Monday, February 20, 2012

கிருஷ்ணகிரிக்கு போகலாம் வாங்க...! - 6

கிராமப்புரம் என்றாலே மனதைக் கவர்வது பச்சை பசுமையான சூழல்தான். சென்னையில் இரண்டு நாட்கள் இருந்து சாலை நெரிசல், புகை, குப்பை, மக்கள் கூட்டம் என இருந்து விட்டு கிருஷ்ணகிரிக்கு வந்தால் அலைச்சலின் அலுப்பு எல்லாம் ஒரு நொடியில் தொலைந்து விடும் என்பதை இங்கு வருபவர்கள் நிச்சயம் உணரமுடியும்.

பெண்ணேஸ்வர மடத்திலிருந்து புறப்பட்டு ஐகுந்தம் செல்ல பயணித்தோம். அங்கே சற்று வாகனத்தை நிறுத்தி விட்டு வழியில் தென்பட்ட ஒரு சில நடுகல்கள் பற்றிய விபரங்கள் சேகரித்துக் கொண்டு நடக்கும் போது வயல் வெளி தொடங்கியது. அங்கே ஒரு மிக அழகிய காட்சி. இந்தக் காட்சிய படம் பிடித்தஎன் காமெராவுக்கு எப்படி நன்றி சொல்லாமல் இருப்பது?




சிறிய ஓடை.. இருபுறங்களிலும் நெல்வயல். ஓடையைச் சார்ந்தவாறு தென்னை மரங்கள். கொள்ளை அழகான காட்சி. பார்த்துக் கொண்டே சில நிமிடங்கள் அங்கிருந்தேன்.

மலேசியாவில் ஓடைகளில் மீன் பிடித்து விளையாடிய ஞாபகம் உடனே வந்து விட்டது. பள்ளி விட்டு வந்ததும் பெரும்பாலும் கடற்கரையில் விளையாடச் செல்வோம். நான் பினாங்குத் தீவில் இருந்ததால். வீட்டிற்கு பக்கத்திலேயே கெர்னி ட்ரைவ் கடற்கரை இருந்தது. கடற்கரை அலுத்துப் போனால் வீட்டிற்கு சற்றுத் தள்ளி உள்ள ஓடைக்குச் செல்வோம். என் பக்கத்து விட்டு மலாய் சீன தோழிகளுடன் சென்று அங்கே குட்டி மீன்களைப் பிடித்து பாட்டலில் போட்டு வைத்து பார்ப்பது பின்னர் அதனை ஓடையிலேயே விடுவது என அப்போது நாட்கள் கழிந்தன. ஒரு சில முறை நீளமான விலாங்கு மீனையும் பிடித்து அப்படி பாட்டலில் போட்டு வைத்து பார்த்து விளையாடுவோம். இவை எல்லாம் பல வருடங்களாகியும் மனதை விட்டு அகலவில்லை.

இந்தப் பசுமையைப் பார்த்து மனதைப் பறிகொடுத்து லயித்து இருக்கவாவது இத்தொடரை வாசிப்பவர்கள் கிருஷ்ணகிரிக்கு போய்வரத்தான் வேண்டும்.

சுபா

Saturday, February 18, 2012

கிருஷ்ணகிரிக்கு போகலாம் வாங்க...! - 6

சில விஷயங்கள் முதல் முறையே நன்றாக அமைந்து விட்டால் அதில் ஒரு பிடிப்பு வந்து விடுகின்றது. அப்படித்தான் எனக்கு.. கத்தரிக்காய் வாங்கி பாத் செய்து பார்த்து முதல் முறையே என் உள்ளம் கவர்ந்த வகையில் சுவை அமைந்ததால் அந்த ரெசிப்பியை இன்னமும் மறக்கவில்லை. அதோடு அவ்வப்போது நினைத்தால் உடனே செய்து சாப்பிடவும் இந்த ரெசிப்பி சுலபமானதாக எனக்கு அமைந்து விட்டது.

ஆனால் இந்தப் பாயாசம் செய்வது மட்டும் எனக்கு ஏனோ இது வரை கை வராத கலையாகவே இருக்கின்றது. அதிலும் பால் பாயாசம்.

கடந்த சில ஆண்டுகளில் ஓரிரு முறை பால் பாயசம் செய்து அந்த முயற்சி பலனளிக்காது என்று சொல்லி கை விட்டு விட்டேன். எனக்கு ஞாபகம் இருப்பது ஒரு முறை நான் செய்த கடலை பருப்பு பாயசம்.. அது மட்டுமே நானே விரும்பி சாப்பிடும் வகையில் அமைந்தது. ஆனால் மீண்டும் செய்யவில்லை. ஏனோ.. அதற்கு நேரம் காலம் சரியாக அமைய வேண்டும் போல..!

