Tuesday, June 29, 2021

பிரான்சு பயணக்குறிப்பு - 3

 பிரான்சு நாட்டின் பொதுப் போக்குவரத்து மிகச் சிறப்பாக அமைந்திருக்கின்றது. விமானப் போக்குவரத்தாக இருந்தாலும் சரி.. டிராம், பேருந்துகள், மெட்ரோ ரயில், துரித ரயில், சாலைப் போக்குவரத்து அமைப்பு, சைக்கிள்கள் செல்வதற்கும் மக்கள் நடைபாதையில் செய்வதற்குமான அமைப்பு என நாடு முழுமையும் மக்கள் பொது போக்குவரத்துக்கான அமைப்பு என்பது மிக மிகச் சிறப்பான வகையில் பிரான்சு முழுவதும் அமைந்திருக்கின்றது. ஒரு குக்கிராமமாக இருந்தாலும் கூட அங்கு பேருந்துகள் வருகின்றன.

வரலாற்று நோக்கில் பிரான்சு நாட்டை கவுல் என அழைக்கும் வழக்கம் இருக்கின்றது. இது ரோமானியப் பேரரசோடு தொடர்பு கொண்டது.
பண்டைய ரோமானியப் பேரரசு இன்றைய பிரான்சின் தெற்குப் பகுதியை பொ.ஆ.மு 125 லிருந்து 121 காலகட்டத்தில் தன்னுடைய ஆளுமைக்குள் கொண்டு வந்தது. அதன் பின்னர் ஜூலியஸ் சீசர் இன்றைய பிரான்சு முழுமையையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார். இது நடந்தது பொ.ஆ.மு. 58 லிருந்து 51 வரை. இதனை கேலிக் போர் (Gallic War) என்றும் அழைப்பார்கள். அன்று ரோமானியர்களால் பிரானசு கவுல் என்றே அழைக்கப்பட்டது.
அன்றைய ரோமானியப் பேரரசின் ஆளுமைக்குள் இருந்த காலகட்டத்தில் பிரான்ஸ் மிகத் துரிதமான வளர்ச்சி கண்டது. பல்வேறு நாடுகளுக்குகிடையேயான தொடர்புகள் அக்காலகட்டத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டன. பொதுமக்களுக்கான வாழ்விடப் பகுதிகள், குளியல் தொட்டிகள், பெரும் கட்டிடங்கள், திறந்தவெளி நாடக மேடைகள் (Amphitheater) எனப் பல்வேறு பொது கட்டிடங்கள் அமைக்கப்பட்டன. நகரங்களில் இத்தகைய செயல்பாடுகள் என்றால், கிராமப்புறங்களில் மாபெரும் மாடமளிகைகள் உருவாக்கப்பட்டன. இப்படி இருக்கையில் பொ.ஆ 3ம் நூற்றாண்டு வாக்கில் ஜெர்மனியிலிருந்து வந்த பார்பேரியன் (காட்டுமிராண்டிகள்) என அழைக்கப்படும் இனக்குழுவினர் அன்று நாகரீகமடைந்திருந்த பிரான்சில் ஏராளமான சேதங்களை உருவாக்கத் தொடங்கினர். பொ.ஆ. 5ம் நூற்றாண்டு வாக்கில் ஜெர்மானிய பார்பேரியன்கள் பிரான்சின் பல பகுதிகளில் குடிபெயரத் தொடங்கினர். இப்படி ஜெர்மனியிலிருந்து மட்டுமல்ல, இங்கிலாந்திலிருந்தும், இத்தாலியிலிருந்தும், ஸ்பெயினிலிருந்தும் ஸ்கேண்டினேவிய நாடுகளிலிருந்தும் எனப் பலரும் குடியேறினர். இன்றும் கூட பிரஞ்சுக்காரர்களே மக்கள் தொகையில் அதிகம் என்றாலும் பல இனமக்கள் வாழ்கின்ற நாடாகவே பிரான்சு இருக்கின்றது.
ஜெர்மனியிலிருந்து பாரிஸ் வரை நெடுஞ்சாலையில் செல்வதற்கு ஏறக்குறைய 650 கிலோ மீட்டர் தூரம். இந்தப் பயணத்தின் போது நாம் பல கிராமங்களையும் மற்றும் சிறு நகரங்களையும், பெரு நகரங்களையும் கடந்து பயணிக்க வேண்டும். ஜெர்மனியில் சாலையில் பயணிக்க சுங்கவரி கட்டணம் அதாவது டோல் கட்டணம் வழக்கில் இல்லை. ஆனால் இதையே நாம் பிரான்சில் எதிர்பார்க்கலாமா? பிரான்சில் நெடுஞ்சாலையில் பயணித்தால் கட்டாயமாக நாம் சுங்கவரி கட்டணத்தைச் செலுத்தித் தான் ஆக வேண்டும்.
எனது பயணத்தின் போது ஜெர்மனி எல்லையில் இருந்து பாரிஸ் வருவதற்குள் ஏறக்குறைய 36 யூரோ கட்டணம் செலுத்திய பின்னரே பாரிஸ் வர முடிந்தது. நெடுஞ்சாலையில் பயணிப்பது என்பது ஒரு சுகமான அனுபவம் தான். ஜெர்மனி நெடுஞ்சாலையில் சுங்கவரி கட்டணம் இல்லை என்பதால் வாகனங்கள் எப்போதும் நிறைந்திருக்கும். ஆனால் பிரான்சில் நெடுஞ்சாலையில் அவ்வளவாக வாகனங்களைக் காணமுடியாது. நெடுஞ்சாலையைத் தவிர்த்துவிட்டு கிராமப்புற சாலைகள் பயணிப்போர் அதிகம். பிழைக்கத் தெரிந்த மனிதர்கள் அல்லவா..? 🙂
பிரான்சின் கட்டிடங்களும் பொதுப் போக்குவரத்துகளும் மட்டும் தான் சிறப்பா, என்று கேட்டால்... இல்லை, அதற்கும் மேலாக கலைகளைக் கொண்டாடும் ஒரு நாடாக பிரான்சு திகழ்கிறது என்பதை நான் கூறத்தான் வேண்டும்.
இத்தாலியில் தொடக்கம் கண்ட மோனாலிசா பிரான்சில் தான் வாழ்கிறாள்.
மோனாலிசாவை உருவாக்கிய இத்தாலியில் பிறந்த டாவின்சியும் பிரான்சில் தான் கல்லறையில் உறங்குகின்றார்!
தொடர்வேன்..
-சுபா







