Thursday, June 11, 2015

விரும்பாமல் சென்று.. விரும்பிய டர்பன்..! - 17

டர்பன் நகர் வந்த நாள் முதல் எங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தங்கும் விடுதியிலேயே உணவு சாப்பிட எல்லா ஏற்பாடுகளும் ஆகியிருந்தமையினால் வெளியே சென்று உணவகங்களில் சாப்பிடும் வாய்ப்பு எனக்கு அமையவில்லை. தென்னாப்பிரிக்க தமிழ் மக்கள் வீட்டு சமையல் எப்படி இருக்கின்றது என்று அறிந்து கொள்ளவும் அதுவரை வாய்ப்பு கிட்டவில்லை. வந்து சேர்ந்த முதல் மூன்று நாட்களிலுமே நிகழ்ச்சிகளிலேயே நாட்கள் கழிந்ததால் அதுவரை வெளியே சென்று இயல்பானவாழ்க்கையை அறிந்து கொள்ள முடியாமலேயே இருந்தது. இந்த நிலையை போக்கும் வகையில் கோகி அவர்கள் இல்லத்தில் வந்து எல்லோரும் மதிய உணவு சாப்பிட்டு செல்லும் படி அழைத்திருந்தார்.

​சமையலில் மும்முரமாக கோகி

முருகன் கோயிலில் வழிபாட்டை முடித்திக் கொண்டு திரு.சின்னப்பன், கோகி வீட்டிற்கு மதிய உணவிற்குச் செல்வதாக ஏற்பாடாகியிருந்தது. வாகனத்தில் எல்லோரும் ஒரே நேரத்தில் செல்ல முடியாது என்பதால் முதலில் சிலர் சென்று விட்டனர். நானும் ஏனைய சில நண்பர்களும் முருகன் கோயிலில் கொஞ்சம் நேரத்தை கழித்து விட்டு  பின்னர் சிவானியின் காரில் அவர்கள் இல்லத்தை வந்தடைந்தோம். வீட்டிற்குள் நுழையும் போதே இந்திய உணவு வகைகளின் வாசம் எங்களுக்கு பசியைத் தூண்டுவதாகவே இருந்தது.

புளியஞ்சாதம், சப்பாத்தி, குருமா, சாதம், காரக் குழம்பு அப்பளம் என பலவகையான பதார்த்தங்களை கோகி அந்த குறுகிய நேரத்தில் எங்கள் எல்லோருக்கும் சமைத்திருந்தது ஆச்சரியம் தருவதாக இருந்தது. உணவை முடித்து கோகி செய்திருந்த பால் பாயசத்தையும் சுவைக்க நான் தவறவில்லை.

​சிவானி

திரு,சின்னப்பன் கோகி இருவரின் ஒரே புதல்வி சிவானி ஒரு பரதக்கலைஞர். டர்பன் நகரில் நடனப்பள்ளி நடத்தி வரும் இவர் வக்கீலாகும் லட்சியத்துடன் இறுதியாண்டு பல்கலைக்கழகத்தில் படித்து வருபவர். வீட்டில் அவரது நேர்த்தியான நாட்டியப் புகைப்படங்கள் வீட்டின் அழகுக்கு அழகு சேர்த்துக் கொண்டிருந்தது.

அவர்களின் விருந்தோம்பலை பாராட்டி மீண்டும் தங்கு விடுதி வந்து சேர்ந்தோம்.அங்கு நாங்கள் வரும் போது இலங்கையிலிருந்தும் ஏனைய சில நாடுகளிலிருந்தும் வந்திருந்த பிரதினிதிகள் புறப்படுவதற்காக ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர். அவர்களை வழியனுப்பிவைத்து விட்டு காத்திருக்கையில் டர்பனின் இந்தியத் தூதரகத்தில் தமிழாசிரியராகப் பணிபுரியும் மாலாவும் அவர் தோழி ப்ரேமியும் அங்கிருக்க அவர்களோடு சற்று உரையாடிவிட்டு மாலாவை  அவர் நடத்தும் தமிழ்பள்ளி, அங்குள்ள மக்கள் நிலை ஆகியன பற்றி குறிப்பிடும் வகையில் ஒரு பேட்டி ஒன்றினைப் பதிவு செய்தேன்.

மதியம் ஐந்து மணி வாக்கில் நண்பர்கள் விடைபெற்றுச் சென்று விட மாலை நேரம் எங்களுக்கு எந்த திட்டமும் இல்லாததால் என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருந்தேன். வீட்டில் வேலைகளை முடித்து விட்டு திரு.திருமதி சின்னப்பன் எங்களை சந்திக்க மீண்டும் நாங்கள் இருந்த தங்கும் விடுதிக்கு வந்திருந்தனர்.

​திரையரங்கு அமைந்திருக்கும் கேளிக்கை விடுதி

டர்பன் நகரில் உள்ள திரையரங்கில் புதிதாக கொம்பன் என்ற திரைப்படம் வந்திருப்பதாகவும் என்னை அழைத்துச் செல்ல விரும்புவதாகவும் கூறவே அன்றைய மாலைப் பொழுதை கழிக்க இது நல்ல வழி தான் என நானும் சம்மதித்து விட்டேன். கடைசியாக தமிழகத்தில் ஒரு திரையரங்கில்  நான்கு ஆண்டுகளுக்கு முன் நான் பார்த்த தமிழ்ப்படம் ராவணன். அதற்குப் பின் மீண்டும் ஒரு தமிழ்ப்படம் பார்க்க வாய்ப்பும் நேரமும் அமையவில்லை. அதோடு டர்பன் நகர திரையரங்குகளையும் இரவு நேர சிறப்புக்களையும் அறிந்து கொள்ள இது நல்ல வாய்ப்பாக அமையும் என்றும் தோன்றியதால் கொம்பன் படம் பார்க்க நான் திரு.சின்னப்பன் கோகியுடனும் எங்களுடன் இணைந்து கொண்ட திரு.மிக்கி செட்டியின் மனைவியுடனும் அவர் பேரனுடனும் புறப்பட்டு விட்டேன்.

தொடரும்..
சுபா

No comments:

Post a Comment