Saturday, June 30, 2018

USA - Dallas - FETNA 2018

**31வது பேரவை திருவிழா - டல்லாஸ் USA**
இன்று காலை நடைபெற்ற இஸ்லாமிய தமிழ் அரங்கம் தனித்துவம் மிக்கது. டாக்டர் நஸ்ரினாவின் எழுச்சி மிகு உரை, பெண்கள் அனுபவிக்கும் உளவியல் பிரச்சனைகள், அதற்காக அவர் முன்னெடுத்திருக்கும் முயற்சிகள், அவரது அண்மைய அரசியல் நடவடிக்கைகள் என வந்திருந்தோரை அதிசயித்தார்.
அடுத்து பேசிய தமிழ்க்கடல் மம்மது ஐயா அவர்கள் தன் இசை வரலாறு பற்றி விவரித்தார். அவரது பேத்தி சோபியா மம்மது அவர்களது இசை விளக்கத்திற்கேற்ற பாடல்களை பாடி வியப்பூட்டினார்.
அடுத்து எனது உரையில் தமிழ் மரபு அறக்கட்டளையின் இஸ்லாமியத் தமிழ் வலைப்பக்கம் பற்றியும் வடசென்னை, மதுரை, நெல்லை ஆகிய பகுதிகளில் மேற்கொண்ட திட்டங்கள், அடுத்து தொடரவுள்ள காயல்பட்டினம் ஆவணப்பதிவு என சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டேன்.










Video URL: https://www.facebook.com/subashini.thf/videos/2189166227993429/

 Video URL:  https://www.facebook.com/subashini.thf/videos/2189168781326507/


USA - Dallas - FETNA 2018

நேற்றைய பெட்னா 2018 நிகழ்வு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் கொல்லப்பட்டோருக்கான மௌன அஞ்சலியுடன் தொடங்கப்பட்டது.

நேற்று காலை, வட அமெரிக்க தமிழ்ச்சங்கங்களின் பெண் ஆளுமைகள், ஜெர்மனி தோழர் உல்ரிக்க ஆகியோருடன் இனிய உரையாடல்.

முதுபெறும் அறிஞர் மம்மது அவர்களது அன்பில் மகிழ்ச்சி..

வட அமெரிக்க பேஸ்புக் நண்பர்களுடன் உரையாடல்...

என மனதில் நிற்கும் காட்சிகளாக புகைப்படங்கள்.








USA - Dallas - FETNA 2018

பெட்னா 2018 (Dallas, US) நிகழ்விற்காக வருகைபுரிந்திருக்கும் விருந்தினர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் எம்பசி ஹில்டன் விருந்தினர் தங்கும் விடுதி.







USA - Dallas - FETNA 2018


31வது பேரவை திருவிழா விருந்து நிகழ்வில்..
திரு.பாலச்சந்திரன் ஐஏஎஸ்
திரு ட்ராஸ்கி மருது தம்பதியர்
திரு.சுபவீரபாண்டியன்
கவிஞர் அறிவுமதி
திரு. சு.வெங்கடேசன்
....மேலும் பல விருந்தினர்களுடன் மாலை விருந்து.





Friday, June 29, 2018

USA - Dallas - FETNA 2018

Subashini Thf is with Visa Velu.
June 29 · 
பெட்னா 2018.. தமிழ்க்கோயிலின் முன் தமிழார்வலர்களுடன்










Thursday, June 28, 2018

USA - Dallas - FETNA 2018

நேற்று இரவு டல்லாஸ் நகர் வந்தடைந்தேன்.
இன்று தொடங்கும் பெட்னா 2018 நிகழ்வு அரங்கில் உருவாக்கப்பட்டுவரும் பெரிய கோயில் இது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நிகழ்ச்சி தயாரிப்பில் அல்லும் பகலும் உழைத்துக் கொண்டிருக்கின்றனர்.👏
*டல்லாஸ் அனல் கொளுத்துகிறது  அடுத்த சில நாட்கள் நல்ல வெயிலை ரசிக்கலாம் 