Friday, June 25, 2021

பிரான்ஸ் பயணக்குறிப்பு - 2

 நமது வாழ்க்கை இப்போது கொரோனாவுக்கு முன் (கொ.மு) கொரோனாவுக்கு பின் (கொ.பி) என்ற நிலையில்தான் இருக்கிறது. முன்னரெல்லாம் எங்காவது பயணம் செல்ல வேண்டும் என்றால் விடுமுறை எடுத்தாகிவிட்டதா... தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டோமா.. என்பதோடு நமது தயாரிப்பு இருக்கும். ஆனால் இன்றைய காலகட்டத்திலோ, கொரோனா தொடர்பான எல்லாவித கட்டுப்பாடு நடவடிக்கைகளையும் கவனிக்க வேண்டும் என்பதிலேயும் நாம் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது.

தெனாலி திரைப்படத்தில் கமலஹாசன் தவிப்பது போல.. எங்கும் பயம் எதிலும் பயம் என்பது போலவே சில வேளைகளில் நானும் உணரத் தொடங்கி இருக்கிறேன்.🙂 நம்மிடம் இருக்கும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் போதுமானதா.. இல்லையா.?. பிரான்ஸ் வந்த பிறகு பிரான்ஸிலிருந்து திருப்பி அனுப்பிவிடுவார்களா..? பிரான்சில் நாம் செல்லும் இடங்களில் எப்படிப்பட்ட சோதனைகள் இருக்கும்? பிரெஞ்சுக்காரர்கள் மறந்தும்கூட வேற்று மொழி பேச மாட்டார்களே.. அவர்களிடம் ஆங்கிலத்திலும் ஜெர்மானிய மொழியிலும் எந்த விளக்கங்களையும் கூறி சமாளிக்க முடியாதே... இப்படி வெவ்வேறு கோணத்திலும் பயம்.
சிலவேளைகளில் பயம் பூதாகாரமாக இருக்கும். ஆனால் உண்மை நிலையோ அதற்கு நேர்மாறாக இருக்கும். அப்படித்தான் பிரான்சுக்கான எனது இந்தப் பயணமும் அமைந்தது.
ஜெர்மனி எல்லை கடந்து ரைன் நதியைப் பார்த்துக்கொண்டே பிரான்சில் நுழைந்தோம். சாலையில் எங்கும் சிறப்பு பாதுகாப்புப் படைகளைக் காணவில்லை. சரி.. பிரான்சு சாலையில் செல்லும்போது தான் சுங்கவரி அதாவது டோல் கட்ட வேண்டி இருக்குமே. அங்கு தான் இந்தக் காவல்துறையினர் காத்திருப்பார்கள் போல. நமக்கு அங்குதான் கொரோனா சோதனைகள் செய்வார்கள் போல என்று மனதில் ஒரு எண்ணம் தோன்றியது.
ஏறக்குறைய ஒரு மணி நேர சாலை பயணத்திற்குப் பின்னர் முதல் டோல் நிலையம் இருப்பதை தூரத்தில் இருந்து பார்க்க முடிந்தது. ஓரிரு காவல்துறையினர் இரண்டு பக்கமும் நின்று கொண்டிருந்தார்கள், கையில் பெரிய துப்பாக்கி ஏந்தியபடி.
காவல்துறையினரைக் கண்டால் பொதுவாக எனக்கு பயம் இருப்பதில்லை. ஏனெனில் ஐரோப்பாவைப் பொறுத்தவரை சாலை விதி முறைகளைக் கடைபிடித்து நடப்பவர்களுக்குக் காவல்துறையினர் எந்த பிரச்சனையும் ஏற்படுவதில்லை; மாறாக அன்பாகவே பழகுவார்கள்.
