Friday, December 16, 2011

நுர்ன்பெர்க் லேப்கூகன் (Lebkuchen)

ஜெர்மனியில் பாயான் மாநிலத்தின் ஒரு முக்கிய நகரம் நுர்ன்பெர்க். கடந்த சில மாதங்கள் அங்கே பணி நிமித்தமாக வாசம் செய்யும் நிலை எனக்கு. நுர்ன்பெர்க் கிறிஸ்மஸ் மார்க்கெட் மிகப் பிரசித்தி பெற்ற ஒன்று. உலகின் பல மூலைகளிலிருந்து இங்கே இந்தச் சந்தையைப் பாக்க வருபவர்கள் பலர். நகரில் ஏறக்குறைய எல்லா தங்கும் விடுதிகளும் முழுதும் புக் செய்யபப்ட்டு விட்டன சுற்றுலா பயணிகளால். நான் தொடர்ந்து புக் செய்து வைத்திருந்ததால் எனக்கு பிரச்சனை இல்லாமல் போனது தங்கிக் கொள்ள.
சரி ..கிறிஸ்மஸ் சந்தைக்கு வருவோமே..

ஐரோப்பாவின் 10 சிறந்த கிற்ஸ்மஸ் சந்தைகளில் இதுவும் ஒன்று. http://www.travelintelligence.com/travel-writing/europe-s-top-10-christmas-markets பார்க்க!

இந்த கிறிஸ்மஸ் சந்தையின் அழகிய காட்சிகளின் புகைப்படங்களை நாளை பகிர்ந்து கொள்கிறேன்.

இந்த சந்தைக்கு சிறப்பு சேர்க்கும் மிக முக்கிய அம்சமான லேப்கூகன் (Lebkuchen) படங்கள் மட்டும் இன்று பதிகின்றேன்.


வாங்கி வைத்து தட்டில் வைக்கப்பட்ட லேப் கூகன்.
லேப் கூகன் ... சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.லேப் கூகன் விற்பனை செய்யும் கூடாரம்.. அலங்கரிக்கபப்ட்டிருக்கும் விதம் கண்களைக் கவர்ந்தது.


சரி லேப்கூகன் எப்படி செய்கிறார்கள் என தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு :http://germanfood.about.com/od/baking/r/nuernberger_lebkuchen.htm

நாளை முடிந்தால் சந்தையின் படங்களுடன் வருகிறேன்.

சுபா

Saturday, December 3, 2011

திருவண்ணாமலை நினைவுகள்

திருவண்ணாலைக்குப் பயணம் செய்த போது அங்கு பதிவு செய்த சில காட்சிகள் - சிறு விளக்கங்களுடன்.


சென்னையிலிருந்து புறப்படும் போது சாலையில் இடையே நடந்து செல்லும் மாடுகளும் கன்றுக் குட்டிகளும். இவை சாலை நெரிசலைப் பற்றிய கவலையின்றி, மெதுவாக செல்வது வாகனமோட்டுபவருக்கு சிரமத்தைத் தந்தாலும் இவையும் மக்களோடு சேர்ந்து அவற்றின் வேலைகளை மட்டும் மனதில் நினைத்துக் கொண்டு சாலையை மறைத்துக் கொண்டு நடப்பது என்னைப் போன்ட் சுற்றுப் பயணிகளுக்கு கண்களுக்கு விருந்து.

செங்கல்பட்டு செல்லும் வழியில் அமைந்திருக்கும் விருந்தினர் ஓய்வு விடுதி. இங்கு காலை உணவு சாப்பிட்டு பயணித்தோம்.

மூன்று பெண்களும் காலை உணவை ஆர்டர் செய்து விட்டு காத்திருக்கிறோம்.. பொங்கல் இட்டலி காப்பி.. வடை.. நல்ல காலை உணவு விருந்து.

செல்லும் வழியில்.. செஞ்சிக் கோட்டைக்கு முன்னே..நான்!
நாங்கள் இரண்டு நாட்கள் தங்கியிருந்த விருந்தினர் மாளிகை. நேர்த்தியான தூய்மையான கட்டிடம். ரமணாஸ்ரமத்திற்கு அருகிலேயே அமைந்துள்ளது.

சீதாம்மா கொடுத்த நூலை வாசித்து திருவண்ணாமலை சிறப்புக்களை தெரிந்து கொள்கிறேன்.

திட்டம் போட வேண்டாமா..? எங்கு முதலில் செல்வது..? எப்போது புறப்படுவோம் என ஆலோசனை நடக்கின்றது.
செங்கம், செல்லும் சாலையில்.. இருவர் ஒரு மாட்டை மோட்டார் சைக்கிளில் வைத்து ஏற்றிக் கொண்டு செல்கின்றனர். எதற்காக .. தெரியவில்லை!புரிசைக்கு செல்லும் வழியில் வரிசையாக மகளிர் அணிவகுத்து சென்று கொண்டிருந்தனர்.. ஏதாவது மகளிர் மாநாடாக இருக்குமோ ?

