Apr 24 - May 08, 2012
லா பல்மாவில் சில நாட்கள் சுற்றிய கதையை உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன்.
ஆப்பிரிக்க கண்டத்தின் வடக்கில் மேற்குப் பகுதியில் மரோக்கோவிற்கு சற்றே தூரத்தில், ஐரோப்பிய கண்டத்தின் கீழ் பகுதியில் அமைந்துள்ளன கனேரித் தீவுகள். இந்த தீவுக் கூட்டத்தில் ஒன்று தான் லா பல்மா. இந்த கனேரித் தீவு கூட்டத்தில் லா பல்மா, பூட்டர்வெண்டுரா, தெனெரிஃப, க்ரேன் கனேரியா, லான்ஸ்ரோட்ட, லா கொமேரா, எல் ஹியரோ, லா க்ரேசியோசா, அல் க்ரான்ஸா, ஐல் டி லாபோஸ், மொண்டானா க்ளாரா, ரோக் டெ எல்ஸ்டா, ரோக் டெல் ஒஸ்டெ ஆகிய தீவுகள் உள்ளன. இவற்றில் ஏற்கனவே நான் லா கொமேரா, க்ரேன் கானேரியா, தெனெரிஃப ஆகிய தீவுகளில் சில நாட்களை கடந்த ஆண்டுகளில் கழித்திருக்கின்றேன். இந்த தீவுகள் அனைத்தும் ஸ்பெயின் நாட்டைச் சார்ந்தவை.ஆக, சந்தேகமில்லாமல் ஸ்பானிஷ் மொழிதான் இந்த மக்கள் பேசும் அதிகாரப்பூர்வ மொழியாக அமைகின்றது.
ஜெர்மானியர்கள் சுற்றுலா செல்வதில் வல்லவர்கள். அதிலும் குறிப்பாக தெற்கு இத்தாலி, கிரேக்கம், தெற்கு துருக்கி, கனேரி தீவுகள் போன்றவற்றில் ஜெர்மானியர்களின் வருகை ஆண்டு முழுதும் நிறைந்திருக்கும். இதனை நிரூபிக்கும் நிலையாக நான் இதுவரை சென்று வந்துளள்ள மூன்று தீவுகளிலும் ஸ்பெயின் மொழிக்கு அடுத்த நிலையில் அதிகம் புழங்கப்படுவதும் எல்லா அரசாங்க இடங்களிலும் பயன்படுத்தப்படும் நிலையிலும் டோய்ச் மொழி அமைந்திருப்பதை நேராகப் பார்த்து அறிந்து கொள்ள முடிந்தது. டோய்ச் மொழியில் பேச வாய்ப்பமைந்ததால் உரையாடலுக்கும் எனக்கு இத்தீவுகளில் பிரச்சனை இல்லாமல் போய் விட்டது பெரிய அனுகூலமாக அமைந்தது எனலாம்.
நான் 2 மாதங்களுக்கு முன்னரே இந்த பயணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தேன் இப்பயணத்தில் ஐந்து முறை நீண்ட மலைப்பகுதி நடையை நான் இருவரும் மேற்கொண்டேன். ஐந்துமே ஐந்து வகை வித்தியாசமான அனுபவங்களை எங்களுக்குத் தந்தது. இவற்றை சற்று விளக்கி இந்தத் தீவை மின் தமிழ் வாசகர்களுக்கு சற்றே அறிமுகப்படுத்தலாம் என்பதே எனது இந்த இழைக்கான அபிப்ராயம். இயற்கை விரும்பிகளுக்கு கண்கொள்ளாக் காட்சிகளாக சில நல்ல புகைப்படங்களை வழங்கலாம் என்றும் நினைத்திருக்கின்றேன்.
ஒவ்வொரு பயனத்தின் போதும் என் பயணப் பெட்டியில் சில நூல்கள் இருக்கும். இந்த முறை 3 நூல்களைக் கையோடு கொண்டு சென்றிருந்தேன். அவை மூன்றையும் படித்தாகி விட்டதில் எனக்கும் மகிழ்ச்சி. அதில் ஒன்று உ.வே.சாவின் "என் சரித்திரம்". 3 ஆண்டுகளுக்கு முன்னர் வாங்கிய நூல். இப்போதுதான் வாசிக்கும் வாய்ப்பு அமைந்தது. ஓலைச் சுவடி என பேச்சு ஆரம்பித்தாலே உ.வே.சா வின் பெயர் நம் மனக்கண் முன்னே ஓடும். அவரது சொந்த எழுத்திலேயே அவர் சரிதம் படிக்கும் போது சொல்லொணாத உவகை ஏற்படுகின்றது. வாசித்து முடித்த போது உ.வே.சா என்னும் ஒரு தமிழ்மாணவர்/அறிஞர், மீனாட்சி சுந்தரம் பிள்ளை எனும் ஒரு பேரறிஞர், உ.வே.சாவுக்கும் மீனாட்சி சுந்தரம் பிள்ளைக்கு இருந்த விலை மதிக்க முடியாத அன்பு, இவர்களுக்கிடையிலான ஆசிரிய மாணவர் உறவு, தந்தை மகற்காற்றும் உதவி, சிந்தாமணி பதிப்புக்கு உ.வே.சாவின் தளரா முயற்சியும் உழைப்பும், திருவாவடுதுறை சைவ மடத்தின் பெருஞ் சிறப்பு, மடாதிபதி சுப்ரமணிய தேசிகரின் தமிழ்ப்பணியும் சிறப்புக்களும், மணிமேகலை பதிப்பு, அக்காலத் தமிழ்க் கல்வியின் தரம் நிலை போன்றவை மிகத் தெளிவாக நம் கண் முன்னே தெரிகின்றன. அவ்வளவு உயிரூட்டமுள்ள வரிகள் ஒவ்வொன்றும். இதனை வாசித்த போது தனியாக ஒரு இழை தொடங்கி என் சரித்திரத்தில் என் மனதை கவர்ந்த சில பகுதிகளைப் குறிப்பிட்டு மின் தமிழ் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் எனத் தோன்றியது. அந்த இழை விரைவில் மின் தமிழில் தொடங்கும்.
இனி சில லா பால்மா காட்சிகளையும் செய்திகளையும் தொடர்ந்து இந்த இழையில் வழங்குகின்றேன்.
அன்புடன்
சுபா
2 comments:
அழகான பயணம். நல்ல நூலையும் வாசித்திருக்கிறீர்கள். இன்னும் கொஞ்சம் புகைப்படங்கள் இணைத்திருக்கலாம்.
நிறைய புகைப்படங்கள் இணைக்க உத்தேசித்துள்ளேன். ஒவ்வொரு பதிவுலும் அவை இடம் பெறும். பார்த்து வாருங்கள்.
அன்புடன்
சுபா
Post a Comment