ஆனால் கொரோனா தொடர்பான சோதனை செய்யும் அதிகாரிகள் இருப்பார்களோ, என்று மட்டுமே என் கண்கள் தேடத் தொடங்கின. என்ன ஆச்சரியம்.. ஒருவர்கூட கண்களில் தென்படவில்லை.
காவல்காரர்களும் எந்த ஒரு கேள்வியும் கேட்காமல் கையைக் காட்டி, போ போ போ என்று அனுப்பி வைப்பதிலேயே குறியாக இருந்தார்கள். ஜெர்மனியில் அச்சத்தோடு இருந்தோமே... எங்கே பிரான்சில் கடுமையான சோதனை இருக்கும் போல என்ற எண்ணத்துடன், ஆனால் இங்கோ சாலையில் எந்தவித சோதனையும் இல்லை. த்ரில் குறைந்து சப்பென்று ஆகிவிட்டது. 🙂
அடுத்தடுத்து வந்த டோல் நிலையங்களிலும் எந்த சோதனைகளும் இல்லை. அதுமட்டுமல்ல. பிரான்ஸில் இருந்த நான்கு நாட்களும் எங்கும் யாரும் எங்களிடம் கொரோனா தொடர்பான சான்றிதழ்களைக் கேட்கவும் இல்லை. கோடைகாலம் வந்ததில் அனைவருக்கும் ஒருவித விடுமுறைக்கால சிந்தனை வந்திருக்கும் போல!
ஜெர்மனியில் வாகனம் ஓட்டுபவர்கள் பிரான்சுக்குள் நுழைந்தால் தெளிவான வித்தியாசத்தைக் காண முடியும். அதிலும் குறிப்பாக பாரிசை நெருங்க நெருங்க கன்னாபின்னாவென்று வாகனம் ஓட்டுபவர்கள் பலர் நம்மைத் தாண்டி கொண்டு செல்வதைக் காண முடியும். நமது காரைப் பத்திரமாக எங்கும் யாரும் உரசாமல் நாம் கொண்டுவருவதே மிகப் பெரிய சவால் தான். நாம் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் உள்ளே நுழைகிறார்கள். நம்மைத் தாண்டிக் கொண்டு ஓடுகிறார்கள். நாம் தான் 360 டிகிரி கவனமாக நமது பார்வையைச் சாலையில் வைத்து வாகனத்தைச் செலுத்த வேண்டியதாக இருக்கிறது.
ஜெர்மனியை விட பிரான்ஸ் குறிப்பிடத்தக்க வகையில் சில வித்தியாசங்களைக் கொண்டிருக்கிறது. அதில் மிக முக்கியமான ஒன்று இங்குள்ள மிக அழகான கலைநயத்துடன் உருவாக்கப்பட்ட கட்டடங்கள் எனலாம். ஒன்றிலிருந்து ஒன்று மாறுபட்ட வகை என்ற வகையில் கட்டடக் கலைகளின் தாயகமாக பிரான்ஸ் திகழ்கிறது. இன்றைக்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்டவை ஒரு வகை என்றால் கடந்த 1000 ஆண்டுகளில் உருவான கட்டிடங்களில் வடிவமைப்புகள் என்பது பல்வேறு வகையில் அமைந்து நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன. கோத்திக் வடிவ கட்டடங்களில் வெவ்வேறு காலகட்டங்களில் ஏற்பட்ட கலை பண்பாட்டு மற்றங்களை உள்வாங்கி வளர்ந்த கட்டிடக் கலையின் வடிவங்கள் பிரான்சில் கொட்டிக் கிடக்கின்றன.
கட்டிடக் கலையையும் கட்டிடங்களின் வடிவங்களையும் ரசிக்கும் என்னை போன்றவர்களுக்குப் பிரான்ஸ் ஒரு அமுத சுரபி.
தொடர்வேன்..
-சுபா