வண்ண வண்ண சேலையில் பெண்கள்.

புரிசை கிராமத்து ஆண்கள்.. ஓய்வு நேரத்தில் தாயம் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். அருகில் நெல்லை கொட்டி காய வைத்திருக்கின்றனர்.

மகளிர் புரிசை கிராமத்து சிவன் கோயிலின் வாசலை கோலம் போட்டு அழகு செய்கின்றனர் அந்த மாலை வேளையில்.

இந்தப் பெண் குழந்தைகள் தங்களுக்குத் தெரிந்த கோலத்தை போட்டு மகிழ்கின்றனர்.

புரிசை கிராமத்து தேனீர் கடை.


புரிசை கிராமத்து இளம் சிறார்கள்.. காலில் மண்.. முகமெல்லாம் புன்னகை.. தங்களை நான் புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கையை நான் மறுக்காமல் எடுத்துக் காட்டினேன். படத்தைப் பார்த்து அவர்களுக்கு அளவில்லா மகிழ்ச்சி.


புகைப்படம் எடுக்கனும்னா இப்படியா வெட்கப்படுவது சீத்தாம்மா..? :-)

திருவண்ணாமலை பதிவுகள்

திருவண்ணாமலை பதிவுகள் அனைத்தும் தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கத்தில் இங்கே உள்ளன.

[மின்தமிழ் மடலாடற் குழுவில் இப்பதிவுகளையும் கேள்விகள் இவை தொடர்பான கலந்துரையாடல்களை இங்கே காணலாம். ]

திருவண்ணாமலை பதிவுகள் வெளியீடுகளின் வழி எனது 2011 மார்ச் மாத தமிழக பயணத்தின் போது நான் பதிந்து வந்த தகவல்களை தயாரித்து தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்த்தில் இணைத்து வைத்துள்ளதோடு உங்களிடமும் பகிர்ந்து கொண்டேன். உங்களின் பின்னூட்டங்களும் கேள்விகளும் பதில்களும் ஊக்கமளிப்பவையாக இருந்தன. நமது வலைத்தளத்திலும் திருவண்ணாமலைப் பற்றிய வரலாற்றுச் செய்திகள் சில இடம்பெற இந்த முயற்சி உதவி உள்ளது.

இந்தப் பதிவின் தொடரை இத்துடன் நிறைவு செய்ய விரும்புகிறேன். திருவண்ணாமலை மாவட்டத்தில் இவ்வளவு தானா என நினைத்து விட வேண்டாம். எனது பதிவுகள் நிறைவு பெற்றாலும் தொடர்ந்து சில பதிவுகளையும் குறிப்புக்களை அவ்வப்போது நாம் இணைத்து வரலாம்.

எனது பயணத்துக்கு சில மாதங்களுக்கு முன்னர் இப்பகுதிக்குச் சென்று சில பதிவுகளை ஸ்ரீமதி சீதாலட்சுமி அவர்களுடன் திரு.உதயன், திரு.துரை திரு.ப்ரகாஷ் ஆகியோர் சென்று கேட்டு தகவல் பெற்று வந்துள்ளனர். அந்தத் தகவல்களையும் பதிய வேண்டும். அதுமட்டுமல்லாது மின் தமிழ் வாசகர்கள் நீங்கள் உங்களுக்குக் கிடைக்கும் நேரத்தில் திருவண்ணாமலை மாவட்டம் செல்லும் வாய்ப்பு அமைந்தால் அங்கு நீங்கள் காணும் வரலாற்று விஷயங்களைப் பதிந்து வந்து இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்பயணத்தின் போது என்னுடன் உடனிருந்து உதவிய நண்பர்களின் அன்பையும் ஆதரவையும் மறக்க முடியாது. அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்தமிழ் குடும்பத்தினரின் இணைந்த பணி இது என்றாலும் எனக்கு மன நிறைவளிக்கும் வகையில் பயணத்திலும் உதவிய இவர்களை மீண்டும் நினைத்துப் பார்த்து நன்றி கூற விரும்புகிறேன்.எங்களை சென்னையிலிருந்து திருவண்ணாமலை அழைத்துச் சென்று பயணத்தில் கூடவே இருந்து வாகனமோட்டி உதவி செய்தவர் இவர். ஒரு முன்னாள் ராணுவ வீரர்.

