Tuesday, May 24, 2016

அயர்லாந்தின் அழகில்...! ஈமச்சடங்கு கல்திட்டைகள் 17

மானுடவியல் கூறுகளை ஆராய முற்படும் போது உலகமெங்கிலும் உள்ள மக்களிடையே பல்வேறு ஒற்றுமைக் கூறுகள் இருப்பதைக் கண்டறிய முடிவதோடு மக்கள் சிந்தனைகளிலும் பல விசயங்களில் ஒற்றுமை இருப்பதைக் காண்கின்றோம். அடிப்படையில் எங்கிருந்தால் என்ன? மனித இனம் என்பது, பௌதிக கோட்பாடுகளின் அடிப்படையில் ஹோமோ செப்பியன்கள் என்ற இனத்தினிலிருந்து கிளைத்தவர்கள் தானே. 

இப்படி பொதுக்கூறுகளை, அதிலும் பண்டைய மக்களின் வாழ்வியல் கூறுகளில் காணும் போது, குறிப்பாக ஒரு சில விசயங்களில் இருக்கின்ற ஒற்றுமைகள் என்பன, இவ்வகை ஆராய்ச்சிகளில் ஈடுபடுவோருக்கு ஆச்சரியத்தை அளிக்கத்தவருவதில்லை, எனது பல பயணங்களிலும் சரி, அருங்காட்சியகத் தகவல் சேகரிப்புக்களிலும் சரி, மானுடவியல் சார்ந்த அருங்காட்சியகங்களில் பொதுவாக வாழ்விடங்கள் அமைத்தல், வாழ்வியலில் அடங்கும் பல்வேறு சடங்குகள், ஈமக்கிரியைச் சடங்குகள், விவசாயம், இறப்புக்குப் பின் மனித உடல் என்பன போன்ற விசயங்களில், பல ஒற்றுகள் பல இனங்களுக்கிடையே இருப்பதைக் கண்டிருக்கின்றேன். அப்படி ஒரு ஆச்சரியத்தை அயர்லாந்தின் லிமெரிக் மாவட்டத்திற்குச் சென்ற போது நேரில் பார்த்து வியந்தேன். 

எங்களின் பயணத்தில் அடுத்ததாக அமைந்தது லிமெரிக் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கற்கால ஈமச்சடங்கு கல்திட்டைக்கான பயணம். போல்னப்ரோன் (Poulnabrone) என அழைக்கப்படும் இந்தச் சின்னம் அயர்லாந்தின் பாதுகாக்கப்படும் அறிய தொல்பொருள் சின்னங்களில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டு பாதுகாக்கப்படுகின்றது. 

அயர்லாந்தின் மேற்குப் பகுதியில் பரவலாக இவ்வகையான ஈமச்சடங்கு கல்திட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதில் 90 கல்திட்டைகள் அடையாளம் காணப்பட்டு தொல்பொருள் சின்னங்களாகப் பாதுகாக்கப்படுகின்றன. இதே போன்ற கல்திட்டைகள் மேற்கு ஐரோப்பாவிலும் இருப்பதாகவும் இவை நியோலித்திக் காலத்தைச் சேர்ந்த ஈமச்சின்னங்கள் என்றும் அங்கிருந்த தகவல் பலகையிலிருந்து அறிந்து கொண்டேன். 

இவ்வகை கல்திட்டைகளின் வடிவங்கள் குறிப்பிட்ட வகையில் அமைக்கப்பட்டிருக்கும். இரண்டு நிற்கும் தூண்கள். அதற்கு மேலே படுக்க வைத்தார்போன்ற அமைப்பில் கூரை போல ஒரு கல்திட்டை வைக்கப்பட்டிருக்கும். முன் பகுதியில் வாசல் போன்ற அமைப்புடன் இது காட்சியளிக்கும். இறந்தவரின் உடல் இதன் கீழ் புதைக்கப்பட்டு வைக்கப்படும். சமாதி போன்ற ஒரு அமைப்புதான் இது! 



இவ்வகையான சமாதிகளில் இறந்தவர் உடலை வைத்துப் புதைக்கும் போது அங்கே அவருக்குப் பிடித்த, அவர் பயன்படுத்திய, அவர் சென்றிருக்கும் புதிய உலகத்தில் அவர் பயன்படுத்துவார் என்ற நம்பிக்கையில் வைக்கப்படும் பொருட்கள் என அனைத்தும் சேர்த்து வைத்துப் புதைக்கப்படுவது இதன் அடிப்படை அம்சம். இதே ஈமச்சடங்கு கூறுகள் எகிப்து, சூடான், ஆப்பிரிக்கா, இந்தியா, ஐரோப்பா, என நமக்குக் கிடைக்கின்ற இவ்வகை ஈமச்சடங்கு சின்னங்களின் எச்சங்களின் வழி அறிய முடிகின்றது. ஏறக்குறைய எல்லா இனங்களிலுமே இவ்வகையான சமாதிகளுக்கு வந்து இறந்தோரை நினைத்து வழிபடுவது என்பதும் வழக்கத்தில் இருக்கின்றது என்பதும் வியப்பளிக்கும் செய்தியே. 



