Thursday, June 28, 2012

லா பல்மாவில் நடையாக நடந்த கதை - 8


காய்கறிகளும் பழங்களும்

பழங்களும் காய்கறிகளும் ஒவ்வொரு நாட்டிற்கு வித்தியாசப்படுவனவாக உள்ளன. வாழை, அவக்காடோ, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்றவை இங்கே அதிகமாகப் பயிரிடப்படுவதைப் பற்றி முந்தைய பதிவுகளில் குறிப்பிட்டிருந்தேன். இவற்றைப் போலவே இத்தீவில் மாங்காய் மரங்களும் பப்பாளி மரங்களும் நிறைந்து இருக்கின்றன. பப்பாளி, மாம்பழம் வாழை கலந்த ஒரு பழச்சாறு சாப்பிட்டுப் பார்த்தேன். சுவை அபாரமாக இருந்தது. கூடுதல் இனிப்புச் சுவை வேண்டுமே என்று சக்கரை கலக்கத் தேவையே இல்லை. அவ்வளவு சுவை.

காடுகளிலும் மலைப்பிரதேசங்களிலும் நான் வெகுவாக figue ( ஃபிக் ) பழ மரங்களைப் பார்த்தேன். அவை ஓவ்வொன்றும் ராட்சத வடிவில்.. இங்கு ஜெர்மனியில் நான் பார்ப்பது போன்று செடி வகை என்றில்லாமல் மிக மிகப் பெரிதான மரங்கள். கொடிகள் போல மரத்தின் கிளைகள் நெளிந்து வளைந்து படர்ந்து மரம் முழுக்க காய்கள் தொங்கிக் கொண்டிருக்கின்றன.

லா பல்மாவில் இருந்த ஒரு ஞாயிற்றுக் கிழமை லோஸ் லியானோஸ் நகரில் நடைபெறும் ஞாயிற்றுக் கிழமை சந்தைக்குச் சென்றிருந்தோம். இந்த சந்தையில் உள்ளூர் மக்கள் விரும்பி வந்து காய்கறிகளையும் பழங்களையும் வாங்கிச் செல்கின்றனர். உள்ளூர் மக்களோடு சுற்றுப் பயணிகளும் இங்கே கூடுகின்றனர்.

தங்கள் வீடுகளிலுள்ள தோட்டங்களில் விளைகின்ற காய்கறிகளையும் பழங்களையும் கொண்டு வந்து வியாபாரிகள் விற்பனைக்ku வைக்கின்றனர். இதில் உள்ள பழவகைகளைப் பார்க்கும் போது சில புதியதாகவும் சில நான் பார்த்தும் சுவைத்தும் இல்லாததாகவும் அமைந்திருந்தன.இவை மரக்கூஜா பழங்கள். மரக்கூஜா பழச்சாற்றை பல முறை அறுந்தியிருக்கும் எனக்கு இப்பழங்கள் எப்படியிருக்கும் என்று இதுவரை தெரியாது. சந்தையில் வியாபாரி ஸ்பானீஸ் கலந்த டோய்ச் மொழியில் விளக்கிச் சொன்ன பிறகு தான் தெரிந்து கொண்டேன். இரண்டு பழங்களை கொடுத்து என்னைச் சாப்பிட்டுப் பார்க்கவும் சொன்னார்கள். சாப்பிட்டுப் பார்த்து கொஞ்சம் பழங்களை வாங்கிக் கொண்டேன்.மரக்கூஜா பழத்தை இரண்டாக வெட்டினால் இப்படியிருக்கின்றது. மாதுளம் பழம் போன்ற கொட்டைகள் நிறைந்த பழம். நல்ல சுவை.


ஃபிக் (figue) பழங்கள் மரத்தில். அவக்காடோ, ஆரஞ்சு, வாழை போலவே அதிகமாக இத்தீவில் காணப்படும் ஒரு பழம். சற்று மலைப்பாங்கான இடத்தில் ராட்சத வடிவில் இம்மரங்கள் வளர்ந்திருக்கின்றன. ஏப்ரல் மே மாதத்தில் கரும் பச்சை நிறத்தில் தோற்றமளிக்கும் இப்பழங்கள் ஜூலை ஆகஸ்டு செப்டம்பர் மாடஹ்ங்களில் கரும் ஊதா நிறமாக மாறி சாப்பிட உகந்ததாக அமைந்து விடுகின்றது. 

