புது வருடத்தில் புது அனுபவம்புது அனுபவம்
2012ம் ஆண்டின் சில்வெஸ்டர் தினம் எங்களுக்கு இங்கேயே அமைந்தது. நாங்கள் தங்கியிருந்த தங்கும் விடுதியின் உரிமையாளர்கள் 31ம் நாள் இரவு கொண்டாட்டத்தைத் தங்கும் விடுதியிலேயே ஏற்பாடு செய்திருந்தனர். இரவு 12 மணிக்கு முன்னரே வானவேடிக்கைகள் தொடங்கி விட்டன. அங்கும் இங்குமாக மத்தாப்புக்களின் வெடிச்சத்தம். தங்கும் விடுதியில் அன்று மிகச் சிறப்பான இரவு விருந்தும் இசை நிகழ்ச்சியும் வேறு ஏற்பாடாகியிருந்தது. ஹோட்டல் இருப்பது சற்றே மலைப்பாங்கான இடமாக இருந்ததால் அங்கிருந்து வானவேடிக்கைகளைப் பார்ப்பதற்கு மிக நன்றாக அமைந்திருந்தது. ஏனைய ஐரோப்பிய நாடுகளைப் போலவே ஆண்டின் இறுதி நாளான 31ம் நாள் முடிந்து மறுநாள் பிறக்கும் புதிய வருடத்தை மக்கள் வானவேடிக்கைகளை வெடித்து மகிழ ஆஸ்திரிய அரசாங்கம் மக்களுக்கு அனுமதி வழங்குகின்றது.
1ம் திகதி எங்களின் விடுமுறையின் இறுதி நாள். அன்று ஒரு நாள் அங்கேயே கழித்துவிட்டு மறு நாள் 2ம் தேதி இல்லம் திரும்புவதாகப் பயணத் திட்டம் அமைந்திருந்தது.
வருடத்தின் முதல் நாள். மனதில் பதிந்து ஞாபகத்தில் நிற்கும் ஒரு சுவாரசியமான விஷயத்தைச் செய்யவேண்டும் என நினைத்திருந்தேன். அதனால் வித்தியாசமான ஒரு அனுபவமாக பனியில் விலங்குகள் நடந்து சென்ற பாதையைத் தேடிச் செல்லும் ஒரு நடவடிக்கை ஒன்றில் ஒரு குழுவாகச் செல்ல என் பெயரையும் பதிந்து கொண்டிருந்தேன். பீட்டருக்கு இப்பயணத்தின் இறுதி நாள் மீண்டும் க்ரோஸ் கண்ட்ரி வாக்கிங் செல்ல வேண்டும் என்ற ஆவல் இருந்ததால் காலையிலேயே தனது ஸ்கீ சகிதம் புறப்பட நான் காலை 11 மணிக்கு சந்திப்பதாக ஏற்பாடாகியிருந்த இந்தச் சந்திப்பு நடைபெறும் இடத்தைக் கொடுத்திருந்த வரைபடத்தில் தேடிக் கொண்டு சென்றேன். எனக்கு முன்னர் ஒரு ஜோடி அங்கே வந்து காத்திருந்தனர்.
பயண வழிகாட்டி (நீல நிற உடையில்) இப்பகுதியில் உள்ள விலங்குகளைப் பற்றிய அறிமுகம் தருகின்றார்.
சற்று நேரத்தில் ஒரு சிலர் வந்து சேர ஏறக்குறைய 20 பேர் கூடி விட்டோம். எங்கள் வழிகாட்டியும் வந்து சேர்ந்தார். முதலில் ஒருவரை ஒருவர் அறிமுகப் படுத்திக் கொண்டு இந்தப் பயணத்துக்கான கட்டணத்தையும் கட்டி விட்டு எங்கள் வழிகாட்டி அளித்த அறிமுக விளக்கத்தை கேட்டுக் கொண்டோம்.
இது வித்தியாசமான ஒரு நடவடிக்கை என்றே எங்கள் பயண வழிகாட்டியின் விளக்கத்திலிருந்து புரிந்து கொண்டேன். அதாவது மலைப்பகுதியின் கீழ் பகுதியிலிருந்து எங்கள் தேடுதல் தொடங்கும். அதற்காக அவர் ஒரு பகுதியை காலையிலேயேச் சென்று பார்த்து உறுதி செய்து கொண்டு வந்திருந்தார். முதலில் மலையடிவாரப்பகுதியில் தொடங்கும் போது நரிகளின் கால் தடையங்களை வைத்துக் கொண்டு அவை வந்து சென்ற பாதையைப் பின்பற்றி செல்ல வேண்டும். பின்னர் அடுத்து வருகின்ற வெவ்வேறு பிராணிகளின் கால் தடையங்களையும் வைத்துக் கொண்டு அவை எந்த பிராணியின் கால் தடையம் எனக் கண்டு அவற்றைப் பற்றி விளக்கம் பெற்றுக் கொண்டே செல்ல வேண்டும். மாலை ஐந்து மணிக்குள் கீழே இறங்கி வந்து விட வேண்டும். இடையில் சாப்பிடவும் சற்று ஓய்வெடுக்கவும் நேரம் இருக்கும் என்று அறிமுகம் கொடுத்து விட்டார்.
அன்று காலையில் பனி நன்கு தூறி முடித்திருந்ததால் மென்மையான பனி எங்கிலும் நிறைந்திருந்தது. மனிதர்கள் இன்னமும் அந்தப் பகுதியில் நடந்து செல்லவில்லை என்பதைச் சேதமடையாமல் இருந்த பனியைப் பார்த்தே தெரிந்து கொள்ள முடிந்தது. இரவில் நரிகள் நடமாடிய பகுதியை முதலில் தேடிச் சென்று அங்கிருந்து பயணத்தைத் தொடங்கினோம்.