அவ்வப்போது ஏதாவது வித்தியாசமான விஷயங்களை நான் பார்த்து விட்டால் வாகனத்தை நிறுத்தச் சொல்லி கேட்டுக் கொள்வேன். சலிக்காமல் வாகனத்தை நிறுத்தி நான் புகைப்படங்கள் எடுத்து முடித்து வரும் வரை காத்திருந்து அழைத்துச் சென்றார்.


ஒரு சமயம் சாலையில் வந்து கொண்டிருக்கும் போது வாகனத்தை நிறுத்தி என்னிடம் தன்னை ஒரு படம் எடுக்க முடியுமா எனக் கேட்டார். அந்தப் படம் தான் நீங்கள் இங்கே பார்ப்பது.

இந்திய பாக்கிஸ்தான் எல்லையில் கார்கில் போரில் வீரமரணம் அடைந்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ப.கிருஷ்ணன் அவர்களின் உருவச்சிலை. இங்கே வாகனத்தை நிறுத்தி விட்டு அவருக்கு இராணுவ முறையில் வணக்கம் தெரிவித்தார். பின்னர் ஒரு புகைப்படம் எடுக்கச் சொல்லி கேட்டுக் கொண்டார். அவரது நாட்டுப் பற்று மனதை நெகிழ வைத்தது.


திருவண்ணாமலை மாவட்டக் கலெக்டர் டாக்டர்.ம.ராஜேந்திரன் (மார்ச் 2011). எங்கள் பயணத்தின் பதிவுகளுக்கான எல்லா உதவிகளையும் ஏற்படுத்திக் கொடுத்ததோடு மட்டுமல்லாது எங்களை வீட்டிற்கு அழைத்து அருமையான விருந்தும் பரிமாறினார். இவரது அன்பான துணைவியாரின் மதுரை நகர சமையலின் காரத்தை ரசித்து ருசித்து சாப்பிட்டேன். இவரது மகள் வரலாற்றில் மிகுந்த ஆர்வம் கொண்ட குழந்தை. திறமை மிக்கவள். இவர்கள் இனிதே பல்லாண்டுகள் வாழ்ந்து நாட்டுக்கும் மக்களுக்கும் சேவை செய்ய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.


திருமதி.புனிதவதி இளங்கோவன். எங்களுடன் பயணத்தில் இணைந்து கொண்டவர். எனது பேட்டிகளின் போது பல்வேறு கோணங்களில் கேள்விகளை எழுப்பி பதிவுகள் சிறப்பாக வந்திட துணை புரிந்தார். இவர் ஒரு தகவல் பொக்கிஷம். சைவ சித்தாந்தம் தேவாரத் திருமுறைகள், வரலாறு, பெண்ணியம் என பல துறை வல்லுனர். முன்னாள் தமிழ்நாடு ஆல் இந்தியா ரேடியோ இயக்குனராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது நட்பு கிடைத்ததில் நான் மனம் மகிழ்கிறேன்.


அட்வகேட் ஷங்கர். நான் எதிர்பார்க்காத நேரத்தில் எங்களுடன் இணைந்து கொண்டு திருவண்ணாமலை கோயிலைப் பற்றிய நல்ல அறிமுகத்தை எனக்கு வழங்கினார். இவரை அறிமுகம் செய்து கொண்டதில் மிகவும் மகிழ்கிறேன்.

ப்ரகாஷ் சுகுமாரன். மின்தமிழில் எனக்கு அறிமுகமாகி சீத்தாம்மா வழியாக நல்ல நட்பாக உறுவாகி இருப்பவர். என்னை சென்னையிலிருந்து அழைத்துச் சென்று கூடவே இருந்து எல்லா உதவிகளையும் செய்து கொடுத்து பல செய்திகளை அவ்வப்போது வழங்கிக் கொண்டும் இருப்பவர். நன்றி ப்ரகாஷ்.


ஸ்ரீமதி சீதாலட்சுமி அவர்கள். திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நான் செல்ல காரணமாக இருந்தவர். இவரது ஆக்கமும் ஊக்கமும் எனது இயற்கையான வேகத்தை மேலும் அதிகப் படுத்தும் தன்மை கொண்டது. இவரது துணையுடன் மேலும் பல பதிவுகள் இன்னமும் செய்வோம்.

சீதாம்மா - மீண்டும் தமிழகம் வரும் போது மீண்டும் இணைந்து சில காரியங்களை நாம் செய்ய வேண்டும். செய்வோம். உங்களுக்கு இறைவன் திடமான உடல் ஆரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும் வழங்க வேண்டும் என்று ப்ரார்த்தித்துக் கொள்கிறேன்.