Thursday, June 24, 2021

பிரான்ஸ் பயணக்குறிப்பு - 1

 ஐரோப்பாவில் கோடைகாலம் என்றால் நீண்ட நேர பகல். இது ஒரு இயற்கை தந்த வரம் என்று பலமுறை நான் நினைத்திருக்கிறேன். நீண்ட நேர பகல் என்றால் அதிகம் வேலை செய்யலாமே.. என்று மனதில் ஒரு எண்ணம். வெளியே சென்று வருவதற்கும் தோதான காலம் என்றால் அது கோடைகாலம் தான். பொதுவாகவே கோடை காலத்தில் நான் பல இடங்களுக்குப் பயணித்து வரலாற்று விஷயங்களைத் தேடிப் பயணித்து பார்த்து வருவது வழக்கம்.

பாரிசுக்குக் கடந்த 21 ஆண்டுகளில் அலுவலக சந்திப்புகள் மற்றும் மீட்டிங் என பலமுறை சென்றதுண்டு. தனிப்பட்ட முறையிலும் சுற்றிப் பார்த்து வர என சில முறை பாரிசுக்குப் பயணித்திருக்கிறேன். பெரும்பாலும் விமானப் பயணங்கள் அல்லது TGV துரித ரயில் பயணம். வாகனத்தில் சென்றது ஓரிரு முறைதான்.
ஒருமுறை வீட்டில் இருந்து தொடங்கி நண்பர்களாக பிரான்சின் பல நகரங்களைக் கடந்து மோனாக்கோ வரை சென்று மீண்டும் திரும்பி வந்தோம். ஏறக்குறைய 900 கிலோ மீட்டர் தூரம் ஒருவழிப் பயணம் அது. வாகனத்தில் செல்லும்போது இருக்கும் ஒரு சௌகரியம் என்னவென்றால் நாம் விரும்பும் நகரில் வாகனத்தை நிறுத்தி நம்மை ஆச்சரியப்படுத்தும் புதிய விஷயங்களை நாம் அறிந்து கொள்ள முடியும்.
கடந்த சில தினங்களுக்கு முன் பாரிஸ் செல்ல வேண்டிய ஒரு வேலை அமைந்தது. ஏறக்குறைய 700 கிமீ பாரிசுக்கு செல்வதோடு அங்கிருந்து 133 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஆர்லியன்ஸ் நகருக்குச் சென்று நீண்ட நாள் பார்க்காமல் இருந்த நண்பர்கள் மாலா-சாம் விஜய்யும் பார்த்து விட்டு வரலாம் என திட்டம் உருவானது.
பயணத்துக்குத் திட்டமிடும் போது ஐரோப்பாவில் covid-19 தொடர்பான கட்டுப்பாடுகள் எவ்வாறு இருக்கின்றன என இணையத்தில் தேடி பார்த்தேன். பிரான்சுக்கு செல்ல விரும்புவார்கள் கட்டாயமாக கோவிட் நெகட்டிவ் சான்றிதழையும் வைத்திருக்க வேண்டும் என்பதோடு முழுமையாக தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்றும் பிரான்சின் அதிகாரபூர்வ வலைப்பக்கத்தில் போடப்பட்டிருந்தது.
ஏற்கனவே கொரோனா தடுப்பூசி நான் போட்டிருந்ததால் கொரோனா நெகட்டிவ் சோதனையைப் பயணத்திற்கு முதல் நாள் செய்து கொள்ளலாம் என்று திட்டமிட்டிருந்தோம். வீட்டிற்கு அருகிலேயே இலவச முகாம்கள் வைத்திருக்கின்றார்கள் என்பதால் அங்கு சென்று பரிசோதனை செய்து கொண்டோம். 30 நிமிடத்தில் மின்னஞ்சல் வழியாக எங்களுக்கு கோவிட் நெகட்டிவ் சான்றிதழ் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இவ்வளவு துரிதமாக அதிலும் இலவசமாக இந்த சேவை நடைபெறுவது பாராட்டுதலுக்குரியது.