Tuesday, June 26, 2018

கம்போடியா - அங்கோரில் சில நாட்கள் - 21

18, 19, 20.மே.2018
புனோம் குலேன் பகுதியில் ஓடும் ஆற்றில் 1000 லிங்கங்கள் விஷ்ணு, மகாலட்சுமி, பிரம்மா சிற்பங்களைப் பார்த்து, சற்று மேலும் மலையில் பயணித்து, புத்த மடாலயத்தைப் பார்த்து, பின்னர் நீர்வீழ்ச்சிப்பகுதியில் இருந்த சிதைந்த கோயிலைப் பார்த்து, அச்சூழலின் இயற்கை அழகையும் பசுமையையும், உள்ளூர் கம்போடிய மக்களின் குதூகலத்தையும் ரசித்து விட்டு அலுத்துப் போய் திரும்பிக் கொண்டிருந்தோம். வழியில் நொரோடோம் சிகானுக் அருங்காட்சியகம் இருந்ததைச் செல்லும் போது கவனித்து வைத்திருந்தேன். ஆனால் நேரமாகிவிட்டதால் அங்கு செல்லும் திட்டத்தை கைவிட்டு சியாம் ரீப் திரும்பினோம்.
மறுநாள், அதாவது 19,20 மே இரு நாட்களும் உலகத் தமிழர் மாநாடு நடைபெறவிருப்பதால் வந்திருக்கும் ஏனைய உலகத் தமிழர்களைப் பார்த்து அறிமுகப்படுத்திப் பேசிக் கலந்துரையாடுவது பயனளிக்கும் என்று சிந்தனை இருந்தது. தாமதமாக மதிய உணவைச் சாப்பிட்ட பின்னர் உலகத் தமிழர் மாநாடு நடைபெற உள்ள தங்கும் விடுதி வளாகத்திற்குச் சென்றோம். அங்கு சில மணி நேரங்கள் ஏற்பாட்டாளர்களுடன் இணைந்து இரண்டு நாட்களுக்கான நிகழ்ச்சி நிரலை தயாரிக்கும் பணியில் இறங்கி விட்டோம். அவ்வப்போது மாநாட்டு பங்கேற்பாளர்கள் ஒவ்வொருவராக வந்து சேர, அவர்களுடன் அளவளாவிக் கொண்டே மாநாட்டிற்கான நிகழ்ச்சி தயாரிப்புப் பணியில் மூழ்கிப் போனோம் நாங்கள். ஒரு சிலரோ, மாநாட்டுக்கான உணவு ஏற்பாடு, அரங்க ஏற்பாடு என ஏனைய பணிகளில் இயங்கிக் கொண்டிருந்தனர். நந்திக்கலம்பகம் கூத்துக்கலைஞர்கள் ஒரு பகுதியில் ஒத்திகைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாட்டுப் பணிகளை முடித்து இரவு உணவுக்காக கட்டுமரம் திரும்பினோம். அங்கு இந்த மாநாட்டில் பங்கெடுத்துக் கொள்வதற்காக வந்திருந்த நடிகரும் அரசியல் கட்சி ஒன்றின் தலைவருமான திரு.சரத்குமார் அவர்களைச் சந்தித்து உரையாடி மகிழ்ந்தோம். நல்ல தமிழ் ஆர்வலர். பழக எளிமையானவர் அவர்.
அடுத்த இரண்டு நாட்கள் வந்திருந்தோர் வியக்கும் வகையில் உலகத் தமிழர் மாநாடு நடந்தேறியது. சியாம் ரீப் மையச் சாலையில் இந்த மாநாடு பற்றி கட்டி தொங்கவிடப்பட்டிருந்த பதாகைகளைப் பார்த்த போது மனம் குதூகலித்துப் போனேன்.
உலகத் தமிழர் மாநாட்டில் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து ஏறக்குறைய 400க்கும் மேற்பட்ட பேராளர்கள் வந்து கலந்து கொண்டனர். தமிழ் மொழி பண்பாடு, வரலாறு, சமூகவியல் மற்றும் தமிழர் வணிகம் ஆகியன இந்த மாநாட்டின் மைய நோக்கமாக அமைந்தன. இடைக்கிடையே ஜெயா தொலைக்காட்சியிலும் ஸ்ருதி தொலைக்காட்சியிலும் பேட்டி அளித்தேன். எனது உரை நிகழ்வும் முதல் நாள் காலையில் அமைந்திருந்தது. தமிழர்கள் எங்கே இங்கெல்லாம் இருக்கப்போகின்றார்கள்..? என்ற சந்தேகத்தை உடைத்து, பிலிப்பைன்ஸ், பாப்புவா நியூ கினி போன்ற நாடுகளிலிருந்தெல்லாம் தமிழ் மக்கள் வந்து கலந்து கொண்டது வியப்பில் ஆழ்த்தியது.
நிகழ்ச்சியில் சிந்தனைக்கு விருந்தாக பல சொற்பொழிவுகள் நடந்தன. அதில் என் கருத்தையும் கவனத்தையும் ஈர்த்த சொற்பொழிவாக திரு.பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ் அவர்கள் உரை அமைந்திருந்தது. இவர் ஏற்கனவே எனக்கு அறிமுகமான நண்பர் என்பதோடு தமிழ் மரபு அறக்கட்டளையின் இஸ்லாமியத் தமிழ் மின்னாக்கத் திட்டத்தை நான் செயல்படுத்த பக்கபலமாக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மாநாடு நடைபெற்ற நாட்களில் அவரோடு பேசி மகிழ்ந்த நொடிகள் மனதை விட்டு அகலாதவை. கூர்மையான சிந்தனை, தெளிவான பேச்சு, பொறுப்புணர்வு நிறைந்த செயல்பாடு, ஆகியவற்றோடு அன்பும் நகைச்சுவையும் கலந்த ஒரு கலவை தான் அவர்.
இந்த நிகழ்வில் என்னைக் கவர்ந்த மற்றுமொரு ஆளுமை பாப்புவா நியூகினியிலிருந்து வந்திருந்து தமது வாழ்க்கை வரலாற்றைச் சொல்லி மாநாட்டு விருந்தினர்களை வியக்க வைத்த அந்நாட்டு கவர்னரின் மனைவி திருமதி சுபா அபர்ணா சசீந்தரன். நாம் நினைத்துப் பார்க்க முடியாத எத்தனையோ தடைகளைக் கடந்து இன்று தனக்கென தனியிடத்தைப் பெற்றவறாக இவர் இருப்பது மிகுந்த பாராட்டுதலுக்குறியது. உயர்பதிவியில் இருந்தாலும் அன்புடனும் நட்புடனும் எல்லோருடனும் பழகும் குணம் இவர் மேல் நமக்கிருக்கும் மதிப்பை மிக உயர்த்தி விடும் தன்மை கொண்டது.
உலகத் தமிழர்கள் அறிமுகம், சிறந்த கலந்துரையாடல், வணிகம் பற்றிய தகவல்கள், சுவையான உணவு, கண்களுக்கு விருந்தாக பண்பாட்டுக் கலைகள், புதிய நட்பு என இரண்டு நாள் மாநாடு உலகத் தமிழர் நட்புக்கு வளம் சேர்த்த ஒரு மாநாடாக அமைந்தது. இது ஒரு வெற்றிகரமான மாநாடாக அமைந்தது என்பதில் சந்தேகமில்லை. ஆயினும் இந்த மாநாட்டின் தொடர்ச்சியாக ஆண்டுதோறும் உலகத் தமிழர் ஒன்று கூடும் மாநாட்டினை தொடர வேண்டிய கடப்பாடும் நம் முன்னே இருக்கின்றது. முதல் மாநாட்டினைச் சிறப்புற நடத்தி பெருமை சேர்த்த திரு.ஒரிசா பாலு, திரு.சீனிவாசராவ், திருமதி.சீனிவாசராவ், திரு.ஞானம், மருத்துவர்.தணிகாசலம் ஆகியோர் போற்றுதலுக்குறியவர்கள். இந்த முதலாம் நிகழ்வு வரலாற்றில் பதிக்கப்படும் நிகழ்வாகவே அமைந்து வந்திருந்தோர் மனதை மகிழ்வித்தது!










