Friday, June 25, 2021

பிரான்ஸ் பயணக்குறிப்பு - 2

 நமது வாழ்க்கை இப்போது கொரோனாவுக்கு முன் (கொ.மு) கொரோனாவுக்கு பின் (கொ.பி) என்ற நிலையில்தான் இருக்கிறது. முன்னரெல்லாம் எங்காவது பயணம் செல்ல வேண்டும் என்றால் விடுமுறை எடுத்தாகிவிட்டதா... தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டோமா.. என்பதோடு நமது தயாரிப்பு இருக்கும். ஆனால் இன்றைய காலகட்டத்திலோ, கொரோனா தொடர்பான எல்லாவித கட்டுப்பாடு நடவடிக்கைகளையும் கவனிக்க வேண்டும் என்பதிலேயும் நாம் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது.

தெனாலி திரைப்படத்தில் கமலஹாசன் தவிப்பது போல.. எங்கும் பயம் எதிலும் பயம் என்பது போலவே சில வேளைகளில் நானும் உணரத் தொடங்கி இருக்கிறேன்.🙂 நம்மிடம் இருக்கும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் போதுமானதா.. இல்லையா.?. பிரான்ஸ் வந்த பிறகு பிரான்ஸிலிருந்து திருப்பி அனுப்பிவிடுவார்களா..? பிரான்சில் நாம் செல்லும் இடங்களில் எப்படிப்பட்ட சோதனைகள் இருக்கும்? பிரெஞ்சுக்காரர்கள் மறந்தும்கூட வேற்று மொழி பேச மாட்டார்களே.. அவர்களிடம் ஆங்கிலத்திலும் ஜெர்மானிய மொழியிலும் எந்த விளக்கங்களையும் கூறி சமாளிக்க முடியாதே... இப்படி வெவ்வேறு கோணத்திலும் பயம்.
சிலவேளைகளில் பயம் பூதாகாரமாக இருக்கும். ஆனால் உண்மை நிலையோ அதற்கு நேர்மாறாக இருக்கும். அப்படித்தான் பிரான்சுக்கான எனது இந்தப் பயணமும் அமைந்தது.
ஜெர்மனி எல்லை கடந்து ரைன் நதியைப் பார்த்துக்கொண்டே பிரான்சில் நுழைந்தோம். சாலையில் எங்கும் சிறப்பு பாதுகாப்புப் படைகளைக் காணவில்லை. சரி.. பிரான்சு சாலையில் செல்லும்போது தான் சுங்கவரி அதாவது டோல் கட்ட வேண்டி இருக்குமே. அங்கு தான் இந்தக் காவல்துறையினர் காத்திருப்பார்கள் போல. நமக்கு அங்குதான் கொரோனா சோதனைகள் செய்வார்கள் போல என்று மனதில் ஒரு எண்ணம் தோன்றியது.
ஏறக்குறைய ஒரு மணி நேர சாலை பயணத்திற்குப் பின்னர் முதல் டோல் நிலையம் இருப்பதை தூரத்தில் இருந்து பார்க்க முடிந்தது. ஓரிரு காவல்துறையினர் இரண்டு பக்கமும் நின்று கொண்டிருந்தார்கள், கையில் பெரிய துப்பாக்கி ஏந்தியபடி.
காவல்துறையினரைக் கண்டால் பொதுவாக எனக்கு பயம் இருப்பதில்லை. ஏனெனில் ஐரோப்பாவைப் பொறுத்தவரை சாலை விதி முறைகளைக் கடைபிடித்து நடப்பவர்களுக்குக் காவல்துறையினர் எந்த பிரச்சனையும் ஏற்படுவதில்லை; மாறாக அன்பாகவே பழகுவார்கள்.
ஆனால் கொரோனா தொடர்பான சோதனை செய்யும் அதிகாரிகள் இருப்பார்களோ, என்று மட்டுமே என் கண்கள் தேடத் தொடங்கின. என்ன ஆச்சரியம்.. ஒருவர்கூட கண்களில் தென்படவில்லை.
காவல்காரர்களும் எந்த ஒரு கேள்வியும் கேட்காமல் கையைக் காட்டி, போ போ போ என்று அனுப்பி வைப்பதிலேயே குறியாக இருந்தார்கள். ஜெர்மனியில் அச்சத்தோடு இருந்தோமே... எங்கே பிரான்சில் கடுமையான சோதனை இருக்கும் போல என்ற எண்ணத்துடன், ஆனால் இங்கோ சாலையில் எந்தவித சோதனையும் இல்லை. த்ரில் குறைந்து சப்பென்று ஆகிவிட்டது. 🙂
அடுத்தடுத்து வந்த டோல் நிலையங்களிலும் எந்த சோதனைகளும் இல்லை. அதுமட்டுமல்ல. பிரான்ஸில் இருந்த நான்கு நாட்களும் எங்கும் யாரும் எங்களிடம் கொரோனா தொடர்பான சான்றிதழ்களைக் கேட்கவும் இல்லை. கோடைகாலம் வந்ததில் அனைவருக்கும் ஒருவித விடுமுறைக்கால சிந்தனை வந்திருக்கும் போல!
ஜெர்மனியில் வாகனம் ஓட்டுபவர்கள் பிரான்சுக்குள் நுழைந்தால் தெளிவான வித்தியாசத்தைக் காண முடியும். அதிலும் குறிப்பாக பாரிசை நெருங்க நெருங்க கன்னாபின்னாவென்று வாகனம் ஓட்டுபவர்கள் பலர் நம்மைத் தாண்டி கொண்டு செல்வதைக் காண முடியும். நமது காரைப் பத்திரமாக எங்கும் யாரும் உரசாமல் நாம் கொண்டுவருவதே மிகப் பெரிய சவால் தான். நாம் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் உள்ளே நுழைகிறார்கள். நம்மைத் தாண்டிக் கொண்டு ஓடுகிறார்கள். நாம் தான் 360 டிகிரி கவனமாக நமது பார்வையைச் சாலையில் வைத்து வாகனத்தைச் செலுத்த வேண்டியதாக இருக்கிறது.
ஜெர்மனியை விட பிரான்ஸ் குறிப்பிடத்தக்க வகையில் சில வித்தியாசங்களைக் கொண்டிருக்கிறது. அதில் மிக முக்கியமான ஒன்று இங்குள்ள மிக அழகான கலைநயத்துடன் உருவாக்கப்பட்ட கட்டடங்கள் எனலாம். ஒன்றிலிருந்து ஒன்று மாறுபட்ட வகை என்ற வகையில் கட்டடக் கலைகளின் தாயகமாக பிரான்ஸ் திகழ்கிறது. இன்றைக்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்டவை ஒரு வகை என்றால் கடந்த 1000 ஆண்டுகளில் உருவான கட்டிடங்களில் வடிவமைப்புகள் என்பது பல்வேறு வகையில் அமைந்து நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன. கோத்திக் வடிவ கட்டடங்களில் வெவ்வேறு காலகட்டங்களில் ஏற்பட்ட கலை பண்பாட்டு மற்றங்களை உள்வாங்கி வளர்ந்த கட்டிடக் கலையின் வடிவங்கள் பிரான்சில் கொட்டிக் கிடக்கின்றன.
கட்டிடக் கலையையும் கட்டிடங்களின் வடிவங்களையும் ரசிக்கும் என்னை போன்றவர்களுக்குப் பிரான்ஸ் ஒரு அமுத சுரபி.
தொடர்வேன்..
-சுபா







No comments:

Post a Comment