யாத்திரை தொடர்கின்றது - 4
செப்டம்பரில் தோமஸ் பெக்கட் பற்றி சொல்கிறேன் எனச் சொல்லியிருந்தேன். ஒரு மாதமாகிவிட்டது.
யார் அந்த தோமஸ் பெக்கட்.. என விட்ட கதையைத் தொடர்வோம்..
காண்டபெரி இன்றைய புகழைப் பெற முக்கியக் காரணமாக இருப்பவர் இவர் தாம்.
ஒரு ஆர்ச்பிஷப் என்ற உயர் பதவி வகித்தவர். அப்படிப்பட்டவர் வீரர்களின் போர்வாளினால் தாக்கிக் கொல்லப்பட்டு உயிர் இழந்தார் என்பது இவரது வரலாறு. இறந்தும் நன்மை வழங்கும் தன்மையுடைய ஒரு நிலை என்பது உலகில் சிலருக்குத் தான் அமையும் அத்தகைய ஒரு வாய்ப்பு அமையப் பெற்றவர். தன்னால் ஒரு நகருக்கே சிறப்பு கிடைக்க வகை செய்தவர். அதனால் இவரைப் பற்றி பேசாது நாம் காண்டபரி புகழ் பாட முடியாது. ஆக இவரைப் பற்றி தெரிந்து கொள்வோமே.
கி.பி1118ம் ஆண்டு ஒரு ஆங்கிலேய வர்த்தகருக்கு மகனாகப் பிறந்தவர் இவர். பொருளாதார வசதி நிறைந்த குடும்பம் அவரது. வசதியான வாழ்க்கை அமைந்ததால் பாரீஸுக்குச் சென்று கல்வி கற்கும் வாய்ப்பு இவருக்கு மிக இளம் வயதிலேயே அமைந்தது. இயல்பாகவே நிர்வாகத் திறமையும் ஆளுமையும் கொண்டவராகத் திகந்தார் பெக்கட்.
அவர் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது 1154ல் நடந்த ஒரு நிகழ்வு. அச்சமயம் காண்டபரி நகரின் தலைமை மதகுருவாக இருந்த தியோபால்ட், தோமஸ் பெக்கட்டை ஒரு சந்தர்ப்பத்தில் மன்னர் 2ம் ஹென்றிக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அதுமுதல் மன்னர் 2ம் ஹென்றியும் தோமஸ் பெக்கட்டுக்கும் இடையே நெருக்கமான நட்பு பிறந்தது.
1161ம் ஆண்டு தலைமை குரு தியோபால்ட் திடீரென இறந்து போகவே தலைமை குருவுக்கான இடம் காலியாக இருந்தது. இந்த இடத்தை நிரப்ப தோமஸ் பெக்கட் தான் சரியான நபராக இருக்க முடியும் என நினைத்த மன்னர் 2ம் ஹென்றி கத்தோலிக்க மத தலைமை பீடத்தை அணுகி போப்பாண்டவரிடம் பேசி தோமஸ் பெக்கட்டை காண்டபரியின் தலைமை குருவாகவும் ஆக்கி விட்டார்.
தகுதி என்னும் வகையில் தேவையான சமய பின்புலம் இவருக்கு அமைந்திருக்க வில்லை. ஆயினும் மன்னரின் தோழமை என்ற பலமான ஒரு காரணமிருக்க எந்த பிரச்சனையும் எதிர்ப்பும் இல்லாமல் தோமஸ் காண்டபரியின் தலைமை மத குருவாக பதவி ஏற்க சுலபமான வழி அமைந்தது.
காண்டபெரி நகரின் சமய மத குரு என்னும் ஒரு பதவி இங்கிலாந்தின் ஒட்டுமொத்த கத்தோலிக்க ஆளுமையையும் குறிக்கும் தன்மையுடயது என்பதை இங்கு குறிப்பிட வேண்டும். அத்தகைய முக்கியப் பணி தோமஸ் பெக்கட் அவர்களை வந்தடைந்தது. மன்னர் 2ம் ஹென்றி தோமஸ் பெக்கட் தனது நண்பர் என்ற சிந்தனையில் தனது ஆட்சிக்கும் சமய சம்பந்தமான அனுகூலங்கள் இதன் வழி கிடைக்கும் என நம்பியிருந்தார். ஆனால் அவர் நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறையும் வகையில் நில நிகழ்வுகள் நடக்கத் தொடங்கின..
அவை என்ன .. அடுத்த சில நாட்களில் வந்து சொல்கின்றேன்.
தொடரும்...
படங்கள்: காண்டபரி வரலாறுறு அருங்காட்சியகத்தில் பதிந்தவை.
சுபா
No comments:
Post a Comment