இது ஒரு வகை தக்காளி ஆனால் பழ வகையில் சேர்த்துக் கொள்ளப்படுவது. நல்ல புளிப்புச் சுவை நிறைந்த பழம். இதிலும் கொஞ்சம் வாங்கிக் கொண்டேன்.இவை சிறிய வகையில் இருக்கும் ஹனி டியூ போன்ற ஒரு பழம். வித்தியாசமான, அதே நேரம் இனிப்பும் கொஞ்சம் புளிப்பும் கலந்த சுவை நிறைந்த பழம். இதிலும் கொஞ்சம் வாங்கிக் கொண்டேன்.

எனக்குத் தெரிந்த அவக்காடோ, வாழை, மாம்பழம், பப்பாளி, ஃபிக் போன்றவற்றோடு இந்தப் புதிய பழங்களும் வாரம் முழுக்க சுவைக்க இது நல்ல வாய்ப்பாக அமைந்தது.

சந்தையில் பழங்கள் மட்டுமல்லாது காய்கறிகளும் கூட நிறைந்திருக்கின்றன. பசுமையான கீரை வகைகள் , தக்காளி, மிளகாய், ப்ரோகோலி முட்டைக் கோஸ், அவரை வகை, கிழங்கு வகைகள் என பல ரகம்.


பழங்கள் போல காட்சியளிக்கும் இவை மிளகாய் வகையைச் சேர்ந்தது.


மூலிகை செடிகள் விற்பனைக்காக..


சந்தையில்..தொடரும்...

சுபா


சந்தையில் காய்கறிகள்..

Saturday, June 16, 2012

லா பல்மாவில் நடையாக நடந்த கதை - 7


அவகாடோ

லா பல்மா தீவில் எங்கெங்கு பார்த்தாலும் வாழை தோப்புக்கள் நிறைந்துள்ளன என்று முதல் பதிவிலேயே குறிப்பிட்டிருந்தேன். பழங்களுக்கு இந்தத் தீவில் குறைவே இல்லை எனலாம். வாழையைப் போலவே இங்கே அவக்காடோ மரங்களும் நிறைந்து காணப்படுகின்றன.
வீடுகளில் தோட்டத்தில் நட்டு வைக்கப்பட்டுள்ள அவக்காடோ மரங்கள்.. பூக்கள் நிறைந்திருக்கின்றன!

அவக்காடோ மரத்தை லா பல்மா செல்லும் வரை நான் பார்த்ததேயில்லை. சூப்பர்மார்க்கெட்டுகளில் கிடைக்கும் பழத்தை வாங்கி உணவுக்குப் பயன்படுத்துவதோடு சரி. அதனால் முதலில் அவக்காடோ மரத்தை பார்த்தபோது மாங்காய் மரம் போல இருக்கின்றதே என நினைத்துக் கொண்டிருந்தேன். ஓரிரு நாட்களுக்குப் பிறகு ஒரு நீண்ட மலைப்பாதை நடைப்பயணத்தின் போதுதான் அவக்கோடோ தோப்பில் மரத்தில் காய்கள் காய்த்துக் குலுங்குவதைப் பார்த்தேன். அதுமுதல் இம்மரத்தை வெகு சுலபமாக அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது.
ஒரு மரத்தில் கொத்துக் கொத்தாக அவக்காடோ காய்கள்

அவக்காடோ காயை /பழத்தின் சுவையை விவரிப்பது சற்றே சிரமம். இதனைத் சுவைத்தவர்களுக்கே அதன் சுவை தெரியும். ஒரு விதமான க்ரீம் போன்ற வழுவழுப்பான அதே சமயம் மிக இனிப்போ, கசப்போ புளிப்போ ஏதுமற்ற ஒரு சுவை அது. பொதுவாக சாலட் வகைகளில் சேர்த்துக் கொள்ளவும், இத்தாலிய பாஸ்டா வகைகளில் சேர்த்தும் நான் உணைவு தயாரிப்பதுண்டு.

