அங்கோரில் சில நாட்கள் - 12
17.மே.2018
ஆங் செக், ஆங் சோம் பெண் தெய்வக் கோயிலில் சுற்றுப்பயணிகள் நிறைந்திருந்தனர். வாசலில் சோதிடம் பார்ப்பவர் ஒருவர் பனை ஓலைச்சுவடிக் கட்டுக்களை வைத்துக் கொண்டு சோதிடம் பார்க்க வருபவர்களுக்காகக் காத்திருந்தார். சோதிடமும் கம்போடிய மக்களின் வாழ்க்கையில் ஒரு நம்பிக்கையாக இருக்கின்றது என அறிந்து கொண்டோம்.
அந்தப் பகுதி நகர மையப்பகுதி என்பதோடு கம்போடிய மாமன்னர் நொரோடோம் சிகாமணி (Norodom Sihamoni) அவர்களின் விடுமுறைக் கால அரசமாளிகை இருக்கும் பகுதியும் கூட. இன்றைய மாமன்னர் 2004ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14ம் தேதி அரசராக பதவியேற்றிருக்கின்றார். அக்டோபர் 14 எனது பிறந்த தேதி. மாமன்னரின் பெயரோ சிகாமணி. என்ன ஒற்றுமை என மனம் குதூகலிக்காமலில்லை. சிகாமணி என்ற பெயர் கம்போடியாவில் வழக்கில் இருப்பது போல பண்டைய எகிப்திலும் உண்டு. வட சூடானின் எகிப்து எல்லையில் இருந்த ஒரு கோயிலின் பெயர் சிகாமணி கோயில். இதனை ஸ்பெயின் நாட்டிற்குப் பரிசாக எகிப்து வழங்கியது. இக்கோயில் இன்று ஸ்பெயின் தலைநகர் மட்ரிட் நகரில் இருக்கின்றது. (எனது அருங்காட்சியகப் பதிவு ஒன்றில் இக்கோயிலைப் பற்றி எழுதியுள்ளேன். காண்க)
கம்போடிய மாமன்னர் நொரோடோம் சிக்கானுக்கின் மகனாக 1953ம் ஆண்டு பிறந்தவர் நொரோடோம் சிகாமணி. தனது வாழ்நாளில் பெரும்பகுதியை செக்கோஸ்லோவாக்கியாவின் ப்ராக் நகரில் கழித்தவர். இவர் ஒரு கம்போடிய பாரம்பரிய நடனக்கலை பயிற்றுநராகவும் இருக்கின்றார் என்பது ஆச்சரியம் அல்லவா. ப்ராக் ஐரோப்பாவின் கலாச்சார நகரங்களில் ஒன்று. ப்ராக் நகரம் இம்மன்னரை ஈர்த்ததில் அதன் கலைவளம் காரணமாக இருக்கலாம் என்றே கருதுகிறேன். இவர் ஆங்கிலம், க்மெர், செக், பிரஞ்சு, ருசிய மொழிகள் பேசத்தெரிந்தவர்.
நொரோடோம் சிகாமணி மன்னராக அரியணையேறிய போது அவருக்கு கீழ்க்காணும் இந்தப் பெயர் வழங்கப்பட்டது. ”Preah Karuna Preah Bat Sâmdach Preah Bâromneath Norodom Sihamoni Saman Bhumichat Sasana Rakkhata Khattiya Khmeraratrat Putthintra Mohaksat Khemareacheana Samuhobhas Kampuchea Ekareacharath Bureanasanti Subheamagala Sirivibunla Khmera Sri Bireat Preah Chao Krung Kampuchea Dhibodi (in romanized Khmer)” இதில் உள்ள சமஸ்கிருதச்சொற்களை வாசிக்கும் போதே எளிதாக அடையாளம் காண முடிகின்றதல்லவா?
மாமன்னரின் விடுமுறைகால மாளிகைக்கு முன்புறத்தில் ஒரு பூந்தோட்டத்தை அமைத்திருக்கின்றனர். இங்கு பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் நிறைந்திருக்கின்றனர்.
இதே பகுதியிலேயே மைய சாலையின் நடுவில் ஒரு சிறிய கோயில் இருக்கின்றது. உள்ளே வீரன் போன்ற ஒரு வடிவத்தில் ஒரு கருங்கல் சிலையை வைத்து மக்கள் வழிபடுகின்றனர். இந்தச் சிலையை பார்க்கும் போது மதுரை வீரன், சுடலை மாடன் போன்ற கிராமப்புற வழிபாட்டுக் கூறுகளின் பிரதிபலிப்பாகவே இது தென்படுகின்றது.
பண்டைய க்மெர் பேரரசு வைணவ சைவ வழிபாட்டுக் கூறுகளை மையப்படுத்தி கோயில்கள் கட்டுமானத்தில் வைணவ, சைவக் கூறுகளை வெளிப்படுத்தின. விஷ்ணுவின் வடிவமும் சிவலிங்க வடிவங்களும், பார்வதி, லட்சுமி சிற்பங்களும் பண்டைய க்மெர் மன்னர்களின் கோயில் அமைப்புக்களில் இடம் வகித்த முக்கிய தெய்வங்களாக அமைந்தன. கி.பி.12ம் நூற்றாண்டுக்குப் பின்னர் க்மெர் பேரரசு பௌத்த மதத்தை ஏற்ற பின்னர் புத்த மத வழிபாட்டுக் கூறுகள் கோயில் கட்டுமானங்களில் பிரதிபலிக்கத் தொடங்கின. இன்று கம்போடியாவின் அரச மதம் பௌத்தம். 95 விழுக்காடு மக்கள் தொகையினர் பௌத்த மதத்தைப் பேணுபவர் என்றாலும் சிறிய எண்ணிக்கையில் கிராமப்புற நாட்டார் வழிபாடுகளும் வழக்கில் இருக்கின்றன. சியாம் ரீப் பகுதியில் பல இடங்களில் சிறிய கோயில்களில் கிராம தெய்வங்களின் சிலைகள் வைக்கப்பட்டு வழிபடப்படுவதையும் காணக்கூடியதாக உள்ளது. அந்த வகையில் அமைந்த ஒரு கிராமப்புற கோயிலைப் பார்த்து பின் அங்கிருந்து புறப்பட்டோம்.
கட்டுமரம் உணவகத்திற்குத் திரும்பி அங்கு எங்களுக்காகத் தயாராகியிருந்த மதிய உணவை சாப்பிட்டு விட்டு அங்கிருந்து நான் அங்கோர் அருங்காட்சியகம் செல்வதாகத் திட்டமிட்டிருந்தேன். ஏனெனில் கம்போடியாவில் அருங்காட்சியகங்கள் மாலை 5 மணிக்கெல்லாம் மூடிவிடுகின்றனர். ஆக, மதியம் 2 மணிக்கு முன்னராக உணவகத்திற்குத் திரும்பி விட வேண்டும் என எங்கள் பயண வழிகாட்டி திரு.பெய்யை அவசரப்படுத்த, கட்டுமரம் நோக்கி எங்கள் வாகனம் புறப்பட்டது.
குறிப்பு:https://en.wikipedia.org/wiki/Norodom_Sihamoni
தொடரும்..
சுபா
No comments:
Post a Comment