Tuesday, February 19, 2013

பனியாகிக் கரைந்த கணங்களிலே....! - ஆஸ்திரியா *ரோய்ட்ட - 9


கோட்டைக்கு நடைப்பயணம்

நடந்து சற்று நேரத்தில் முதல் கோட்டையான ஏரன்பெர்க் கோட்டையை வந்தடைந்தோம். இந்தக் கோட்டையின் கிழ்ப்பகுதி 12ம் நூற்றாண்டு முதல் உப்பு விநியோகத்திற்கு மிக முக்கிய இடமாக அமைந்திருந்தமையும் தெரிந்து கொண்டேன்.  இந்த உப்புக்கிடங்கு அறை பல நூற்றாண்டுகள் ஆகியும் கூட இன்னமும் நல்ல  நிலையிலேயே இருப்பது ஒரு ஆச்சரியமான விஷயம் தான்.முதல் கோட்டையான இந்த ஏரன்பெர்க் கோட்டையின் காலம் 13ம் நூற்றாண்டு. இந்த ஏரன்பெர்க் கோட்டை ஏனைய எல்லா அரண்மனைகளைப் போன்றும் சில போர் கால நிகழ்ச்சிகளுக்கும் மாறுதல்களுக்கும் உட்பட்டிருக்கின்றது.  1546ம் ஆண்டில் ஒரு முறையும் 1703ம் ஆண்டில் ஒரு முறையும் நிகழ்ந்த போரில் இந்தக் கோட்டை ஓரளவுக்கு சேதம் அடைந்தது.  இந்த முதல் கோட்டைக்குச் செல்லும் வழிப் பாதையிலே ஆங்காங்கே சில குகைகளைக் காண முடிகின்றது. சில சிறியன. பொந்து போன்ற வடிவிலானவை. சில ஒரு மனிதர் நுழைந்து பதுங்கிக் கொள்ளும் அளவு, சில பெரிய குகைப்பாதைகள்..  என வித்தியாசங்களில்!

அதில் ஒரு குகைக்குப் பெயர் The Golden hole. இந்த சிறு பொந்திற்குள் பொக்கிஷம் குவிந்து கிடப்பதாகவும் நல்ல நேர்மையான மனம் உள்ளவர்கள் கையை உள்ளே விட்டு பார்த்தால் அந்தப் பொக்கிஷங்கள் கிடைக்கும் என்றும் இங்கே வழக்கில் ஒரு கதையும் இருக்கின்றது. தீய குணம் கொண்டவர்களாக இருந்தால் கையை உள்ளே விடும் போது பொக்கிஷம் கிடைக்காதாம். அதற்குப் பதிலாக பாம்பு வந்து கையைக் கடித்து விடுமாம். இங்கேயும் இப்படி வழக்கில் சில நம்பிக்கைகள்!ஊருக்கு ஊர் இப்படி நாட்டுப்புற கதைகள்.. அவை ஆசிய நாடுகளாக இருந்தாலும் சரி ஐரோப்பிய நாடுகளாக இருந்தாலும் சரி.. மனிதர்கள் இவ்வகையான கதைகளில் நம்பிக்கை கொண்டிருக்கின்றனர் என்பதைத் தான் இவ்வகை பயண அனுபவங்கள் வழி தெரிந்து கொள்கின்றோம்.பொந்துக்குள் கையை விட்டு ஏன் வம்பை விலைக்கு வாங்கிக் கொள்ள வேண்டும் என்று நினைத்து புகைப்படம் மட்டும் எடுத்துக் கொண்டேன். இந்தக் கோட்டை சிதலமடைந்த நிலைதான் என்றாலும் பேரழகு. மலை உச்சியிலிருந்து கீழே பார்க்கும் போது ரோய்ட்ட நகர், அதனை ஒட்டி அமைந்த சிறு கிராமங்கள் அனைத்தும் பனி போர்த்திய பாற்கடலில் முளைத்த வீடுகள் போல காட்சியளித்துக் கொண்டிருந்தன.
முதல் கோட்டையைப் சென்றடைந்து அதனைச் சுற்றிப்பார்த்து அதன் பின்னர் அடுத்த கோட்டையையும் சென்று பார்க்க ஆவல் ஏற்பட்டதால் அடுத்த கோட்டையையும் பார்க்க நடந்தோம். மலை மேல் இருக்கும் இந்தக் கோட்டை அதிக தூரம் என்பதால் ஒரு மணி நேரத்திற்கும் மேல் நிச்சயமாகத் தேவைப்படும் என்பதை அறிந்திருந்தோம். ஆனாலும் இந்த மலையின் உயரத்தில் இருக்கும் கோட்டையயும் பார்க்க வேண்டும் என்ற ஆவலினால் கொட்டிக்கிடந்த பணியையும் பொருட்படுத்தாது நடந்தோம்.