போல்னப்ரோன் கல்திட்டையை அயர்லாந்து அரசு பாதுகாக்கப்பட வேண்டிய புராதனச்சின்னமாக அறிவித்து இப்பகுதியை முழுமையாகப் பாதுகாத்துள்ளது. இப்பகுதியில் கல்திட்டைகள் என்றால் என்ன, இங்கு வாழ்ந்த மக்களின் வாழ்வு நிலை, நியோலித்திக் கால சூழல், இங்கு வந்து குடியேறிய மக்கள், ஈமச்சடங்குகள் பற்றிய விரிவான விளக்கம் ஆகிய தகவல்கள் காட்சிப்படுத்தப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. 

இது சுற்றுப்பயணிகள் வந்து பார்த்துச் செல்லும் இடமாக இருப்பதால் இங்கே சில கடைகளும் இருக்கின்றன. அங்கே இரும்பு, வெள்ளி ஆகிய உலோகங்களில் காதணிகள், அலங்காரப்பொருட்கள் ஆகியன செய்யும் ஒரு பகுதிக்குச்சென்றேன். அங்கே கெல்ட் குறியீடு ஒன்றினை தேர்ந்தெடுத்து, அதில் இரும்பில் ஒரு காதணி செய்ய வைத்து வாங்கிக் கொண்டேன். ஏறக்குறைய 15 நிமிடத்தில் நான் தேர்ந்தெடுத்த வடிவத்தில் ஒரு ஜோடி அழகான காதணி ஒன்றை அந்த வியாபாரி எனக்கு செய்து கொடுத்தார். 



இங்கு நான் கண்ட கல்திட்டைகள் போன்ற கற்காலச் சின்னங்களை நான் 2012ம் ஆண்டு தமிழகத்தின் கிருஷ்ணகிரிக்கு அருகில் உள்ள மல்லச்சத்திரம் பகுதிக்குச் சென்றிருந்தபோது பார்த்தேன். அயர்லாந்தின் லிமெரிக் மாவட்டத்தில் நான் பார்த்த கல்திட்டை வடிவத்தை ஒத்த வகையிலேயே இங்கே மல்லச்சத்திரத்திலும் சிறு வேறுபாட்டுடன், ஆனால் அதே வடிவில் என, பல கல்திட்டைகள் இங்கே இருக்கின்றன. முன்பு 200க்கும் மேற்பட்ட கல்திட்டைகள் இங்கே மல்லச்சத்திரத்தில் இருந்திருக்கின்றன. ஆனால் தற்சமயம் ஏறக்குறைய 20 கல்திட்டைகளைத்தான் காணமுடிகின்றது. ஆயினும் கூட இப்பகுதி இன்னமும் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட வேண்டிய புராதனச் சின்னமாக அடையாளம் காணப்படவில்லை என்பதும், இங்கு வந்து போகும் பொதுமக்கள் இக்கல்திட்டைகளைச் சேதப்படுத்தியும் அவற்றின் கூரைகளைப் பெயர்த்துக் கொண்டுபோய் தங்கள் வீடுகளில் ஏதாவது ஒரு காரியத்திற்குப் பயன்படுத்துவது என்பது நிகழ்வது வேதனைக்குறியது. 







அயர்லாந்தில் வரலாற்று புராதனச் சின்னங்கள் அடையாளம் காணப்பட்டு அவை அந்த நிலத்து மக்களின் வரலாற்றைச் சொல்கின்ற அடையாளமாக மதிக்கப்படுகின்றது. இந்த நிலை இன்னமும் தமிழகத்தில் பெருவாரியாக ஏற்படவில்லை என்பது நிதர்சனம்! இது மாற வேண்டும். தொல்லியல் வரலாற்றுப் புராதனச் சின்னங்கள் முறையாகப் பாதுகாக்கப்பட பெருவாரியான அளவில் வேண்டும் என்பதே எமது அவா! 


