போதும் பனி..
ஆல்ப்ஸ் மலைத் தொடர்ச்சியில் அமைந்திருக்கும் சுவிஸர்லாந்து, ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளிலிருந்து மாறுபட்டது ஆஸ்திரியா. ஏனைய நாடுகள் ஆல்ப்ஸ்மலைத்தொடர்ச்சியில் ஒருபகுதி என்ற வகையில் அமைந்திருப்பது. ஆனால் ஆஸ்திரியாவைப் பொருத்தவரை முழுமையாக ஆல்ப்ஸ் மலைத்தொடர்ச்சியில் அடங்கியிருக்கும் ஒரு நாடு இது என்றே குறிப்பிட வேண்டும். இதைப்போல இங்கிருக்கும் மற்றொரு குட்டி நாடான லிக்ஸெஸ்டைனும் அமைகின்றது.
மேற்கு, கிழக்கு வடக்கு தெற்கு என எல்லா பகுதிகளும் ஆல்ப்ஸ் மலைத்தொடர்ச்சியில் அடங்கியிருக்கும் வகையில் ஆஸ்திரியாவின் பூகோள அமைப்பு அமைந்துள்ளது.உயரமான மலைப்பகுதி, அப்பகுதிகளில் அடர்ந்திருக்கும் பசுமையான மரங்கள் பின்னர் தாழ்வாக இறங்கும் பகுதிகள், பனி கரைந்து உருவாக்கும் நீரோடை இவைகளே இந்த நாட்டில் எல்லா இடங்களையும் ஆக்கிரமித்திருக்கும் காட்சி. மலைகளுக்கிடையில் அமைந்திருக்கும் இயற்கையான பள்ளத்தாக்குகளில் மனித குடியேற்றமேற்பட்டமையின் காரணத்தால் கிராமங்கள் நகரங்கள் பெருநகரங்கள் என ஊர்கள் அமைந்திருப்பதைக் காண்போம்.
ஆஸ்திரியா முழுமையும் மலைகள் என்றமைந்திருந்தாலும் இங்கே மிகத் தரமான சாலைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. மலை உச்சிக்குச் செல்லும் பாதை கூட விரிவாக தரமாக வாகனம் ஓட்டிச் செல்வோர் சிரமமின்றி பயணிக்கும் வகையில் அமைந்திருக்கின்றன. பெரும்பாலும் இங்கே பனிக்காலம் இருப்பதால் பனி கொட்டி சாலையை நிரப்பிவிடும் வேளையில் அதனை சுத்தம் செய்ய வரும் வாகனங்கள் அடிக்கடி வந்து சாலையில் கொட்டிக் கிடக்கும் பனியை தூக்கி நகர்த்திக்கொட்டி சாலையை பனி இல்லாமல் ஆக்கி விடுகின்றன. மலைப்பகுதி பயணங்கள் எனும் போது கேபிள் கார் பயணம் பரவலாக அமைக்கப்பட்டிருக்கின்றன. மலையடிவாரத்திலிருந்து மலை உச்சிக்கு செல்லும் கேபிள் கார் வசதிகள் மிக விரிவாக புழக்கத்தில் உள்ளன.
குளிர்கால விளையாட்டுக்கள் வருடம் முழுக்க இங்கே தடையில்லாமல் இயங்கிக் கொண்டேயிருக்கின்றன. விண்டர் ஒலிம்பிக்ஸ் விளையாட்டு மைதானம் இங்குள்ள சீபெல்ட் (Seefeld) நகரில் தான் அமைந்திருக்கின்றது. பனிக்கால விளையாட்டுக்களில் பயிற்சி பெற விரும்புவோர் எந்த தயக்கமுமின்றி ஆஸ்திரியாவின் எல்லா பகுதிகளில் தடையின்றி அமைந்திருக்கும் பனி விளையாட்டுப் பள்ளிகளில் பதிந்து பயிற்சி பெற முடியும்.
விண்டர் விளையாட்டுப் போட்டிகள் ஆசிய நாடுகளில் அவ்வளவாகப் பிரபலமாகாவிடினும் கூட ஐரோப்பா, கனடா, ரஷ்யா போன்ற நாடுகளில் முக்கிய விளையாட்டுக்களாக அமைந்துள்ளன. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு போட்டி விளையாட்டுக்கள் பனிவெளி, பனிமலையை சார்ந்தும் நிகழ்வதால் ஆஸ்திரியா எப்போதும் வருகையாளர்கள் நிறைந்து காணப்படும் ஒரு நாடாகவே உள்ளது. எவ்விதமான குளிர்கால பனி விளையாட்டுக்கள் மக்கள் ஈடுபடுபவை என்பது பற்றி அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு இந்த விக்கி பகுதி நல்லதொரு அறிமுகத்தைத் தரலாம். http://en.wikipedia.org/wiki/Winter_sport
அன்றாட அலுவலக தேவைகளின் சிந்தனைகளிலேயே பெரும்பாலும் உழன்று கொண்டிருக்கும் எங்கள் சிந்தனையிலிருந்து விடுபட்டு புதிதான அனுபவம் பெற வேண்டும் என்ற வகையிலேயே எங்களின் பயணத்தை அமைத்திருந்த்தோம். குளிர் காலத்தில் விடுமுறை என்றாலே ஏற்படும் பயம், சோம்பல் ஆகியவற்றை விலக்கி அந்த நேரத்திலும் ஏதாகினும் உடலுக்குப் பயிற்சியாக அமையும் சில முயற்சி செய்யலாமே என்ற வகையில் ஒரு சுறுசுறுப்பான பயணமாக அமைக்க திட்டமிட்டிருந்தோம். அதன் படியே ஒவ்வொரு நாளும் க்ரோஸ் கண்ட்ரி வாக்கிங், நடைப்பயணங்கள் என அமைந்தன. குளிர் பொதுவாகவே -4 டிகிரி என்ற போதிலும் பனியில் நடைப்பயணமும் க்ரோஸ் கண்ட்ரி வாக்கிங் பயணங்களும் அந்தக் குளிரிலும் எங்களைக் கரைய வைத்தன.
அன்பான உபசாரம், சுவையான உணவு, இயற்கையின் அழகு, உடலுக்கு நலம் தரும் பயிற்சி என முழுமையான மன நிறைவளித்த மேலும் ஒரு பயணமாக இந்தப் பயணம் எங்களுக்கு அமைந்தது.
இந்தப் பயணம் முடிந்தது. பயணங்கள் நிறைந்த வாழ்வின் பதிவுகளாக இன்னொரு பயணம் விரைவில் தொடரும்.
இந்தப் பனிப்பயணத்தின் பதிவில் என்னுடன் சேர்ந்து பயணித்த உங்கள் அனைவரையும் மேலும் வேறொரு பயணத்திற்கு அழைத்துச் செல்வேன். காத்திருங்கள் ..:-)
அன்புடன்
சுபா
1 comment:
அன்பான உபசாரம், சுவையான உணவு, இயற்கையின் அழகு, உடலுக்கு நலம் தரும் பயிற்சி என முழுமையான மன நிறைவளித்த மேலும் ஒரு பயணமாக இந்தப் பயணம் எங்களுக்கு அமைந்தது.
வாழ்த்துகள்..!
Post a Comment