இந்த இரண்டாம் கோட்டையின் பெயர் ஷ்லோஷ்கோப்ஃ கோட்டை (Schlosskopf). இந்தக் கோட்டைக்கு பிரத்தியேகமான ஒரு சிறப்பு உண்டு. அதாவது. ஆஸ்திரியாவின் மிக உயரமான இடத்தில் அமைக்கப்பட்ட ஒரு கோட்டையென்றால் அது இதுதான்.  இந்தக் கோட்டை 1704ம் ஆண்டில் தான் முதலில் கட்டப்பட்டது. 18ம் நூற்றாண்டின் ஆஸ்திரிய வரலாற்றில் பல அரசியல் நிகழ்வுகளைச் சந்தித்த கோட்டை இது எனக் குறிப்பிடப்படுகின்றது.1740ம் ஆண்டில் அரசி மரியா தெரேசா தனது 23ம் வயதில்  தனது தந்தையான பேரரசர் ஆறாம் கார்லிடமிருந்து ஆட்சிப் பொருப்பை எடுத்துக் கொண்டு பேரரசியாக முடி சூடி இந்தக் கோட்டையில் வசித்து ஆட்சி செய்திருக்கின்றார். இவரது ஆட்சி 40 ஆண்டு காலங்கள் நீடித்திருக்கின்றது.  இந்தப் பேரரசியார் தனது ஆட்சி காலத்தில் தான் அப்போதைய ஆஸ்திர ராஜியத்தில் 6லிருந்து 8வயது தொடங்கும்  ஆண் பெண் குழந்தைகள் எல்லோருக்கும் கட்டாயக் கல்வி தேவை என சட்டமாக்கி அமுலுக்குக் கொண்டு வந்திருக்கின்றார். இவர் 29.நவம்பர் 1780 ஆண்டில் தமது 63ம் வயதில் தான் ஆட்சியில் இருக்கும் போதே இறந்தார்.

இரண்டு கோட்டைகளையும் பார்த்துப் பரவசம் அடைந்து மீண்டும் நடந்து கீழே வந்தடைவதற்கு மாலை ஐந்து மணியாகி விட்டது. அன்றைய நாளில் கோட்டையின் வாசலில் ஆரம்பித்து மீண்டும் கீழே வாகனம் இருக்கும் இடம் வரும் வரை ஏறக்குறை 17 கிமீ தூர நடை.

முதல் நாள் மேற்கொண்ட  க்ரோஸ் கண்ட்ரீ ஸ்கீயிங் பயணத்தில் உடல் அலுத்துப் போய் இன்று நடக்கவே முடியாதோ என நினைத்துக் கொண்டிருந்த எனக்கு இது மகா ஆச்சரியம் தான். நமது உடலில் நமக்குத் தெரியாமலேயே எவ்வளவு அளப்பறிய சக்தி இருக்கின்றது என்று அச்சமயம் உணர்ந்தேன்.

சுபா


Wednesday, February 6, 2013

பனியாகிக் கரைந்த கணங்களிலே....! - ஆஸ்திரியா *ரோய்ட்ட - 8

கோட்டைக்குச் செல்வோமா?

