Saturday, December 18, 2010

பாரிஸ் சாலைகளில்.. (Dec 14 -17) - 1

நண்பர் ஆண்டோ பீட்டரின் துணைவியார் ஸ்டெல்லாவின் அண்ணன் ஸ்டெபி பாரிஸில் சில ஆண்டுகளாக இருக்கின்றார். இதுவரை அவரைப் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிட்டவில்லை. எப்போது பாரீஸ் சென்றாலும் அலுவலக வேலைகளை முடித்து சற்று பக்கத்திலேயே ஏதும் சுற்றிப் பார்த்து விட்டு வந்து விடுவது தான் வழக்கம். ஸ்டெபியிடம் தொலைபேசியில் பேசும் போதெல்லாம் வந்தால் கட்டாயமாக பார்க்க வேண்டுமென்று அடிக்கடி சொல்வார். ஆக, இந்த முறை பாரீஸ் செல்லும் போது எப்படியும் நேரம் ஒதுக்கி அவரை பார்த்து வர வேண்டும் என்று முடிவெடுத்திருந்தேன். முதல் நாள் செவ்வாய்கிழமை வேலை அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் ஸ்டெபியைக் காணும் வாய்ப்பு அமையவில்லை. மறுநாள் மாலை ஏழு மணி அளவில் வேலையை முடித்துக் கொண்டு அவரைச் சந்திக்கலாம என் ஏற்பாடு செய்து அழைத்தேன். எனது வேலை அமைந்திருந்த இடம் Saint-Denis Porte de Paris மெட்ரோ ஸ்டேஷனுக்கு அருகில். ஆக அங்கேயே சந்திப்பதாக முடிவாகியது. என்னுடன் பணியில் ஈடுபட்டிருந்த ஸ்பெயினிலிருந்து வந்திருந்த மற்றொரு நண்பரும் வருவதாக குறிப்பிட்டதால் இருவரும் மெட்ரோ ஸ்டேஷனுக்கு விரைந்தோம்.



அறிமுகப்படுத்தி பேசிக் கொண்டபின்னர் எங்கே போகலாம் என்று யோசித்தோம். பாரீஸில் தமிழர்கள் குழுமியுள்ள லா சப்பெல் (La Chappele )சென்று அதிக நாட்களாக இருக்கும். அதனால் இங்கே செல்லலாமே என்று கேட்க அவருக்கும் அதில் சந்தோஷம்.




பாரிஸில் இப்பகுதி தமிழர்களின் வியாபார தலம் என்றால் அதனை மறுக்க முடியாது. நிறைய தமிழர்கள் நடத்தும் கடைகளும், ஹிந்து ஆலயங்களும் இங்கு உள்ளன. ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் நா.கண்ணனும் நானும் இங்குள்ள ஒரு விநாயகர் ஆலயத்தில் சமைய சொற்பொழிவு செய்வதற்காகச் சென்றிருந்தோம். ஒரு கட்டிடத்தின் உள்ளே அமைந்திருக்கும் ஆலயம் இது. முறையாக பூஜைகள் வழிபாடுகள், திருவிழாக்கள் எல்லாம் நடைபெற்று வருகின்றன. கோடை காலத்தில் அதிலும் விநாயகர் சதுர்த்தி இங்கு விமரிசையாகக் கொண்டாடப்பட்டும் வருகின்றது.




சாலையின் இரு பக்கங்களிலும் இலங்கைத் தமிழர்களின் அபார முயற்சியில் பல கடைகள் உறுவாகியிருக்கின்றன. சேலை துணி மணி வகைககள், மளிகைப் பொருட்கள், உணவு விடுதிகள், தொலைபேசி அட்டை விற்பனை கடைகள், இறைச்சிக் கடைகள் என ப்ரெஞ்ச், தமிழ் ஆங்கிலத்தில் பெயர் அட்டைகளோடு கடைகளை சாலையில் பார்க்கலாம்.




ஸ்டெபியின் நண்பர் ஒருவர் இந்திய திரைப்பட வீடியோ படங்களின் கடை ஒன்றினை வைத்திருக்கின்றார். அவரது கடைக்கு என்னை அழைதுச் சென்றிருந்தார் ஸ்டெபி. எந்த படம் வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள் என்று கட்டளை வேறு. எனக்கு எதனைத் தேர்ந்தெடுப்பது என்றே தெரியவில்லை. வேண்டாம் என்று மறுத்தாலும் ஏதாவது ஒரு வீடியோ படமாவது நான் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறி விட்டனர். நீங்களே தேர்ந்தெடுத்துத் தாருங்கள் என்று சொல்ல 2 வீடியோ - ஒரு டிவிடியில் என்றவாறு நான்கு தமிழ் திரைப்படங்கள் கொண்ட டிவிடி - களவாணி, அகங்காடித் தெரு, பாண்டவர் பூமி,பசங்க என்று நான்கு படங்கள் எனக்கு கிடைத்தன.




இந்தக் கடைக்கு ப்ரெஞ்ச் மக்களும் வந்து டிவிடி வாங்கிச் செல்கின்றனர். ஒரு பகுதி முழுதும் ப்ரெஞ்ச் சப் டைட்டில் உள்ள போலிவூட் டிவிடிக்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. நான் கடையில் இருந்த போதே இரண்டு ப்ரெஞ்ச் காரர்கள் டிவிடி கதையை விற்பனையாளரிடம் கேட்டு விளக்கம் பெற்றுக் கொண்டிருந்தார்.

நான்கு புதிய படங்களின் டிவிடிக்கள் கிடைத்த சந்தோஷம் எனக்கு. சரி அங்கிருந்து புறப்பட்டு சாப்பிடச் செல்லலாம் என முடிவாகியது. அங்கிருந்து சற்று தூரம் சென்றால் தமிழ் நாட்டின் புகழ் மிக்க உணவகமான சரவணபவன் எங்களை வரவேற்றுக் கொண்டிருந்தது. சரவணபவன் உணவகத்தில் உணவருந்தும் வாய்ப்பை நழுவ விடலாமா..?




சாதம் இட்லி வடை என தமிழ் நாட்டு ஸ்பெஷல் உணவை சுவைத்து சாப்பிட்டோம். எனது அலுவலக நண்பருக்கும் தமிழ் உணவின் இது முதல் அனுபவம். அவருக்கு மெது வடையும் தேங்காய் சட்னியும் மிகவும் பிடித்து விட்டது.

நல்ல உணவருந்தி பிறகு சற்று லா சாப்பல் பகுதி கடைகளை பார்த்து விட்டு புறப்பட்டோம். குளிர் மிக அதிகமாகிக் கொடிருந்தாலும் சாலையில் மக்கள் போக்குவரத்து கொஞ்சமும் குறையவில்லை. பாரீஸ் மெட்ரோவின் சேவை பிரமாதம் ஒவ்வொரு 3 நிமிடத்திற்கும் ஒரு மெட்ரோ என நமது பயணத்தை சுலபமாக்குகின்றது.

அடுத்து தொடர்ந்து Notre-Dame, conciergie, concorde, Pyramid, Musee de louvre ஆகியவற்றின் படங்களையும் நேரம் கிடைக்கும் போது பகிர்ந்து கொள்கின்றேன்.

அன்புடன்
சுபா

No comments:

Post a Comment