பாடம் செய்த நரியின் உடல்
நரி நடந்து சென்ற பாதை நேர் கோட்டில் சிறு சிறு கால்கள் பனியில் பதித்த அச்சுக்களின் கோர்வை போன்று அமைந்திருந்தது. ஆச்சரியம். நான் எதிர்பார்த்ததோ இரண்டு கால்கள் பக்கம் பக்கமாக வைத்து மனிதர் அல்லது நாய் பூனை நடப்பது போல இருக்குமோ என்று. ஆனால் நரி நடந்து செல்லும் போது நேர்கோட்டில் முதலில் ஒரு கால் பின்னர் அதே வரிசையில் அடுத்த கால் எனவும் அதே போல பின்னங்கால்களும் என்ற வகையில் அமைந்திருந்தது என்பதை அவர் காட்டிய தடயங்களிலிருந்து தெர்ந்து கொண்டோம். நரி எப்படி நடக்கும் என்றும் அவர் செய்து காட்டியமையால் அப்போது அதனை முழுமையாக தெரிந்து கொள்ளவும் முடிந்தது.
நரியின் கால் தடயங்கள்
நரிகள் நடந்து சென்ற பாதையிலேயே சென்று கொண்டிருந்த போது அடுத்து முயல்கள் நடந்து சென்ற தடயங்களைக் கண்டோம். முயல் தாவிக் குதித்துச் செல்வதை நன்கு அதன் தடயங்களிலிருந்து காண முடிந்தது. முதல் கால் அச்சு பதிவிற்கும் அடுத்த பதிவிற்கும் சிறு தூரம் இருக்கின்றது.
முயல் கால் தடயங்கள்
முயல் பாதையில் அதன் தடயங்களைப் பின்பற்றி வரும் போது மிகச் சிறிதான சில கால்பதிவுகளை காண முடிந்தது. அவை எலிகளின் கால் தடயங்கள். அத்தடயங்கள் இறுதியாக ஒரு பைன் மரத்தைச் சென்றடைவதைக் கண்டோம்.
எலியின் குட்டிக் கால்களின் தடயங்கள்
ஆக இரவில் மனிதர்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போது இந்த மிருகங்களின் உலகம் விழித்துக் கொண்டிருக்கின்றது என்பதை உணர முடிந்தது.
இதை முடித்து மேலும் சற்று உயரமான பகுதிக்கு நடக்க ஆரம்பித்தோம். அங்கே தான் காட்டு ஆடுகள் வந்து செல்லும் தடையங்களைக் காண முடியும் என்று எங்கள் வழிகாட்டி கூறியதால அவரை பின்தொடர்ந்தோம்.
அனைவரும் மலையில் நடந்து எங்கள் பயண வழிகாட்டியைத் தொடர்ந்து செல்கின்றோம்
இடையில் ஓரிடத்தில் நிறுத்தி நாங்கள் எங்களுடன் கொண்டு வந்திருந்த சாண்ட்வீச்சினைச் சாப்பிட்டு சற்று இளைப்பாறினோம். எங்கள் பயண வழிகாட்டி கையோடு தேநீரும் ப்ளாஸ்கில் போட்டு கொண்டு வந்திருந்தார். அவை அவரது பேக்பேக்கில் இருந்தது. எல்லோரும் ஆளுக்குக் கொஞ்சமாக தேனீரைப் பருகிக்கொண்டோம். அந்தக் குளிருக்கு இந்த பழச்சாறு தேனீர் மிக இதமாகத்தான் இருந்தது. மீண்டும் நடக்கலானோம்.
ஒரு வகை காட்டு ஆட்டின் கால்
ஓரிடத்தில் மிகத்தெளிவான தடயங்கள் கிடைத்தன. அங்கே எங்களை நிறுத்தி தான் கையோடு கொண்டு வந்திருந்த வெவ்வேறு வகையான காட்டு விலங்குகளின் கால் பகுதிகளை எங்களுக்குக் காட்டி அந்த ஆடுகளைப் பற்றிய விரிவான விளக்கத்தை கொடுத்து அக்கால்களை பனியில் வைத்து அத்தடயங்களை எங்களுக்கு உறுதி செய்து எவ்வகை காட்டு ஆடுகள் இங்கே இருக்கலாம் என்று எங்களுக்கு விளக்கினார்.
மானின் தலை எலும்புக்கூடி - விளக்கம் தருகின்றார்.
இந்த விளக்கமெல்லாம் பெற்ற பின்னர் மலைப்பாதையில் இறங்கி மீண்டும் கீழே புறப்படலானோம். இப்போது பனியில் பல கால்களின் தடயங்கள் ஏற்பட்டிருந்தன. விலங்குகளுக்குப் போட்டியாக மனிதர்க்ளும் நடந்திருப்பது நன்கு தெரிந்தது. :-)
மாலை மணி ஐந்து வாக்கில் நாங்கள் புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்ந்தோம். எல்லோரிடமும் விடைபெற்று எங்கள் பயண வழிகாட்டி செல்ல நானும் எங்கள் தங்கும் விடுதி நோக்கி திரும்பினேன். இது மிக வித்தியாசமானதொரு புது அனுபவமாக எனக்கு அமைந்தது.
பைன் மரங்கள் அதில் உள்ள பூக்கள்
பைன் மரப் பூக்கள் எலிகளுக்கும் அணில்களுக்கும் உணவாகின்றன
தொடரும்...
சுபா