29.12.2012

முதல் இரண்டு நாட்களும் க்ரோஸ் கண்ட்ரீ ஸ்கீயிங் சென்றிந்தமையால் உடலில் அசதி நன்கு தெரிந்தது. அதனால் இடையில் ஒரிரு நாள் ஓய்வெடுக்கலாம் என்று முடிவு செய்து அருகாமையில் பார்க்க என்ன இருக்கின்றது என்று தேடினோம். ரோய்ட்ட நகரின் Ehrenburg பகுதியில் பழமையான அரச கோட்டைகள் இருக்கின்றன. மலைமேல் இருக்கும் இந்தக் கோட்டைகளைச் சென்று இந்த நாளில் அவற்றை பார்த்து வரலாமே என முடிவெடுத்துக் கொண்டோம்.அதற்கு முன்னர் எங்கள் தங்கும் விடிதியினர் எங்களுக்காக ஏற்பாடு செய்திருந்த குதிரை வண்டி பிராயணம் காலையில் இருந்தது. 10 பேர்களை ஏற்றிக் கொண்டு இரண்டு குதிரைகள் பூட்டிய வண்டி ஜல் ஜல் என்று மணிச்சத்தம் ஒலிக்க எங்களை அந்தப் பனி அடர்ந்த பகுதியில் உலா அழைத்துச் சென்றது. அந்தக்காலத்தில் ராஜ குடும்பத்தினர் எப்படிச் செல்வார்களோ அப்படி ஒரு அமைப்பு அந்த வண்டிக்குச் செய்திருந்தனர். நல்ல திடகாத்திரமான இரண்டு கருப்பு நிறக் குதிரைகள். அவை இரண்டும் நடக்கும் போதே உடலின் சூடு தரும் ஆவி பறக்க குதிரைகள் செல்வதை அந்த ஒரு மணி நேரத்து குதிரை வண்டி பிரயாணத்தில் அனுபவித்து மகிழ்ந்தேன். பனி படர்ந்த மலையடிவாரத்திலேயே பயணித்து ரோய்ட்ட நகரின் எல்லை வரை சென்று பின்னர் மீண்டும் தங்கும் விடுதி இருக்கும் இடம் வரை வந்து சேர்ந்ததும் எங்களை இறக்கி விட்டார் குதிரை வண்டிக்காரர்.தங்கும் விடுதி வந்து உடைகளை மாற்றிக் கொண்டு கோட்டையைப் பார்க்க புறப்பட்டோம். நாங்கள் இருந்த தங்கும் விடுதியிலிருந்து Ehrenburg மலையின் அடிவாரப்பகுதி ஏறக்குறைய 7 கிமீ தூரம் தான்.  வாகனத்தில் பயணித்து சில நிமிடங்களில் கோட்டை வாயில் பகுதியை அடைந்து விட்டோம்.

இந்தக் கோட்டையின் அடிப்பகுதியில் ஒரு அருங்காட்சியகம், உணவகம் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. கோட்டையின் அடிவாசல் பகுதியில் நுழைவாயில் மட்டுமே உள்ளது. கோட்டைக்கு சென்று பார்க்க விரும்புவோர் கால்நடையாக மலையில் நடந்து மட்டுமே செல்ல முடியும்.

நாங்கள் நினைத்து வந்ததோ வாசல் பகுதியிலேயே கோட்டை இருக்கும் அல்லது கோட்டை வரை வாகனத்திலேயே சென்று விடலாம் என்று. ஆனால் அதற்கு வழியில்லை என்பது தெரிந்து விட்டது. நடந்து தான் செல்ல வேண்டும். ஆக அடுத்து நாங்கள் எதிர்பார்க்காமலேயே, திட்டமிடாமலேயே ஒரு நடை பயணம் என்று முடிவானது.

இரண்டு வெவ்வேறு மலைகளின் மேல் இரண்டு கோட்டைகள் என்ற வகையில் அக்காலத்தில் இப்பகுதியை ஆண்ட பேரரசர் கட்டியிருக்கின்றார். ஒன்றுக்கு ஒன்று வித்தியாசமானது. முதல் கோட்டையைச் சென்று பார்த்து விட்டு உடம்பில் மேலும் வலுவிருந்தால் அடுத்த கோட்ட்டைக்குச் செல்லலாம் என முடிவெடுத்துக் கொண்டோம்.

