கிராமப்புரம் என்றாலே மனதைக் கவர்வது பச்சை பசுமையான சூழல்தான். சென்னையில் இரண்டு நாட்கள் இருந்து சாலை நெரிசல், புகை, குப்பை, மக்கள் கூட்டம் என இருந்து விட்டு கிருஷ்ணகிரிக்கு வந்தால் அலைச்சலின் அலுப்பு எல்லாம் ஒரு நொடியில் தொலைந்து விடும் என்பதை இங்கு வருபவர்கள் நிச்சயம் உணரமுடியும்.
பெண்ணேஸ்வர மடத்திலிருந்து புறப்பட்டு ஐகுந்தம் செல்ல பயணித்தோம். அங்கே சற்று வாகனத்தை நிறுத்தி விட்டு வழியில் தென்பட்ட ஒரு சில நடுகல்கள் பற்றிய விபரங்கள் சேகரித்துக் கொண்டு நடக்கும் போது வயல் வெளி தொடங்கியது. அங்கே ஒரு மிக அழகிய காட்சி. இந்தக் காட்சிய படம் பிடித்தஎன் காமெராவுக்கு எப்படி நன்றி சொல்லாமல் இருப்பது?
சிறிய ஓடை.. இருபுறங்களிலும் நெல்வயல். ஓடையைச் சார்ந்தவாறு தென்னை மரங்கள். கொள்ளை அழகான காட்சி. பார்த்துக் கொண்டே சில நிமிடங்கள் அங்கிருந்தேன்.
மலேசியாவில் ஓடைகளில் மீன் பிடித்து விளையாடிய ஞாபகம் உடனே வந்து விட்டது. பள்ளி விட்டு வந்ததும் பெரும்பாலும் கடற்கரையில் விளையாடச் செல்வோம். நான் பினாங்குத் தீவில் இருந்ததால். வீட்டிற்கு பக்கத்திலேயே கெர்னி ட்ரைவ் கடற்கரை இருந்தது. கடற்கரை அலுத்துப் போனால் வீட்டிற்கு சற்றுத் தள்ளி உள்ள ஓடைக்குச் செல்வோம். என் பக்கத்து விட்டு மலாய் சீன தோழிகளுடன் சென்று அங்கே குட்டி மீன்களைப் பிடித்து பாட்டலில் போட்டு வைத்து பார்ப்பது பின்னர் அதனை ஓடையிலேயே விடுவது என அப்போது நாட்கள் கழிந்தன. ஒரு சில முறை நீளமான விலாங்கு மீனையும் பிடித்து அப்படி பாட்டலில் போட்டு வைத்து பார்த்து விளையாடுவோம். இவை எல்லாம் பல வருடங்களாகியும் மனதை விட்டு அகலவில்லை.
இந்தப் பசுமையைப் பார்த்து மனதைப் பறிகொடுத்து லயித்து இருக்கவாவது இத்தொடரை வாசிப்பவர்கள் கிருஷ்ணகிரிக்கு போய்வரத்தான் வேண்டும்.
சுபா
No comments:
Post a Comment