சொல்லிக் கொண்டிருந்தார். மனதில் என்ன சேலை வேண்டும் என்று முன்னமே தீர்மானித்து வைத்திருக்கும் போது அதே வகையில் தென்பட்டால் உடனே எடுத்துக் கொள்ள வேண்டியது தானே..:-)))

செட்டி நாட்டு கைத்தறி சேலைகள் மிக மெண்மையானவை. அழகான வடிவத்திலும் அமைந்தவை. விலையும் மலிவு. சென்னையை விட காரைக்குடியிலேயே இன்னும் குறைந்த மலிவான விலைக்குள் நல்ல சேலைகளை எடுக்க முடிகின்றது.

சேலை வாங்கி வந்தவுடனேயே  டாக்டர்.வள்ளி அங்கேயே ஒரு தெரிந்த ஆட்டோக்காரரை பார்த்து என்னை பத்திரமாக விருந்தினர் மாளிகைக்கு அனுப்பி வைத்தார். எனது காரைக்குடி பயணத்தின் முதல் நாள் இப்படி எல்லா வகையிலும் திருப்தி அளிப்பதாக அமைந்ததில் எனக்கு அளவில்லா மகிழ்ச்சி.

ஆசையாக வாங்கி வந்த ஒரே சுங்குடி சேலையை சென்னையில் நீண்ட நாள் சந்திக்காமல் இருந்து திடீரென சந்தித்த ஒரு நீண்ட நாள் தோழிக்கு பரிசளித்து விட்டேன்.


ஸ்டெல்லா, சுபா, டாக்டர்.பத்மா

இந்தக் காரைக்குடி செட்டிநாட்டு கைத்தறி சேலையை  டாக்டர்.பத்மா, ஸ்டெல்லா, நான் மூவருமே கடந்த சென்னை புத்தக கண்காட்சி நாளில் உடுத்தியிருந்தோம். ஆண்டோ பீட்டர் எங்களை ஒரு புகைப்படம் எடுத்தார். எல்லாம் நினைவுகளில் மறையாமல் இருக்கின்றன.

தொடரும்...


அன்புடன்
சுபா

Sunday, December 9, 2012

நானும் காரைக்குடிக்குப் போன கதை... 15

தமிழ் நாட்டில் களப்பணி அனுவங்கள் என்றுமே மறக்க முடியாத அனுபவங்களைக் கொடுப்பவை. இப்போது நினைத்துப் பார்க்கின்றேன். தேவகோட்டையில் இருந்த அன்றைய மகிழ்ச்சி என் மணக்கண்ணில் வந்து போகின்றது. 

நீளமான சாப்பாட்டு மேசை. அதில் வந்திருந்த எங்கள் அனைவரையும் கூப்பிட்டு சாப்பிட அமர்த்தி விட்டார்கள். பெரிய வட்டமான சாப்பாட்டு தட்டு எங்களுக்கு. அதில் வரிசையாக ஒவ்வொன்றாக உணவு வகைகள் வந்து சேர்ந்தன. ஜமீந்தார் வீட்டுப் பெண்மணிகள் சட் சட்டென்று அந்த தட்டை நிறைத்ததே கண் கொள்ளா காட்சி. முதலில் கொழுக்கட்டை. அதோடு ப்ரெட் கட்லெட், தோசை, அதற்கு சாம்பார், சட்னி வகைகள், மிளகாய் துவையல், பொடி. இவையெல்லாம் போதாதென்று மக்கரோணி வருவல் வேறு.