அன்புடன்
சுபா

Thursday, March 24, 2011

மீண்டும் தமிழகம் 25.02 - 14.03.2011

தமிழகத்துக்கு எனது 8-வது பயணம் இது. முழுதும் தமிழ் மரபு அறக்கட்டளையின் திட்டங்களுக்காக நான் ஏற்பாடு செய்திருந்த பயணம் இது. இந்தப் பயணத்தில் தமிழ் மரபு அறக்கட்டளை நண்பர்களைச் சந்திப்பது ஒரு முக்கிய அங்கம் என்ற போதிலும், தமிழ்ப் பல்கலைக்கழகத்துடன் தமிழ் மரபு அறக்கட்டளை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டு நிகழ்த்திய ஓலைச்சுவடி தேடல் நடவடிக்கை தொடர்பான விஷயங்கள் தொடர்பாகவும், சில களப்பணிகளுக்காகவும் இந்த 16 நாள் பயணத்தைத் திட்டமிட்டிருந்தேன்.

எனது கடந்த சில பயணங்களில் நான் பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் நிறுவனத்தின் வழி பயணிப்பது வழக்கம். ஏறக்குறைய 12-14 மணி நேரத்தில் தமிழகத்தில் இருக்கலாம். ஆனால் இந்த முறை கொஞ்சம் மாறறம் செய்கிறேன் என்று எடுத்த முயற்சி அலுப்பு தரும் அனுபவத்தை ஏற்படுத்தி விட்டது. ஸ்டுட்கார்ட்டிலிருந்து லண்டன் ஹீத்ரோ சென்று அங்கிருந்து பின்னர் மும்பாய் சென்று பின்னர் அங்கிருந்து சென்னை. ஏறக்குறைய ஒன்றரை நாள் பயணத்திலேயே வீணாகிப் போனது.

மும்பாயில் 6 மணி நேரங்கள் எனக்கு இருந்ததால் விமான நிலையத்தை விட்டு வெளியேறி ஓரளவு அருகாமையில் உள்ள இடங்களைப் பார்க்கலாம் என நடக்கத் தொடங்கினேன். விமான நிலையம் பெரிதாக்கப்படுகின்றது. ஆனாலும் விமானத்தை விட்டு வெளியே வந்ததும் முதலில் தென்படுவது வரிசை வரிசையான சேரியும் கொட்டிக் கிடக்கும் குப்பை மூட்டைகளும் தான். குடிசை வீடுகள், தண்ணீர் தேங்கிக் கிடக்கும் சேற்றுப் பகுதி, குப்பை மலைகள். இவை மாறவே மாறாதா என நினைத்து அலுப்புத் தான் தோன்றுகிறது.

மும்பை விமான நிலையம் (விமானத்துக்கு முன்னால் சேரி)

மும்பாயில் சாலைகளில் நடந்து பின்னர் அங்கேயே பக்கத்தில் இருந்த பாலாஜி உணவகத்தில் மதிய உணவு சாப்பிட்டேன். ஜீரா ரைஸ்,வெண்டைக்காய் வருவல். நல்ல ருசி. உணவகம் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் மேசையில் இருந்த விரிப்பை பார்த்த போது சாப்பிட சற்று தயக்கம் தான் ஏற்பட்டது. கொஞ்சம் இதிலும் கவனம் எடுத்தால் திருப்தியான ஒரு உணவகம் இது என்று நிச்சயம் சொல்வேன். அன்று உணவகத்தில் சாப்பிட வந்தவர்களை விட ஊழியர்கள் அதிகமாக இருந்தனர். சிறிய உணவகம் தான். ஏறக்குறைய 40 பேர் அமரக்கூடிய ஒன்று. பரிமாறும் பணியாட்கள் மட்டும் 20 பேர் இருப்பார்கள்.

பாலாஜி உணவகத்தில்

மாலை 6:30க்கு சென்னை செல்ல வேண்டிய விமானம். பல்வேறு பிரச்சனைகளைக் காரணம் காட்டி இரவு 9 மணிக்குத்தான் புறப்பட்டது. நான் பயனித்த விமானத்தில் தமிழக சினிமா நடிகை ஒருவரும் பயனித்தார். அதனால் விமானத்தில் வந்தவர்கள் பலரது முகத்தில் தாமதம் ஏற்படுத்திய களைப்பு சற்று குறைந்து புன்னகை தவழ்ந்து கொண்டிருந்தது.

மும்பை விமான நிலையத்தில் பயணிகள் காத்திருக்கும் இடம்

ஒரு வழியாக சென்னை அடைய இரவு 10:45 மணி ஆகிவிட்டது.