தொடரும்.. 
சுபா

Friday, May 20, 2016

அயர்லாந்தின் அழகில்...! அயர்லாந்து உணவு வகை - 16

அயர்லாந்தில் இருந்த முதல் மூன்று நாட்களும் எனக்கு ஏறக்குறைய உள்ளூர் உணவு பற்றிய சிறு அறிமுகம் ஆகியிருந்தது. அதில் நான் மிக சலித்துக் கொண்ட உணவு என்றால் அது காலை உணவு தான். எப்போதும் வெள்ளை ரொட்டித்துண்டுகள், அவற்றிற்கான பட்டர், ஜாம், அவித்த பீன்ஸ், அவித்து எண்ணெயிலோ நெய்யிலோ வாட்டிய உருளைக்கிழங்குகள்.. என்றே மூன்று நாட்களைக் கழித்திருந்தேன். அசைவப்பிரியர்களுக்குப் பன்றி இறைச்சியைப் பதப்படுத்தி சமைத்தும் வைத்திருந்தார்கள். இது இங்கிலாந்தின் காலை உணவேதான். அயர்லாந்திலும் இது ஒட்டிக் கொண்டு விட்டது போலும். முதல் நாள் சாப்பிடவே பிடிக்கவில்லை என்றாலும் அடுத்தடுத்த நாட்கள் சலிப்பில்லாமல் ஏதோ கடமைக்குச் சாப்பிடுகின்றோம் என்று சாப்பிட ஆரம்பித்து விட்டேன். பிடிக்காத மனிதர்களைக் கூட சில வேளைகளில் சில காரணங்களுக்காக நட்பு வட்டத்தில் ஏற்றுக் கொள்கின்றோமே.. அப்படித்தான்!

ஐரீஷ் மக்கள் விரும்பிச் சாப்பிடும் பாரம்பரிய உணவுகள் சிலவற்றை பற்றி அறிந்து கொண்டேன். அவற்றைப் பற்றி இன்றைய பதிவில் சொல்கிறேன்.

மிக முக்கிய உணவாக அமைவது கேபேஜோடு சேர்த்துச் சமைத்த பன்றி இறைச்சி சமையலும் உருளைக்கிழங்கு பச்சை பட்டாணி, காரட் போட்டுத் தயாரிக்கும் சூப்பும் என்று சொல்லலாம். அயர்லாந்தில் விஸ்கியும் கின்னஸ் மதுபானமும் புகழ்பெற்றவை என்பதால் சமையலிலும் மதுபானத்தைக் கலந்து சமைக்கும் வழக்கம் இந்தப் பாரம்பரிய உணவில் உண்டு.

ஏறக்குறைய ஒவ்வொரு நாள் சமையலிலும் ஏதோ ஒரு வகையில் உருளைக்கிழங்கு இடம்பெறுவதையும் பார்த்தேன். அவித்த உருளைக்கிழங்கை அப்படியே, அல்லது அவித்த உருளைக்கிழங்கை நெய்யில் வாட்டியோ, அல்லது எண்ணையில் பொரித்தோ, அல்லது அவித்த உருளைக்கிழங்கை மென்மையாக அரைத்தோ அல்லது ஃப்ரென்ச் ப்ரைஸ் போன்றோ... உருளைக்கிழங்கு இல்லாத சமையலில்லை என்ற வகையில் ஐரீஷ் சமையல் இருக்கின்றது. ஆசிய உணவு வகையில் இருப்பது போல அரிசி முக்கிய உணவு அல்ல என்பதால் அரிசிக்குப் பதிலாக உருளைக்கிழங்கு அந்த இடத்தை நிரப்பி விடுகின்றது.





நான்காம் நாள் காலையில் கோல்வேயிலிருந்து நாங்கள் புறப்பட்டு (County Limerick) லிமெரிக் மாவட்டம் நோக்கிப் பயணித்தோம். போகும் வழியில் சில தேவாலயங்களையும் கோட்டைகளையும் பார்த்துக் கொண்டே சென்றோம்.ஓரிடத்தில் சந்தை போட்டிருந்தார்கள் அங்கே தான் எங்களுக்கு மதிய உணவு ஏற்பாடாகியிருந்தது. அது உழவர் சந்தை. அங்கே சில பெண்மணிகள் சமையல் செய்து கொண்டு வந்து விற்பனை செய்து கொண்டும் இருந்தனர்.

நமக்கு நன்கு பழக்கமான சமோசா வகையில் சில உணவு பதார்த்தங்கள் கிடைத்தன அவற்றுள் கீரையை வைத்தும் உருளைக்கிழங்கைச் சமைத்து வைத்தும் தயாரித்திருந்தார்கள். பார்க்கும் போதே ஆவலைத்தூண்டுவதாக இருந்தமையால் அதில் சில வாங்கிக் கொண்டேன். சுவை நன்றாகவே இருந்தது.





அயர்லாந்தில் செம்மறி ஆடுகள் மிக அதிகம் என்றும் முன்னர் குறிப்பிட்டிருந்தேன். மாடுகளும் அதிகம் என்பதால் இங்கே பால், சீஸ், தயிர் போன்ற பதார்த்தங்களுக்கும் குறைவேயில்லை. செம்மறி ஆட்டின் இறைச்சியையும் உள்ளூர் மக்கள் சமைத்துச் சாப்பிடுகின்றனர்.

