Saturday, January 22, 2011

பாரிஸ் சாலைகளில்.. (Dec 14 -17) - 5

பொதுவாகவே கட்டிடக் கலை என்பது என்னை மிகவும் கவரும் ஒன்று. எப்போது எங்கே சென்றாலும் சற்று தனித்து வேறுபாட்டுடன் காட்சியளிக்கும் கட்டிடங்கள் என் பார்வையிலிருந்து தவறுவதில்லை. ஏதோ ஓர் காரணம். வித்தியாசமான கட்டிடங்களின் அமைப்புக்கள் என்னை எப்போதும் கவர்ந்து விடுகின்றன. சில கட்டிடங்களை நான் பல நிமிடங்கள் நின்று பார்த்து ரசிப்பதுண்டு. அதிலும் வெகுவாக என்னைப் பண்டைய நாகரிகத்தின் சான்றுகளாகத் திகழும் பழம் கட்டிடங்கள் வெகுவாக ஈர்த்து விடும். எந்த நாடாக இருந்தாலும் சரி, எந்த சமயத்தினரது கட்டிடமாக இருந்தாலும் சரி கட்டிடங்கள் என்னைப் பொறுத்த வரை ஏதோ ஒரு வகையில் உயிருள்ள பொருள் போன்றதொரு உணர்வு எனக்குள் எழுவதுண்டு.

சாதாரன கட்டிடங்களே பல சந்ததியினரையும் பல மனிதர்களையும் பார்த்துள்ளன. மிகப் பிரமாண்டமான சரித்திரப் புகழ்பெற்ற கட்டிடங்கள் என வரும் போது அங்கு எத்தனையோ வரலாற்று நிகழ்வுகள் நடைபெற்றிருப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன அல்லவா?

பாரீஸுக்கு புகழ் சேர்க்கும் மேலும் ஒரு அம்சத்தைப் பற்றிய தகவலை இன்று பகிர்ந்து கொள்கின்றேன்.

நோர்த்தர டாம் (Notre Dame)



பாரீஸில் உள்ள வேறு எந்த ஒரு கட்டிடமும் பார்த்திராத அளவு வரலாற்று பின்னனி நிறைந்த ஒரு இடம் நோர்த்தர டாம். வெறும் தேவாலயம் தானே என்று பார்ப்பவர்களுக்கு இது வெறும் கட்டிடம் தான். ஆனால் இந்த தேவாலயம் அமைந்திருக்கும் இடத்தின் பின்னனி, அமைப்பு, வடிவமைப்பு, அதிலுள்ள சிலைகள், அதிலுள்ள ஓவியங்கள், அங்கு நிகழ்ந்துள்ள நிகழ்வுகள் அனைத்தையும் அறிந்து பார்ப்பவர்களுக்கு நோர்த்தர டாம் வரலாற்று சின்னமாக வியாபித்து நிற்பது தெரியும்.




நோர்த்தர டாம் செல்ல மெட்ரோ எண் 4 எடுத்து Cite மெட்ரோ நிலையத்தில் இறங்கிக் கொள்ள வேண்டும். இந்த தேவாலயம் பாரிஸுக்குள் ஒரு சிறு தீவுக்குள் அமைந்திருக்கின்றது. தீவு என்றால் பெரிய தீவு அல்ல. சென் (Seine) ஆறு இரண்டாகப் பிரியும் இடத்தில் உள்ள ஒரு நிலப்பரப்பு தீவு போல அமைந்துள்ளது. அந்தத் தீவுப்பகுதியில் உள்ள பல கட்டிடங்களில் நோர்த்தர டாமும் ஒன்று. பாரிஸ் நகரின் மிகப் பழமை வாய்ந்த மக்கள் குடியிருப்புப் பகுதியாகவும் இப்பகுதி குறிப்பிடப்படுகின்றது.




இன்று நோர்த்தர டாம் பிரமாண்டமாக எழுப்பப்பட்டுள்ள இவ்விடத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் ரோமானியர்கள் தங்கள் கடவுள் ஜூபிடருக்கு கோயில் கட்டியுள்ளனர். பின்னர் கி.பி 28ம் ஆண்டு வாக்கில் இங்கு செயிண்ட் எடின் கத்திடரல் (St.Etienne Cathedral) கட்டப்பட்டது. பின்னர் பாரிஸ் நகரின் பிஷப் Maurice de Sully புனித மேரிக்காக ஒரு புதிய தேவாலயத்தை அதே இடத்தில் நிர்மாணிக்க நினைத்து இப்பணிகள் 1163ல் தொடங்கியிருக்கின்றன. இப்பணி 1345 வாக்கில் நிறைவு பெற்றது.



