Sunday, August 12, 2012

லா பல்மாவில் நடையாக நடந்த கதை - 13

வடக்கே ஒரு பயணம்

எரிமலைகளால் உருவான ஒரு தீவு லாபல்மா என்பதை முன்னர் குறிப்பிட்டிருந்தேன். சிறிய தீவுதான் என்றாலும் தீவு முழுக்க ஒரே மாதிரியான இயற்கை சூழல் என்றில்லாமல் சில குறிப்பிடத்தக்க வித்தியாசங்களைத்  தீவின் பல பகுதிகளில் காண முடிகின்றது.




உதாரணமாகத் தெற்கு பகுதி முழுக்க எரிமலைக்கற்களின் கருமை நிறம் மாறாத நில அமைப்பு..கருமணல்... வடிவத்திற்கு பெயர் சொல்ல முடியாத வகையில் அமைந்த எரிமலை கற்பாறைகள்..   பரந்து விரிந்த வாழை தோப்புக்கள்... என நிறைந்த குதி தெற்குப் பகுதி. வடக்குப் பகுதியில் பைன் மரக்காடுகள் அடந்த பகுதி. மக்கள் குடியிருப்பு இங்கு நிறைந்திருக்கின்றது
.


லா பல்மா தீவின் வடக்குப் பகுதியில் ஆங்காங்கே ட்ராகன் மரங்களை பார்க்க முடிகின்றது. சாயலில் சற்று பனை மரத்தை ஒத்திருந்தாலும் இவை வித்தியாசமாக, அளவில் மிகப் பெரியனவாக அமைந்துள்ளன. இவ்வளவு பெரிய மரத்திற்கும் ஒரு சிறு விதைதான் காரணமாக அமைகின்றது. சாலையில் செல்லும் போதே சில இடங்களில் ட்ராகன் மர விதைகள், ஒரு விதை  1 யூரோ என்ற வகையில் விற்பனைக்கு வைத்திருப்பதால் வாங்க விரும்புபவர்கள் வாங்கிக் கொள்ளலாம். இவை எல்லாவித சூழலிலும் வளரக் கூடிய மரங்களல்ல. இந்த மரத்தைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் இணையத்தில் Dracaena  என்று குறிப்பிட்டு விக்கியில் http://en.wikipedia.org/wiki/Dracaena_(plant) பார்க்கலாம்.


நன்றி: கூகள் மேப்ஸ்

எங்களின் 5வது அதாவது இறுதியான நடை பயணத்தை வடக்கில் லாஸ் ட்ராஸியாஸ் எனும் பகுதியில் அமைத்திருந்தோம். லாஸ் ட்ராஸியாஸ் நகரின் மையத்தில் அமைந்திருக்கும் ஒரு தேவாலயத்தின் முன்னர் வாகனத்தை நிருத்தி விட்டு அங்கே நடை பயணர்களுக்காக அமைக்கப்பட்டிருக்கும் பாதையைப் பார்த்து கண்டு பிடித்து நடைப்பயணத்தைத் தொடங்குவதில் அதிகம் சிரமம் ஏற்படவில்லை.

குடியிருப்பு பகுதிகளை கடந்து தான் இப்பயணம். லாஸ் ட்ராஸியாஸிலிருந்து மேற்கு பக்கமாக நோக்கி கடல் பகுதி வரை சென்று வர பயணக் குறிப்பு விளக்கம் நன்கு அமைந்திருந்தது.



இப்பகுதி மக்கள் கலை நயம் மிக்கவர்கள். இயற்கை விரும்பிகள். அழகுணர்ச்சி மிக்கவர்கள். இது மிகைபடுத்தி சொல்லக்கூடிய ஒன்றன்று. ஒவ்வொரு வீடுகளும் பூக்கள் பூத்துக் குலுங்கும் வணங்களாகத் தான் காட்சியளிக்கின்றன. ரோஜாவில் பல வகை, போகன் வில்லாவில் பல வகை, காக்டஸ் வகைகளில் பல வகை, மெடிட்டரேனியன் சீதோஷ்ணத்திற்கு ஏற்ற பற்பல தாவர வகைகள்.. பேரெழில் கொண்ட பூங்கா என்று தயங்காமல் சொல்லிக் கொள்ளலாம். ஆனால் இவையனைத்தும் ஒவ்வொருவருவரும் தங்கள் தங்கள் இல்லங்களில் உள்ள சிறு தோட்டப்பகுதியைத் தாவரங்களைக் கொண்டு அழகு செய்து வைத்திருக்கும் நிலையினால் இந்தப் பகுதியே வர்ணக்கலைவையாகக்  காட்சியளிக்கின்றது.