எனக்கு மாலை உணவும் மதிய உணவும் பெரும்பாலும் உருளைக்கிழங்கு வகையறாக்கள், கீரைக் காய்கறி பதார்த்தங்கள், சூப் என்பதோடு இத்தாலிய உணவுகளையும் சாப்பிட்டதால் சமாளிக்க முடிந்தது.

இத்தாலிய உணவான பாஸ்டா, ஸ்பெகட்டி போன்றவை சற்று ஆசிய உணவுகளின் சுவையை ஒத்திருப்பதால் இத்தகைய உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிட்டதால் பயணத்தில் உணவுக்குக் கஷ்டப்படும் நிலை ஏற்படவில்லை. அயர்லாந்தில் சைவ உணவுக்காரர்களுக்கு உணவு விஷயத்தில் பிரச்சனை இல்லை. எல்லா உணவகங்களிலும் நல்ல காய்கறி உணவுகள் நன்கு கிடைக்கின்றன.
















தொடரும்..

சுபா

Wednesday, May 18, 2016

அயர்லாந்தின் அழகில்...! வண்ணக் கோலங்கள் 15

மதியம் உணவு வேளையைக் கடந்து ஏறக்குறை இரண்டரை மணி வாக்கில் கோல்வே நகரின் மையப்பகுதியை வந்தடைந்தோம். மழைத்தூறல் இன்னமும் இருந்ததால் அனைவருமே மழைக்கோட் அணிந்து கொண்டும் குடைகளை ஏந்திக் கொண்டும் நடக்க வேண்டியதாக இருந்தது. எங்கள் பயண வழிகாட்டி அயர்லாந்தில் வருஷம் முழுவதும் மழை பெய்வதால் எப்போதும் குடையுடனே செல்வதுதான் உதவும் என்று கூடுதலாக அழுத்தம் தந்து சூழலை விளக்கினார்.




சுற்றிப்பார்க்கச் செல்லும் போது எப்போதுமே நல்ல வெயிலாக இருந்தால் பார்க்க வேண்டியனவற்றைப் பார்க்கவும் புகைப்படம் எடுக்கவும் ஏதுவாக இருக்கும். ஆனால் மழை பெய்ய ஆரம்பித்து விட்டாலோ மழையிலிருந்து நம்மை நனையாமல் பார்த்துக் கொள்ள கவனம் எடுப்பதில், பார்க்க வேண்டியனவற்றில் பலவற்றை தவற விடக்கூடிய சந்தர்ப்பமும் நிகழ்ந்து விடும். இது சற்று கவலையையும் தரத்தானே செய்யும்.


​ 

என்னுடன் வந்த ஏனைய ஜெர்மானிய பயணிகள் பேருந்துப் பயணத்தின் போதே மழையை நினைத்து புலம்பிக் கொண்டே வந்தனர். "இந்த வாரத்தில் சுற்றுலா பதிவு செய்தது பெரிய தவறாகிவிட்டது" எனப் பலர் தங்கள் வருத்தத்தை தெரிவித்துக் கொண்டே வந்தனர். இந்தக் குறைபாடுகளைக் கேட்ட எங்கள் பயண வழிகாட்டிச் சொன்னார். ஜெர்மானிய மக்களின் இயல்பு, எப்போதும், "இன்னும் கூட சரியாகச் செய்திருக்கலாமோ" என்றே இருக்கும். ஆனால் அயர்லாந்து மக்களின் இயல்போ இதற்கு மாற்றாக " இதற்கு மேல் மோசமாக இல்லாமல் இருக்கின்றதே - இதுவே பரவாயில்லை" என்பதாக இருக்கும் என்று சொன்னபோது ஏனைய ஜெர்மானிய சுற்றுப்பயணிகள் இதனை ஒப்புக் கொண்டனர்.

​ 

ஆக "போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து" என்ற பழமொழிக்கு ஏற்ப மனதில் எல்லாச் சூழலையும் ரசிக்க ஆரம்பித்து விட்டால் ஏமாற்றம் நம்மை அதிகமாகத் தாக்காது என்பதை இந்த இரண்டு சமூகங்களுக்கிடையேயான அடிப்படை குண நலன்கள் பற்றிய விளக்கம் நன்கு புரியவைப்பதை நேரிலேயே அறிந்து கொண்டேன்.


​ 


kooல்வே நகரில் ஒரு உணவகத்தில் மதிய உணவை சப்பிட்டு விட்டு சாலையோரத்தில் நடந்து சென்று ரசித்துக் கொண்டிருந்தோம். டப்ளினை விட இங்கே ஒவ்வொரு கடையும் வீடுகளும் வண்ண வண்ண கோலத்தில் கண்களைக் கவர்வதாக அமைந்திருந்தன.


