18, 19, 20.மே.2018
புனோம் குலேன் பகுதியில் ஓடும் ஆற்றில் 1000 லிங்கங்கள் விஷ்ணு, மகாலட்சுமி, பிரம்மா சிற்பங்களைப் பார்த்து, சற்று மேலும் மலையில் பயணித்து, புத்த மடாலயத்தைப் பார்த்து, பின்னர் நீர்வீழ்ச்சிப்பகுதியில் இருந்த சிதைந்த கோயிலைப் பார்த்து, அச்சூழலின் இயற்கை அழகையும் பசுமையையும், உள்ளூர் கம்போடிய மக்களின் குதூகலத்தையும் ரசித்து விட்டு அலுத்துப் போய் திரும்பிக் கொண்டிருந்தோம். வழியில் நொரோடோம் சிகானுக் அருங்காட்சியகம் இருந்ததைச் செல்லும் போது கவனித்து வைத்திருந்தேன். ஆனால் நேரமாகிவிட்டதால் அங்கு செல்லும் திட்டத்தை கைவிட்டு சியாம் ரீப் திரும்பினோம்.
மறுநாள், அதாவது 19,20 மே இரு நாட்களும் உலகத் தமிழர் மாநாடு நடைபெறவிருப்பதால் வந்திருக்கும் ஏனைய உலகத் தமிழர்களைப் பார்த்து அறிமுகப்படுத்திப் பேசிக் கலந்துரையாடுவது பயனளிக்கும் என்று சிந்தனை இருந்தது. தாமதமாக மதிய உணவைச் சாப்பிட்ட பின்னர் உலகத் தமிழர் மாநாடு நடைபெற உள்ள தங்கும் விடுதி வளாகத்திற்குச் சென்றோம். அங்கு சில மணி நேரங்கள் ஏற்பாட்டாளர்களுடன் இணைந்து இரண்டு நாட்களுக்கான நிகழ்ச்சி நிரலை தயாரிக்கும் பணியில் இறங்கி விட்டோம். அவ்வப்போது மாநாட்டு பங்கேற்பாளர்கள் ஒவ்வொருவராக வந்து சேர, அவர்களுடன் அளவளாவிக் கொண்டே மாநாட்டிற்கான நிகழ்ச்சி தயாரிப்புப் பணியில் மூழ்கிப் போனோம் நாங்கள். ஒரு சிலரோ, மாநாட்டுக்கான உணவு ஏற்பாடு, அரங்க ஏற்பாடு என ஏனைய பணிகளில் இயங்கிக் கொண்டிருந்தனர். நந்திக்கலம்பகம் கூத்துக்கலைஞர்கள் ஒரு பகுதியில் ஒத்திகைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாட்டுப் பணிகளை முடித்து இரவு உணவுக்காக கட்டுமரம் திரும்பினோம். அங்கு இந்த மாநாட்டில் பங்கெடுத்துக் கொள்வதற்காக வந்திருந்த நடிகரும் அரசியல் கட்சி ஒன்றின் தலைவருமான திரு.சரத்குமார் அவர்களைச் சந்தித்து உரையாடி மகிழ்ந்தோம். நல்ல தமிழ் ஆர்வலர். பழக எளிமையானவர் அவர்.
அடுத்த இரண்டு நாட்கள் வந்திருந்தோர் வியக்கும் வகையில் உலகத் தமிழர் மாநாடு நடந்தேறியது. சியாம் ரீப் மையச் சாலையில் இந்த மாநாடு பற்றி கட்டி தொங்கவிடப்பட்டிருந்த பதாகைகளைப் பார்த்த போது மனம் குதூகலித்துப் போனேன்.
