Thursday, January 20, 2011

பாரிஸ் சாலைகளில்.. (Dec 14 -17) - 3

இன்று பாரீஸுக்கு புகழ் சேர்க்கும் லூவ்ரெ பொருட்காட்சியகத்தைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்கின்றேன்.



The Musee du Louvre என்ற பெயர் கொண்ட இந்தப் பொருட்காட்சியகம் உலகப் புகழ்பெற்ற ஒன்று. உலகின் தலை சிறந்த பல முக்கிய கலைப்பொருட்களைக் இது காட்சிக்கு வைத்துள்ளது.



இந்தப் பொருட்காட்சியகத்தின் முதல் வடிவம் முதன் முதலில் 1190ல் மன்னர் பிலிப் ஆகுஸ்ட் அவர்களால் ஒரு பாதுகாப்பு கோட்டையாக கட்டப்பட்டது. பின்னர் இந்தக் கட்டிடத்தில் பெரும் அளவு மாற்றம் ஒவ்வொரு மன்னர் காலத்திலும் கொண்டுவரப்பட்டு விஸ்தாரமாக்கப்பட்டது. இங்கு ஐரோப்பிய கலைப்பொருட்கள் மட்டுமின்றி ஆப்பிரிக்க, ஆசிய, அமெரிக்க, நாடுகளிலிருந்தும் சேகரிக்கபப்ட்ட பல வரலாற்றுச் சான்றுகள், கலைப் பொக்கிஷங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.





லூவ்ரெ செல்வதற்கு மெட்ரோ 1 அல்லது 7 மூலம் பயணிக்கலாம். எனது தங்குமிடத்திலிருந்து 1ம் எண் மெட்ரோ எடுத்து பயணித்து ஒபிலிஸ்க் இருக்கும் concorde மெட்ரோ நிலையத்தில் இறங்கி அங்கிருந்தே நடந்து சென்றேன். இதை விட உடனே லூவ்ரெ செல்ல நினைப்பவர்கள் Palais Royal Musee du Louvre நிலையத்தில் இறங்கிக் கொள்வது நன்று. மெட்ரோ நிலையத்திலிருந்து வெளி வந்த உடனேயே நேராக லூவ்ரே கட்டிடத்தைப் பார்க்கலாம்.



நான் concorde மெட்ரோ நிலையத்தில் இறங்கி ஒபிலிஸ்க் பார்த்து முடித்தபின் இடது பக்கத்தில் அமைந்துள்ள பூந்தோட்டத்தில் நடக்கத் தொடங்கினேன். இந்தப் பூந்தோட்டம் கலை அழகு மிக்கது. ஆங்காங்கே வெள்ளை நிறத்திலான உயர்ந்த கலைச் சிற்பங்கள் உள்ளன. ஆனாலும் டிசம்பர் மாதக் குளிர் என்பதால் பூக்களையும் பசுமையையும் காணவில்லை. வசந்தஹ் காலத்திலும் கோடை காலத்திலும் இப்பகுதி நிச்சயம் மிக ரம்மியமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.


பூந்தோட்டத்தைக் கடந்து மேலும் நடந்து வரும் போதே லூவ்ரெ வாசலில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கண்ணாடி பிரமிட்டை பார்க்கலாம். இந்தப் பிரமிட்டையும் லூவ்ரேவையும் டான் ப்ரவுனின் (Dan Brown) நாவல் டாவின்சி கோட் (Da Vinci Code) படித்தவர்களும் இப்படத்தைப் பார்த்தவர்களும் மறந்திருக்க முடியாது. உலகப் பிரசித்தி பெற்ற லியோனார்டோ டா வின்சியின் (Leonardo da Vinci) மோனாலிசா ஓவியம் இங்கு தான் உள்ளது!




இந்தக் கண்ணாடி பிரமிட் லூவ்ரேவிற்கு மிகப் புதிய சேர்க்கை என்றே சொல்ல வேண்டும். 1989ம் ஆண்டு இம் பெய் என்ற ஒரு ஆர்க்கிடெக்ட் இந்த பிரமிட்டை வடிமைத்தார். இந்தp பிரமிட்டின் சிறப்பு என்னவென்றால் இது முழுமைக்கும் இரும்பினாலும் கண்ணாடியாலும் மட்டுமே கட்டப்பட்டது.


லூவ்ரே மண்டபத்தின் சுவர்களை மிகுந்த கலை நயத்தோடு அமைத்திருக்கின்றனர். சுவற்றில் வரிசை வரிசையாக சிலைகள். ஒன்றிலிருந்து ஒன்று மாறுபட்டது. இவை பெறும் பாலும் 16ம் 17ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டவை.



லூவ்ரெ உலகப் பிரசித்தி பெற்ற பல கலைப் பொருட்களைக் காட்சிக்கு வைத்துள்ளது. மோனாலிசா ஓவியத்தைப் பற்றி முதலில் குறிப்பிட்டேன். இது தவிர்த்து,
- 1435ம் ஆண்டின்ன் பிரசித்தி பெற்ற Madonna of the Chancellor Rolin, 15ம் நூற்றாண்டின் ப்ளெமிஷ், டச்சு, ஜெர்மானிய, ஆங்கிலேய ஓவியர்களின் பல பிரசித்தி பெற்ற ஓவியங்கள் இங்குள்ளன.
- பிரமிக்க வைக்கும் இத்தாலிய ஓவியங்கள் , கி.பி 1200 முதல் 1800 வரையிலான, பற்பல ஓவியங்கள் இங்கு தேதி வாரியாக குறிப்பிடப்பட்டு வைக்கப்பட்டுள்ளன.
ஓவியங்கள் மட்டுமல்ல- கலைச் சிற்பங்கள், அதிலும் பண்டைய ப்ளெமிஷ், ஜெர்மானிய, ப்ரென்ச்சு கலைவடிவங்கள் பல இந்த லூவ்ரெவில் உள்ளன.
- லூவ்ரேவின் சிறப்பை மேலும் உயர்த்துவது இங்குள்ள கிரேக்க, எகிப்திய கலை வடிவங்கள். இதில் குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளது உலகின் மிகப் பழமையான மெசப்பொட்டாமியன் நாகரிகத்தின் அதிகாரப்பூர்வ கட்டளைகள் அடங்கிய நூலான
ஹம்முரபி கட்டளைகள் (Code of the Babylonian King Hammurabi). இது கி.மு 1700 என குறிப்பிடப்படுகின்றது.




இப்படி பலப் பல கலைப் பொருட்கள், பழம் நூல்கள், வரலாற்றுச் சான்றுகள் இங்கு வைக்கபப்ட்டுள்ளன.

இங்குள்ள கலைப் பொருட்களை பார்த்து முடிக்க ஒரு நாள் நிச்சயம் போதாது. பண்டைய வரலாற்று தகவல்களில் ஆர்வம் உள்ளவர்களுக்கு லூவ்ரெ ஒரு பொக்கிஷம்.

No comments:

Post a Comment