18.மே.2018
புனோம் குலேன் மலைப்பகுதியில் முதலில் நாங்கள் 1000 லிங்கங்கள் ஆற்றில் உருவாக்கப்பட்டிருக்கும் அமைப்பை பார்த்துவிட்டு அதனை அடுத்து மேலும் மலையில் பயணித்து அங்கிருக்கும் பவுத்த மடாலயத்தைக் காணச் சென்றோம். இந்தப் பகுதிகளிலெல்லாம் சிறிய கடைகளை வைத்துக் கொண்டு சிலை விற்பவர்கள் இருக்கின்றார்கள். இவர்கள் பழமையான தெய்வ வடிவங்களின் சிலைகளை வருகின்ற சுற்றுப்பயணிகளிடம் இவை அகழ்வாராய்ச்சியில் கிடைத்தவை எனக் குறிப்பிட்டு விற்கின்றனர். வெண்கலத்திலும் ஏனைய உலோகங்களாலும் செய்யப்பட்ட சிற்பங்கள் பல இங்கு கிடைக்கின்றன. ஆர்வக் கோளாறில் இவற்றை வாங்கினால் பின்னர் விமான நிலையத்தில் சுங்கச்சாவடியில் காவல் அதிகாரிகள் இவற்றை பறிமுதல் செய்து விடுவர். ஆக இப்பகுதிகளுக்குப் பயணம் செல்பவர்கள் அங்கு கிடைக்கும் இவ்வகை உலோக பொம்மைகளைப் பார்த்து இவை அங்கோர் கோயிலில் கிடைத்த சிலைகளோ என நம்பி ஏமாந்து வாங்கி பின்னர் சிலை கடத்தும் பேர்வழிகளோ என காவல் அதிகாரிகள் நினைத்து பிடித்து சிறையில் அடைத்து விடுவார்கள். இதனை இங்கு செல்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது மிக அவசியம்.
2ம் ஜெயவர்மன் பற்றியும், முதலாம் சூரியவர்மன் பற்றியும் சென்ற பதிவுகளில் குறிப்பிட்டேன். ஆனால் இன்று நமக்கெல்லாம் உலக அதிசயங்களில் ஒன்றாகத் திகழும் அங்கோர் வாட் கட்டிய மன்னனைப் பற்றியும் புத்தரின் முகங்களுடன் இருக்கும் பாயோன் கோயிலைக் கட்டிய மன்னனைப் பற்றியும் இன்னமும் நான் சொல்லவில்லை அல்லவா?
இந்தக் கோயில் கட்டுமான பிரம்மாண்டங்களைக் எடுப்பித்தவர்கள் பற்றியும் அவர்கள் கால அரசியல் விஷயங்களைப் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டியது கம்போடியா பற்றி அறிந்து கொள்ள விழைபவர்களுக்கு மிக அவசியமானது. அத்தகவல்களைப் பிறகு தருகிறேன். இன்று மேலும் புனோம் குலேன் பகுதியில் நாங்கள் சென்று கண்ட மேலும் ஒரு பகுதியைப் பற்றியும் அதன் சுற்று வட்டாரக் காட்சிகளைப் பற்றியும் சற்று விவரிக்கின்றேன்.
பவுத்த மடாலயம் இருக்கும் பகுதியிலிருந்து மேலும் சிறிது தூரம் வாகனத்தில் பயணம் செய்தால் அங்கிருக்கும் நீர்வீழ்ச்சியை வந்தடையலாம். இப்பகுதியில் ஆற்றிலேயே மகாவிஷ்ணு. லட்சுமி, பிரம்மா ஆகியோரது சிற்பங்களை வடித்திருக்கின்றனர். இதுவும் 2ம் ஜெயவர்மன் காலத்து அமைப்பாக இருக்கும் என்றே எண்ணத்தோன்றுகின்றது.
நீர்வீழ்ச்சி இருக்கும் இடத்தின் ஒரு பகுதியில் ஒரு பழமையான கோயிலின் எஞ்சிய செங்கற்படிமங்கள் காணக்கிடைக்கின்றன. இவை அன்னாளில் இங்கு இயங்கிய ஒரு கோயிலின் எஞ்சிய கட்டுமானப் பகுதியே.
இப்பகுதியில் இரு பக்கங்களிலும் சுற்றுப்பயணிகளைக் கவரும் வகையில் கடைகள் அமைத்திருக்கின்றனர். இங்கும் சிலைகள் விற்கின்றனர். அதோடு ஆடைகளும், உணவுப் பொருட்களும் கிடைக்கின்றன. கம்போடியாவின் உணவில் சாலையோர உணவு வகைகள் எனும் போது பொறித்த மீன். பொறித்த பூச்சிகள், ஈசல்கள், கரப்பான் பூச்சிகள், புழுக்கள், பறவைகள் என விதம் விதமாக பெண்கள் கடைகள் போட்டு விற்றுக் கொண்டிருப்பதைக் காணலாம்.
ஆசிய நாடுகளில் குறிப்பாக தாய்லாந்து, கம்போடியா, லாவோஸ், வியட்நாம் ஆகிய நாடுகளில் பூச்சிகளையும், புழுக்களையும் பொறித்து உண்ணும் பழக்கம் உள்ளது. ஒவ்வொரு இன மக்களின் வழக்கத்தில் ஒவ்வொரு வகை உணவுப் பழக்கம். இத்தகைய வித்தியாசமான உணவுப் பழக்கங்கள் தொடர்பான செய்திகளை அறிந்து கொள்வதும் சுவாரசியம் தான்.
Video:
https://www.facebook.com/subashini.thf/videos/2184092571834128/
தொடரும்..
சுபா
No comments:
Post a Comment