சென்னையில் எனது இரண்டாம் நாள் அதாவது 27.02. 2011 தமிழ் மரபு அறக்கட்டளை சென்னை நண்பர்களை பார்ப்பதாக அமைத்திருந்தேன். அது முடித்து மாலை திருமதி சீத்தாலட்சுமியுடன் ஞானியின் நாடகம் பார்க்கச் சென்றிருந்தேன். வியக்க வைத்த நடிப்புத் திறனுடன் பலர் இவ்வகை கலைகளில் இன்னமும் ஈடுபட்டு வருவது மகிழ்ச்சியளித்தது.

28.02.2011 - இன்று சில சந்திப்புக்கள். மாலை தஞ்சாவூருக்கு ரதி மீனா பஸ் வழியாகப் பயணம். என்னுடன் முனைவர்.பத்மாவதியும் இனைந்து கொண்டார்.
01.03 -02.03.2011 - தஞ்சையில் - தாராசுரம் பயணம், நாகப்பட்டினம் பயணம், தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகம் பார்வையிடல்.
03.03.2011 - தமிழ்ப் பல்க்லைக்கழகத்தில் தமிழ் மரபு அறக்கட்டளைக்குப் பாராட்டு, ஓலைச்சுவடிகள் அன்றும் இன்றும் கருத்தரங்கம். எனது சிறப்பு சொற்பொழிவு அறைய திறப்பு விழாவில் ஏற்பாடாகியிருந்தது.
04.03.2011- திருச்சி விமான நிலையத்திலிருந்து சென்னை பயணம். மாலை நண்பர்கள் சந்திப்பு.
05.- 06.03.2011 - சென்னையில் தமிழ் மரபு அறக்கட்டளை பணிகள்
07.03.2011 - திருவண்ணாமலை பயணம் (திருமதி. சீதாலட்சுமி, திருமதி.புனிதவதி ஆகியோருடன்). காலை 7 மணி வாக்கில் பிரகாஷ் வாகனத்துடன் சென்னை வந்து எங்களை அழைத்துச் செல்வதாகத் திட்டம்.
07-08.03.2011 - திருவண்ணாமலை, புரிசை, செங்கம் ஒஅகுதிகளுக்குப் பயணம்.
09.03.2011 - சென்னையில். மாலை ராஜபாளையம் பயணம்.
10.03.2011 - ராஜபாளையம், கோவில்பட்டி, தூத்துக்குடி
11.03.2011 - தூத்துக்குடி, மாலை சென்னை திரும்புதல்
12.03.2011 - சென்னையில் (ஜெயா தொலைக்காட்சி பேட்டி)
13.03.2011 - தமிழ் மரபு அறக்கட்டளை 10ம் ஆண்டு விழா
14.03.2011 - காலை சென்னையிலிருந்து மீண்டும் ஜெர்மனி பயணம்.. சென்னையிலிருந்து மும்பாய்.. மும்பாயிலிருந்து லண்டன் ஹீத்ரோ, லண்டனிலிருந்து ஸ்டுகார்ட். ..

இந்த பயணத்தின் குறிப்புக்களை தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கத்திலும் சில குறிப்புக்களை எனது வலைப்பூக்களிலும் இணைக்க நினைத்துள்ளேன்.

Sunday, February 6, 2011

பாரிஸ் சாலைகளில்.. (Dec 14 -17) - 6


அரண்மனை சிறையாக மாற்றப்பட்ட நிகழ்வுகள் அபூர்வம். அவ்வகை நிகழ்வு பாரீஸிலும் நிகழ்ந்திருக்கின்றது. Conciergerie இதற்கு ஒரு சான்று. 1284-1314 வரை ஆட்சி செய்த அரசர் நான்காம் பிலிப்பின் (King Philip IV) (1284-1314) அரண்மணையாக இக்கோட்டை திகழ்ந்துள்ளது. குழந்தை கதைகளில் (fairy tales) வருவது போன்ற அமைப்பு இந்த கோட்டைக்கு. சென் ஆற்றினை சார்ந்தவாறு இக்கோட்டை அமைந்திருக்கின்றது.
நோத்ர டாம் இருக்கும் பகுதியில் தான் இந்தக் கோட்டையும். ஆனால் சற்று தள்ளியே இருக்கின்றது. இங்கு செல்ல மெட்ரோ எண் 4 எடுத்து Cite மெட்ரோ நிலையத்தில் இறங்கிக் கொள்ள வேண்டும்.Ile de la Cite பகுதியில் இக்கோட்டை அமைந்திருக்கின்றது.