சென்னையில் அன்னலக்‌ஷ்மி ரெஸ்டாரெண்டில் நல்ல சுவையான பாயசம் சாப்பிட்டிருக்கின்றேன். மெதுவாக ரசித்து ருசித்து சாப்பிட்ட அந்தப் பாயசத்தின் சுவை இன்னமும் மறக்கமுடியாது.

கிருஷ்ணகிரிக்குச் சென்றிருந்த போது ஒரு பாயசம் இப்படி கிடைத்தது. நம் செல்வமுரளியின் அம்மா ஒரு பாசிப்பயிறு தேங்காய் கலந்த ஒரு பாயசம் செய்திருந்தார். நான் மட்டுமில்லை. எங்களுடன் வந்திருந்த ஸ்வர்ணாவிற்கும் இந்தப் பாயசம் மிகப் பிடித்து விட்டது. நான் கொஞ்சம் கொஞ்சமாக ரசித்துச் சாப்பிட்டேன். அப்படி ஒரு சுவை. நன்றாக வெந்த பருப்பு அதில் தேங்காய் சர்க்கரையோ அல்லது வெல்லமோ.. வேறு என்னென்ன கலந்திருந்தார்கள் என்று தெரியவில்லை.. நினைத்தாலே மீண்டும் சாப்பிடத் தோன்றும் பாயசம்..!



செல்வமுரளியின் பெற்றோர்கள்


சுபா

Friday, February 17, 2012

கிருஷ்ணகிரிக்கு போகலாம் வாங்க...! - 5

கிருஷ்ணகிரி பயணத்தில் பாறை ஓவியங்களைப் பார்க்கச் செல்வது என்று முடிவாகியிருந்தது. எங்கள் குழுவில் நான் நா.கண்ணன், செல்வமுரளி, சக்தி, ப்ரகாஷ் தவிர்த்து எங்களுடன் திரு.சுகவன முருகனும், ரவியும், திரு.முருகானந்தம் வந்திருந்தனர்.




வாகனத்தை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு மலைப்பகுதியில் இறங்கி நடந்தோம். இங்கே கற்கால மனிதர்கள் வரைந்த பாறை ஓவியங்களைப் பார்ப்பதற்காக எங்களை திரு.சுகவன முருகனும், திரு.முருகானந்தமும் அழைத்துச் சென்றனர். இது பற்றிய தனிப்பதிவை பின்னர் வெளியிடுவேன்.

அங்கே நான் சந்தித்த ஒரு மனிதர் பற்றித்தான் இந்தப் பதிவு.

அந்த மலைப்பகுதியில் புலியட்டைக் குட்டை என்ற பகுதியில் ஒரு குடிசை கட்டிக் கொண்டு அங்கே தனது குடும்பத்தாருடன் வாழ்கின்றார். அவரது வாழ்க்கை முறை ஆதி வாசிகள் வாழ்க்கை முறை போன்றது. மக்கள் குடியிருப்பிலிருந்து தள்ளி தனியாக அமைந்திருந்த அவர் குடிசையையும் பார்க்க முடிந்தது.

ஆடுகள் வளர்ப்பதும் சிறு பயிரிட்டு சீவனம் செய்து வாழ்கின்றார். ஆடு மேய்த்துக் கொண்டிருந்த அந்த மனிதர் நாங்கள் வந்த போது எங்கள் பின்னாலேயே வந்து சேர்ந்து நடந்து வந்து இணைந்து கொண்டார். எங்களுடனேயே பாறை ஓவியம் இருக்கும் இடம் வரை வந்து நாங்கள் பதிவு செய்வதையெல்லாம் பார்த்து அவருக்கு தெரிந்த விஷயங்களையும் கொஞ்சம் கற்பனை கதை சேர்த்து எங்களுக்குச் சொல்லிக் கொண்டே வந்தார். வரும் போதே அங்கிருந்த ஆவாரம் பூச்செடியிலிருந்து சில இதழ்களைப் பறித்து சாப்பிட்டதை நான் கவனிக்க மறக்கவில்லை.

பின்னர் பாறை ஓவியங்களைப் பார்த்து விட்டு வரும்போது எங்களுடன் பேசிக் கொண்டே ஒரு கொத்து ஆவாரம் பூவை கையில் பறித்து வைத்துக் கொண்டார்.



