அங்கோரில் சில நாட்கள் - 11
17.மே.2018
ஆக் யோம் புராதனக் கோயிலிருந்து புறப்பட்டு ஒரு புதிய கோயிலை எங்களுக்குக் காட்டுவதற்காக எங்கள் பயண வழிகாட்டி திரு.பெய் எங்களை அழைத்துச் சென்றார். மலைப்பகுதியிலிருந்து நகர்ப்பகுதியை வந்தடைந்தோம்.
வழியில் வரும் போது திரு.பெய் எங்களுக்கு கம்போடியா பற்றிய சில தகவல்களைச் சொல்லிக்கொண்டே வந்தார். முதல் நாள் தூக்கம் போதாமையால் எனக்கு அலுப்பு கூடிக்கொண்டேயிருந்தாலும் அவர் கூறிய சுவாரசியமான செய்திகளைக் கேட்டுக் கொண்டும் எனது குறிப்பு நூலில் எழுதிக் கொண்டும் பாதி தூக்கத்தோடு நான் பயணம் செய்து கொண்டிருந்தேன். கம்போடியாவில் கிபி 6ம் நூற்றாண்டு வாக்கில் பெண்கள் செய்த புரட்சி ஒன்றைப் பற்றி அவர் குறிப்பிட என் பாதி தூக்கமும் உடனே கலைந்தது. சுவாரசியமான கதை அது.
புரட்சி இல்லையேல் பெண் விடுதலை ஏது?
உலகம் முழுவதுமே பெண்களுக்கான சுதந்திரம் என்பது விடுதலை புரட்சிகளால் தான் உருவாக்கப்பட்டது. இறுக்கமான ஆணாதிக்க சமூகத்தில் பெண்களுக்கான சிந்தனைச் சுதந்திரம், செயல்படும் சுதந்திரம், பொருளாதாரச் சுதந்திரம், முடிவெடுக்கும் சுதந்திரம் என எல்லாமே போராட்டங்களுக்கும் புரட்சிகளுக்கும் பின்னர் தான் சாத்தியப்பட்டிருக்கின்றன.
இந்தக் கதையும் அப்படித்தான். திருமணத்திற்கு ஆண் வீட்டாருக்குப் பெண் வீட்டார் வரதட்சணை கொடுக்கும் வழக்கம் தான் முன்பு இருந்திருக்கின்றது. இதனை எதிர்த்துத் தகர்த்தெறியும் வகையில் ஒரு முயற்சி கி.பி.6ம் நூற்றாண்டில் நிகழ்ந்திருக்கின்றது. இதன்படி க்மெர் பெண்கள் பலமானவர்களா ஆண்கள் பலமானவர்களா என்பதே இப்போட்டி.
இப்போட்டியில் யார் அதிகம் மணலைத் திரட்டி உயர்ந்த மலையை உருவாக்குகின்றனரோ அவர்கள் வெற்றியாளர்கள். ஆக, இருபாலரும் மண்திரட்டி மலையை உருவாக்கத் தொடங்கினர். இருள் மறைந்து சூரியன் வருவதற்குள் மலைகள் உருவாக்கம் முடிந்து விட வேண்டும். பெண்கள் ஒரு பகுதியில் விளக்கினைக் கட்டி வெளிச்சம் வந்து விட்டது போல ஆண்களை நம்ப வைத்து விடுகின்றனர். ஆண்களும் அதனை நம்பி மலை உருவாக்கும் பணியை விட்டு விடுகின்றனர். பெண்கள் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மேலும் மேலும் மணலைச் சேர்த்து உயரமான மலையை உருவாக்கி வெற்றியாளர்களாக ஆகின்றனர். வெற்றி பெற்றதால் பெண்கள் இனி ஆண்களுக்கு வரதட்சணை தரவேண்டியதில்லை என்று முடிவாகின்றது. அன்றிலிருந்து திருமணத்திற்குப் பெண்கள் வர தட்சணை கொடுக்கும் பழக்கமும் கம்போடியாவில் இல்லாது ஒழிந்தது.
கம்போடியாவில் பெண்கள் செய்த இந்த எளிய புரட்சியைக் கூட நம் தமிழ் சமூகத்தில் நாம் இன்னும் செய்யவில்லையே. இது அவமானமல்லவா?
ஒரு ஆணைத் திருமணம் செய்ய ஒரு பெண் இவ்வளவு வரதட்சணை தரவேண்டும் என்ற பெண்களைத் தரம் தாழ்த்தும் ஒரு விசயத்தை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டு அதனை மரபாக நினைத்து நடைமுறையில் இன்னமும் வரதட்சணையை வளர்க்கும் நம் தமிழ் மக்களின் சிந்தனையைப் பற்றி பேசிக் கொண்டே எங்கள் பயணம் தொடர்ந்தது. இன்று வரையில் தமிழகத்திலும் சரி, இலங்கையிலும் சரி, புலம்பெயர்ந்த ஐரோப்பா, கனடா ஆகிய நாடுகளிலும் சரி, படித்து வேலையிலிருந்தாலும் பெண்கள் வீட்டார் வரதட்சணையை மகிழ்ச்சியோடு கொடுக்கின்றனர்; மாப்பிள்ளை வீட்டார் கூச்சமின்றி வாங்கிக் கொள்கின்றனர்; இருவாலருக்கும் எந்த வித அவமான உணர்வும் இன்றி. (மலேசிய சிங்கைச் சூழலில் வரதட்சணை என்பது ஏறக்குறைய வழக்கிலிருந்தே மறைந்து விட்டது.)
ஆங் செக், ஆங் சோம் (Ang Chek and Ang Chom) கோயிலை வந்தடைந்தோம். பெண் தெய்வங்கள் கருவறையில் வழிபடப்படும் வகையில் அமைக்கப்பட்ட ஒரு கோயில் இது.
ஆங் செக், ஆங் சோம் இருவரும் கம்போடிய இளவரசிகள் என்றும் இவர்கள் பௌத்த மடாலயத்தை உருவாக்கியவர்கள் என்றும் திரு.பெய் விளக்கமளித்தார். இந்த வெண்கலச் சிற்பங்கள் இரண்டும் சிலை கடத்தல்காரர்களால் திருடப்படும் அபாயத்திலிருந்து பல ஆண்டுகள் பாதுகாக்கப்பட்டு பின்னர் 1990ம் ஆண்டு இக்கோயில் நகர மையத்தில் எழுப்பப்பட்டு இங்கு இந்த இரு பெண் துறவிகளின் சிற்பங்களும் வைக்கப்பட்டு வழிபடப்படுகின்றன. தாமரை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, ஊதுபத்திகளின் மணம் நிறைந்து, இனிய இசைக்கருவிகளின் இசைப்பின்னனியில் இங்கு தெய்வீகத்தன்மை நிலவுவதை அனைவருமே உணர்ந்தோம்.
தொடரும்..
சுபா
சுபா
No comments:
Post a Comment