இக்கோட்டையின் அடித்தளம் வித்தியாசமானது. 209 அடி நீளமும் 90 அடி அகலமும் 28 அடி உயரமும் கொண்ட நீளமான ஒரு பகுதி. இப்பகுதி தான் நான்காம் பிலிப்ஸின் காலத்தில் அவரது 2000 வேலையாட்களுக்கு உணவு பரிமாரப்படும் இடமாக இருந்திருக்கின்றது. ஏதோ காரணத்திற்காக அரச குடும்பத்தினர் இக்கோட்டையை விட்டு விட்டு லூவ்ரெவிற்கு பெயர்ந்து சென்றிருக்கின்றனர்.இது 1358ம் ஆண்டில் நிகழ்ந்திருக்கின்றது.1391ம் ஆண்டில் இக்கோட்டை ஒரு சிறையாக மாற்றம் கண்டது. இங்கே பலவகையான சிறைக் கைதிகள் இருந்திருக்கின்றனர். திருடர்கள், கொள்ளையர்களிலிருந்து, அரசியல் கைதிகள் வரை பலர் வந்து இருந்து செத்துப் போன இடமாக இது மாற்றம் கண்டிருக்கின்றது.

சிறை அறைகளில் கூட வித்தியாசம் இருந்திருக்கின்றது.அரசியல் கைதிகளுக்கும் பணக்கார கைதிகளுக்கும் வசதியான அறைகள் இருந்திருக்கின்றன. தனி அறைகள், அதில் படுக்கை, மேசை, மற்றும் தேவையான பொருட்கள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றன. சற்று நடுத்தர வர்க்கத்து சிறைக் கைதிகளுக்குப் படுக்கையும் மேசையும் உள்ள பகுதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இப்பகுதி பிஸ்டோல் "pistoles" என அழைக்கபப்டுகின்றது. மிக ஏழ்மையான கைதிக்கு அதோ கதிதான். இருண்ட பகுதியில் இவர்கள் வாசம். ஏழைக் கைதிகள் வாசம் செய்யும் இடம் ஒபிலிட்சஸ் (oubliettes) என்று அழைக்கப்படுகின்றது. oubliettes என்றால் மறக்கப்பட்ட பகுதி என்று பொருள். ஒருவகையில் இப்பகுதிக்கு வருபவர்கள் கதி இப்படிப்பட்டதுதான்!.இந்த கோட்டையின் முன் இருக்கும் இரண்டு கோபுரங்களும் மிக அழகு. இதில் ஒன்றான square towerல் தான் 1370ம் ஆண்டில் ப்ரான்ஸின் முதல் பொது கடிகாரம் பதிக்கப்பட்டதாம். இப்போது இருக்கும் கடிகாரம் 1370ல் பதிக்கபப்ட்டதன்று. இது 1535ம் ஆண்டில் இங்கு பதிக்கப்பட்டது. ஆக ஏறக்குறைய 500 ஆண்டு பழமை இந்தக் கடிகாரத்துக்கு!

ப்ரென்ச் புரட்சி ஏற்பட்ட சமயத்தில் இங்கு பலர் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டிருக்கின்றனர். அந்த சமயத்தில் இந்தக் கோட்டையில் 1793லிருந்து 1795வரை பல வழக்குகள் நடந்து ஏறக்குறைய 2600 பேர் தலை துண்டிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டிருக்கின்றனர். நினைத்தாலே சிலிர்க்க வைக்கும் ஒரு கொலைக்களம் இந்த கோட்டை, இல்லையா?

1800ம் ஆண்டின் மத்தியில் இந்தக் கோட்டையை சற்று புணரமைத்திருக்கின்றனர். அதற்குப் பின்னர் ப்ரான்ஸில் பற்பல மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. 1914ம் ஆண்டில் இந்தக் கோட்டையை பொது மக்கள் பார்வைக்குத் திறந்து வைக்க அரசாங்கம் முடிவெடுத்தது. அதிலிருந்து மக்கள் சென்று பார்வையிட வாய்ப்பு அமைந்தது. இக்கோட்டையைக் காண 6.50யூரோ கட்டணம் வசூலிக்கப்படுகின்றது. தினமும் திறந்திருக்கின்றது. பாரீஸ் செல்பவர்கள் பார்க்க வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்று.

Saturday, January 22, 2011

பாரிஸ் சாலைகளில்.. (Dec 14 -17) - 5

பொதுவாகவே கட்டிடக் கலை என்பது என்னை மிகவும் கவரும் ஒன்று. எப்போது எங்கே சென்றாலும் சற்று தனித்து வேறுபாட்டுடன் காட்சியளிக்கும் கட்டிடங்கள் என் பார்வையிலிருந்து தவறுவதில்லை. ஏதோ ஓர் காரணம். வித்தியாசமான கட்டிடங்களின் அமைப்புக்கள் என்னை எப்போதும் கவர்ந்து விடுகின்றன. சில கட்டிடங்களை நான் பல நிமிடங்கள் நின்று பார்த்து ரசிப்பதுண்டு. அதிலும் வெகுவாக என்னைப் பண்டைய நாகரிகத்தின் சான்றுகளாகத் திகழும் பழம் கட்டிடங்கள் வெகுவாக ஈர்த்து விடும். எந்த நாடாக இருந்தாலும் சரி, எந்த சமயத்தினரது கட்டிடமாக இருந்தாலும் சரி கட்டிடங்கள் என்னைப் பொறுத்த வரை ஏதோ ஒரு வகையில் உயிருள்ள பொருள் போன்றதொரு உணர்வு எனக்குள் எழுவதுண்டு.