​ 
வீட்டுக்குப் பூசப்பட்ட வர்ணங்கள் மிகக் கவர்ச்சியான வர்ணங்களாகவும் சாலையில் போவோரைத் திரும்பிப்பார்க்க வைக்கும் வகையிலும் இருந்தன. சில கட்டிடங்களில் ஓவியங்கள் வரைந்து அவை சாலையில் வருவோர் போவோர் நின்று பார்த்துச் செல்லும் வகையில் அமைந்திருந்ததையும் கவனித்து ரசித்தேன்.


​ 


கால்வே நகரிலே ஒரு இந்திய உணவகமும் இருக்கின்றது. அங்கே வரும் சுற்றுப்பயணிகளுக்காக இது இருக்குமா அல்லது இங்கே கணிசமான எண்ணிக்கையில் இந்தியர்களும் இருப்பார்களா என்ற கேள்வி மனதில் எழாமல் இல்லை. ஆயினும் இங்கிலாந்தைப் பொறுத்தவரை இந்திய உணவு ஆங்கிலேயர்களின் அன்றாட உணவில் இணைந்து ஒன்றாக விட்டது என்பதும் வீட்டிலேயே கூட ஆங்கிலேய மக்கள் இந்திய உணவுகளைச் சமைத்து சாப்பிடுவது வழக்கமாகிவிட்டது என்பதையும் நான் அறிந்திருந்தேன். ஆனால் அயர்லாந்தில் இன்னமும் அந்த அளவிற்கு இந்திய உணவு பயன்பாடு விரிவடைந்திருக்குமா என யோசனை இருந்தது. எங்கள் பயண வழிகாட்டியிடம் கேட்ட போது பெரும்பாலும் இங்கிலாந்திலிருந்து வரும் ஆங்கிலேயர்கள் இந்திய உணவுகளுக்குச் செல்வது வழக்கம் என்றும் அயர்லாந்து ஐரீஷ் மக்கள் இன்னமும் இந்திய உணவுக்கு அதிக அளவில் அறிமுகம் பெறவில்லை என்பதையும் அறிந்து கொண்டேன்.



சாலைகளின் பல பகுதிகளைச் சுற்றிப்பார்த்த பின்னர் ஒரு நல்ல ரெஸ்டாரண்டில் அமர்ந்து காப்பி சாப்பிட்டு விட்டு பேருந்து இருக்கும் இடம் நோக்கி வரும் போது மாலை ஆறு ஆகியிருந்தது. அன்றைய நாள் நல்ல முறையில் திருப்திகரமாக அமைந்த மகிழ்ச்சியில் மறு நாள் நிகழ்ச்சிகளை எண்ணி மகிழ்ந்திருந்தது என் மனம்.


தொடரும்

சுபா

Tuesday, May 17, 2016

அயர்லாந்தின் அழகில்...! கில்மோர் அபேய் (Kylemore Abbey) 14

கோல்வே மாவட்டத்தில் உள்ள கோன்னிமாரா நகர் கில்மோர் அபேய் மாளிகைக்காகவே புகழ்பெற்றது என்பது மிகையன்று. ஆங்கில திரைப்படங்களில் நாம் காணும், பெரும் காட்டுக்குள் இருக்கும் மனிதர்கள் அற்ற மாளிகை போன்று தான் எனக்கு இந்த மாளிகையைப் பார்த்த முதல் கணம் எண்ணம் தோன்றியது. சுற்றிலும் பச்சை பசேல் என மரங்கள் சூழ ஒரு பெரிய ஏரியைப் பார்த்த வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது இந்த கில்மோர் மாளிகை.



இது மாளிகை என்ற போதிலும்கன்னிகாஸ்திரிகள் மடம் என்பது தான் இதற்குப் பொருந்தும். இந்த மாளிகையை முதலில் தனக்காக கட்டிக் கொண்டவர் மிட்சல் ஹென்ரி என்ற பெரும் பணக்கார மருத்துவர். இவர்களது குடும்பம் இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் துணி வியாபாரத்தில் ஈடுபட்டு பெரும் லாபத்தை ஈட்டியவர்கள். மிட்சல் ஹென்ரியும் அவர் மனைவி மார்கரெட்டும் இப்பகுதியில் இந்த நிலத்தை தமக்காக வாங்கிய பின்னர் இந்த மாளிகையைக் கட்டி அமைத்தனர். இதன் அருகாமையில் விக்டோரியன் ஸ்டைல் பூந்தோட்டம் ஒன்றையும் இவர்கள் அமைத்தனர். இந்தப் பகுதியை வடிவமைக்க 300,000 மரங்களையும் செடிகளையும், அதிலும் இப்பகுதியில் வளரக்கூடிய தன்மை கொண்டவையாகத் தேர்ந்தெடுத்து வாங்கி அக்காலத்திலேயே அதாவது 1880ம் ஆண்டுகளில் இவர்கள் இம்மாளிகையையும் நந்தவனத்தையும் அமைத்து உருவாக்கினர் என்பது வியப்பாக இருக்கின்றது அல்லவா?

