Sunday, February 6, 2011

பாரிஸ் சாலைகளில்.. (Dec 14 -17) - 6


அரண்மனை சிறையாக மாற்றப்பட்ட நிகழ்வுகள் அபூர்வம். அவ்வகை நிகழ்வு பாரீஸிலும் நிகழ்ந்திருக்கின்றது. Conciergerie இதற்கு ஒரு சான்று. 1284-1314 வரை ஆட்சி செய்த அரசர் நான்காம் பிலிப்பின் (King Philip IV) (1284-1314) அரண்மணையாக இக்கோட்டை திகழ்ந்துள்ளது. குழந்தை கதைகளில் (fairy tales) வருவது போன்ற அமைப்பு இந்த கோட்டைக்கு. சென் ஆற்றினை சார்ந்தவாறு இக்கோட்டை அமைந்திருக்கின்றது.




நோத்ர டாம் இருக்கும் பகுதியில் தான் இந்தக் கோட்டையும். ஆனால் சற்று தள்ளியே இருக்கின்றது. இங்கு செல்ல மெட்ரோ எண் 4 எடுத்து Cite மெட்ரோ நிலையத்தில் இறங்கிக் கொள்ள வேண்டும்.Ile de la Cite பகுதியில் இக்கோட்டை அமைந்திருக்கின்றது.

இக்கோட்டையின் அடித்தளம் வித்தியாசமானது. 209 அடி நீளமும் 90 அடி அகலமும் 28 அடி உயரமும் கொண்ட நீளமான ஒரு பகுதி. இப்பகுதி தான் நான்காம் பிலிப்ஸின் காலத்தில் அவரது 2000 வேலையாட்களுக்கு உணவு பரிமாரப்படும் இடமாக இருந்திருக்கின்றது. ஏதோ காரணத்திற்காக அரச குடும்பத்தினர் இக்கோட்டையை விட்டு விட்டு லூவ்ரெவிற்கு பெயர்ந்து சென்றிருக்கின்றனர்.இது 1358ம் ஆண்டில் நிகழ்ந்திருக்கின்றது.



1391ம் ஆண்டில் இக்கோட்டை ஒரு சிறையாக மாற்றம் கண்டது. இங்கே பலவகையான சிறைக் கைதிகள் இருந்திருக்கின்றனர். திருடர்கள், கொள்ளையர்களிலிருந்து, அரசியல் கைதிகள் வரை பலர் வந்து இருந்து செத்துப் போன இடமாக இது மாற்றம் கண்டிருக்கின்றது.

சிறை அறைகளில் கூட வித்தியாசம் இருந்திருக்கின்றது.அரசியல் கைதிகளுக்கும் பணக்கார கைதிகளுக்கும் வசதியான அறைகள் இருந்திருக்கின்றன. தனி அறைகள், அதில் படுக்கை, மேசை, மற்றும் தேவையான பொருட்கள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றன. சற்று நடுத்தர வர்க்கத்து சிறைக் கைதிகளுக்குப் படுக்கையும் மேசையும் உள்ள பகுதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இப்பகுதி பிஸ்டோல் "pistoles" என அழைக்கபப்டுகின்றது. மிக ஏழ்மையான கைதிக்கு அதோ கதிதான். இருண்ட பகுதியில் இவர்கள் வாசம். ஏழைக் கைதிகள் வாசம் செய்யும் இடம் ஒபிலிட்சஸ் (oubliettes) என்று அழைக்கப்படுகின்றது. oubliettes என்றால் மறக்கப்பட்ட பகுதி என்று பொருள். ஒருவகையில் இப்பகுதிக்கு வருபவர்கள் கதி இப்படிப்பட்டதுதான்!.



இந்த கோட்டையின் முன் இருக்கும் இரண்டு கோபுரங்களும் மிக அழகு. இதில் ஒன்றான square towerல் தான் 1370ம் ஆண்டில் ப்ரான்ஸின் முதல் பொது கடிகாரம் பதிக்கப்பட்டதாம். இப்போது இருக்கும் கடிகாரம் 1370ல் பதிக்கபப்ட்டதன்று. இது 1535ம் ஆண்டில் இங்கு பதிக்கப்பட்டது. ஆக ஏறக்குறைய 500 ஆண்டு பழமை இந்தக் கடிகாரத்துக்கு!

ப்ரென்ச் புரட்சி ஏற்பட்ட சமயத்தில் இங்கு பலர் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டிருக்கின்றனர். அந்த சமயத்தில் இந்தக் கோட்டையில் 1793லிருந்து 1795வரை பல வழக்குகள் நடந்து ஏறக்குறைய 2600 பேர் தலை துண்டிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டிருக்கின்றனர். நினைத்தாலே சிலிர்க்க வைக்கும் ஒரு கொலைக்களம் இந்த கோட்டை, இல்லையா?

1800ம் ஆண்டின் மத்தியில் இந்தக் கோட்டையை சற்று புணரமைத்திருக்கின்றனர். அதற்குப் பின்னர் ப்ரான்ஸில் பற்பல மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. 1914ம் ஆண்டில் இந்தக் கோட்டையை பொது மக்கள் பார்வைக்குத் திறந்து வைக்க அரசாங்கம் முடிவெடுத்தது. அதிலிருந்து மக்கள் சென்று பார்வையிட வாய்ப்பு அமைந்தது. இக்கோட்டையைக் காண 6.50யூரோ கட்டணம் வசூலிக்கப்படுகின்றது. தினமும் திறந்திருக்கின்றது. பாரீஸ் செல்பவர்கள் பார்க்க வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்று.

2 comments:

nbabu said...

Nice photos, good description. Want to visit paris soon. Who took the photos?

Dr.K.Subashini said...

I took the photos Babu.

Post a Comment