Inline image 1

அந்தக் கொழுக்கட்டையின் அழகு இருக்கின்றதே... என்ன சொல்வது? வழு வழுப்பான மேல் பாகம். தயாராகி வந்தவுடன் சொட்டு எண்ணையோ நெய்யோ தேய்த்திருப்பார்கள் போல. பள பளவென்று ஜொலித்துக் கொண்டிருந்தது. உள்ளே பருப்பு பூரணம். பாதி வெடித்து தெரிந்த அந்தக் கொளுக்கட்டையைப் பார்த்ததும் முன்னர் எங்கள் அம்மா செய்யும் மோதகம் ஞாபகம் வந்தது. அதில் வட்ட வடிவத்தில் பூரணத்தை உள்ளே வைத்து அம்மா செய்வார்கள். ஆனாலும் இந்தப் பளிச்சிடும் வெள்ளையை நான் பார்த்ததில்லை. அவ்வளவு அழகு.  அந்த கொழுக்கட்டையை சமோசா செய்வது போன்ற வடிவில் செய்து நேர்த்தியாக அதனை மடித்திருந்த விதமும்  கொழுக்கட்டையின் கவர்ச்சியை அதிகரித்தது. நான் எத்தனை கொழுக்கட்டைகள் அன்று சாப்பிட்டேன் என்று தெரியாது. ஆனால் இரண்டுக்கும் மேல் சாப்பிட்டேன் என்பது ஞாபகம் இருக்கின்றது.

Inline image 2

மக்கரோணி இத்தாலியன் உணவு ஆயிற்றே. அது எப்படி காரைக்குடிக்கு வந்தது என்று வியந்து கேட்டால், எங்க செட்டி நாட்டிலே மக்கரோணி 1940லிருந்தே வழக்கத்திலே இருக்கே" என்று ஒரு அதிசய செய்தியை சொல்லி வைத்தார் அந்த வீட்டுப் பெண்மணி. இது எப்படி சாத்தியமானது என்று ஆச்சர்யமாக இருந்தது. பர்மாவுக்கான இவர்களது போக்குவரத்தினாலும், தொடர்ந்த பல கடல் பயணங்களின் தாக்கத்தாலும் இந்த உணவு அவர்கள் உணவு பாரம்பரியத்தில் இணைந்திருக்க வாய்ப்பிருக்கின்றது. அதோடு அதை சமைத்திருந்த விதம் மலேசிய மீ கோரெங், சார் கொய் தியாவ் வகை நூடல் பிரட்டல் வகையை ஞாபகப் படுத்துவதாக இருந்தமை இது அவர்களின் வெளி நாட்டு தொடர்பின் விளைவு என்பதை மிகத் தெளிவாகக் காட்டியது.

Inline image 3

சுடச் சுட தோசை தட்டில் வந்து விழுந்தது. நெய்யில் பள பளக்கும் தோசை. அதற்கு சட்னி வகைகளும் சாம்பாரும் என தட்டில் சேர, அதனையும் விடாமல் சாப்பிட ஆரம்பித்தேன். சூடான தோசை அதற்குக் கெட்டியான தேங்காய் சட்னி, மிளகாய் சட்னி என்றால் நான் எல்லாவற்றையும் மறந்து  அந்தச் சுவையை ரசிப்பதிலேயே என் மனம் செல்லும். அதிலும் அன்றைக்கோ நல்ல அலைச்சல் வேறு. மதியம் குன்றக்குடியில் சாப்பிட்டிருந்தமையால் முதலில் பசி தோன்றவில்லை. ஆனால் இந்தக் கண்களைக் வரும் வாசனை நிறைந்த உணவு வகைகளைப் பார்த்த பின்னர் பசி ஓடி வந்து ஒட்டிக் கொண்டது.

Inline image 4

ஜெர்மனியில் இலங்கைத் தமிழர்கள் வீடுகளில் கட்லெட் என்பது பொதுவாக எல்லா விருந்து வைபவங்களிலும் இருக்கும்.  தமிழக நண்பர்கள் வீட்டில் பொதுவாக இதனை நான் சுவைத்ததில்லை.இந்த ப்ரெட் கட்லெட் பொதுவாக நான் விரும்பி சாப்பிடும் ஒரு உணவு அல்ல. ஸ்பெயின் மற்றும் அதன் தீவுகளான கனேரி தீவுகளில் இவ்வகை உருளைக்கிழங்கு கட்லெட்கள் சற்று ப்ரசித்தி. எனது லா பல்மா தொடரில் கூட க்ரோக்கெட் பற்றி சொல்லியிருந்தேன். அதுவும் இவ்வகையான ஒரு உணவு வகையே. பல்வேறு நாடுகளில் வழக்கில் உள்ள உணவு வகைகள் மற்ற பிர நாடுகளுக்குச் செல்லும் போது அதில் சில மாற்றங்களுடன் உள்ளூர் உணவு பழக்கத்திலும் சேர்ந்து கொள்கின்றது என்பதற்கு இங்கே நாங்கள் சுவைத்த மக்கரோணியும்  கட்லெட்டும் நல்ல உதாரணம். கண்களுக்குக் கவர்ச்சியாக இருந்த அந்தப் ரெட் கட்லெடில் உதாரணத்திற்கு ஒன்றினை சாப்பிட்டு சுவைத்தேன். நல்ல சுவை. 