முதல் கோட்டையை விட அடுத்த கோட்டை மிக உயரத்தில் இருந்தது. அதனால் முதலில் எளிதான கோட்டையைச் சென்று பார்ப்போம் என நடக்க ஆரம்பித்தோம்.மலைப்பாதை.. இலைகள் கொட்டிக் கிடந்தாலும் பாதை முழுக்க பணி நிறைந்து கிடந்தது.

சாதாரணமாக மலையின் செங்குத்தான நடைப்பாதையில் நடப்பதையும் விட இது சற்று சிரமமாகத்தான் அமைந்திருந்தது. 30 நிமிடத்தில் கோட்டையை அடைந்து விட முடியும் என்று கீழே தகவல் போடப்போட்டிருந்ததை நம்பி நடந்த நாங்கள் ஏறக்குறைய 45 நிமிடங்கள் கழித்தே கோட்டையை அடைந்தோம்.


அவ்வப்போது சறுக்கி சறுக்கி விடும் பாதையைக் கவனமாகப் பார்த்துக் கொண்டே சென்றாலும் இருபக்கமும் நிறைந்திருந்த ஊசி இலை மரங்களின் அழகு அப்பாதையில் செல்வோரை கணகளையும் கருத்தையும் கவர்ந்து இழுத்து விடும் தன்மை உடையதாக இருந்தது.  குளிரின் பனியைத்தாங்கிக் கொண்டு அதன் நீரைத் தேக்கி அந்த நீரை சிறு துளிகளாக்கி சொறிந்து கொண்டிருந்தன அந்த ஊசி இலை மரங்கள். மெல்லிதான சூரிய ஒளிக் கீற்றில், அப்போது  தூறிக் கொண்டிருந்த சாரலும் சொட்டு சொட்டாக விழும் இந்த பனித்துளிகளும் தரையை மட்டும் நனைக்க வில்லை. அக்காட்சி என் மனதையும் நனைக்க அதன் ரம்மியமான அழகில் நான் மனம் கரைந்து கொண்டிருந்தேன்.தொடரும்..

சுபா

Saturday, February 2, 2013

பனியாகிக் கரைந்த கணங்களிலே....! - ஆஸ்திரியா *ரோய்ட்ட - 7


ஆஸ்திரிய கிராமங்கள்

கிராமத்து வாழ்க்கை என்பது, அது எந்த  நாடாக இருந்தாலும் சரி, நினைக்கும் போதே மனதில் ஒரு அமைதியையும் எளிமையயும்  உருவாக்கக் கூடிய தன்மை வாய்ந்தது. கிராமம் என்றாலே பரந்து விரிந்து காணப்படும் மலைகள், பசுமையைக் காட்டி நிற்கும் புல்வெளிகள், வயல்கள், மரங்கள், செடி கொடிகள்,  வீட்டு வளர்ப்பு பிராணிகள் என நம் கண் முன்னே வந்து நிழலாடும் இல்லையா? அந்த வகையில் ஆஸ்திரியாவில் கிராமங்கள் எப்படி அமைந்திருக்கின்றன என்பதை நான் அறிந்த வகையில் இந்தப் பதிவில்
பகிர்ந்து கொள்கிறேன்.

கடந்த ஆண்டின் எங்களது பனிக்கால விடுமுறையிலும் சரி இந்த 2012 ஆண்டு பயணத்திலும் சரி,  இரண்டிலுமே கிராமப்புறத்தில் அமைந்த தங்கும் விடுதியில் இருக்கும் வாய்ப்பு அமைந்ததனால் கிராமப்புறச் சூழலை சில நாட்கள் நேரடியாகத் தங்கியிருந்து அனுபவிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனால் மக்களின் வாழ்க்கை முறை, தொழில், அன்றாட நடப்புக்கள் என சில விஷயங்களை நேரடியாகப் பார்த்து அறிந்து கொள்ள முடிந்தது.டிரோல் மானிலத்தின் கிராமங்கள் என எடுத்துக் கொண்டால் அனைத்துமே மலைப்பாங்கான பகுதிகளில் அமைந்திருக்கும் கிராமங்களே. இங்கே பொதுவாக காடுகள் நிறைந்து இருப்பதால் மலைப்பகுதிகளின்
தாழ்வான பள்ளத்தாக்குப் பகுதிகளில் கிராமங்கள் அமைந்திருக்கின்றன. அங்கொன்றும் இங்கொன்றுமாக கிராமங்கள் என்ற வகையில் சின்ன சின்ன கிராமங்கள், அவற்றை ஒருங்கினைக்கும் ஒரு சிறு அல்லது பெரு
நகரம் என்ற வகையில் கிராமப் புறங்களைக் காண முடிகின்றது.