ஆங்காங்கே கற்களுக்கு இடையே வந்து க்ரீச்சிட்டு செல்லும் பல்லிகள் (lizard). இவற்றில் சில நாங்கள் நடந்து செல்வதனால் ஏற்படும் சலனத்தை அறிந்து பதுங்கிக் கொள்ள அசைவது நமக்கு அவை அங்கிருப்பதைக் காட்டிக் கொடுத்து விடுகின்றன. அப்படி பதுங்கிக் கொள்ள ஓடும் ஒரு பல்லி மேலே படத்தில். பழுப்பு நிறமும் நீலமும் கலந்த நிறத்தில் இருக்கும் இப்பல்லிகள் இப்பகுதியில் நடைபயணம் செல்வோர்களுக்கு நிச்சயம் தென்படும்.




முதலில் 6 கிமீ தூரம் சென்று பின்னர்  சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப மீண்டும் பயணத்தை அமைத்துக் கொள்ளலாம் என முடிவு செய்திருந்தோம். முதலில் பயணம் கீழ் நோக்கி இறங்குவது போலவே இருந்ததால் சிரமம் அதிகம் தெரியவில்லை. வெயில் 32 டிகிரி போல அமைந்திருந்ததால் சற்று களைப்பு ஏற்பட்டது. ஆனாலும் வீடுகளும் மலைகளும் தாவரங்களும் நீல வானும் நம் களைப்பை எல்லாம் போக்கி விடுகின்றன. மேலும் மேலும் அந்த இயற்கை அழகை ரசிக்க  நம் கால்கள் தானாகவே நடக்க ஆரம்பித்து விடுகின்றன, களைப்பை மறந்து.




மே மாதத்திலேயே இங்கே பாதாம் மரங்களில் காய்கள் நிறைந்து பறித்து பயன்படுத்தக் கூடிய ஆரம்ப நிலையில் இருக்கின்றன. இதே மே மாதத்தில் தான் ஜெர்மனியில் பாதாம் மரங்களில் பூக்கள் காய்த்து பூக்கள் காயாக மாறும் பருவமே ஆரம்பிக்கின்றது. சீதோஷ்ண நிலையில் உள்ள வித்தியாத்தின் விளைவு இது. ஜெர்மனியில் மாண்டல் ப்லூமன் பெஸ்ட் பற்றி நான் எழுதியிருந்த பதிவில் ராஜம் அம்மாவும் கீதாவும் கேட்ட கேள்வி ஞாபகம் வந்ததால் ஒரு காயை பறித்து உடைத்து  சோதனைசெய்து இது பாதாம் பருப்பு தான் என்று உறுதி செய்து கொண்டேன். :-)



ஒன்றரை மணி நேரத்தில் எங்களின் இலக்கான வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள செக்போய்ண்ட் பகுதியை வந்தடைந்தோம். மலைமேல் அமைந்திருக்கும் இப்பகுதி.. நேராக கீழே பார்த்தால் கடல். அன்று மேகமற்ற வானம் இருந்ததால் வானும் கடலும் இணைந்து ஒரே நிறமாக காட்சியளித்தன.


மீண்டும் இங்கிருந்து மேலும் செல்ல விருப்பமிருந்ததால் அடுத்த  3 கிமீட்டரைத் தொடரலாம் என முடிவு செய்து கொண்டு பயணத்தைத் தொடங்கினோம். மீண்டும் சில வீடுகளையும், தோட்டங்களையும் கடந்து செல்வதாக அமைந்திருந்தது அடுத்த 3 கிமீ. பூக்கள், செடிகள் மட்டுமல்லாது ஆடுகள், மாடுகள், கோழிகள், வாத்துக்கள் என மக்கள் சிறு சிறு பண்ணைகள் வைத்து பராமரிக்கின்றனர்.



சாப்பிட்ட அசதியால் தூங்கிக் கொண்டிருக்கின்றதோ இந்த ஆடு..?

இக்காட்சிகளைக் கண்டு கொண்டு மலையில் இப்போது மேல் நோக்கி நடந்தோம். ஒரு வழியாக சென்றடைய வேண்டிய இடம் வந்து விட்டோம் என்ற அறிகுறிகள் தென்பட அங்கே நோக்கினால் இந்திர லோகம் என்று சொல்வோமே.. அதே போன்றதொரு காட்சி.. இயற்கையை இப்படியும் அழகாக்கி ரசிக்கலாம் என நினைத்து அதனை செயல்படுத்தியிருக்கும் ஒரு முயற்சி..இதனைப் பற்றி அடுத்த பதிவில்.

தொடரும்..

சுபா

No comments:

Post a Comment