சாதாரன கட்டிடங்களே பல சந்ததியினரையும் பல மனிதர்களையும் பார்த்துள்ளன. மிகப் பிரமாண்டமான சரித்திரப் புகழ்பெற்ற கட்டிடங்கள் என வரும் போது அங்கு எத்தனையோ வரலாற்று நிகழ்வுகள் நடைபெற்றிருப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன அல்லவா?

பாரீஸுக்கு புகழ் சேர்க்கும் மேலும் ஒரு அம்சத்தைப் பற்றிய தகவலை இன்று பகிர்ந்து கொள்கின்றேன்.

நோர்த்தர டாம் (Notre Dame)பாரீஸில் உள்ள வேறு எந்த ஒரு கட்டிடமும் பார்த்திராத அளவு வரலாற்று பின்னனி நிறைந்த ஒரு இடம் நோர்த்தர டாம். வெறும் தேவாலயம் தானே என்று பார்ப்பவர்களுக்கு இது வெறும் கட்டிடம் தான். ஆனால் இந்த தேவாலயம் அமைந்திருக்கும் இடத்தின் பின்னனி, அமைப்பு, வடிவமைப்பு, அதிலுள்ள சிலைகள், அதிலுள்ள ஓவியங்கள், அங்கு நிகழ்ந்துள்ள நிகழ்வுகள் அனைத்தையும் அறிந்து பார்ப்பவர்களுக்கு நோர்த்தர டாம் வரலாற்று சின்னமாக வியாபித்து நிற்பது தெரியும்.
நோர்த்தர டாம் செல்ல மெட்ரோ எண் 4 எடுத்து Cite மெட்ரோ நிலையத்தில் இறங்கிக் கொள்ள வேண்டும். இந்த தேவாலயம் பாரிஸுக்குள் ஒரு சிறு தீவுக்குள் அமைந்திருக்கின்றது. தீவு என்றால் பெரிய தீவு அல்ல. சென் (Seine) ஆறு இரண்டாகப் பிரியும் இடத்தில் உள்ள ஒரு நிலப்பரப்பு தீவு போல அமைந்துள்ளது. அந்தத் தீவுப்பகுதியில் உள்ள பல கட்டிடங்களில் நோர்த்தர டாமும் ஒன்று. பாரிஸ் நகரின் மிகப் பழமை வாய்ந்த மக்கள் குடியிருப்புப் பகுதியாகவும் இப்பகுதி குறிப்பிடப்படுகின்றது.
இன்று நோர்த்தர டாம் பிரமாண்டமாக எழுப்பப்பட்டுள்ள இவ்விடத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் ரோமானியர்கள் தங்கள் கடவுள் ஜூபிடருக்கு கோயில் கட்டியுள்ளனர். பின்னர் கி.பி 28ம் ஆண்டு வாக்கில் இங்கு செயிண்ட் எடின் கத்திடரல் (St.Etienne Cathedral) கட்டப்பட்டது. பின்னர் பாரிஸ் நகரின் பிஷப் Maurice de Sully புனித மேரிக்காக ஒரு புதிய தேவாலயத்தை அதே இடத்தில் நிர்மாணிக்க நினைத்து இப்பணிகள் 1163ல் தொடங்கியிருக்கின்றன. இப்பணி 1345 வாக்கில் நிறைவு பெற்றது.இந்த தேவாலயத்தின் முகப்பு பகுதி மாத்திரம் சிறப்புடையதல்ல. கிழக்கு, மேற்கு, வடக்கு தெற்கு ஆகிய நான்கு வாசல்களும் தனித்துவம் வாய்ந்ததாக அமைக்கப்பட்டுள்ளன. நுணுக்கமான கலை வேலைபாடுகள் சுவற்றின் அழகையும் பிரமாண்டத்தையும் பெருக்கும் வகையில் உள்ளன.