ஏறக்குறை 40,000 அடி பரப்பளவைக் கொண்டது இந்த மாளிகை. இதில் 70 அறைகள் உள்ளன. ஒவ்வொரு அறையும் பிரத்தியேகமான அலங்காரத்துடன் இன்னமும் இருக்கின்றன. தனது மனைவி மார்கரெட் மறைந்த போது அவர் நினைவாக ஹென்ரி ஒரு தேவாலயத்தையும் அருகிலேயே அமைத்திருக்கின்றார். பின்னர் இவர் இங்கிலாந்து மாற்றலாகி வந்து விட்டார்.

​ 

அதற்குப்பின் மான்செஸ்டர் பிரபுவும் அவரது மனைவியும் இந்த மாளிகையை வாங்கினாலும் அதீத கடனால் அவர்கள் இந்த மாளிகையை விற்கவேண்டிய சூழல் ஏற்பட்டது. 1920ம் ஆண்டில் அயர்லாந்தின் பெனடிக்டன் கன்னிகாஸ்திரிகள் இந்த மாளிகையை வாங்கினர். இந்த பெனடிக்டன் கன்னிகாஸ்திரிகல் பெல்ஜியம் நாட்டில் உள்ள ஒய்ப்ரெஸ் நகரில் 1600கள் தொடங்கி பெண்களுக்கான கன்னிகாஸ்திரிகள் பாடசாலையை நடத்தி வந்தனர். முதலாம் உலகப்போர் காலகட்டத்தில் பெரும் சேதத்தை இவர்கள் சந்திக்கவே அமைதியை நாடி ஓரிடத்தைத் தேடிக்கொண்டிருந்தவர்களுக்கு இந்த இடம் புகலிடமாக அமைந்ததால் இப்பகுதியை மேன்சஸ்டர் பிரபுவிடமிருந்து வாங்கிக் கொண்டு இங்கே கன்னிகாஸ்திரிகள் மடத்தையும் கல்விக்கூடத்தையும் அமைத்தனர்.

பெனடிக்டன் கன்னிகாஸ்திரிகள் தங்கள் மடத்தில் அனைத்துலக உயர்கல்வி மையம் ஒன்றைத் தொடங்கினர். இந்த மாளிகையின் சில அறைகளை வகுப்பறைகளாக மாற்றினர்.

அக்காலகட்டத்தில் இரண்டு இந்திய இளவரசிகள் இங்கே வந்து கல்வி கற்றிருக்கின்றனர் என்ற செய்தியை புகைப்படத்தோடு இந்த மாளிகையில் பார்த்த போது ஆச்சரியப்பட்டேன். 1920ம் ஆண்டில் இந்திய இளவரசர் ரஞ்சிட்சிங்ஜி அயர்லாந்தின் பாலினாஹிச் மாளிகையை வாங்கினார். மன்னர் ரஞ்சித்தின் மகள்களான இளவரசி ராஜேந்திர குமாரியும் இளவரசி மன்ஹேர் குமாரியும் இந்த கில்மோர் மாளிகை கன்னிகாஸ்திரிகள் கல்விக்கூடத்தில் உயர்கல்வி படிக்க 1923ம் ஆண்டில் இங்கே வந்தனர், 1930ம் ஆண்டில் இவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இங்கே வைத்திருக்கின்றார்கள்.




இன்றைய சூழலில் கில்மோர் மாளிகையைச் சுற்றுப்பயணிகள் வந்து பார்க்க அனுமதித்திருக்கின்றனர். அதற்கு தனிக்கட்டணமும் வசூலிக்கின்றனர்.

எங்களைப் பேருந்து இங்கே அழைத்து வந்த சமயம் மழைத்தூறல் ஆரம்பித்து விட்டது. ஆக முதலில் மாளிகைக்குச் சென்று அதன் வரலாற்றை அறிந்து கொள்வதில் சிறிது நேரம் செலவிட்டோம். அதன் பின்னர் தன் மனைவிக்காக ஹென்ரி கட்டிய தேவாலயத்தைப் பார்த்து அங்கே சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொண்டு பூங்கா பகுதிக்குச் சென்றோம்.

​ 

மழைத்தூறல் விடுவதாக இல்லை. ஆயினும் மழை இந்தப் பூங்காவை ரசிப்பதற்குத் தடையாக இருக்கக்கூடாது என்று மழை ஜேக்கட் போட்டுக் கொண்டு பூங்காவிற்குள் இறங்கி நடந்து அதன் அழகை ரசித்தேன். ஆங்காங்கே புகைப்படங்களும் எடுத்துக் கொண்டேன்.






