Monday, April 4, 2016

அயர்லாந்தின் அழகில்..! - டப்ளின் நகர சாலைகளில் 9

அயர்லாந்தின் மிக முக்கிய நகரம், தலை நகரம், வர்த்தக நகரம் என்ற சிறப்புக்களோடு கலைத்துவமும் பரிமளிக்கும் ஒரு நகரம் டப்ளின். எனது பயணத்தின் இரண்டாம் நாள் ஒரு நாள் முழுதும் இந்த நகரத்தை நாங்கள் சுற்றிப் பார்க்க எனக்கு வாய்ப்பு அமைந்தது. காலையில் தங்கும் விடுதியிலேயே ஐரிஷ் வகை காலை உணவு. இதில் பிரத்தியேகமாக ஏதும் காணப்படவில்லை.  லண்டனில் காலை உணவு சாப்பிட்டவர்களுக்கு இதற்கும் அயர்லாந்தில் தங்கும் விடுதிகளில் கிடைக்கும் உணவிற்கு வித்தியாசம் இல்லாமல் இருப்பதை உணரலாம்.  இங்கிலீஷ் உணவு வகைகள் போலவே டோஸ்ட் ரொட்டி,  முட்டை, சாசேஜ், தேனீர், காப்பி, பழங்கள் என அமைந்திருக்கும். சற்று அலுப்பைத் தரக்கூடிய ஒரு காலை உணவு. எனக்கு பிடிக்காத காலை உணவு வகை. பிடிக்கவில்லையென்றாலும் காப்பியும் ஜேம் தடவிய ரொட்டியும் மட்டும் சாப்பிட்டு விட்டு  டப்ளின் நகரைப் பார்க்கப் புறப்பட்டோம்.

டப்ளினில் பார்ப்பதற்கு பல இடங்கள் உள்ளன. அவை எல்லாவற்றையும் ஒரு நாளில்  பார்த்து முடிக்க முடியாது என்ற காரணத்தால் பகலில் சாலையில் நடந்து சென்று எந்த இடங்களைப் பார்த்து வரலாம் என திட்டமிட்டோம். எங்கள் பயண திட்டத்தில் மேலும் ஒரு நாள் இறுதியாக டப்ளினில் இருக்கும் வகையில் பயண நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.  ஆக அவசரப் பட்டுக் கொண்டு செல்லாமல் நிதானமாக முக்கிய இடங்களைப் பார்த்து தகவல்கள் சேகரித்து வருவதோடு டப்ளின் சாலைகளில் நடந்து மக்களையும் சாலை காட்சிகளையும் கண்டு களிக்க வேண்டும் என்றும் ஆவல் இருந்தது. ஆக இரண்டு இடங்களை மட்டும் பார்ப்போம் என முடிவு செய்து கொண்டேன்.


டப்ளினுக்கு சிறப்பு சேர்க்கும் சுற்றுலா தளங்களில் முக்கிய இடங்களாக கீழ்க்கண்பவற்றை குறிப்பிடலாம்.
  • ட்ரினிடி காலேஜ், நூலகம்
  • கெல்ஸ் புத்தகம்
  • டப்ளின் கோட்டை
  • டப்ளின் துறைமுகம்
  • ஃபீனிக்ஸ் பார்க்
  • செயிண்ட் பேட்ரிக் கேத்தீட்ரல்
  • க்ரிஸ்ட் சர்ச் கெத்தீட்ரல்
  • டெம்பல் பார்
  • கின்னஸ் ஸ்டோர்
  • டப்ளின் மிருகக்காட்சி சாலை