Inline image 5

இவற்றையெல்லாம் சாப்பிட்டாலும் இறுதியில் காப்பி வாங்கி குடிக்காமல் எனது சாப்பாடு என்றும் முடியாது. ஆக ஆசைக்கு மீண்டும் ஒரு முறை காப்பியைக் கேட்டு வாங்கி அருந்தினேன். தேவகோட்டை ஜமீந்தார் வீட்டு உபசரிப்பில் மனமும் நிறைந்தது. வயிறும் நிறைந்தது.

அப்போதே ஆறு மணியை நெறுங்கிக் கொண்டிருந்தது. தேவகோட்டையிலிருந்து புறப்பட்டால் தான் தக்க சமயத்தில் காரைக்குடி பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையை அடைய முடியும் என்பதோடு மறு நாள் நிகழ்ச்சிகளைப் பற்றி திட்டமிட முடியும். ஆக தேவகோட்டை ஜமீந்தார் குடும்பத்தினரிடம் எங்கள் நன்றியை தெரிவித்து அங்கிருந்து புறப்பட்டோம். 

மறு நாள் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் கருத்தரங்கம் ஏற்பாடாகியிருந்தது. அதற்கு முன்னர் கோயில் வழிபாட்டினை காளைராசன் ஏற்பாடு செய்திருந்தார். மாலை ஒரு சொற்பொழிவு நிகழ்ச்சியும் வேறு. அதற்கு மறு நாள், அதாவது மூன்றாம் நாள் மற்ற பிற திட்டங்கள் மனதில் இருந்தன. அதோடு மூன்றாம் நாள் மாலை நான்காரைக்குடியிலிருந்து சென்னை புறப்பட வேண்டிய நிலையும் இருந்தது. 

இதில் எப்போது நான் காரைக்குடி கடை தெருவிற்குச் சென்று செட்டி நாட்டு சேலையை வாங்குவது என்ற ஒரு கவலை மனதில் வர ஆரம்பித்தது.எப்படியாகினும் இன்றே அதனையும் முடித்து விட வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டேன்.

தொடரும்.....

சுபா

Saturday, December 8, 2012

நானும் காரைக்குடிக்குப் போன கதை... 14


தேவகோட்டைக்குச் செல்லும் பாதை மிக அழகானது. குறுகலான ஒரு வாகனம் மட்டுமே செல்லும் சாலை தான் என்றாலும் பயணத்தை ரசிக்கும் படியான சூழல் இருந்தது. சாலையில் அதிகமான வாகணங்கள் இல்லை. சாலையின் இரு பக்கங்களிலும் புளிய மரங்கள். புளிய மரத்தின் இலைகளின் பசுமை மனதில் இருந்த களைப்பை நீக்கின. பாதை நெடுகிலும் இப்படி புளிய மரங்களை நட்டு வைத்த அந்தப் புண்ணியவான்கள் யார் என்று கேட்டபோது சிவகங்கை சமஸ்தானத்தின் ஏற்பாடு அது என்று டாக்டர்.வள்ளியும் காளைராசனும் விளக்கியதில் தெரிந்து கொண்டேன்.