இந்த ஆவாரம் பூவை தினமும் காலையில் முதலில் சாப்பிடுவது வழக்கமாம். இது தனது அன்றாட வாழ்க்கை உணவில் அங்கம் வகிக்கும் ஒரு விஷயமாகி விட்டது என்று சந்தோஷமாக் சொல்லிக் கொண்டார்.

கிராமத்து வாழ்க்கையில் இப்படி பல மூலிகைகள் அன்றாட உணவில் அங்கம் வகிக்கின்றன. முருங்கை, பொன்னாங்கண்ணி, வேப்பம்பூ போன்றவை முக்கிய மூலிகைகள் என்று பரவலாகக் கேள்விப்பட்டிருக்கும் எனக்கு ஆவரம்பூவையும் தினம் சிலர் சாப்பிட்டு வருகின்றனர் என்பது புது விஷயமாகிப் போனது.

சுபா

Saturday, February 11, 2012

கிருஷ்ணகிரிக்கு போகலாம் வாங்க...! - 4

கிருஷ்ணகிரிக்குச் செல்வது என்று மனதில் திட்டமிட ஆரம்பித்த போதே ஒரு வித கற்பனை செய்து வைத்திருந்தேன். கற்பாறைகள், பசுமை குறைந்த மலைகள், இப்படி சற்றேரக் குறைய பாலைவனம் போன்ற ஒரு ஊர்தான் என் கற்பனையில் இருந்தது.

என்ன ஆச்சரியம்? என் எதிர்பார்ப்பை ஏமாற்றி அசர வைத்து விட்டது கிருஷ்ணகிரியின் அழகு. பார்க்கும் இடமெல்லாம் வயல் வெளி.. அங்கே இளம் பச்சை நிறத்தில் சிறு நெல் செடிகள்... தென்னை மரங்கள்.. பனை மரங்கள்..





பாரதி ராஜா தமிழ் படத்தில் வருவது போன்று அங்கே இங்கே என்று ஒரு சில ஆண்களும் பெண்களும் வயலில் வேலை செய்து கொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது. அவர்களோடு எருதுகளோ.. காளையோ வயலில் நிற்பதையும் காண முடிந்த்து.

இந்த இயற்கை அழகைக் கூட்டும் வகையில் கொக்குகள் பல பறந்து வந்து வயலில் அங்கொன்றும் இங்கொன்றுமாக தென்பட்டன.




நான் மட்டுமல்ல.. என்னுடன் வந்த நா. கண்ணனுக்கும் கிருஷ்ணகிரி பிடித்துப் போய்விட்டது. இதுதான் அவருக்கும் முதல் முறை பயணம் என்பது அவரது ஆச்சரியத்திலேயே தெரிந்தது.

எதிர்பார்க்காமல் கிடைக்கும் சந்தோஷம் மிக சுவாரசியமானது இல்லையா. அதனை கிருஷ்ணகிரியில் முதல் நாளே அனுபவித்தேன்.

எம் மனம் கவர்ந்த தமிழ் நாட்டு ஊர்களின் பட்டியலில் கிருஷ்ணகிரி இப்போது இடம் பெற்று விட்டது. அடுத்த முறை செல்ல வாய்ப்பு அமைந்தால் பனங்காய்கள் காய்த்து தயாராக இருக்கும் நேரத்தில் சென்று நொங்கு சாப்பிட்டு மகிழ வேண்டும். இம்முறை இந்த வாய்ப்பு அமையவில்லை என்பது மட்டுமே ஒரு பெரும் குறையாக மனதில் இருக்கின்றது.

சுபா

Saturday, February 4, 2012

கிருஷ்ணகிரிக்கு போகலாம் வாங்க...! - 3

என் வாழ்க்கைத் தேவைகளில் முக்கிய அங்கம் வகிக்கும் காப்பியைப் பற்றியும் கொஞ்சம் நினைத்துப் பார்க்கிறேன்.

தமிழகத்துக்கு வந்து இறங்கியவுடன் நான் என மனதை சில விஷயங்களில் மாற்றி அமைத்துக் கொள்வேன். இது சூழலுக்கேற்ற வகையில் என்னை நான் தயார் செய்து கொள்வதற்காக. அதில் காப்பியும் ஒன்ற!

இங்கே கசப்பான காப்பி.. அதிலும் என் வீட்டில் சிறு காப்பி கொட்டை அறைக்கும் மெஷின் ஒன்று வைத்த்திருக்கிறோம். அதில் தேவைக்கேற்ப காபி போடுவதற்கு முன்னர் எத்தனை கப் தேவையோ அத்தனை கப் காப்பிக்கென்று கொட்டைகளை அறைத்துக் கொள்வோம். இங்கே குவாட்டமாலா, ஆப்பிரிக்கா, கொலம்பியா காப்பிக் கொட்டைகள் கொஞ்சம் பிரபலம். இப்படி அறைப்பதை பில்ட்டர் செய்தி அதில் கொஞ்சம் பால் சேர்த்து.. (~3 தேக்கரண்டி அளவு) சீனி சேர்க்காமல் குடிப்பது எனக்கு கடந்த 13 ஆண்டுகளாகப் பழகி விட்டது.