அன்றைய நாளில் நாங்கள் நான்கு மணி நேரங்களை கோல்வே நகரில் செலவிடலாம் என்றும் விரும்புவோர் அங்கேயே மதிய உணவும் சாப்பிடலாம் என்றும் எங்கள் பயண வழிகாட்டிக் கூறவே எங்களுக்குக் கொடுக்கப்பட்ட நேரம் முடிவடையும் நேரம் வரவே பேருந்துக்கு விரைந்து சென்று அடுத்த இலக்கை நோக்கி பயணமானோம். 

Wednesday, May 11, 2016

அயர்லாந்தின் அழகில்...! கோல்வே நகரில் - 13

காலையில் டப்ளின் நகரிலிருந்து தொடங்கிய எங்கள் பயணம் பின்னர் க்ளோன்மெக்னோய்ஸ் மடம் சுற்றிப்பார்த்தல் என்பது மட்டுமல்லாது இடையில்  அயர்லாந்தின் மேலும் சில புற நகர்ப்பகுதிகளையும் மதிய உணவு வேளையில் பார்க்கும் வாய்ப்புடன் அமைந்திருந்தது.



 நாள் முழுதும் பயணம் என்ற நிலையில், தங்கும் விடுதிக்கு வந்த போது மிகுந்த களைப்புடன் எல்லோரும் இருந்தாலும் சிறிது ஓய்வெடுத்துக் கொண்டு நாங்கள் தங்கியிருந்த பகுதியில் சுற்றிப் பார்த்து வரலாம் என்ற எண்ணமும் இருந்ததால் மாலை ஏழு மணி வாக்கில் மீண்டும் சந்தித்து வெளியே சேர்ந்தே எல்லோரும் செல்வோம் எனப் பேசிக் கொண்டு ஓய்வெடுக்கச் சென்று விட்டோம்.



எங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தங்கும் விடுதி மிக ரம்மியமான ஒரு கிராமப்பகுதியை ஒட்டிய சிறு நகரில் அமைந்திருந்தது. அருமையான நான்கு நட்சத்திர தங்கும் விடுதி அது. மாலையில் மீண்டும் அனைவரும் சந்தித்து மாலை உணவு உண்ண சேர்ந்து நடந்தே சென்றோம்.




அந்தப் பயணக்குழுவில் வந்திருந்த ஏனைய அனைவருமே ஜெர்மானியர்கள் தாம். அவர்களுடன் பல தகவல்களைப் பேசிக் கோண்டு சென்று மாலை உணவு சாப்பிட்டு வந்த போது ஒருவரைப் பற்றி மற்றொருவர் மேலும் அறிந்து கொள்ள முடிந்தது.




மறுநாள் காலை உணவை முடித்துக் கொண்டு மீண்டும் பயணமானோம்.

கால்வே நகர் அழகியதொரு நகரம். டப்ளின் போல வாகன நெரிசல் இல்லையென்றாலும் இது அயர்லாந்தின் முக்கிய ஒரு வர்த்தக நகரம் என்ற சிறப்பை பெற்றது.கேல்டாஹ்ட் (Gaeltacht)  பகுதியின் தலைநலைகர் என்ற சிறப்பும் பெற்றது. கேல்டாஹ்ட் பகுதி ஐரிஷ் மொழி பேசும் மக்கள் வாழும் பகுதி என அடையாளப்படுத்தப்படும் பகுதி. கலை, இசை, ஓவியம் என்ற வகையில் பிரசித்தி பெற்ற நகரம் இது என்பதும் கூடுதல் செய்தி.

13ம் நூற்றாண்டில் ஆங்லோ-நோர்மன் டி பர்கோ குடும்பத்தினர் இந்த நகரத்தைக் கைப்பற்றிய பின்னர் நோர்மன் இனக்குழுவினரின் ஆதிக்கத்தில் இப்பகுதி வந்தது. இப்பகுதியை பதினான்கு குடும்பங்கள் பிரித்து ஆட்சி செய்ததால் இது City of tribes என்றும் குறிப்பிட்டு அழைக்கப்பட்டது.15ம் நூற்றாண்டிலிருந்து 17ம் நூற்றாண்டு காலகட்டத்தில் அயர்லாந்தின் ஏனைய பகுதி ஆட்சியாளர்கள் இங்கிலாந்தின் ஆட்சிக்கு எதிராகப் போர் கொடி உயர்த்திய போது  கால்வே எந்த எதிர்ப்பையும் காட்டாமல் ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு உட்பட்டு அமைதியாக இருந்தது.   பின்னர் படிப்படியான வளர்ச்சியை பெற்றதோடு அண்டை நாடுகளான ஸ்பெயின், பிரான்சு போர்த்துக்கல் ஆகிய நாடுகளுடன் வர்த்தகத் தொடர்பை விரிவு படுத்தி இந்த நகரம் தனித்துவத்துடன் செழித்து வளர்ந்தது,