தொடரும்..
சுபா

Monday, June 25, 2018

கம்போடியா - அங்கோரில் சில நாட்கள் - 20

18.மே.2018
புனோம் குலேன் மலைப்பகுதியில் முதலில் நாங்கள் 1000 லிங்கங்கள் ஆற்றில் உருவாக்கப்பட்டிருக்கும் அமைப்பை பார்த்துவிட்டு அதனை அடுத்து மேலும் மலையில் பயணித்து அங்கிருக்கும் பவுத்த மடாலயத்தைக் காணச் சென்றோம். இந்தப் பகுதிகளிலெல்லாம் சிறிய கடைகளை வைத்துக் கொண்டு சிலை விற்பவர்கள் இருக்கின்றார்கள். இவர்கள் பழமையான தெய்வ வடிவங்களின் சிலைகளை வருகின்ற சுற்றுப்பயணிகளிடம் இவை அகழ்வாராய்ச்சியில் கிடைத்தவை எனக் குறிப்பிட்டு விற்கின்றனர். வெண்கலத்திலும் ஏனைய உலோகங்களாலும் செய்யப்பட்ட சிற்பங்கள் பல இங்கு கிடைக்கின்றன. ஆர்வக் கோளாறில் இவற்றை வாங்கினால் பின்னர் விமான நிலையத்தில் சுங்கச்சாவடியில் காவல் அதிகாரிகள் இவற்றை பறிமுதல் செய்து விடுவர். ஆக இப்பகுதிகளுக்குப் பயணம் செல்பவர்கள் அங்கு கிடைக்கும் இவ்வகை உலோக பொம்மைகளைப் பார்த்து இவை அங்கோர் கோயிலில் கிடைத்த சிலைகளோ என நம்பி ஏமாந்து வாங்கி பின்னர் சிலை கடத்தும் பேர்வழிகளோ என காவல் அதிகாரிகள் நினைத்து பிடித்து சிறையில் அடைத்து விடுவார்கள். இதனை இங்கு செல்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது மிக அவசியம்.

