Thursday, June 24, 2021

பிரான்ஸ் பயணக்குறிப்பு - 1

 ஐரோப்பாவில் கோடைகாலம் என்றால் நீண்ட நேர பகல். இது ஒரு இயற்கை தந்த வரம் என்று பலமுறை நான் நினைத்திருக்கிறேன். நீண்ட நேர பகல் என்றால் அதிகம் வேலை செய்யலாமே.. என்று மனதில் ஒரு எண்ணம். வெளியே சென்று வருவதற்கும் தோதான காலம் என்றால் அது கோடைகாலம் தான். பொதுவாகவே கோடை காலத்தில் நான் பல இடங்களுக்குப் பயணித்து வரலாற்று விஷயங்களைத் தேடிப் பயணித்து பார்த்து வருவது வழக்கம்.

பாரிசுக்குக் கடந்த 21 ஆண்டுகளில் அலுவலக சந்திப்புகள் மற்றும் மீட்டிங் என பலமுறை சென்றதுண்டு. தனிப்பட்ட முறையிலும் சுற்றிப் பார்த்து வர என சில முறை பாரிசுக்குப் பயணித்திருக்கிறேன். பெரும்பாலும் விமானப் பயணங்கள் அல்லது TGV துரித ரயில் பயணம். வாகனத்தில் சென்றது ஓரிரு முறைதான்.
ஒருமுறை வீட்டில் இருந்து தொடங்கி நண்பர்களாக பிரான்சின் பல நகரங்களைக் கடந்து மோனாக்கோ வரை சென்று மீண்டும் திரும்பி வந்தோம். ஏறக்குறைய 900 கிலோ மீட்டர் தூரம் ஒருவழிப் பயணம் அது. வாகனத்தில் செல்லும்போது இருக்கும் ஒரு சௌகரியம் என்னவென்றால் நாம் விரும்பும் நகரில் வாகனத்தை நிறுத்தி நம்மை ஆச்சரியப்படுத்தும் புதிய விஷயங்களை நாம் அறிந்து கொள்ள முடியும்.
கடந்த சில தினங்களுக்கு முன் பாரிஸ் செல்ல வேண்டிய ஒரு வேலை அமைந்தது. ஏறக்குறைய 700 கிமீ பாரிசுக்கு செல்வதோடு அங்கிருந்து 133 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஆர்லியன்ஸ் நகருக்குச் சென்று நீண்ட நாள் பார்க்காமல் இருந்த நண்பர்கள் மாலா-சாம் விஜய்யும் பார்த்து விட்டு வரலாம் என திட்டம் உருவானது.
பயணத்துக்குத் திட்டமிடும் போது ஐரோப்பாவில் covid-19 தொடர்பான கட்டுப்பாடுகள் எவ்வாறு இருக்கின்றன என இணையத்தில் தேடி பார்த்தேன். பிரான்சுக்கு செல்ல விரும்புவார்கள் கட்டாயமாக கோவிட் நெகட்டிவ் சான்றிதழையும் வைத்திருக்க வேண்டும் என்பதோடு முழுமையாக தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்றும் பிரான்சின் அதிகாரபூர்வ வலைப்பக்கத்தில் போடப்பட்டிருந்தது.
ஏற்கனவே கொரோனா தடுப்பூசி நான் போட்டிருந்ததால் கொரோனா நெகட்டிவ் சோதனையைப் பயணத்திற்கு முதல் நாள் செய்து கொள்ளலாம் என்று திட்டமிட்டிருந்தோம். வீட்டிற்கு அருகிலேயே இலவச முகாம்கள் வைத்திருக்கின்றார்கள் என்பதால் அங்கு சென்று பரிசோதனை செய்து கொண்டோம். 30 நிமிடத்தில் மின்னஞ்சல் வழியாக எங்களுக்கு கோவிட் நெகட்டிவ் சான்றிதழ் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இவ்வளவு துரிதமாக அதிலும் இலவசமாக இந்த சேவை நடைபெறுவது பாராட்டுதலுக்குரியது.