தென் அமெரிக்க உணவில் அவக்காடோ நிச்சயம் இடம்பெறும். குறிப்பாக மெக்ஸிகோ, கொலம்பியா, இக்குவாடோர், சிலி போன்ற நாடுகளில் ரொட்டிக்கு ஸ்ப்ரட் போல, சட்னி போல தயாரித்து அவகாடோ பழத்தைப் பயன்படுத்துகின்றார்கள்.
இப்படத்தில் மலைப்பிரதேசத்தில் அவக்காடோ தோட்டம் அமைத்திருப்பதைக் காணலாம். இளம் பச்சை நிறமாக இருப்பது அவக்காடோ தோட்டம்.

லா பல்மா தீவில் தோப்புக்களில் மட்டுமல்லாமல் ஆசிய நாடுகளில் நாம் வாழை, மாமரங்களை வைத்திருப்பது போல வீடுகளிலும் அவக்காடோ மரங்களை வைத்திருக்கின்றார்கள். பார்ப்பதற்கு சற்றேரக்குறைய மாங்காய் மரம் போலவே தோன்றுகின்றது அவக்காடோ மரம். பொதுவாக மிகப் பெரிதாக வளர்ந்திருக்கும் ஒரு மரத்தில் ஒரே சமயத்தில் ஏறக்குறைய 100 அவக்காடோ காய்கள் தொங்கிக் கொண்டிருப்பதைக் காணலாம்.

அவக்காடோ காயாக இருக்கும் போது சமைப்பார்களா எனத் தெரியவில்லை. ஆனால் பழுத்தவுடன் இதனை வெவ்வேறு வகை பதார்த்தங்கள் சமைக்கலாம். இப்பழம் பழுத்துவிட்டால் தொட்டுப் பார்க்கும் போடே மெண்மையாக இருக்கும். அதன் தோலை ஒரு பக்கத்தில் நீளமாக கத்தியால் கீறி விட்டு கையாலேயே தோலை பழத்திலிருந்து பிரித்து எடுத்து விடலாம். ஓடு கழண்டு விடுவது போல இதன் தோல் பழத்திலிருந்து பிரிந்து விடும். பழத்தின் நடுவே பெரிய கடினமான கொட்டை இருக்கும். இது கடனமாக இருப்பதால் பழத்தை இரண்டாக வெட்டுவது என்பது சற்று சிரமம்.சந்தையில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள அவக்காடோ - கருமையான நிறத்தில்

லா பல்மா உணவகங்களில் அவக்காடோ விதம் விதமாக சமையலில் பயன்படுத்தப்பட்டாலும் சாலட்டில் அதன் சுவை கெடாத /மறையாத வண்ணம் அப்படியே சாப்பிடுவது தான் எனக்குப் பிடித்திருந்தது. அவக்காடோ சாலட் என்று இணையத்தில் தேடினால் பல ரெசிப்பிகள் கிடைக்கின்றன. ஒரு படம் இணையத்திலிருந்து கிடைத்ததை கீழே இணைத்திருக்கிறேன். இங்கே க்ளிக் செய்து பாருங்கள். இன்னும் விதம் விதமான அவக்காடோ கொண்டு தயாரிக்கப்பட்ட சாலட்களின் படங்களைக் காணலாம்.தொடரும்..

அன்புடன்
சுபா

Monday, June 11, 2012

லா பல்மாவில் நடையாக நடந்த கதை - 6

தெனகூயாவும் லா பல்மாவின் தெற்கு முனையும்

லா பல்மாவின் தெற்கு முனைக்கு நான் நடந்தே சென்று அடைந்ததை நேற்றைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். இன்று மேலும் சில படங்களைப் பகிர்ந்து கொள்ள இப்பதிவு. ஒவ்வொரு படமும் இயற்கயின் அழகை தனித்தனியாக வேறு படுத்திக் காட்டுவதாக உள்ளன. தெனகூயா எரிமலை தொகுப்பில் தேர்ந்தெடுத்த சில படங்கள் மட்டும் இதோ.