2ம் ஜெயவர்மன் பற்றியும், முதலாம் சூரியவர்மன் பற்றியும் சென்ற பதிவுகளில் குறிப்பிட்டேன். ஆனால் இன்று நமக்கெல்லாம் உலக அதிசயங்களில் ஒன்றாகத் திகழும் அங்கோர் வாட் கட்டிய மன்னனைப் பற்றியும் புத்தரின் முகங்களுடன் இருக்கும் பாயோன் கோயிலைக் கட்டிய மன்னனைப் பற்றியும் இன்னமும் நான் சொல்லவில்லை அல்லவா? 

இந்தக் கோயில் கட்டுமான பிரம்மாண்டங்களைக் எடுப்பித்தவர்கள் பற்றியும் அவர்கள் கால அரசியல் விஷயங்களைப் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டியது கம்போடியா பற்றி அறிந்து கொள்ள விழைபவர்களுக்கு மிக அவசியமானது. அத்தகவல்களைப் பிறகு தருகிறேன். இன்று மேலும் புனோம் குலேன் பகுதியில் நாங்கள் சென்று கண்ட மேலும் ஒரு பகுதியைப் பற்றியும் அதன் சுற்று வட்டாரக் காட்சிகளைப் பற்றியும் சற்று விவரிக்கின்றேன்.  

பவுத்த மடாலயம் இருக்கும் பகுதியிலிருந்து மேலும் சிறிது தூரம் வாகனத்தில் பயணம் செய்தால் அங்கிருக்கும் நீர்வீழ்ச்சியை வந்தடையலாம். இப்பகுதியில் ஆற்றிலேயே  மகாவிஷ்ணு. லட்சுமி, பிரம்மா ஆகியோரது சிற்பங்களை வடித்திருக்கின்றனர். இதுவும் 2ம் ஜெயவர்மன் காலத்து அமைப்பாக இருக்கும் என்றே எண்ணத்தோன்றுகின்றது.

நீர்வீழ்ச்சி இருக்கும் இடத்தின் ஒரு பகுதியில் ஒரு பழமையான கோயிலின் எஞ்சிய செங்கற்படிமங்கள் காணக்கிடைக்கின்றன. இவை அன்னாளில் இங்கு இயங்கிய ஒரு கோயிலின் எஞ்சிய கட்டுமானப் பகுதியே.

இப்பகுதியில் இரு பக்கங்களிலும் சுற்றுப்பயணிகளைக் கவரும் வகையில் கடைகள் அமைத்திருக்கின்றனர். இங்கும் சிலைகள் விற்கின்றனர். அதோடு ஆடைகளும், உணவுப் பொருட்களும் கிடைக்கின்றன.  கம்போடியாவின் உணவில் சாலையோர உணவு வகைகள் எனும் போது பொறித்த மீன். பொறித்த பூச்சிகள், ஈசல்கள், கரப்பான் பூச்சிகள், புழுக்கள், பறவைகள் என விதம் விதமாக பெண்கள் கடைகள் போட்டு விற்றுக் கொண்டிருப்பதைக் காணலாம்.  

ஆசிய நாடுகளில்  குறிப்பாக தாய்லாந்து, கம்போடியா, லாவோஸ், வியட்நாம் ஆகிய நாடுகளில் பூச்சிகளையும், புழுக்களையும் பொறித்து உண்ணும் பழக்கம் உள்ளது.  ஒவ்வொரு இன மக்களின் வழக்கத்தில் ஒவ்வொரு வகை உணவுப் பழக்கம். இத்தகைய வித்தியாசமான உணவுப் பழக்கங்கள் தொடர்பான செய்திகளை அறிந்து கொள்வதும் சுவாரசியம் தான்.




 






