Friday, February 17, 2012

கிருஷ்ணகிரிக்கு போகலாம் வாங்க...! - 5

கிருஷ்ணகிரி பயணத்தில் பாறை ஓவியங்களைப் பார்க்கச் செல்வது என்று முடிவாகியிருந்தது. எங்கள் குழுவில் நான் நா.கண்ணன், செல்வமுரளி, சக்தி, ப்ரகாஷ் தவிர்த்து எங்களுடன் திரு.சுகவன முருகனும், ரவியும், திரு.முருகானந்தம் வந்திருந்தனர்.




வாகனத்தை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு மலைப்பகுதியில் இறங்கி நடந்தோம். இங்கே கற்கால மனிதர்கள் வரைந்த பாறை ஓவியங்களைப் பார்ப்பதற்காக எங்களை திரு.சுகவன முருகனும், திரு.முருகானந்தமும் அழைத்துச் சென்றனர். இது பற்றிய தனிப்பதிவை பின்னர் வெளியிடுவேன்.

அங்கே நான் சந்தித்த ஒரு மனிதர் பற்றித்தான் இந்தப் பதிவு.

அந்த மலைப்பகுதியில் புலியட்டைக் குட்டை என்ற பகுதியில் ஒரு குடிசை கட்டிக் கொண்டு அங்கே தனது குடும்பத்தாருடன் வாழ்கின்றார். அவரது வாழ்க்கை முறை ஆதி வாசிகள் வாழ்க்கை முறை போன்றது. மக்கள் குடியிருப்பிலிருந்து தள்ளி தனியாக அமைந்திருந்த அவர் குடிசையையும் பார்க்க முடிந்தது.

ஆடுகள் வளர்ப்பதும் சிறு பயிரிட்டு சீவனம் செய்து வாழ்கின்றார். ஆடு மேய்த்துக் கொண்டிருந்த அந்த மனிதர் நாங்கள் வந்த போது எங்கள் பின்னாலேயே வந்து சேர்ந்து நடந்து வந்து இணைந்து கொண்டார். எங்களுடனேயே பாறை ஓவியம் இருக்கும் இடம் வரை வந்து நாங்கள் பதிவு செய்வதையெல்லாம் பார்த்து அவருக்கு தெரிந்த விஷயங்களையும் கொஞ்சம் கற்பனை கதை சேர்த்து எங்களுக்குச் சொல்லிக் கொண்டே வந்தார். வரும் போதே அங்கிருந்த ஆவாரம் பூச்செடியிலிருந்து சில இதழ்களைப் பறித்து சாப்பிட்டதை நான் கவனிக்க மறக்கவில்லை.

பின்னர் பாறை ஓவியங்களைப் பார்த்து விட்டு வரும்போது எங்களுடன் பேசிக் கொண்டே ஒரு கொத்து ஆவாரம் பூவை கையில் பறித்து வைத்துக் கொண்டார்.



இந்த ஆவாரம் பூவை தினமும் காலையில் முதலில் சாப்பிடுவது வழக்கமாம். இது தனது அன்றாட வாழ்க்கை உணவில் அங்கம் வகிக்கும் ஒரு விஷயமாகி விட்டது என்று சந்தோஷமாக் சொல்லிக் கொண்டார்.

கிராமத்து வாழ்க்கையில் இப்படி பல மூலிகைகள் அன்றாட உணவில் அங்கம் வகிக்கின்றன. முருங்கை, பொன்னாங்கண்ணி, வேப்பம்பூ போன்றவை முக்கிய மூலிகைகள் என்று பரவலாகக் கேள்விப்பட்டிருக்கும் எனக்கு ஆவரம்பூவையும் தினம் சிலர் சாப்பிட்டு வருகின்றனர் என்பது புது விஷயமாகிப் போனது.

சுபா

No comments:

Post a Comment