இதில் ஏற்கனவே வந்திறங்கிய முதல் நாளே ட்ரினிடி காலேஜ், நூலகம், கெல்ஸ் புத்தகம் ஆகிய இரண்டையும் பார்த்து விட்டமையால் இரண்டாம் நாள் டப்ளின் கோட்டையையும், கின்னஸ் ஸ்டோர் தொழிற்சாலையையும் பார்த்து விட்டு சர்ச் கெத்தீட்ரல் பார்த்து வருவோம் என முடிவு செய்து கொண்டேன். இவை மூன்றுமே டப்ளின் நகர மையத்திலேயே இருப்பதால் நடந்தே சென்று வரலாம் என்று முடிவு செய்து கொண்டேன். முதல் நாள் டப்ளின் வந்திருந்தமையால் ஏறக்குறைய இவை இருக்கின்ற இடங்களை அறிந்திருந்திருந்தேன். ஆக இவற்றைத் தேடித் திரிய வேண்டிய அவசியமிருக்கவில்லை. அத்தோடு எங்கள் பயண வழிகாட்டி எங்களுக்கு டப்ளின் நகர சாலை வரைபடம் ஒன்றையும் அளித்திருந்தார் அதில் மிகத் தெளிவாக சாலை வரைபடங்கள் சுற்றுப்பயணிகள் பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள் ஆகியவை பெயர்களோடும் குறியீடுகளோடும் வழங்கப்பட்டிருந்தன. 

காலை 10 மணி அளவில் எங்களைச் சுற்றுலா பஸ் அழைத்து வந்து ட்ரினிட்டி காலேஜ் வளாகத்தின் மேற்கு புறக் கதவின் அருகில் இறக்கி விட்டுச் சென்று விட்டது. சுதந்திரமாக ஒரு நாள் டப்ளினில் கூட்டமாக இல்லாமல் தனியாகச் சென்று நமக்குப் பிடித்த வகையில் நேரம் எடுத்துக் கொண்டு பார்க்க விரும்பும் விஷயங்களைப் பார்த்து வரலாம் என்ற நினைப்பே ஒரு விதத்தில் மகிழ்ச்சியளிப்பதாக இருந்தது. சில வேளைகளில் குழுவாக பயணிப்பது சுவாரசியமளிக்கும் ஒன்று தான். ஆனால் சில வேளைகளில் அது நச்சரிப்பாகவும் அமைந்து விட வாய்ப்புண்டு. அப்படிப்பட்ட அனுபவமும் 2 முறை எனக்கு நிகழ்ந்தது. அதனைப் பிறகு குறிப்பிடுகிறேன். 

அன்று காலை சற்று மேக மூட்டமாகவும் சீதோஷ்ணம் ஏறக்குறைய 17 டிகிரி வாக்கிலும் அமைந்திருந்தது. காலையில் பயணம் ஆரம்பித்த சமயம் சிறு தூரலும் இருந்தது. அயர்லாந்தின் சீதோஷ்ணம் பற்றி தனியாக ஒரு பதிவிட வேண்டும். இங்கே குடையில்லாமல் செல்லக்கூடாது என்பதை முன்னரே தெரிந்திருந்ததால் நான் எனது பேக்பேக்கில் ஒரு குடையும் வைத்திருந்தது மிகவும் பயணளித்தது என்றே சொல்ல வேண்டும். ஆனால் சற்று நேரத்தில் தூரல் நின்று சூரியன் இன்முகத்தைக் காட்டி பிரகாசமாக சிரிக்க, சாலையில் நடந்தே வேடிக்கைப் பார்த்துக் கொண்டே பயணம் செல்வது சுவாரசியமாக அமைந்தது.

ட்ரினிடி காலேஜ் வாசலிலிருந்து இறங்கி நேராக நடந்து டேம் (Dame Street) சாலைக்குச் செல்ல வேண்டியிருந்தது. டப்ளின் கோட்டை இப்பகுதியில் தான் அமைந்துள்ளது. கூகள் வரைபடத்தைக் காண்க.