இந்த தேவாலயத்தின் சிறப்பு என்னெவெனில் சுவர்களில் உள்ள ஓவியங்கள், வைக்கப்பட்டுள்ள சிலைகள் ஆகியவை பைபிளில் உள்ள கதைகளை விவரிப்பவை. மிகப் பிரமாண்டமான ஓவியங்கள் தேவாலயத்தின் எல்லா சுவர்களையும் அழகு செய்கின்றன.
இந்த தேவாலயம் கோத்திக் (Gothic Architecture) வகை கட்டிட அமைப்பில் வடிவமைக்கப்பட்டது. தேவாலயத்தின் உள்ளே உள்ள தூண்கள் மிக ஸ்திரமானவை. நீண்டு வியாபித்திருக்கும் இந்த தூண்கள் தரையிலிருந்து மேல் நோக்கி கூரைப்பகுதி வரை செல்லும் படி கட்டப்பட்டுள்ளன.
மாமன்னர் நெப்போலியன் கூட இந்தத் தேவாலயத்தில் முடிசூடிக்கொண்டார் என்பதோடு தனது மனைவியருள் ஒருவரான ஜோஸபினை தனது பேரரசியாகவும் ஏற்றார் என்பதும் ஒரு கூடுதல் தகவல்.வரலாற்றில் முக்கியமான நிகழ்வாகக் கருதப்படும் ப்ரெஞ்ச் ரெவலூஷனின் (French Revolution) போது பொது மக்கள் பல தேவாலயங்களுக்குள் புகுந்து அங்குள்ள பல சமைய சின்னங்களை அப்புறப்படுத்திய நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. இந்தப் பாதிப்புக்கு நோர்த்தர டாமும் விதிவிலக்கல்ல. பொது மக்கள் பலர் இங்குள்ள சிலைகளை அப்புறப்படுத்தியும் சிதைத்தும் உள்ளனர். ஆனாலும் சில சிலைகள் 1970ல் மீண்டும் கிடைக்கப்பெற்று அவை இங்கு மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளன.

தேவாலயத்தின் மேற்கு வாசல் பகுதி வித்தியாசமான ஒன்று. இங்கு மேல் பகுதியில் 28 கற் சிலைகள் ஒவ்வொன்றாக நிற்கும் படி அமைக்கப்பட்டுள்ளன. இந்த 28 கற்சிலைகளும் பண்டைய இஸ்ரேல் நாட்டு ஜூடா மன்னர்களைப் பிரதிபலிப்பவை.
அதே போல வாசல் பகுதியில் உள்ள மூன்று அமைப்புக்களும் மூன்று சரித்திர நிகழ்வுகளைப் பிரதிபலிப்பவை.
1. இறுதிக்கட்டளை (The last judgement)
2. மடோனாவும் தெய்வக் குழந்தையும் (The Madonna and Child)
3. புனித அன்னையார் (St Anne, the Virgin Mother)மேலும் சிறப்பு மிக்க ஒரு செய்தி என்ன தெரியுமா? 1768ம் ஆண்டில் நில வரையாளர்கள் நோர்த்தர டாம் தேவாலயத்தைப் ப்ரான்ஸ் நாடு முழுமைக்குமான தூர அளவை கணக்கிடும் மையப் புள்ளியாக நிர்ணயித்தினர். ஆக இன்றும் ப்ரான்ஸ் நகரின் எல்லா இடங்களின் தூரமும் நோர்த்தர டாமை மையமாக வைத்தே அளக்கப்படுகின்றன.
நோர்த்தர டாம் தேவாலயத்திற்கு உள்ளே செல்ல நுழைவுக் கட்டணம் தேவையில்லை. ஆனால் பக்கத்திலேயே அடித்தளத்தில் ஒரு அருங்காட்சியகம் இருக்கின்றது. அதற்கு கட்டணம் 5 யூரோ. நேரம் போதாமையால் நான் இந்த அருங்காட்சியகம் சென்று வர இயலவில்லை. அடுத்த முறை பாரீஸ் பயனிக்கும் போது இங்கு செல்வது உறுதி.

Friday, January 21, 2011

பாரிஸ் சாலைகளில்.. (Dec 14 -17) - 4லூவ்ரே எனும் பிரம்மாண்டமான இந்தப் பொருட்காட்சி சாலைக்கு சிறப்பு சேர்ப்பவை அதன் உள்ளிருக்கும் கலைப் பொருட்கள் மட்டுமன்று. இந்தக் கட்டிடத்தின் சுவர்கள் கூட கவிதை பாடும் கலைக்கூடம். அதன் வெளிக்கோட்டை சுவரை பல வீரர்கள், மன்னர்களின் சிலை அலங்கரிப்பதைப் போன்று உள்ளிருக்கும் கோட்டையின் சுவர்களைப் பெண் சிலைகள் அலங்கரிக்கின்றன. ஒவ்வொன்றும் ஒரு விதம். அதில் சில இங்கே...

லூவ்ரேவின் சுவர்களை அலங்கரிக்கும் பல்வேறு காட்சிகள் ...