Friday, May 29, 2015

விரும்பாமல் சென்று.. விரும்பிய டர்பன்..! - 15

காலையில் புற்று மாரியம்மன் கோயிலில் வழிபாட்டை முடித்ததோடு கோயில் நிர்வாகத்தலைவர் திரு சீலன் ஆசாரியுடன் ஒரு பேட்டியையும் செய்து முடித்தேன். அத்தோடு, சாஸ்திரிய இசைபயின்று அதே வேளை தமிழிசை பாடி டர்பனில் இசைக் கச்சேரிகள் நடத்துபவரும் இசைப்பள்ளி நடத்தி வருபவருமான திரு.கதிரேசனையும் ஒரு பேட்டி கண்டேன். ஆலயத்தில், எனக்கும் என்னுடன் வந்திருந்த ஏனையோருக்கும் ஆலய நிர்வாகத்தினர் தேனீரும் பலகாரங்களும் வழங்கி அன்புடன் உபசரித்தனர்.

பேட்டிக்குப் பின்னர் ஆலய நிர்வாகத்தலைவர் திரு.சீலன் ஆசாரி, சாம் விஜய் (அமர்ந்திருப்போர்)
திரு.சின்னப்பன், ஆலயத்தின் மற்றும் ஒரு நிர்வாகத்தர் (நிற்பவர்கள்) 

அங்கிருந்து  சிவானியின் வாகனத்தில் சிலரும் கோகியின் வாகனத்தில் சிலரும் எனப் புறப்பட்டோம். எங்களின் அடுத்த இலக்கு டர்பன் முருகன் கோயில். 


​சிவானி 

புற்று மாரியம்மன் கோயிலிருந்து ஏறக்குறைய 7 நிமிட பயணத்தில் இந்தக் கோயிலை அடைந்து விடலாம். செல்லும் போதே டர்பன் நகர சாலைகள் வீடுகளின் அமைப்புக்களையும் பார்த்துக் கொண்டே வந்தேன்.

​ஆஸ்திரேலிய நண்பர் திரு.சுகுமாரன், சாம் விஜய், திரு.சின்னப்பன்

சிவானி இரண்டு முறை எங்களை அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது. முதல் பயணத்தில் மலேசிய நண்பர்களை முருகன் கோயிலில் கொண்டு வந்து விட்டு விட்டு, கோயிலில் பேட்டி செய்து கொண்டிருந்த எங்களை அழைத்துச் செல்ல மீண்டும் வந்திருந்தார். மிகப்பொறுப்புடன் எங்களை அழைத்துச் செல்ல வேண்டும் என நினைத்துக்கொண்டு எல்லா காரியங்களையும் கவனத்துடனும் பொறுப்புடனும் செய்வதைப் பார்த்து ரசித்தேன். எங்களுக்குப் பால் பாயசம் செய்ய வேண்டும் என சொன்னதில் இடையில் வாகனத்தை நிறுத்தி பால் பாக்கெட்களும் வாங்கிக் கொண்டார். 

​சாலையில் ஒரு வியாபாரி முருக்கு விற்றுக் கொண்டு செல்கின்றார்

வாகனத்தில் செல்லும் போதே சாலையோர வியாபாரிகள் வாகன ஓட்டிகளிடம் வியாபாரம் செய்வதையும் காண முடிந்தது. எங்கள் வாகனத்தின் அருகே முருக்கு தூக்கிக் கொண்டு வந்து விற்க வந்தார் ஒரு ஆப்பிரிக்கர். அவர் கையிலும் முருக்கா என பார்த்து வியந்து புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.

​டர்பன் சாலையில்

சில நிமிடங்களில் முருகன் கோயில் வாசலை வந்தடைந்து விட்டோம் என்பதற்கு அடையாளமாக சற்று தூரத்திலேயே நெடிய முருகன் சிலையைக் காண முடிந்தது. பின்புறமாகச் சென்று வாகனத்தை நிறுத்த, வாகனத்தில் வந்த  நாங்கள்  இறங்கிக் கொண்டோம்.
.


அப்போது மதிய வேளை. ஆயினும் கோயில் பூட்டப்படாமல் திறந்தே இருந்தது. ஆலயத்தில் பக்தர்கள் இல்லாத நேரம் அது. 

தொடரும்.

சுபா

No comments:

Post a Comment