Video:
https://www.facebook.com/subashini.thf/videos/2184092571834128/


தொடரும்..
சுபா

Sunday, June 24, 2018

கம்போடியா - அங்கோரில் சில நாட்கள் - 19


அங்கோரில் சில நாட்கள் - 19
18.மே.2018
2ம் ஜெயவர்மன் தனது தலைநகரை புனோம் குலேன் மகேந்திரபர்வதத்தில் அமைத்து ஆட்சி செய்தான் என முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். கி.பி 11ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் க்மெர் பேரரசு படிப்படியாக அதன் வலிமையை இழக்க ஆரம்பித்த சூழலில் மீண்டும் எழுச்சி தரும் புதிய அரசு ஒன்று கம்போடியாவில் உருவானது. இந்த வரலாற்று மாற்றத்தை ஏற்படுத்தியவன் மாமன்னன் முதலாம் சூரியவர்மன். இவன் ஆட்சிப்பொறுப்பை ஏற்றபோது யசோதரபுரத்தில் தனது தலைநகரை அமைத்தான். கம்போங் சுவே பகுதியில் ப்ரீயெ கான் என்ற மாபெரும் ஒரு நகர உருவாக்கத் திட்டத்தை செயல்படுத்தினான். இதுவே இன்று நாம் அங்கோர் என அடையாளப்படுத்தும் பகுதி. முதலாம் சூர்யவர்மன் ஆட்சிப்பொறுப்பை எடுத்த போது கடும் போர் நிலவியது. அச்சூழலில் போரில் வெற்றிகண்டு ஆட்சியைக் கைப்பற்றினான்ன்.  இவனது ஆட்சிக்காலம் கம்போடியாவின் கலையும்  பொருளாதாரமும்  சிறந்த வளர்ச்சி கண்ட காலமாக அறியப்படுகின்றது.

தமிழகத்தின் சோழப்பேரரசுடன் அரசியல் நட்பினை உருவாக்கினான் முதலாம் சூர்யவர்மன். இது நிகழ்ந்தது கி.பி. 1012 காலகட்டமாகும். முதலாம் சூர்யவர்மன் அன்று தமிழகத்தை ஆண்டு வந்த மாமன்னன் ராஜராஜ சோழனுக்கு ஒரு தேர் செய்து பரிசாக அனுப்பி வைத்தான் என Indian History, (Reddy p.64) குறிப்பிடுகின்றது.  பரிசை அனுப்பி நட்பினை வளர்த்துக் கொண்டதோடு சூர்யவர்மனுக்குப் பிரச்சனையாக இருந்த தம்பிரலிங்க பேரரசை அடக்க உதவி கோரியதாகவும் அறிய முடிகின்றது.  இது இன்றைய மலேசிய நிலப்பரப்பில் இருந்த ஒரு பேரரசு. இந்த தம்பிரலிங்கப் பேரரசைப் பற்றின ஒரு கல்வெட்டு தஞ்சை பெருங்கோயிலில் உள்ளது. இந்தக் கல்வெட்டு முதலாம் ராஜேந்திரன் ஸ்ரீவிஜயப் பேரரசை வென்றதைச் சிறப்பித்துக் கூறும் முக்கியக் கல்வெட்டாகத் திகழ்கின்றது.  இதே கல்வெட்டு தம்பிரலிங்கம் மட்டுமன்றி, மாடமலிங்கம் உட்பட அன்று கிழக்காசியப் பிராந்தியத்தில் குறிப்பாக இன்றைய தாய்லாந்து, வியட்னாம், மலாயா இந்தோனீசிய பகுதிகளில் அரசாட்சி செய்து வந்த 13 பேரரசுகளைத் தோல்வியுறச் செய்து தனது வெற்றியை முதலாம் ராஜேந்திரன் நிலைநாட்டினான் என்பதைக் குறிப்பிடுகின்றது.

இந்த வரலாற்றுச் செய்திகளை மிக நேர்த்தியாக தனது வரலாற்று நாவலான கடாரம் என்ற நூலில் எழுத்தாளர் மாயா (மலர்விழி பாஸ்கரன்) வழங்கியிருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

அக்காலகட்டத்தில் கிழக்காசியாவின் மிக முக்கியப் பேரரசாக விளங்கிய ஸ்ரீவிஜயப் பேரரசைத் தமிழகத்தை ஆண்ட மாமன்னன் முதலாம் ராஜேந்திர சோழன் வீழ்த்திய நிகழ்வும்,   அவனுடன் அரசியல் நட்பினை ஏற்படுத்திக் கொண்டு ஆட்சியைத் தொடர்ந்து,  கம்போடியாவில்  சூர்யவர்மன்  எழுப்பிய அங்கோர் வாட் கோயிலும் வரலாற்று முக்கியத்துவம் பெறும் நிகழ்வுகள் என்பதில் ஐயமில்லை.

முதலாம் சூர்யவர்மன் கி.பி.1050ம் ஆண்டு நிர்வான நிலை அடைந்தான், அதாவது இறந்தான் எனக் குறிப்புகள் சொல்கின்றன. அவன் மகாயான பவுத்தத்தைப் பின்பற்றியவன். அவனது ஆட்சியில் கம்போடியாவில் புத்தமதம் செழிப்புற்று வளர ஆரம்பித்திருந்தது.

1008 லிங்கங்கள் அமைந்துள்ள மகேந்திர பர்வதம் அமைந்துள்ள புனோம் குலேன் பகுதியில் மலையில் மீண்டும் பயணித்தால் அங்குள்ள பவுத்த ஆலயத்தை காணலாம். எனது பயணத்தில் இப்பகுதிக்குச் சென்றிருந்த  போது அங்கு இன்று வழிபாட்டில் உள்ள பவுத்த ஆலயத்திற்குச் சென்றிருந்தேன். அங்கு பவுத்த மடாலயம் ஒன்று இன்றும் செயல்பட்டு வருகின்றது.   