டப்ளின் கோட்டைக்குச் செல்லும் வழியில் சாலையின் இரண்டு பகுதிகளில் உள்ள கடைகளையும் மக்கள் கூட்டத்தையும் பார்த்துக் கொண்டே சென்றேன். ஏறக்குறைய 525,000 மக்கள் தொகை கொண்ட நகரம் டப்ளின். இங்கு பெரும்பாலானோர் ஐரிஷ் இனத்தவர்களே. டப்ளினில் மட்டுமல்ல (Republic of Ireland) அயர்லாந்து முழுதும் கேலிக் கத்தோலிக்க வகை பண்பாட்டு சமயத்தைச் சார்ந்தவர்களே மிகப் பெறும்பாண்மையினர்.  ஒரு குறைவான அளவில் ஐரோப்பாவின் பிற பகுதிகளான இத்தாலியர்கள், ஜெர்மானியர்கள், ஸ்பேனீஷ்காரர்கள் இருக்கின்றார்கள். மிகக் குறைந்த எண்ணிக்கையிலான இங்கிலாந்து மக்களும் இருக்கின்றனர். ஆசிய மக்களையும் ஆங்காங்கே காண முடிந்தது. இந்தியர்கள், ஜப்பானியர்கள், சீனர்கள், வியட்னாமியர்கள், தாய் மக்கள் சிலர் டப்ளின் நகரில் வசிக்கின்றனர் என்பதை சாலையில் செல்வோரைப் பார்த்தே தெரிந்து கொள்ள முடிந்தது. 

ஆங்காங்கே சீன உணவகங்கள், தாய் உணவகங்கள், இந்திய உணவகங்கள் இருக்கின்றன. ஒரு மலாய் உணவகமும் கூட ஒன்று இருப்பதைப் பார்த்து அதிசயித்தேன். 


டப்ளின் ஒரு கலாச்சார மையம் என்றால் அது மிகையில்லை. சாலையில் ஆங்காங்கே இசைக்கலைஞர்கள் வாத்தியங்களை வாசித்துக் கொண்டு இசை மணம் பறப்பிக் கொண்டிருக்கும் காட்சி இந்த நகரத்திற்கு உயிரூட்டும் ஒன்று. 


டப்ளின் நகரின் மத்தியில் குறிப்பிட்ட சில பகுதிகளில் அமைந்திருக்கும் ஜியோர்ஜியன் டப்ளின் கட்டிடங்களின் (வீடுகளின்)  கதவுகள் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டவை. 

வெள்ளை நிற தொடர் வீடுகளுக்குக் கண்களைப் பளிச்செனக் கவரும் கவர்ச்சியான வர்ணத்தில் அமைக்கப்பட்ட கதவுகளும் அதற்கு எழில் சேர்க்கும் கருப்பு நிற கைப்பிடிகளும் பார்ப்பதற்கே மிக அழகு. இவை ஜியோர்ஜியன் (Georgian) வகை கட்டிடக் கலையின் எச்சங்களாக இன்றும் டப்ளின் நகரத்தை அலங்கரிப்பவை. ஜியோர்ஜியன் டப்ளின் பற்றி மேலும் பிறகு தொடர்கிறேன். 





களிமண்ணில் உருவாகும் நாய்குட்டி வடிவங்கள்.. கலைத்திறன் நாய் குட்டியின் கண்களில் தெரிகின்றது.





சாலையோர இசைக் கலைஞர்கள்




ஜியோர்ஜியன் வகை வீடுகள்





இந்திய உணவகம் ஒன்று .. டப்ளின் நகரில்






பெண்கள் சிகை அலங்காரம் செது கொள்ள பல வர்ணங்களில் வல வகைகளில் தலை முடி.


சாலையைச் சுற்றிப் பார்க்க் ரிக்‌ஷா வண்டி.



தொடரும்..

2 comments:

தனிமரம் said...

அருமையான பயணக்கட்டுரை .தொடருங்கள் வாசிக்க ஆவலுடன்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

பயணம் அருமையாக உள்ளது. நாங்களும் உடன் வருகிறோம். நன்றி.

Post a Comment