தெனகூயா எரிமலை நோக்கிகடந்து செல்லும் பாதையில் எரிமலை கற்கள்.. ஆங்காங்கே வளர்ந்து தெரியும் சிறு செடிகள் , புதர்கள்.
சான் அந்தோனியோ எரிமலை வாய்ப்பகுதி. தெனகூயா செல்வதற்கு முன் சான் அந்தோனியோ எரிமலையையும் சென்று பார்த்து அங்கு எடுக்கப்பட்ட படம். இப்பகுதியில் நிற்பதும் பனி படர்ந்த சூழலில் காற்றைச் சுவாசிப்பதும் சுகமான அனுபவம்.சான் அந்தோனியோ எரிமலை வாய் பகுதியில் உள்ள பாறைகள்சான் அந்தோனியோ எரிமலை கக்கிய நெருப்புக் குழம்பிலிருந்து உருவாகிய பாறைகள்


சான் அந்தோனியோ எரிமலை கக்கிய நெருப்புக் குழம்பிலிருந்து உருவாகிய பாறைகள்


சான் அந்தோனியோ எரிமலை கக்கிய நெருப்புக் குழம்பிலிருந்து உருவாகிய பாறைகள் - சற்று வித்தியாசமாக


சான் அந்தோனியோ எரிமலை கக்கிய நெருப்புக் குழம்பிலிருந்து உருவாகிய பாறை .. இயற்கையாகவே இந்தப் பாறையின் அமைப்பு சாவ்வு நாற்காலி போல இருப்பது கண்களைக் கவர்தாக இருக்கின்றது அல்லவா?சான் அந்தோனியோ எரிமலை கக்கிய நெருப்புக் குழம்பிலிருந்து உருவாகிய பாறைகள்


தென்கூயா நோக்கிச் செல்லும் பாதையின் மற்றொரு புறம்எரிமலை கற்கள்.. என் கையில்..லா பல்மா வரை படம் .. இதன் தெற்கு முனைப்பகுதிதான் அடுத்த படங்களில் ..தெற்கு முனைப்பகுதி.. நுனியில் அட்லாண்டில் சமுத்திரம்தென் முனை.. மேலும் ஒரு கோணத்தில்


தென்முனை


தெனகூயா எரிமலையின் வாய்தென்கூயா எரிமலையைப் பார்த்துக் கொண்டு ஒரு சிறு செடி.. பார்க்க பெரிய மரத்தின் சாயலைக் கொண்டிருந்தாலும் இது 20 செமீ உயர்ம் உள்ள ஒரு செடிதான்


எரிமலைக் குழம்பிலிருந்து உருவான பாறை.. அதில் வளரும் தாவரங்கள்..


எரிமலைக் குழம்பிலிருந்து உருவான பாறை.. அதில் வளரும் தாவரங்கள்..


எரிமலைக் குழம்பிலிருந்து உருவான பாறை.. அதில் வளரும் தாவரங்கள்..


இங்கே காணப்படும் ஒரு செடி வகைதெனகூயாவை நோக்கி என் பார்வை..!


அன்புடன்
சுபா
Sunday, June 10, 2012

லா பல்மாவில் நடையாக நடந்த கதை - 5


இரண்டாவது நடைப்பயணம்
லா பல்மா கனேரித் தீவுக் கூட்டத்தில் அடங்கும் ஒரு தீவு என்று முன்னர் குறிப்பிட்டிருந்தேன். இந்தத் தீவு முழுமைக்குமே எரிமைகளால் உருவாக்கப்பட்டது என்றால் மிகையாகாது. கனேரி தீவுக் கூட்டத்தில் இன்றைக்கும் இயங்ககூடிய எரிமைலைகள் (Active Volcano) இருப்பது இந்தத் தீவில் எனலாம். இந்தத் தீவு 3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உருவானதாகக் கருதப்படுகின்றது. 500,000 ஆண்டுகளுக்கு முன்னர் இத்தீவின் மத்தியில் உள்ள டாப்ரியாண்டே எரிமலை வெடித்து கல்டேரா டி டாப்ரியண்டே என்ற மலைப்ரதேசத்தை உருவாக்கியது. இந்த கல்டேரா டி டாப்ரியண்டே பகுதியில் தான் எங்கள் முதல் நடைப்பயணம் அமைந்தது என்பதை முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.