குறிப்புக்கள்:
The civilization of Angkor by Charles Higham
https://en.wikipedia.org/wiki/Suryavarman_I
https://en.wikipedia.org/wiki/Tambralinga









https://www.facebook.com/subashini.thf/videos/2183077931935592/

https://www.facebook.com/subashini.thf/videos/2183091511934234/



தொடரும்..
சுபா

Friday, June 22, 2018

கம்போடியா - அங்கோரில் சில நாட்கள் - 18

அங்கோரில் சில நாட்கள் - 16
18.மே.2018

தமிழகத்து சேர சோழ பாண்டிய மன்னர்களின் வரலாறு போல கம்போடியாவை ஆட்சி செய்த பேரரசுகளின் வரலாறும் சுவாரசியமானது. ஃபூனான், சென்லா பேரரசுகளுக்குப் பின்னர், மன்னன் 2ம் ஜெயவர்மனின் ஆட்சி காலம் தொடங்குகின்றது. க்மெர் பேரரசின் தொடக்கப்புள்ளியாக இது அமைகின்றது. கி.பி.800லிருந்து கி.பி 1000 வரையிலான காலகட்டத்தை இதில் குறிப்பிடலாம்.

மன்னன் 2ம் ஜெயவர்மனின் சிலைகள் சியாம் ரீப் நகரின் பல இடங்களில் காணப்படுகின்றன. நாட்டின் வீரச்சின்னமாக, க்மெர் பண்பாட்டின் அடிப்படையை அமைத்த நாயகனாக மன்னன் 2ம் ஜெயவர்மன் கம்போடிய மக்களால் கருதப்படுகின்றான். இவனது ஆட்சி காலத்தில் தான் இந்த நாடு கம்பூஜதேசம் அல்லது கம்போடியா என்ற பெயரைப் பெறுகின்றது என்பது முக்கியச் செய்தி. அதோடு, மன்னர்களுக்கெல்லாம் மன்னனான மாமன்னன் எனத் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொள்கின்றான் 2ம் ஜெயவர்மன். மாமன்னன் என்பவன் இறைவனின் பிரதிநிதி என்றும் அதனால் பல சடங்குகள் மாமன்னனுக்கு நடைபெறும் என்ற கலாச்சார அமைப்பையும் இவனே அதிகாரப்பூர்வமாக கட்டமைக்கின்றான். நாம் முந்தைய பதிவில் பார்த்த ஆக் யூம் கோயில் இந்த 2ம் ஜெயவர்மன் காலத்தில் உருவாக்கப்பட்டது என்றே வரலாற்றாசிரியர்கள் பதிகின்றனர்.

மாமன்னன் 2ம் ஜெயவர்மன் கி.பி 790லிருந்து 835 வரை ஆட்சி புரிந்தான். புனோம் குலேன் பகுதியை மேரு மலையாகப் பாவித்து அதற்கு மகேந்திரப்பர்வதம் எனப்பெயர் சூட்டினான். அவனுக்குப் பட்டாபிஷேகம் மகேந்திரப்பர்வதத்தில் நடைபெற்றது. அப்பகுதியில் ஓடும் நீர்நிலைகளில் 1000 லிங்கங்கள் வடிவமைத்தான். மகாலெட்சுமியுடன் அமர்ந்த நிலையில் மகாவிஷ்ணு, பிரம்மா, வெவ்வேறு வடிவிலான சிவலிங்கங்கள் என இப்பகுதியே ஒரு கோயில்வளாகமாகத் திகழ்கின்றது. அருகிலேயே பௌத்த மடாலயம் ஒன்றும் அமைந்துள்ளது.

எங்கள் பயணத்தின் 2ம் நாளில் புனோம் குலேன் பகுதியில் ஓடும் ஆற்றில் செதுக்கப்பட்ட இந்த 1000 லிங்க வடிவங்களையும் ஆற்றின் நீர்பரப்பின் கீழ் கற்பாறையில் செதுக்கப்பட்ட விஷ்ணு, மகாலட்சுமி வடிவங்களையும் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. உலக அதிசயங்களில் ஒன்று இப்பகுதி எனக் குறிப்பிட்டால் அது மிகையில்லை.

மாமன்னன் 2ம் ஜெயவர்மனுக்குப் பின் அவனது சந்ததியினர் தொடர்ந்து ஆட்சிப்பொறுப்பைத் தொடர்கின்றனர்.