உலகத் தமிழர் மாநாட்டில் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து ஏறக்குறைய 400க்கும் மேற்பட்ட பேராளர்கள் வந்து கலந்து கொண்டனர். தமிழ் மொழி பண்பாடு, வரலாறு, சமூகவியல் மற்றும் தமிழர் வணிகம் ஆகியன இந்த மாநாட்டின் மைய நோக்கமாக அமைந்தன. இடைக்கிடையே ஜெயா தொலைக்காட்சியிலும் ஸ்ருதி தொலைக்காட்சியிலும் பேட்டி அளித்தேன். எனது உரை நிகழ்வும் முதல் நாள் காலையில் அமைந்திருந்தது. தமிழர்கள் எங்கே இங்கெல்லாம் இருக்கப்போகின்றார்கள்..? என்ற சந்தேகத்தை உடைத்து, பிலிப்பைன்ஸ், பாப்புவா நியூ கினி போன்ற நாடுகளிலிருந்தெல்லாம் தமிழ் மக்கள் வந்து கலந்து கொண்டது வியப்பில் ஆழ்த்தியது.
நிகழ்ச்சியில் சிந்தனைக்கு விருந்தாக பல சொற்பொழிவுகள் நடந்தன. அதில் என் கருத்தையும் கவனத்தையும் ஈர்த்த சொற்பொழிவாக திரு.பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ் அவர்கள் உரை அமைந்திருந்தது. இவர் ஏற்கனவே எனக்கு அறிமுகமான நண்பர் என்பதோடு தமிழ் மரபு அறக்கட்டளையின் இஸ்லாமியத் தமிழ் மின்னாக்கத் திட்டத்தை நான் செயல்படுத்த பக்கபலமாக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மாநாடு நடைபெற்ற நாட்களில் அவரோடு பேசி மகிழ்ந்த நொடிகள் மனதை விட்டு அகலாதவை. கூர்மையான சிந்தனை, தெளிவான பேச்சு, பொறுப்புணர்வு நிறைந்த செயல்பாடு, ஆகியவற்றோடு அன்பும் நகைச்சுவையும் கலந்த ஒரு கலவை தான் அவர்.
இந்த நிகழ்வில் என்னைக் கவர்ந்த மற்றுமொரு ஆளுமை பாப்புவா நியூகினியிலிருந்து வந்திருந்து தமது வாழ்க்கை வரலாற்றைச் சொல்லி மாநாட்டு விருந்தினர்களை வியக்க வைத்த அந்நாட்டு கவர்னரின் மனைவி திருமதி சுபா அபர்ணா சசீந்தரன். நாம் நினைத்துப் பார்க்க முடியாத எத்தனையோ தடைகளைக் கடந்து இன்று தனக்கென தனியிடத்தைப் பெற்றவறாக இவர் இருப்பது மிகுந்த பாராட்டுதலுக்குறியது. உயர்பதிவியில் இருந்தாலும் அன்புடனும் நட்புடனும் எல்லோருடனும் பழகும் குணம் இவர் மேல் நமக்கிருக்கும் மதிப்பை மிக உயர்த்தி விடும் தன்மை கொண்டது.
உலகத் தமிழர்கள் அறிமுகம், சிறந்த கலந்துரையாடல், வணிகம் பற்றிய தகவல்கள், சுவையான உணவு, கண்களுக்கு விருந்தாக பண்பாட்டுக் கலைகள், புதிய நட்பு என இரண்டு நாள் மாநாடு உலகத் தமிழர் நட்புக்கு வளம் சேர்த்த ஒரு மாநாடாக அமைந்தது. இது ஒரு வெற்றிகரமான மாநாடாக அமைந்தது என்பதில் சந்தேகமில்லை. ஆயினும் இந்த மாநாட்டின் தொடர்ச்சியாக ஆண்டுதோறும் உலகத் தமிழர் ஒன்று கூடும் மாநாட்டினை தொடர வேண்டிய கடப்பாடும் நம் முன்னே இருக்கின்றது. முதல் மாநாட்டினைச் சிறப்புற நடத்தி பெருமை சேர்த்த திரு.ஒரிசா பாலு, திரு.சீனிவாசராவ், திருமதி.சீனிவாசராவ், திரு.ஞானம், மருத்துவர்.தணிகாசலம் ஆகியோர் போற்றுதலுக்குறியவர்கள். இந்த முதலாம் நிகழ்வு வரலாற்றில் பதிக்கப்படும் நிகழ்வாகவே அமைந்து வந்திருந்தோர் மனதை மகிழ்வித்தது!
தொடரும்..
சுபா
சுபா
1 comment:
மகிழ்ச்சி சுபா
Post a Comment