இந்தப் புளிய மரங்கள் மிகப் பழமையானவை. நீண்ட வயதைக் கொண்டவையாக நிச்சயம் இருக்க வேண்டும். மரங்கள் நட்டு வைத்து இயற்கை எழிலை பாதுகாக்க வேண்டும் என்று அப்போது இருந்த அந்த மனப்பாங்கு இன்று தமிழகத்தில் எங்கே சென்றது? எங்கேயாவது ஓரிருவர் மரங்கள் நட்டு அவ்வப்போது விழிப்புணர்ச்சி ஏற்படுத்தினால் உண்டு என்ற நிலையைத் தானே இப்போது காண்கின்றோம். இருக்கின்ற மரங்களைச் சாலையை பராமரிக்கின்றேன் பேர்வழி என்று வெட்டிப் போடாமல் இருந்தாலே போது சாமி என்று எல்லா கடவுள்களையும் வேண்டிக் கொள்ளும் நிலை தானே இப்போது உள்ளது.

அந்த ரம்மியமான சூழலிலேயே பயணித்து தேவகோட்டையை அடைந்தோம். வீட்டை அடைவதற்குள் திரு. ராமகிருஷ்ணன் (ஜமீந்தார்) எங்களுக்கு இடைக்கிடையே தொலைபேசியில் அழைத்து எங்கேயிருக்கின்றோம், ஏதும் ப்ரச்சனையா எனக் கேட்டு நாங்கள் நல்ல படியாக ஜமீன் வீட்டை வந்தடைய உதவினார்.

திரு.ராமகிருஷ்ணன் மிக அன்பான மனிதர். வீட்டில் சில பெண்மணிகளும் ஒரு வேலையாள் ஒருவர் மட்டுமே இருந்தனர்.

நாங்கள் வந்து சேரவும் அங்கே பாலுவும் மைக்கலும் வந்து சேரவும் சரியாக இருந்தது. திரு.மைக்கல் எனக்கு காளைராசன் வழி அறிமுகமானவர். அன்று தான் முதன் முதலில் பார்க்கின்றேன். உடனே அன்புடன் பேசிப் பழகும் நல்ல குணம் கொண்ட மனிதர். பாலு தனது அன்றைய செய்திகளையெல்லாம் என்னிடம் சொல்லி தகவல் பரிமாறிக் கொண்டார். மைக்கலும் பாலுவும் மாத்திரம் நன்கு குளித்து பளிச்சென்று இருக்க எங்கள் களப்பணி கூட்டமோ வேர்த்து  முகமெல்லாம் வாடிப்போய் இருந்தோம். ஒரு ஜமீந்தார் வீட்டிற்கு வரும் கோலத்தில் நாங்கள் இல்லையே என நினைத்து சற்று தயக்கம் மனதில் வரத்தான் செய்தது. ஆனால் அந்தத் தயக்கத்தையெல்லாம் மறக்கும் படி செய்தது திரு.ராமகிருஷ்ணனின் குடும்பத்தாரின் வரவேற்பு.


திரு.ராமகிருஷ்ணன் (வேஷ்டி அணிந்திருப்பவர்), பாலு, மைக்கல், காளைராசன், நா.கண்ணன்

தமிழ் மரபு அறக்கட்டளை பற்றி ஏற்கனவே திவாகர் விளக்கியிருந்தமையால் எங்கள் நோக்கம் அறிந்திருந்திருந்தார்கள். நான் வீடு முழுக்கச் சுற்றிப் பார்க்க அனுமதி வழங்கினார். வீட்டினை வீடியோ பதிவு ஒன்று செய்து கொண்டேன். இருட்டுவதற்குள் செய்து விடுவது நல்லது என்பதால் வந்த உடனேயே என் வேலையைத் தொடங்கி விட்டேன்.

தேவகோட்டை ஜமீன் மாளிகை பதிவு மண்ணின் குரலில் வெளிவந்த செய்தியை மின் தமிழில் இங்கே வாசிக்கலாம். https://groups.google.com/forum/?fromgroups=#!topic/mintamil/hNrFWGnZYwQசுபா, ஜமீந்தார் வீட்டுப் பெண்மணி, டாக்டர்.வள்ளி