லா பல்மாவில் நிகழ்ந்த எரிமலை வெடிப்புக்கள் பற்றிய செய்திகளும் சுவாரசியமானவை. அவை நிகழ்ந்த ஆண்டு விபரங்களைப் பார்ப்போம்

  • 1470-1492 மொண்டானோ குமாடா (Montaña Quemada)
  • 1585 எல் பாசோ பகுதிக்கு அருகில் உள்ள டாஹுயா (Tajuya near El Paso)
  • 1646 சான் மார்ட்டின் எரிமலை (Volcán San Martin)
  • 1677 சான் அண்டோனியோ எரிமலை (Volcán San Antonio)
  • 1712 எல் சார்கோ (El Charco)
  • 1949 சான் ஹுவான் டூரானேரோ, ஹோயோ நேக்ரோ (Volcán San Juan, Duraznero, Hoyo Negro )
  • 1971 தெனெகூயா எரிமலை (Volcán Teneguía)


இந்தத் தீவின் கொஞ்சம் தெற்குப் பகுதியில் அமைந்திருப்பது சான் ஹூவான் எரிமலை, அதற்குக் கீழே தான் தெனெகூயா எரிமலை உள்ளது. 1971ல் வெடித்து நெருப்புக் குழம்புகளை வீசிய எரிமலை இது. செக்கச் செவேல் என இருக்கின்றது இந்த எரிமலை வெடித்த மையப் பகுதி.இந்த எரிமலை பகுதியில் தான் எங்கள் இரண்டாவது நடைப்பயணம் அமைந்தது. அதாவது சான் ஹுவான் எரிமலையின் தெற்குப் பகுதியிலிருந்து தொடங்கி லா பல்மாவின் தெற்கு முனைப்பகுதியான சாலினாஸ் டி புவான்கலியாண்டாஸ் வரை 13 கிமீ நடையாக நடந்து சென்று மீண்டும் சாலினாஸ் டி புவான்கலியாண்டாஸ் தெற்கு முனையிலிருந்து வடக்கு நோக்கி எங்கள் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடம் வரை பயணம். ஆக 26 கிமி தூர ஒரு நாள் பயணமாக இது அமைந்தது.

கீழே தெற்கு நோக்கி இறங்கி வருவது சுலபம். மீண்டும் மேல் நோக்கி நடப்பதற்கு ஏறக்குறைய இரண்டு மடங்கு நேரம் தேவைப்பட்டது.

ஒரு வகையில் இது திட்டமிடாத ஒரு பயணம் என்று தான் சொல்வேன். சான் ஹுவான் எரிமலையைப் பார்க்கச் செல்லலாம் என நினைத்துச் சென்று பின்னர் இந்த இடத்தின் அழகில் மயங்கி தெனெகூயா எரிமைலையை நடந்தே சென்று காண்போமே என்று செய்த ஒரு முயற்சி. ஏறக்குறைய எங்கள் நடைப்பயணத்தின் இறுதிப் பகுதியில் மிகுந்த சோர்வு ஏற்பட்டாலும் அந்த அனுபவம் மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்த்து மகிழக்கூடியதாக உள்ளது. எனது லா பல்மா நடை பயணத்திலேயே இப்பயணத்தையே நான் மிக மிக ரசித்த ஒரு பயணம் என்றும் கூட சொல்வேன்.ஒவ்வொரு நிலப்பரப்பிற்கும் ஏற்ற ஒரு அழகு உண்டு. எரிமலை, அது சுற்றியுள்ள நிலப்பகுதி, அங்கு வளரும் தாவரங்கள் அனைத்துமே  தனித்துவம் வாய்ந்தவை. உலகமே அதிசயம் தான். அதில் எரிமலைகளும் அவற்றின் சுற்றுப் புறங்களும் அதிசயமோ அதிசயம் என்று தான் வியக்கத் தோன்றுகிறது.எங்களின் 13 கிமீ தெற்கு நோக்கிய பயணத்தில் ஆரம்பத்தில் ஒரு குழுவினர் எங்களுக்கு எதிர்பக்கமாக நடந்து செல்வதைப் பார்த்தோம் . அதற்குப் பின்னர் இடையில் ஒரு ஜோடி எங்களைப் போலவே நடந்து சென்றனர். மற்றபடி அந்த 13 கி.மீ தூர பயணத்தில் நாங்கள் மட்டுமே அப்பகுதியில் என்ற வகையில் ஒரு தனிமை. ஸ்டார் ட்ரேக்ஸ் படத்தில் பார்ப்போமே, அப்படி ஏதோ ஒரு புதிய ப்லேனட்டிற்கு வந்து நாங்கள் மட்டும் நடந்து கொண்டிருக்கின்றோமோ என சில நேரம் தோன்றியது!