ஐரோப்பாவைப் பொறுத்தவரை ஒவ்வொரு நாடுகளும் ஒவ்வொரு விதமான கட்டுப்பாடுகளை இப்போது கடைபிடிக்கின்றன. உதாரணமாக இத்தாலி செல்வதற்கு அவ்வளவு கடுமையான கட்டுப்பாடுகள் இல்லை. ஸ்விட்சர்லாந்து செல்வதற்கும் பெல்ஜியம் செல்வதற்கும் சில கட்டுப்பாடுகள் உள்ளன.
கொரோனா தடுப்பூசி போட்டிருந்தால் ஏனைய அண்டை நாடுகளுக்குப் பயணம் செல்வது அனுமதிக்கப்படுவது தெரிகிறது. அதிலும் எந்தெந்த வகை தடுப்பூசிகள் உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன என்று முதலில் பட்டியலைப் பார்த்து சரி செய்து கொண்டேன். இந்தியாவில் போடப்படும் தடுப்பூசிகளில் இப்போது அந்தப் பட்டியலில் Covischield இருக்கிறது. இது இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் உள்ள நிறுவனத்தின் Astrazeneca தடுப்பூசிகள் இந்திய சிரம் இன்ஸ்டிட்யூட் உடன் செய்துகொண்ட உடன்படிக்கையின்படி உருவாக்கப்படுபவை. ஆகையால் ஐரோப்பாவிலும் மத்திய கிழக்கு நாடுகளிலும் இது அனுமதிக்கப்பட்ட தடுப்பூசியாகப் பட்டியலில் உள்ளது.
பாரிசில் சனிக்கிழமை மாலையில் இருக்க வேண்டிய அவசியம் இருந்ததால் காலையிலேயே வாகனப் பயணத்தைத் தொடங்கி விடலாம் என முடிவு செய்திருந்தோம். காலை 6 மணிக்கு தொடங்கிய எங்கள் பயணம் சரியாக ஏழு மணிவாக்கில் ஜெர்மனி பிரான்ஸ் எல்லையைத் தொடுவதற்கு முன்பாகவே சற்று தொய்வடைய ஆரம்பித்துவிட்டது.
சாலையைப் பராமரிக்கும் பணியை தொடங்கி இருப்பார்கள் போல. நாங்கள் செல்ல வேண்டிய பாதை முழுமையாக அடைக்கப்பட்டிருந்தது. வாகனத்தில் உள்ள நேவிகேட்டரைக் கேட்டால் அது மாற்று வழியைச் சொல்வதாக இல்லை. நேவிகேட்டரை மாற்று வழி கேட்டு மீண்டும் மீண்டும் முயற்சித்து பார்த்தாலும் மீண்டும் அதே ஆரம்பப் புள்ளிக்கு நம்மை கொண்டு வந்து சேர்த்து விடுகிறது. சரி நேவிகேட்டர் சொல்வதை இனி கேட்க வேண்டாம் என அடைத்துவிட்டு ஏனைய வாகனங்கள் எப்படி செல்கின்றன என்று ஊகித்துக் கொண்டு ஜெர்மனி பிரான்ஸ் எல்லையில் உள்ள ஸ்ட்ராஸ் புக் நகர் நோக்கி முதலில் செல்வோம் என திட்டமிட்டு சாலையைப் பார்த்து கொண்டே வாகனத்தை செலுத்த ஆரம்பித்தோம். சிறிய காட்டு வழிப்பதையாக இருந்ததால் ஏறக்குறைய பத்து கிலோமீட்டர் தூரம் வாகனங்கள் வரிசைகட்டி நின்று கொண்டிருந்தன. ஏறக்குறைய ஒன்றரை மணி நேரத்திற்குப் பின்னர் தான் மீண்டும் ஜெர்மனியின் நெடுஞ்சாலையைத் தொட முடிந்தது.
நெடுஞ்சாலையில் பயணம் சீராக இருந்தாலும் காட்டுவழிப் பாதையில் நிறுத்தி நிறுத்தி வந்ததில் அலுப்பு ஏற்பட்டுவிட்டது. அலுப்பு ஏற்பட்டால் அதற்கு மருந்து ஒரு நல்ல காபி தானே. ஆகவே நெடுஞ்சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் ஸ்டேஷனில் நிறுத்தி கசப்பான ஜெர்மன் காபி ஒன்று வாங்கி அருந்திவிட்டு பயணத்தைத் தொடர்ந்தோம்.
-சுபா









