Sunday, December 19, 2010

பாரிஸ் சாலைகளில்.. (Dec 14 -17) - 2

பாரீஸ் நகரின் உள்ளே பயணிப்பவர்கள் வாகனத்தில் செல்வதை முற்றிலும் தவிர்த்து விடுவது நல்லது. எல்லா இடங்களிலும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியாது. ஆனால் மெட்ரோ நம்பகரமான பொது போக்குவரத்து சாதனம். கையில் மெட்ரோ தொடர்பு வரைபடம் வைத்திருத்தல் மிக அவசியம். பாரீஸ் மெட்ரோ வரைபடம் இங்கே காணலாம். http://www.aparisguide.com/maps/metro.htm

எனது தங்கும் விடுதி Le Meridien Montparnasse அமைந்திருந்த இடம் Montparnasse பகுதியில். ஹோட்டலிற்கு அருகிலேயே ஒரு மெட்ரோ ஷ்டேஷனும் இருப்பதால் எனது பயனம் வெகு சுலபமாகவே அமைந்திருந்தது. மெட்ரோ எண் 13ல் Gaite ஷ்டேஷனில் இறங்கினால் 3 நிமிடத்தில் ஹோட்டலை அடைந்து விடலாம். எனது அலுவலக பணி அமைந்திருந்த இடமான Saint-Denis Porte de Paris க்கு மெட்ரோ 13 லியே பயணித்து 35 நிமிடத்தில் அடைந்து விடலாம். ஆக தினமும் பயணிக்க மெட்ரோ மிகச் சுலபமாகவும் வசதியாகவும் அமைந்திருந்தது.

பாரீஸிலுள்ள முக்கிய இடங்களில் சிலவற்றை பற்றிய தகவல்களை இங்கு பகிர்ந்து கொள்ள நினைத்திருக்கின்றேன். முதலில் Place de la Concorde எனப்படும் பகுதி. இப்பகுதியை அடைய Gaite ஷ்டேஷனிலிருந்து பயணித்து 1ம் எண் மெட்ரோ எடுத்து Concorde ஷ்டேஷனில் இறங்க வேண்டும். இப்பகுதி மிகப் பிரமாண்டமான வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வுகளைச் சந்தித்த ஒரு பகுதி. முதலில் இங்கே நம்மை வரவேற்பது இங்கு வானை நோக்கி நிமிர்ந்து நிற்க்கும் எகிப்திய ஒபிலிஸ்க்.




இந்த ஒபிலிஸ் 3200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. பண்டைய எகிப்தின் வரலாற்றுச் சின்னம். எகிப்து நாட்டின் லுக்ஸோர் (Luxor) நகரிலிருந்து இங்கு கொண்டு வரப்பட்டது.

அப்போதைய மன்னர் லூயிஸ் பிலிப் அவர்களுக்கு எகிப்திய வைசராய் முகம்மது அலி 1836ல் அளித்த பரிசுப் பொருள் இது. அப்போது இவர் எகிப்து மற்றும் சூடான் ஆகிய நாடுகளுக்கு வைசராயாக பதவி ஏற்றிருந்தவர். இதே எகிப்திய வைசராய் தான் பிரித்தானிய மியூஸியத்தில் உள்ள கிளியோபாத்ராவின் ஊக்கு ஒன்றினையும் பரிசாக அளித்தவர். எகிப்து போன்ற பழமை வாய்ந்த வரலற்று நாகரிகத்தை உடைய நாடுகளுக்கு இவ்வகையான் இழப்புக்கள் பல முறை நிகழ்ந்துள்ளன என்பது வேதனை தரும் விஷயம் தான்.

சரி. இந்த ஒபிலிஸ்க்கை பார்ப்போம். நான்கு புறமும் எகிப்திய ஹிரோகிலிப்ஸ் (hieroglyphics) எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பண்டைய எகிப்திய கலாச்சாரத்தின் சின்னம் இது.




இந்த 250 டன் எடையுள்ள ஒபிலிஸ்க்கை இங்கே கொண்டு வந்து சேர்த்து அதனை இப்பகுதியில் பதித்த வேலை பற்றிய விளக்கம் இந்த ஒபிலிஸ்க்கின் கீழ் பகுதியிலேயே பொறிக்கப்பட்டிருக்கின்றது.



இந்த ஒபிலிஸ்க்கின் கூர்மையான மேல் பகுதி பிரமிட் போன்ற அமைப்பு 6ம் நூற்றாண்டு வாக்கில் எகிப்திலேயே திருடப்பட்டு காணாமல் போய்விட்டதாம். பல ஆண்டுகள் இந்த மேல் பகுதி இன்றியே காணப்பட்ட இந்த ஒபிலிஸ்க்கின் மேல் பிரமிட் பகுதியை 1998ல் தங்கத்தால் வடிவமைத்து மாற்றம் செய்துள்ளது ஃப்ரான்ஸ் அரசாங்கம்.




ஒபிலிஸ்க் என்பது எகிப்திய தேவ பாஷையில் தேஜேன் (Tejen) எனக் குறிப்பிடப்படுகின்றது. இது தீய சக்திகளிடமிருந்து காக்கும் தன்மை வாய்ந்ததாக பண்டைய எகிப்திய மக்களால் நம்பப்பட்டது. பண்டைய எகிப்திய கலாச்சாரத்தில் ஒபிலிஸ்க்குகள் ஆலயத்தில் வைப்பதற்காக உருவாக்கபப்ட்டவை. ஒபிலிஸ்க்குகள் எப்போதும் இரண்டாகவே தயாரிக்கப்படுமாம். இரண்டு ஒபிலிஸ்க்குகளை ஆலயத்தில் நட்டு வைப்பதுவே வழக்கமாக இருந்திருக்கின்றது. ஒபிலிஸ்க் சூரியக் கதிர்களை பிரதிபலிக்கும் ஒன்றும் கூட. சூரியக் கடவுள் RA பொறிக்கப்பட்ட ஒப்லிஸ்க் பாரிஸிலும் இருந்து அங்கு பிரகாசித்துக் கொண்டிருக்கின்றது.




அன்புடன்
சுபா

1 comment:

சா.கி.நடராஜன். said...

அரிய தகவல்களைத் தந்தமைக்கு நன்றி

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
http://tamizhswasam.blogspot.com/

Post a Comment