டிரோல் மானிலத்தின் பெரும்பாலான கிராமங்கள் சுற்றுப்பயணிகளை மையமாக வைத்து இயங்கி வரும் வர்த்தகத்தைப் பின்னனியாகக் கொண்டுள்ளன. தங்கும் விடுதிகள், சுற்றுப்பயணிகளுக்கான ஸ்கியிங்,
நோர்டிக் வாக்கிங், நோர்டிக் ஸ்கீயிங், க்ரோஸ் கண்ட்ரி வாக்கிங், ஸ்னோ போர்ட் விளையாட்டுக்களை மையமாக வைத்து இயங்கும் வர்த்தகங்களாக இவை அமைந்துள்ளன. அந்த வகையில், பயிற்சி நிலையங்கள், விளையாட்டு உடைகள் பொருட்களுக்கான விற்பனை மையங்கள், உணவு விடுதிகள்
என்பவை பெருமளவில் காணப்படுகின்றன. இவை தவிர்த்து குதிரை ஏற்றப் பயிற்சிமையங்கள், சுற்றுலா வழிகாட்டிகள் என்பன போன்ற சிறு தொழில் மையங்களும் உள்ளன. இவை தவிர்த்து காடுகளை மையமாக வைத்து இயங்கும் மர ஆலைகள் இங்கு அமைந்திருக்கின்றன. பிராணிகள் வளர்ப்பு,  விவசாயம்,   போன்றவையும் சீஸ், இறைச்சி வத்தல்கள் (மாடு, பன்றி, செம்மறி ஆடுகள்)  தயாரிப்பு மையமும் இங்கே குடும்பத் தொழில் என்ற வகையிலும் சிறிய பெரிய வர்த்தகங்கள் என்ற வகையிலும் இயங்கி
வருகின்றன.ஒரு சர்வ சாதாரண நாளில் வருடத்தின் எல்லா நாட்களிலுமே குதிரைகளில் செல்பவர்களையும், ஜல் ஜல் என்று மணியடித்துக் கொண்டு சுற்றுப் பயணிகளை ஏற்றிக் கொண்டு செல்லும் குதிரை வண்டிகளையும்,
வயலில் ஏதாகினும் பணி புரிந்து கொண்டிருக்கும் மனிதர்களையும் இங்கே காணலாம்.


ஆஸிதிரிய பாரம்பரிய வகை வீடுகளின் கட்டிட அமைப்பில் கட்டப்படும் புதிய வீடுகள்

கிரமப்புற வீடுகளில் பெரும்பாலானவை இன்னமும் பழங்கால வடிவத்தை மாற்றாமல் ஆனால் அதே சமயம் நல்ல முறையில் பராமரிக்கப்படும் வகையிலேயே அமைந்துள்ளன. ஆங்காங்கே சிலஅப்பார்ட்மெண்ட்களையும் புதிய கட்டிடங்களையும் காண முடிந்தாலும் பழமை மாறாத வீடுகளே அதிகமாக நிறைந்துள்ளன. புதிதாகக் கட்டப்படும் வீடுகள் கூட பழங்கால கட்டிட அமைப்பில் உள்ளவாறு கட்டியுள்ளதையும் காணலாம்.பணியில் உலா

ஆஸ்திரிய கிராமங்களில் சில மணி நேரங்கள் நடந்தால் குதிரை வாசனையும் காடுகள் மரங்கள் வயல்களின் இயற்கை மனமும் நமது நாசியைத் துளைப்பதை உணர முடியும். எந்த நாடாக இருந்தாலும் அந்தந்த நாட்டின் மண்ணின் மணம் மாறுமா என்ன?

தொடரும்...

சுபா