ஐரோப்பாவைப் பொறுத்தவரை ஒவ்வொரு நாடுகளும் ஒவ்வொரு விதமான கட்டுப்பாடுகளை இப்போது கடைபிடிக்கின்றன. உதாரணமாக இத்தாலி செல்வதற்கு அவ்வளவு கடுமையான கட்டுப்பாடுகள் இல்லை. ஸ்விட்சர்லாந்து செல்வதற்கும் பெல்ஜியம் செல்வதற்கும் சில கட்டுப்பாடுகள் உள்ளன.
கொரோனா தடுப்பூசி போட்டிருந்தால் ஏனைய அண்டை நாடுகளுக்குப் பயணம் செல்வது அனுமதிக்கப்படுவது தெரிகிறது. அதிலும் எந்தெந்த வகை தடுப்பூசிகள் உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன என்று முதலில் பட்டியலைப் பார்த்து சரி செய்து கொண்டேன். இந்தியாவில் போடப்படும் தடுப்பூசிகளில் இப்போது அந்தப் பட்டியலில் Covischield இருக்கிறது. இது இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் உள்ள நிறுவனத்தின் Astrazeneca தடுப்பூசிகள் இந்திய சிரம் இன்ஸ்டிட்யூட் உடன் செய்துகொண்ட உடன்படிக்கையின்படி உருவாக்கப்படுபவை. ஆகையால் ஐரோப்பாவிலும் மத்திய கிழக்கு நாடுகளிலும் இது அனுமதிக்கப்பட்ட தடுப்பூசியாகப் பட்டியலில் உள்ளது.
பாரிசில் சனிக்கிழமை மாலையில் இருக்க வேண்டிய அவசியம் இருந்ததால் காலையிலேயே வாகனப் பயணத்தைத் தொடங்கி விடலாம் என முடிவு செய்திருந்தோம். காலை 6 மணிக்கு தொடங்கிய எங்கள் பயணம் சரியாக ஏழு மணிவாக்கில் ஜெர்மனி பிரான்ஸ் எல்லையைத் தொடுவதற்கு முன்பாகவே சற்று தொய்வடைய ஆரம்பித்துவிட்டது.
சாலையைப் பராமரிக்கும் பணியை தொடங்கி இருப்பார்கள் போல. நாங்கள் செல்ல வேண்டிய பாதை முழுமையாக அடைக்கப்பட்டிருந்தது. வாகனத்தில் உள்ள நேவிகேட்டரைக் கேட்டால் அது மாற்று வழியைச் சொல்வதாக இல்லை. நேவிகேட்டரை மாற்று வழி கேட்டு மீண்டும் மீண்டும் முயற்சித்து பார்த்தாலும் மீண்டும் அதே ஆரம்பப் புள்ளிக்கு நம்மை கொண்டு வந்து சேர்த்து விடுகிறது. சரி நேவிகேட்டர் சொல்வதை இனி கேட்க வேண்டாம் என அடைத்துவிட்டு ஏனைய வாகனங்கள் எப்படி செல்கின்றன என்று ஊகித்துக் கொண்டு ஜெர்மனி பிரான்ஸ் எல்லையில் உள்ள ஸ்ட்ராஸ் புக் நகர் நோக்கி முதலில் செல்வோம் என திட்டமிட்டு சாலையைப் பார்த்து கொண்டே வாகனத்தை செலுத்த ஆரம்பித்தோம். சிறிய காட்டு வழிப்பதையாக இருந்ததால் ஏறக்குறைய பத்து கிலோமீட்டர் தூரம் வாகனங்கள் வரிசைகட்டி நின்று கொண்டிருந்தன. ஏறக்குறைய ஒன்றரை மணி நேரத்திற்குப் பின்னர் தான் மீண்டும் ஜெர்மனியின் நெடுஞ்சாலையைத் தொட முடிந்தது.
நெடுஞ்சாலையில் பயணம் சீராக இருந்தாலும் காட்டுவழிப் பாதையில் நிறுத்தி நிறுத்தி வந்ததில் அலுப்பு ஏற்பட்டுவிட்டது. அலுப்பு ஏற்பட்டால் அதற்கு மருந்து ஒரு நல்ல காபி தானே. ஆகவே நெடுஞ்சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் ஸ்டேஷனில் நிறுத்தி கசப்பான ஜெர்மன் காபி ஒன்று வாங்கி அருந்திவிட்டு பயணத்தைத் தொடர்ந்தோம்.
-சுபா

No comments:

Post a Comment