அந்த ஜமீன் வீட்டில் எத்தனை எத்தனையோ அரசாங்க விஷயங்கள் நடந்திருக்கும். பல அரசியல் கூட்டங்கள் நடந்திருக்கும். பல அரச வம்சத்தினர், ஜமீன் வம்சத்தினர் வந்து போயிருப்பர் என்றெல்லாம் நினைத்துப் பார்க்கும் போது எழுந்த வியப்பும் அங்கு வந்து பார்த்து ரசிக்கும் வாய்ப்பு கிடைத்தமையை நினைத்து மன மகிழ்ச்சியும் அத்தருணத்தில் எனக்கு ஏற்பட்டது. இதேபோலத்தான் எட்டயபுர ஜமீந்தாரின் மாளிகையில் நான் சுற்றி வந்த போதும் உணர்ந்தேன். எனது எட்டயபுர பயணக் கட்டுரைப்பதிவுகளை இதுவரை வாசித்திராதவர்கள் இங்கே சென்று அதனை வாசிக்கலாம்.

அன்பான உபசரிப்பு. அதிலும் நண்பர்களோடு கூடி நின்று பேசி மகிழ்வதும் வேறு சேர்ந்து கொண்டதால் எங்களுக்கு நேரம் சென்றதே தெரியவில்லை. எனது வீடியோ பதிவு முடிந்தவுடனேயே எங்களுக்கு பலத்த விருந்துபசரிப்பு.

அப்பப்பா.. வியந்து போனேன் அந்த உபசரிப்பில். அதனை ஒரு தனி பதிவாக அடுத்த பதிவில் நாளை சொல்கிறேன்.. காத்திருங்கள்.


தொடரும்...
சுபா

Monday, December 3, 2012

நானும் காரைக்குடிக்குப் போன கதை... 13


ஆத்தங்குடியை அடையும் போது மணி மதியம்  2க்கு மேல் இருக்கும். வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது.

செட்டிநாட்டுக்குச் செல்வது என்று முடிவான போதே, அதாவது 2011ம் ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களிலேயே நான், ராஜம் அம்மா, மீனா, காளைராசன் ஆகியோர் என்னென்ன இடங்களைச் சென்று நாங்கள் பார்க்க வேண்டும் என பட்டியலிட்டபோது, இந்த ஆத்தங்குடிக்கானப் பயணமும் அதில் இணைந்து கொண்டது. ஆத்தங்குடிக்கு நாங்கள் வரக்காரணமாக அமைந்தது அங்கிருக்கும் செட்டிநாட்டு கலையைப் பிரதிபலித்து நிற்கும் ஓர் இல்லம் தான்.
இந்தச் செட்டி நாட்டு வீட்டிற்கு ஏற்கனவே சென்று வந்த டாகடர்.ராஜம்  விவரமாக ஒரு பதிவு ஒன்றினை மின்தமிழில் எழுதியிருந்தார்கள். அதனை இங்கே காணலாம்.  அதனால் இந்த வீட்டிற்குச் சென்று நேரில் பார்த்து வர வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் சற்று அதிகமாக இருந்தது.

ஆக வீட்டு வாசலில் ஓர் ஓரமாக டாக்டர்.வள்ளியின் வாகனத்தை நிறுத்தி விட்டு வீட்டிற்குள் சென்றோம். வீட்டில் யாரும் தற்சமயம் தங்கியில்லை. ஆனால் பாதுகாப்பிற்காக இரண்டு பெரியவரகள் நின்று கொண்டிருந்தனர். வந்த எங்களை வரவேற்று  அருந்த தண்ணீர் வேண்டுமா என்று கேட்டும் உபசரித்தனர். அவர்களுக்கு நாங்கள் எங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு நாங்கள் இந்த வீட்டின் கலை அழகை புகைப்படங்களும் வீடியோ பதிவும் செய்ய வந்திருக்கின்றோம் என்றும் சொல்லி அனுமதி வாங்கிக் கொண்டு உள்ளே சென்று வீட்டை சுற்றிப் பார்த்தோம்.