இந்த தேவாலயத்தின் முகப்பு பகுதி மாத்திரம் சிறப்புடையதல்ல. கிழக்கு, மேற்கு, வடக்கு தெற்கு ஆகிய நான்கு வாசல்களும் தனித்துவம் வாய்ந்ததாக அமைக்கப்பட்டுள்ளன. நுணுக்கமான கலை வேலைபாடுகள் சுவற்றின் அழகையும் பிரமாண்டத்தையும் பெருக்கும் வகையில் உள்ளன.

இந்த தேவாலயத்தின் சிறப்பு என்னெவெனில் சுவர்களில் உள்ள ஓவியங்கள், வைக்கப்பட்டுள்ள சிலைகள் ஆகியவை பைபிளில் உள்ள கதைகளை விவரிப்பவை. மிகப் பிரமாண்டமான ஓவியங்கள் தேவாலயத்தின் எல்லா சுவர்களையும் அழகு செய்கின்றன.




இந்த தேவாலயம் கோத்திக் (Gothic Architecture) வகை கட்டிட அமைப்பில் வடிவமைக்கப்பட்டது. தேவாலயத்தின் உள்ளே உள்ள தூண்கள் மிக ஸ்திரமானவை. நீண்டு வியாபித்திருக்கும் இந்த தூண்கள் தரையிலிருந்து மேல் நோக்கி கூரைப்பகுதி வரை செல்லும் படி கட்டப்பட்டுள்ளன.




மாமன்னர் நெப்போலியன் கூட இந்தத் தேவாலயத்தில் முடிசூடிக்கொண்டார் என்பதோடு தனது மனைவியருள் ஒருவரான ஜோஸபினை தனது பேரரசியாகவும் ஏற்றார் என்பதும் ஒரு கூடுதல் தகவல்.



வரலாற்றில் முக்கியமான நிகழ்வாகக் கருதப்படும் ப்ரெஞ்ச் ரெவலூஷனின் (French Revolution) போது பொது மக்கள் பல தேவாலயங்களுக்குள் புகுந்து அங்குள்ள பல சமைய சின்னங்களை அப்புறப்படுத்திய நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. இந்தப் பாதிப்புக்கு நோர்த்தர டாமும் விதிவிலக்கல்ல. பொது மக்கள் பலர் இங்குள்ள சிலைகளை அப்புறப்படுத்தியும் சிதைத்தும் உள்ளனர். ஆனாலும் சில சிலைகள் 1970ல் மீண்டும் கிடைக்கப்பெற்று அவை இங்கு மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளன.

தேவாலயத்தின் மேற்கு வாசல் பகுதி வித்தியாசமான ஒன்று. இங்கு மேல் பகுதியில் 28 கற் சிலைகள் ஒவ்வொன்றாக நிற்கும் படி அமைக்கப்பட்டுள்ளன. இந்த 28 கற்சிலைகளும் பண்டைய இஸ்ரேல் நாட்டு ஜூடா மன்னர்களைப் பிரதிபலிப்பவை.




அதே போல வாசல் பகுதியில் உள்ள மூன்று அமைப்புக்களும் மூன்று சரித்திர நிகழ்வுகளைப் பிரதிபலிப்பவை.
1. இறுதிக்கட்டளை (The last judgement)
2. மடோனாவும் தெய்வக் குழந்தையும் (The Madonna and Child)
3. புனித அன்னையார் (St Anne, the Virgin Mother)



மேலும் சிறப்பு மிக்க ஒரு செய்தி என்ன தெரியுமா? 1768ம் ஆண்டில் நில வரையாளர்கள் நோர்த்தர டாம் தேவாலயத்தைப் ப்ரான்ஸ் நாடு முழுமைக்குமான தூர அளவை கணக்கிடும் மையப் புள்ளியாக நிர்ணயித்தினர். ஆக இன்றும் ப்ரான்ஸ் நகரின் எல்லா இடங்களின் தூரமும் நோர்த்தர டாமை மையமாக வைத்தே அளக்கப்படுகின்றன.




நோர்த்தர டாம் தேவாலயத்திற்கு உள்ளே செல்ல நுழைவுக் கட்டணம் தேவையில்லை. ஆனால் பக்கத்திலேயே அடித்தளத்தில் ஒரு அருங்காட்சியகம் இருக்கின்றது. அதற்கு கட்டணம் 5 யூரோ. நேரம் போதாமையால் நான் இந்த அருங்காட்சியகம் சென்று வர இயலவில்லை. அடுத்த முறை பாரீஸ் பயனிக்கும் போது இங்கு செல்வது உறுதி.









No comments:

Post a Comment