மூன்றாம் ஜெயவர்மன்
முதலாம் இந்திரவர்மன்
முதலாம் யசோவர்மன்
முதலாம் ஹர்ஷாவர்மன்
இரண்டாம் ஈசானவர்மன்
நான்காம் ஜெயவர்மன்
இரண்டாம் ஹர்ஷாவர்மன்
முதலாம் ராஜேந்திரவர்மன்
ஐந்தாம் ஜயவர்மன்
எனத் தொடரும் இந்தப் பட்டியலில் உதயாதித்தவர்மனும் ஜெயவீரவர்மனும் இறுதியில் வருகின்றனர். ஆனால் மிகக் குறுகிய கால ஆட்சியாகவே இது குறிப்பிடப்படுகின்றது.

இதற்குப் பின்னர் முதலாம் சூரியவர்மனின் ஆட்சிகாலம் கி.பி.1006ல் தொடங்குகின்றது. இது சூரியப் பேரரசு என்றே அடையாளப்படுத்தப்படுகின்றது.

2ம் ஜெயவர்மன் காலத்தில் உருவாக்கப்பட்ட க்மெர் பேரரசின் முக்கிய மதங்களாக சிவ வழிபாடும், விஷ்ணு வழிபாடும் முதன்மை பெறுகின்றன. பௌத்தம் ஓரளவு ஆங்காங்கே பரவி வழக்கில் இருந்தமையைச் சில கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. ஆனால் முதலாம் சூரியவர்மனின் காலம் தொடங்கி கம்போடியாவின் அதிகாரப்பூர்வ அரச மதமாக பௌத்தம் தன்னை நிலைநாட்டிக் கொள்ளும் வரலாற்று மாற்றத்தின் தொடக்கத்தைக் காணமுடிகின்றது.

முதலாம் சூரியவர்மன் மஹாயான பௌத்த மரபைப் பின்பற்றியவன். தேரவாத பௌத்த மரபும் அவன் காலத்தில் வழக்கில் இருந்தமையைக் கல்வெட்டுச் சான்றுகள் சொல்கின்றன.

குறிப்புக்கள்:
The civilization of Angkor by Charles Higham
https://en.wikipedia.org/wiki/Monarchy_of_Cambodia















தொடரும்..
சுபா

Wednesday, June 20, 2018

கம்போடியா - அங்கோரில் சில நாட்கள் - 17

அங்கோரில் சில நாட்கள் - 16
18.மே.2018
மெக்கோக் நதி, தொன்லே சாப் மற்றும் வளமான ஆறுகள் பாயும் பகுதிகள், இன்றைய அங்கோர் நகர் அமைந்திருக்கும் பகுதிகள் ஆகியவை பெரிய பேரரசுகள் ஆட்சி செய்து நகரங்களை அமைத்த பகுதிகளாகத் திகழ்கின்றன. நதிகளைச் சார்ந்தவாறு நாகரிகங்கள் உருவாக்கம் பெறுவது உலக நாகரிகங்கள் அனைத்திற்கும் உள்ள ஒரு இயல்பான கூறுதான். நைல் நதிக்கரை நாகரிகம், சிந்துவெளி நாகரிகம், வைகை நதி நாகரிகம், டனூப் நதி நாகரிகம் என இப்படி பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம்.
கம்போடியாவில் ஆற்றங்கரைப் பகுதிகளில் நிகழ்த்தப்பட்ட தொல்லியல் அகழ்வாய்வுகளில் குறிப்பிடத்தக்க கல்வெட்டுக்களும் கிடைத்துள்ளன. அவற்றுள் பல சிதைந்த நிலையில் காணப்பட்டாலும் ஒரு சில செய்திகளை அடையாளம் காணக்கூடிய வகையில் இருப்பது பண்டைய கம்போடிய வரலாற்றை அறிய உதவும் சான்றாக அமைகின்றது. உதாரணமாக கோதாப் (Go Thap) பகுதியில் கிடைத்த கி.பி.5ம் நூற்றாண்டு சமஸ்கிருத கல்வெட்டு ஒன்று ”ஜெயவர்மன்” என்பவன் ”வீர(அல்லது வீரா)” என்ற ஒருவனோடு போர் புரிந்ததைக் குறிப்பிடுகிறது. நாக் தா டம்பாக் டெக் (Nak Ta Dambang Dek) பகுதியில் கண்டெடுக்கப்பட்ட மற்றுமொரு கல்வெட்டு புத்தருக்காக அமைக்கப்பட்ட வாசகங்களைக் கொண்டிருக்கின்றது. ஜெயவர்வமன் என்ற மன்னன் மன்னன் பற்றியும் அவனது மகன் ருத்ரவர்மன் பற்றியும் இதே கல்வெட்டு குறிப்பிடுகிறது.

