Sunday, May 15, 2022

மலேசியப் பயணம் முடித்து...

நேற்று மாலை மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து ஜெர்மனிக்கு புறப்பட்டேன். கோலாலம்பூர் விமான நிலையத்தில், குறிப்பாக நான் அங்கு இருந்த வேளையில் ஏராளமான பயணிகள் விமானத்திற்குக் காத்திருப்பதைக் காண முடிந்தது.

கோவிட்-19 பிரச்சனையால் கடந்த இரண்டு ஆண்டுகள் சவுதி அரேபியாவிற்குப் புனித வழிபாட்டிற்குச் செல்ல முடியாத பலரும் குழுக்களாகப் பயணத்தைத் தொடங்கி இருக்கின்றனர் போலும். ஏராளமான பயணிகள் வெள்ளை உடை அணிந்து ஆணும் பெண்ணுமாகக் கூட்டம் கூட்டமாக விமான நிலையம் முழுமையும் இருந்தார்கள்.
விமான நிலையம் வந்ததும் எனக்குக் கொரோனா சோதனை தேவையா என அறிந்து கொள்வதற்காக அங்கு நடந்து வந்து கொண்டிருந்த 40 வயது மதிக்கத்தக்க ஒரு மலாய் இனத்து காவல் அதிகாரியை நிறுத்தி அவரிடம் கேட்டேன். அவர் என்னிடம் இது பற்றி தனக்கு அதிகமாகத் தகவல் தெரியாது என்றாலும் ஒரு மூலையில் இதற்கான தகவல்கள் வழங்கப் படுகின்றன என்பதை விவரித்து கூறினார். பிறகு நான் எங்கிருந்து வருகிறேன் எனக் கேட்டதும் நான் பினாங்கிலிருந்து வருகிறேன் என்று சொன்னேன். உடனே அவரும் பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்தவர் தான் எனச் சொல்லி அங்குள்ள எந்தெந்த பள்ளிக்கூடங்களில் அவர் படித்தார் என்பதையும் கூறி நான் எங்கு படித்தேன் என்பதையும் கேட்டு சற்று நேரம் பேசிவிட்டு சென்றார். மலாய் இனத்து மக்களின் நட்புணர்வுடன் கூடிய பழகும் தன்மைக்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு.
எனது பயணம் ஓமான் ஏர் வழியாக. ஆகவே முதல் விமானத்தை எடுத்து மஸ்கட் வந்தடைந்து பிறகு மஸ்கட் நகரிலிருந்து பிராங்பேர்ட் நகரத்துக்கு எனப் பயணம் அமைந்திருந்தது. வரிசையாக டிக்கெட் கவுண்டரில் இருக்கின்ற மக்களின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். பல ஜோடிகள் மாற்றினத்துத் தம்பதிகளாகக் காட்சி அளித்தார்கள்.
என் பின்னால் நின்றிருந்த ஒரு தம்பதியர் அவர்களாகவே என்னிடம் வந்து பேச்சு கொடுத்தார்கள். ஆண் துபாயைச் சார்ந்தவர். அவர் மனைவி ஒரு ஜப்பானியர். இந்தத் தம்பதியருக்கு ஒரு குழந்தையும். அந்த ஜப்பானிய பெண்மணி இஸ்லாமிய பெண்கள் அணிகின்ற உடையணிந்து முகத்தை மறைக்காமல் காட்சி அளித்தார்.
வரிசையில் எனக்கு முன் ஒரு இளம்பெண் ஐரோப்பிய முக சாயலில் இருந்தாள். அந்தப் பெண் இந்திய வடநாட்டில் ஏதாவது ஒரு சமய நிறுவனத்தில் தொடர்பு கொண்டவராக இருக்கலாம் எனும் வகையில் தோற்றம் இருந்தது. கழுத்தில் 2 முறை சுற்றப்பட்ட ருத்ராட்ச மாலை. மென்மையான சுடிதார் போன்ற ஆனால் தொள தொள எனக் காட்சி அளிக்கும் ஒரு உடை. அதில் துப்பட்டாவை நடனமாடும் பெண்கள் மேல் இறுக்கி கட்டி இருக்கும் வகையில் கட்டிக் கொண்டு நின்று கொண்டிருந்தார். இது ஒருவகை புது மாடல் என்று கூட சொல்லலாம் 😀.
இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு முக சாயலில் வெவ்வேறு உடை அலங்காரங்கள் எனக் காட்சி அளித்துக் கொண்டிருந்தார்கள்.
வருகின்ற ஒவ்வொரு பயணிகளிடமும் முகத்தைக் கடுமையாக வைத்துக் கொள்ளாமல் அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யும் வகையில் கவுன்டரில் அமர்ந்திருந்த பணியாளர்கள் இயங்கிக் கொண்டிருந்தது எனக்கு உண்மையில் மனதிற்கு நெகிழ்வாக இருந்தது. வருகின்ற பயணிகள் மனச் சோர்வு அடையாமல் அவர்களைப் பத்திரமாக அனுப்பி வைக்க வேண்டும் என இந்த ஊழியர்கள் நடந்து கொண்ட விதம் பாராட்டுக்குரியது.
மலேசிய விமான நிலையம் மட்டுமல்ல... அரசு அலுவலகங்கள்.. வர்த்தக நிறுவனங்கள்.. கடைகள்.. உணவகங்கள் என எங்கு சென்றாலும் மலாய் இன மக்களின் அன்பான புன்னகை வெளிப்படுத்தி பேசும் பண்பு எனக்கு மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருந்தது.
இந்தப் பயணத்தில் நிறைய மலாய்க்காரர்களுடன் பழகும் சந்தர்ப்பம் எனக்குக் கிட்டியது. பல்வேறு சொந்த காரியங்களுக்காக அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டிய காரணம் இருந்ததால் அத்தகைய வாய்ப்புகள் அமைந்தன. மலாய்க்காரர்களின் கடமை உணர்வும் துரிதமாகப் பணிபுரியும் பாங்கும் அத்தருணங்களில் என்னால் உணர முடிந்தது.
முன்னர் பொதுவாகப் பேசும்போது மலாய்க்காரர்கள் சோம்பேறிகள் என்றும் அரசாங்கம் கொடுக்கும் சலுகைகளினால்தான் அவர்கள் சிறப்பாக வாழ்கிறார்கள் என்றும் சிலர் கூறுவதை கேட்டிருக்கின்றேன். ஆனால் இந்த எனது பயணத்தில் நான் சென்ற இடங்களிலெல்லாம்... அலுவலகங்களில் மிகத் துரிதமாகவும் சிறப்பாகவும் கடமை உணர்வுடனும் இன பேதம் பார்க்காமல் அன்போடு பழகும் மலாய் மக்களின் குணத்தை நேரில் பார்க்க முடிந்தது.
மலேசியா சுவையான உணவுக்கு மட்டுமல்ல.. அன்பான மலாய் இனத்து மக்களின் கரிசனமான உபசரிப்பு இருக்கும் புகழ் பெற்ற ஒரு நாடு.
மலேசியாவின் தனித்துவமிக்க சிறப்பே பல்லின மக்கள் சுமூகமாக நட்புறவுடன் வாழும் ஒரு சூழல் என்பது தான். தற்போதைய அரசியல் நிலைமைகள் சீரடைந்தால் மலேசியா மீண்டும் கிழக்காசிய பகுதியில் வளர்ச்சியடைந்த நாடுகளில் அரசியல் நிலைத்தன்மை கொண்ட ஒரு நாடாக விளங்கும்.

-சுபா
ஸ்டுட்காட், ஜெர்மனியிலிருந்து