Tuesday, June 29, 2021

பிரான்சு பயணக்குறிப்பு - 3

 பிரான்சு நாட்டின் பொதுப் போக்குவரத்து மிகச் சிறப்பாக அமைந்திருக்கின்றது. விமானப் போக்குவரத்தாக இருந்தாலும் சரி.. டிராம், பேருந்துகள், மெட்ரோ ரயில், துரித ரயில், சாலைப் போக்குவரத்து அமைப்பு, சைக்கிள்கள் செல்வதற்கும் மக்கள் நடைபாதையில் செய்வதற்குமான அமைப்பு என நாடு முழுமையும் மக்கள் பொது போக்குவரத்துக்கான அமைப்பு என்பது மிக மிகச் சிறப்பான வகையில் பிரான்சு முழுவதும் அமைந்திருக்கின்றது. ஒரு குக்கிராமமாக இருந்தாலும் கூட அங்கு பேருந்துகள் வருகின்றன.

வரலாற்று நோக்கில் பிரான்சு நாட்டை கவுல் என அழைக்கும் வழக்கம் இருக்கின்றது. இது ரோமானியப் பேரரசோடு தொடர்பு கொண்டது.
பண்டைய ரோமானியப் பேரரசு இன்றைய பிரான்சின் தெற்குப் பகுதியை பொ.ஆ.மு 125 லிருந்து 121 காலகட்டத்தில் தன்னுடைய ஆளுமைக்குள் கொண்டு வந்தது. அதன் பின்னர் ஜூலியஸ் சீசர் இன்றைய பிரான்சு முழுமையையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார். இது நடந்தது பொ.ஆ.மு. 58 லிருந்து 51 வரை. இதனை கேலிக் போர் (Gallic War) என்றும் அழைப்பார்கள். அன்று ரோமானியர்களால் பிரானசு கவுல் என்றே அழைக்கப்பட்டது.
அன்றைய ரோமானியப் பேரரசின் ஆளுமைக்குள் இருந்த காலகட்டத்தில் பிரான்ஸ் மிகத் துரிதமான வளர்ச்சி கண்டது. பல்வேறு நாடுகளுக்குகிடையேயான தொடர்புகள் அக்காலகட்டத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டன. பொதுமக்களுக்கான வாழ்விடப் பகுதிகள், குளியல் தொட்டிகள், பெரும் கட்டிடங்கள், திறந்தவெளி நாடக மேடைகள் (Amphitheater) எனப் பல்வேறு பொது கட்டிடங்கள் அமைக்கப்பட்டன. நகரங்களில் இத்தகைய செயல்பாடுகள் என்றால், கிராமப்புறங்களில் மாபெரும் மாடமளிகைகள் உருவாக்கப்பட்டன. இப்படி இருக்கையில் பொ.ஆ 3ம் நூற்றாண்டு வாக்கில் ஜெர்மனியிலிருந்து வந்த பார்பேரியன் (காட்டுமிராண்டிகள்) என அழைக்கப்படும் இனக்குழுவினர் அன்று நாகரீகமடைந்திருந்த பிரான்சில் ஏராளமான சேதங்களை உருவாக்கத் தொடங்கினர். பொ.ஆ. 5ம் நூற்றாண்டு வாக்கில் ஜெர்மானிய பார்பேரியன்கள் பிரான்சின் பல பகுதிகளில் குடிபெயரத் தொடங்கினர். இப்படி ஜெர்மனியிலிருந்து மட்டுமல்ல, இங்கிலாந்திலிருந்தும், இத்தாலியிலிருந்தும், ஸ்பெயினிலிருந்தும் ஸ்கேண்டினேவிய நாடுகளிலிருந்தும் எனப் பலரும் குடியேறினர். இன்றும் கூட பிரஞ்சுக்காரர்களே மக்கள் தொகையில் அதிகம் என்றாலும் பல இனமக்கள் வாழ்கின்ற நாடாகவே பிரான்சு இருக்கின்றது.
ஜெர்மனியிலிருந்து பாரிஸ் வரை நெடுஞ்சாலையில் செல்வதற்கு ஏறக்குறைய 650 கிலோ மீட்டர் தூரம். இந்தப் பயணத்தின் போது நாம் பல கிராமங்களையும் மற்றும் சிறு நகரங்களையும், பெரு நகரங்களையும் கடந்து பயணிக்க வேண்டும். ஜெர்மனியில் சாலையில் பயணிக்க சுங்கவரி கட்டணம் அதாவது டோல் கட்டணம் வழக்கில் இல்லை. ஆனால் இதையே நாம் பிரான்சில் எதிர்பார்க்கலாமா? பிரான்சில் நெடுஞ்சாலையில் பயணித்தால் கட்டாயமாக நாம் சுங்கவரி கட்டணத்தைச் செலுத்தித் தான் ஆக வேண்டும்.
எனது பயணத்தின் போது ஜெர்மனி எல்லையில் இருந்து பாரிஸ் வருவதற்குள் ஏறக்குறைய 36 யூரோ கட்டணம் செலுத்திய பின்னரே பாரிஸ் வர முடிந்தது. நெடுஞ்சாலையில் பயணிப்பது என்பது ஒரு சுகமான அனுபவம் தான். ஜெர்மனி நெடுஞ்சாலையில் சுங்கவரி கட்டணம் இல்லை என்பதால் வாகனங்கள் எப்போதும் நிறைந்திருக்கும். ஆனால் பிரான்சில் நெடுஞ்சாலையில் அவ்வளவாக வாகனங்களைக் காணமுடியாது. நெடுஞ்சாலையைத் தவிர்த்துவிட்டு கிராமப்புற சாலைகள் பயணிப்போர் அதிகம். பிழைக்கத் தெரிந்த மனிதர்கள் அல்லவா..? 🙂
பிரான்சின் கட்டிடங்களும் பொதுப் போக்குவரத்துகளும் மட்டும் தான் சிறப்பா, என்று கேட்டால்... இல்லை, அதற்கும் மேலாக கலைகளைக் கொண்டாடும் ஒரு நாடாக பிரான்சு திகழ்கிறது என்பதை நான் கூறத்தான் வேண்டும்.
இத்தாலியில் தொடக்கம் கண்ட மோனாலிசா பிரான்சில் தான் வாழ்கிறாள்.
மோனாலிசாவை உருவாக்கிய இத்தாலியில் பிறந்த டாவின்சியும் பிரான்சில் தான் கல்லறையில் உறங்குகின்றார்!
தொடர்வேன்..
-சுபா







No comments:

Post a Comment