இதே கல்வெட்டு மன்னனின் போர் வெற்றிகளையும் குறிப்பிடுகிறது. இந்தக் கல்வெட்டு ஒரு குடியிறுப்புப் பகுதியை மன்னன் ஜெயவர்மன் உருவாக்கியதையும், அணை ஒன்றினைக் கட்டியதையும் அவனது மனைவி “குலபிரபாவதி” என்பவரைப் பற்றியும் குறிப்பிடுகிறது. ஆக கி.பி 480-520 கால வாக்கில் கம்போடியாவின் அங்கோர் மற்றும் நதிக்கரை பகுதிகளில் தொடர்ச்சியாகப் போர்கள் நடந்தமையும் ஜெயவர்மன் என்ற ஒரு மன்னன் ஆட்சி செய்தான் என்ற விபரங்களையும் அறிய முடிகின்றது. மன்னன் ருத்ரவர்மனின் கி.பி674ம் ஆண்டு கல்வெட்டுக்கள் அவனைப் பற்றிய தகவல்களையும் வழங்குகின்றன. இந்தக் கால கட்டம் க்மெர் பேரரசு தோன்றாத காலகட்டமாகும்.

க்மெர் பேரரசு தோன்றுவதற்கு சில நூற்றாண்டுகளுக்கு முன் கம்போடியாவை ஆட்சி செய்த அரசுகள் இரண்டு. ஃபூனான் (Funan) அரசின் ஆட்சி கி.பி 550 வரையான காலகட்டம். அதன் பின்னர் கி.பி 550 முதல் 800 வரை சென்லா என்ற இன்றைய வியட்நாம் நிலப்பரப்பை பூர்வீகமாகக் கொண்ட மன்னர்களின் ஆட்சியில் கம்போடியா இருந்தது. கல்வெட்டுக்களின் தகவல்கள் அடிப்படையில் கி.பி 600ல் இன்றைய மத்திய கம்போடிய பகுதியில் மன்னன் மகேந்திரவர்மன் ஆட்சிப்பொறுப்பை ஏற்கின்றான். அதன் பின்னர் கி.பி 615 முதல் ஆட்சி பொறுப்பேற்று கி.பி. 637ல் மன்னன் முதலாம் ஈசானவர்மன் இறந்தான் என்றும் அதன் பின்னர் கி.பி.635-80 காலகட்டத்தில் முதலாம் ஈசானவர்மனின் பேரன் முதலாம் ஜயவர்மன் ஆட்சி செய்தான் என்ற தகவல்களும் கிட்டுகின்றன. இக்காலகட்டத்தில் கற்கோயில்கள் பல உருவாக்கபப்ட்டன. சிவ லிங்க வழிபாடு முதன்மை பெற்ற காலகட்டம் இது. இயற்கையான மலைகள் லிங்க வடிவங்களாக அடையாளபப்டுத்தப்பட்டு மலைப்பகுதிகள் புண்ணியத்தலங்களாக போற்றப்பட்டன.

கம்போடிய வரலாற்ரில் ஜெயவர்மன் என்ற பெயர் மீண்டும் மீண்டும் வருவதைக் காண்கின்றோம். கி.பி 6 நூற்றாண்டில் குறிப்பிடப்படும் மன்னன் ஃபூனான் பேரரசை ஆண்ட ஜெயவர்மன். பின்னர் கி.பி.7ம் நூற்றாண்டில் குறிப்பிடப்படுபவன் சென்லா பேரரசை ஆண்ட முதலாம் ஜெயவர்மன். பின்னர் மீண்டும் ஒரு ஜெயவர்மன் பெயர் முக்கியத்துவம் பெறுகிறது. அவனே இரண்டாம் ஜெயவர்மன். இவனே அங்கோர் நகரை உருவாக்கி க்மெர் பேரரசை நிறுவிய மாமன்னன்.

இந்த மன்னர்களின் பெயர் பட்டியலை வாசிக்கும் போது பொறிதட்டும் ஒரு விசயம் கம்போடிய பேரரசுகளுக்கும் தமிழகத்தை ஆண்ட பல்லவ பேரரசை ஆண்ட மன்னர்கள் பெயர்களுக்கும் இருக்கும் பெயர் ஒற்றுமை. கம்போடிய சென்லா பேரரசை கி.பி 600ல் ஆட்சி செய்தவன் பெயர் மன்னன் மகேந்திரவர்மன். தமிழகத்தில் பல்லவ பேரரசின் ஈடு இணையற்ற மாமன்னனாக கி.பி600 – 630 ஆட்சி செய்தவன் பெயரும் மகேந்திரவர்மன். சிந்திக்க வேண்டிய, ஆராய்ச்சிக் குறிய ஒன்றல்லவா..??










குறிப்புக்கள்: The civilization of Angkor by Charles Higham

தொடரும்..
சுபா