எரிமலை வெடிப்பின் போது வெடித்துச் சிதறிய கற்களும் நெருப்புக் குழம்புகளும் பளபளக்கும் கருப்பு நிறமானவை. உலோகம் கலந்து இருப்பவை. பல பெரிய கருங்கல் பாறைகள் ஆங்காங்கே. கட்டி கட்டியாக சிறு பாறைகள், பெரிய பாறைகள்.. மகா பெரிய பாறைகள் என பாறைகளிலேயே அத்தனை விதம். ஒவ்வொன்றையும் விளக்கிச் சொல்ல வார்த்தைகள் கிடையாது. பார்த்து உணர்ந்து அனுபவிக்கத்தான் வேண்டும் என்று சொல்வேன்.சாலினாஸ் டி புவான்கலியாண்டாஸ், அதாவது லா பல்மாவிற்குத் தெற்கு முனைப்பகுதியில் ஒரு புகழ்பெற்ற உணவகம் இருப்பதாகவும் அங்கே நல்ல க்ரோக்கேட்டுகள் கிடைப்பதாகவும் அறிந்தேன்.   ஆக க்ரோக்கெட்டுகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பிலும் ஆங்காங்கே மனதை தொட்டுச் செல்லும் காட்சிகளைப் புகைப்படங்களாக பதிவு செய்து கொண்டு ஆர்வத்துடன் நடந்தேன். ஏறக்குறைய மதியம் 2 மணியளவில் தெற்கு முனைக்கு வந்து விட்டோம்.

உணகத்தைத் தேடினால் அவர்கள் சியாஸ்டா சென்று விட்டார்கள். சியாஸ்டா என்பது ஸ்பெயினில் மக்கள் மதிய கடைகளை அடைத்து ஓய்வெடுக்கும் ஒன்று. ஆக பெரிய ஏமாற்றத்துடன் கடற்கறை பகுதியில் சற்று நடப்போம் என நினைத்து சாலினாஸ் பகுதியில் இறங்கி நடந்தோம். என்ன ஆச்சரியம்! அங்கே ஒரு வாகனத்தை வைத்துக் கொண்டு ஒரு பெண்மணி உணவு தயாரித்து விற்பனை செய்து கொண்டிருந்தார். மேலும் ஒரு வாகனமும் அங்கு நின்று கொண்டிருந்தது. இரண்டு இளைஞர்கள் அந்த வாகனக் கடையோரம் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

நாங்கள் அமர்ந்து க்ரோக்கெட், அவித்த உருளைக்கிழங்குடன் மோஹோ, கேக் ஆகியவற்றை வாங்கி உண்டு பசியாற்றிக் கொண்டோம். உணவுக் கடைக்காரர் ஒரு நெதர்லாந்துப் பெண்மனி. ஜெர்மன் மொழி பேசுபவர். ஸ்பானிஷ் ஜெர்மன் இரண்டு மொழிகளும் பேசுவது அங்கு விற்பனை செய்ய உதவுகின்றது என்று நன்கு தெரிந்து கொள்ள முடிந்தது. அந்த அமைதியான சூழலில் அந்த நடுத்த்தர வயது பெண்மணி மாத்திரம் தனியாக இருந்து கொண்டு லா பல்மாவின் தெற்கு முனையில் இருந்து அட்லாண்டிக் சமுத்திரத்தைப் பார்த்துக் கொண்டு கையில் நூல் பின்னிக் கொண்டு அமைதி நிறைந்த முகத்துடன் அங்கே தனது உணவகத்தை கவனித்துக் கொண்டிருப்பது வியக்க வைத்தது.சாலினாஸ் டி புவான்கலியாண்டாஸ் பகுதியில் உப்பு உற்பத்தி ஆலை உள்ளது. தீவின் தெற்கு முனை. அங்கே குவியல் குவியலாக உப்புக்கள். அதனைப் பற்றி அடுத்த பதிவில் சொல்கிறேன்.

தொடரும்..

அன்புடன்
சுபா