வீடு முழுக்க பர்மா தேக்கு மரங்களால் செய்யப்பட்ட தூண்கள். ஜப்பான் பளிங்குகள் கூரைப் பகுதியை அலங்கரிக்க இத்தாலிய பளிங்குகள் வீட்டின் தரைப்பகுதியை அலங்கரித்துக் கொண்டிருந்தன.நீண்ட வாயில் பகுதி. அதனை கடந்து முற்றம். அங்கே ஒவ்வொரு கதவிலும் ஒரு ஓவியம். குழந்தை கண்ணன் பிறந்த கதையின்  வரலாறு ஓவியமாக கதவுகளில் அலங்கரித்துக் கொண்டிருந்தன. நானும் காளைராசனும் கண்ணனும் அவற்றை முடிந்த வரை புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்.

வீட்டின் வளவு எனக் குறிப்பிடப்படும் பகுதிக்குச் சென்று அங்குள்ள அறைகள், அறைகளுக்கு முன் உள்ள ஆட்டுக்கல், அம்மிக்கல் ஆகியவற்றையும் பார்த்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். ஒவ்வொரு வீட்டிற்கும் தனித்தனியாக ஆட்டுக்கல், அம்மிக்கல். குடும்பமாக அனைவரும் சேர்ந்தே இருந்தாலும் சமையல் அவரவருக்கு தனித்தனியாகத்தான் நடக்கும் என்று டாக்டர்.வள்ளி விளக்கிச் சொன்னார்.அந்தக் குட்டி அரண்மனை போன்ற அந்த வீட்டில் இருந்து பார்த்து ரசித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டோம். வீட்டின் முழு ஒலிப்பதிவையும் இன்றைய மண்ணின் குரல் வெளியீட்டில் வீடியோ பதிவாக வெளியிட்டிருக்கின்றேன். அதனை இங்கே காணலாம். http://video-thf.blogspot.de/2012/12/blog-post_4.html

வீடியோ எடுத்துக் கொண்டிருக்கும் போதே பேட்டரி காலியாகிவிட்டதால்` அதிகமாக பதிவு செய்ய இயலவில்லையே என்ற வருத்தம் எனக்கு. புகைப்படங்களை ஏற்கனவே காளைராசன் மின்தமிழில் வழங்கியிருந்தார். நானும் சில படங்களை விரைவில் தனி இழையில் வெளியிடுவேன்.

அங்கிருந்து புறப்பட்டு நாங்கள் அடுத்ததாக தேவகோட்டை செல்ல வேண்டும். ஆனால் அதற்குள் வெயிலின் கடுமையால் எங்கள் அனைவருக்குமே கடும் தாகம். அங்கிருந்து சற்று நடந்து அருகில் தென்பட்ட ஒரு சிறு கடையில் குடிக்க குளிர்பானம் கேட்டு வாங்கிப் பருகினோம். ஒரு இளம் பெண் தான் கடையை நடத்திக் கொண்டிருக்கின்றார். அவரோடு கொஞ்சம் பேசினோம். அப்பப்பா.. ஒரே பேச்சு தான். வாயாடிப் பெண். எங்களை கேள்வி மேல் கேள்வி கேட்டு அசத்தி விட்டாள். அவளுடைய ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்லி முடிப்பதற்குள் மேலும் தாகம் எடுக்க மறுபடியும் ஒரு குளிர்பானம் வாங்கி அருந்தினேன். சிரித்து சிரித்து பேசி எங்களை வரவேற்று அமரச் செய்து குளிர்பானம் வழங்கிய பெண்ணின் நினைவு இன்று மனதில் இருக்கின்றது.

இனி அடுத்த இடம் தேவகோட்டை. அந்த ஊரை நோக்கி எங்கள் வாகனம் புறப்பட்டது.

இந்தப் பதிவுக்கு மேலும் தகவல வழங்கும் இரண்டு ஒலிப்பதிவு பேட்டிகள் முன்னரே மண்னின் குரலில் வெளிவந்துள்ளன. அவற்றை கேட்க கீழ்க்காணும் வலைப்பக்கம் செல்லலாம்.
நகரத்தாரின் கடல் கடந்த பயணங்கள் - 2 http://voiceofthf.blogspot.de/2012/02/2_17.html
நகரத்தாரின் கடல் கடந்த பயணங்கள் - 1 http://voiceofthf.blogspot.de/2012/02/blog-post_04.html


தொடரும்...
சுபா