Monday, June 21, 2021

பாரிஸ் மெட்ரோ சிஸ்டம்

 பாரிஸ் நகரின் மெட்ரோ சிஸ்டம் 1900ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கொரோனா பாதிப்பு தொடங்குவதற்கு முன்பு பொதுவாக ஒரு நாளைக்கு 7 மில்லியன் பயணிகள் பயன்படுத்தியதாக அறியமுடிகிறது. நேற்று பயணித்த போதும் ஏராளமான பயணிகள் ஒவ்வொரு ரயிலிலும் பார்க்க முடிந்தது. மிகச்சிறப்பான மெட்ரோ ரயில்களின் இணைப்பு கொண்டது இந்த அமைப்பு. ரயில்கள் ஒவ்வொரு மூன்று நிமிடத்திற்கு ஒரு முறை என்ற வகையில் வந்து கொண்டே இருக்கின்றன. ஒரு டிக்கெட் 1.90யூரோ.

பாரிஸ் இருக்கும் வாகனத்தை செல்வதைவிட மெட்ரோ ரயிலில் பயணிப்பது துரிதமாக பல இடங்களுக்குச் செல்வதற்கு சிறந்த தேர்வு.









Sunday, June 20, 2021

மீன்

 பிரான்ஸ் கடற்கரையில் பிடிக்கப்பட்ட மீன்

Mala Poli மாலா கைவண்ணத்தில் மீன் வறுவல் ஆகவும் குழம்பாகவும்..,:-)





ஜோன் ஆஃப் ஆர்க்

 ஜோன் ஆஃப் ஆர்க் பிரமாண்ட சிலையைச் சுற்றிலும் அமைக்கப்பட்டு இருக்கும் சிற்பத் தொகுதி. மிக நுணுக்கமாக செதுக்கப்பட்ட புடைப்புச் சிற்பமாக இந்தக் கவின்மிகு வேலைப்பாடு அமைந்திருக்கிறது. வீடுகளும் மனிதர்களும் ஆயுதங்களும் மிகத் துல்லியமாக செதுக்கப்பட்டிருக்கின்றன. ஜான் ஆஃப் ஆர்க் தீயில் வைத்து எரிக்கப்படும் காட்சியும் சுற்றி நின்று அதனைக் காணும் பர்கண்டி வீரர்களது சிற்பங்களும் என முழு வரலாறும் இந்த சிற்பத் தொகுதியில் இடம் பெறுகின்றது. வியக்கத்தக்க ஒரு அமைப்பு.

சிற்பக்கலை ஆர்வலர்களுக்கு ஒரு விருந்து.























பால் காபி

 பிரான்ஸ் வந்தால் cafe e au lait குடிக்காமல் போகலாமா...


அது என்ன என்று கேட்பவர்களுக்கு... எல்லாம் நமக்கு தெரிந்த பால் காபி தான்
பெரிய பீங்கான் கப்பில் ரசித்து ருசித்து குடிப்பது தான் இது..