அதிலும் காலையில் இரண்டு பெரிய கப் காப்பியாவது கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிட்டுக் கொண்டே வேலைகளைச் செய்வது என்பதும் பழகிப் போன விஷயம். அதில் தான் எனக்கு பெரும்பாலும் சிக்கல் வரும் தமிழகத்தில்.

இங்கே சிறிய கப்பில் ..பாலில் காப்பி கலந்து சீனியும் சேர்த்து கறைத்த "காபி ப்ளேவர் பால் கோவா பானம்" அருந்துவது போல பல இடங்களில் எனக்கு நேர்ந்து விடுகின்றது. இந்தத் தமிழ் நாடு ஹோட்டலிலும் அதே நிலை.

முதலில் வாங்கிக் கொண்ட சிறிய காப்பி என்னால் சுவைத்து அருந்தவே முடியவில்லை. இரண்டாவது முறை காப்பி ஆர்டர் செய்யும் போது சர்க்கரை இல்லாமல் சற்று கூடுதல் டிக்காக்‌ஷன் சேர்த்து காப்பி தாருங்கள் எனறு கேட்டுக் கொண்டேன். காப்பி வந்தது. முன்னிருந்த காப்பியிலிருந்து எந்த வித மாறுபாடும் இல்லாத அதே காபி ப்ளேவர் பால் கோவா பானம். வெறுத்துப் போய் விட்டது எனக்கு. சரி வேறு வழியில்லையே..!

மூன்றாவது முறை மாலையில் இரவு உணவுக்குப் பின்னர் காபி கேட்டேன். இப்போது சற்று அழுத்தி சீனி சேர்க்காத சற்று கூடுதல் டிக்காக்‌ஷன் சேர்த்து காப்பி தாருங்கள் என்று கூறி விட்டு .. அப்பாடா.. ஓரளவு குடிக்கக் கூடிய அளவிலான காப்பி வரும் என்று ஆவலுடன் காத்திருந்தேன். காப்பியும் வந்தது! அதே காபி ப்ளேவர் பால் கோவா பானம் . இப்போது காபி பரிமாறியவரை அழைத்துக் கேட்டேன். உங்களிடம் சொல்லித்தானே காப்பி ஆர்டர் செய்தேன். ஏன் சர்க்கரை போட்டு தருகின்றீர்கள் என்று. அவருக்கு இப்போது சற்று புரிந்து விட்டது. இல்லை மேடம். அது காபி மெஷின். அதில் டிக்காக்‌ஷன் அளவை மாற்ற முடியாது. பால் காப்பி எல்லம் சேர்ந்தே வரும் என்றார். சரி சீனியாவது சேர்க்காமல் தரலாம் இல்லையா என்றேன். சாரி மேடம். என்று சொல்லி விட்டு நழுவி விட்டார். ஆனால் மறு நாள் காலை நான் விடவில்லை. சீனி மட்டுமாவது சேர்க்காமல் காப்பி தாருங்கள் என்று சொல்லி ஒரு காப்பி வாங்கிக் கொண்டேன்.

நான் போகும் இடங்களிலெல்லாம்.. சீனி காப்பிக்கு வேண்டாம் என்றால் உடனே .. ஐய்யோ .. பாவம். சர்க்கரை ப்ராப்ளம் இருக்கா.. என்பது சகஜமாக நான் கேட்கும் பதில்கள். எனக்கு சர்க்கரை வியாதி இல்லை.. காப்பியை அதன் கசப்புத் தன்மையோடு குடித்துப் பழகி விட்டது. என்று சொன்னால் சிலருக்கு கொஞ்சம் ஆச்சரியம் ஏற்படுகின்றது. என்ன செய்வது. எல்லாம் பழக்க தோஷம் தானே..!





கிருஷ்ணகிரி தமிழ் நாடு ஹோட்டல்








கண்ணன் ஸ்வர்ணா குழந்தையுடன்







ஸ்வர்ணாவும் சுபாவும்..




ஸ்வர்ணாவின் மாமனார், தினமணி நிருபர் ரவி, ப்ரகாஷ், ஸ்வர்ணா, சுபா.



தொடரும்...!

சுபா