அவகாடோ
லா பல்மா தீவில் எங்கெங்கு பார்த்தாலும் வாழை தோப்புக்கள் நிறைந்துள்ளன என்று முதல் பதிவிலேயே குறிப்பிட்டிருந்தேன். பழங்களுக்கு இந்தத் தீவில் குறைவே இல்லை எனலாம். வாழையைப் போலவே இங்கே அவக்காடோ மரங்களும் நிறைந்து காணப்படுகின்றன.
வீடுகளில் தோட்டத்தில் நட்டு வைக்கப்பட்டுள்ள அவக்காடோ மரங்கள்.. பூக்கள் நிறைந்திருக்கின்றன!
அவக்காடோ மரத்தை லா பல்மா செல்லும் வரை நான் பார்த்ததேயில்லை. சூப்பர்மார்க்கெட்டுகளில் கிடைக்கும் பழத்தை வாங்கி உணவுக்குப் பயன்படுத்துவதோடு சரி. அதனால் முதலில் அவக்காடோ மரத்தை பார்த்தபோது மாங்காய் மரம் போல இருக்கின்றதே என நினைத்துக் கொண்டிருந்தேன். ஓரிரு நாட்களுக்குப் பிறகு ஒரு நீண்ட மலைப்பாதை நடைப்பயணத்தின் போதுதான் அவக்கோடோ தோப்பில் மரத்தில் காய்கள் காய்த்துக் குலுங்குவதைப் பார்த்தேன். அதுமுதல் இம்மரத்தை வெகு சுலபமாக அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது.
ஒரு மரத்தில் கொத்துக் கொத்தாக அவக்காடோ காய்கள்
அவக்காடோ காயை /பழத்தின் சுவையை விவரிப்பது சற்றே சிரமம். இதனைத் சுவைத்தவர்களுக்கே அதன் சுவை தெரியும். ஒரு விதமான க்ரீம் போன்ற வழுவழுப்பான அதே சமயம் மிக இனிப்போ, கசப்போ புளிப்போ ஏதுமற்ற ஒரு சுவை அது. பொதுவாக சாலட் வகைகளில் சேர்த்துக் கொள்ளவும், இத்தாலிய பாஸ்டா வகைகளில் சேர்த்தும் நான் உணைவு தயாரிப்பதுண்டு.
தென் அமெரிக்க உணவில் அவக்காடோ நிச்சயம் இடம்பெறும். குறிப்பாக மெக்ஸிகோ, கொலம்பியா, இக்குவாடோர், சிலி போன்ற நாடுகளில் ரொட்டிக்கு ஸ்ப்ரட் போல, சட்னி போல தயாரித்து அவகாடோ பழத்தைப் பயன்படுத்துகின்றார்கள்.
இப்படத்தில் மலைப்பிரதேசத்தில் அவக்காடோ தோட்டம் அமைத்திருப்பதைக் காணலாம். இளம் பச்சை நிறமாக இருப்பது அவக்காடோ தோட்டம்.
லா பல்மா தீவில் தோப்புக்களில் மட்டுமல்லாமல் ஆசிய நாடுகளில் நாம் வாழை, மாமரங்களை வைத்திருப்பது போல வீடுகளிலும் அவக்காடோ மரங்களை வைத்திருக்கின்றார்கள். பார்ப்பதற்கு சற்றேரக்குறைய மாங்காய் மரம் போலவே தோன்றுகின்றது அவக்காடோ மரம். பொதுவாக மிகப் பெரிதாக வளர்ந்திருக்கும் ஒரு மரத்தில் ஒரே சமயத்தில் ஏறக்குறைய 100 அவக்காடோ காய்கள் தொங்கிக் கொண்டிருப்பதைக் காணலாம்.
அவக்காடோ காயாக இருக்கும் போது சமைப்பார்களா எனத் தெரியவில்லை. ஆனால் பழுத்தவுடன் இதனை வெவ்வேறு வகை பதார்த்தங்கள் சமைக்கலாம். இப்பழம் பழுத்துவிட்டால் தொட்டுப் பார்க்கும் போடே மெண்மையாக இருக்கும். அதன் தோலை ஒரு பக்கத்தில் நீளமாக கத்தியால் கீறி விட்டு கையாலேயே தோலை பழத்திலிருந்து பிரித்து எடுத்து விடலாம். ஓடு கழண்டு விடுவது போல இதன் தோல் பழத்திலிருந்து பிரிந்து விடும். பழத்தின் நடுவே பெரிய கடினமான கொட்டை இருக்கும். இது கடனமாக இருப்பதால் பழத்தை இரண்டாக வெட்டுவது என்பது சற்று சிரமம்.
சந்தையில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள அவக்காடோ - கருமையான நிறத்தில்
லா பல்மா உணவகங்களில் அவக்காடோ விதம் விதமாக சமையலில் பயன்படுத்தப்பட்டாலும் சாலட்டில் அதன் சுவை கெடாத /மறையாத வண்ணம் அப்படியே சாப்பிடுவது தான் எனக்குப் பிடித்திருந்தது. அவக்காடோ சாலட் என்று இணையத்தில் தேடினால் பல ரெசிப்பிகள் கிடைக்கின்றன. ஒரு படம் இணையத்திலிருந்து கிடைத்ததை கீழே இணைத்திருக்கிறேன். இங்கே க்ளிக் செய்து பாருங்கள். இன்னும் விதம் விதமான அவக்காடோ கொண்டு தயாரிக்கப்பட்ட சாலட்களின் படங்களைக் காணலாம்.
தொடரும்..
அன்புடன்
சுபா
No comments:
Post a Comment