அன்றைய நாளில் காலையில் கால்வே நகரில் ஒரு மணி நேரம் சுற்றிப்பார்க்க எங்களுக்கு பயண வழிகாட்டி அனுமதி அளித்திருந்தார்.  நகரின் மையப்பகுதியில் நடந்து சென்று கடைவீதிகளில் சிலர் நினைவுச் சின்னங்களை வாங்கிக் கொண்டனர். நான் மனதிற்குப் பிடித்த காட்சிகளை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தேன்.




எங்கள் பேருந்து தொடர்ந்து கில்மோர் அபேய் (Kylemore Abbey)  மாளிகையை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது.

தொடரும்

சுபா

Tuesday, May 10, 2016

அயர்லாந்தின் அழகில்...! க்ளோன்மெக்னோய்ஸ் மடம் -12

ஷானன் பகுதியில் ஒஃபேலி மாவட்டத்தில் அமைந்திருக்கும் க்ளோன்மெக்னோய்ஸ் மடம் செயிண்ட் சியேரன் அவர்களால் கி.பி.544ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. செயிண்ட் சியேரன்  இப்பகுதிக்கு வந்தடைந்தபோது இங்கே கத்தோலிக்க மதம் அறிமுகப்படுத்தப்படவில்லை. இங்கே செயிண்ட் சியேரன்   சந்திந்த  Diarmait Uí Cerbaill அவர்களின் உதவியுடன் இந்தப் பகுதியில் முதல் தேவாலயத்தைக் கட்டினார். முதலில் கட்டப்பட்ட தேவாலயம் சிறிய வடிவில் மரத்தால் அமைக்கப்பட்ட வடிவினைக் கொண்டது. அதனைச் சுற்றி சிறிய சிறிய தேவாலயங்களை இவர் அமைத்தார். Diarmait Uí Cerbaill இப்பகுதியில் செல்வாக்குள்ளவராகத் திகழ்ந்தார்.  கத்தோலிக்க மடத்தை அமைத்து Diarmait Uí Cerbaill யை அயர்லாந்தின் முதல் அரசராக  பட்டம் சூட்டி அமர்த்தினார் செயிண்ட் சியேரன் . அதே ஆண்டில் தனது 33வது வயதைடையும் முன்னரே வெகுவாக அப்பகுதியைத் தாக்கிய ப்ளேக் நோயினால் உடல் நலிவுற்று, செயிண்ட் சியேரன் அவர்கள் மறைந்தார். இவரது சமாதி இவர் அமைத்த முதல் தேவாலயத்தின் கீழேயே அமைக்கப்பட்டது.




இந்தத் தகவலைக் கேள்விப்பட்டபோது  தமிழக மன்னர்கள் அல்லது சாதுக்களுக்காக அமைக்கும் பள்ளிப்படை கோயிலும் நினைவாலய அமைப்பும் என் நினைக்கு வந்தது. சமய குருமார்களின் சமாதிக்கு மேல் ஆலயம் எழுப்பும் ஒரு பண்பு 6ம் நூற்றாண்டு வாக்கில்  அயர்லாந்திலும் இருந்திருக்கின்றது. இதனை என்ணிப் பார்க்கும் போது பொதுவாகவே மக்கள் சமய நெறியில் உயர்ந்தோர் இறக்கும் போது அவர்களின் பூத உடலை புதைத்து அவர் நினைவாக அவர்கள் வழிபடும் தெய்வ வடிவங்களை வைத்து போற்றி வழிபடுவது அந்த சமயப் பெரியவருக்கு அவர்கள் வழங்கும் மரியாதையாகக் கருதுகின்றனர் என்பதையும் உலகின் பல சமூகங்களில் இத்தகையச் சிந்தனை ஒற்றுமை மனிதர்களுக்கிடையே சமய, இன பேதம் கடந்து எழுவதையும் காண முடிகின்றது.

அடிப்படையில் மனிதர்கள் எல்லோருக்குமே இன மொழி வேறுபாட்டுடன் அவர்கள் எங்கேயிருந்தாலும் கூட மனிதர்களுக்கிடையே பற்பல ஒற்றுமைகள் இருப்பதை மானுடவியல் கூறுகளைக் கவனிக்கும் போது தெளிவாகக் காண முடிகின்றது.




க்ளோன்மெக்னோய்ஸ் மடம் பல இன்னல்களுக்கு ஆளானது என்பதை இங்குள்ள அருன்காட்சியகத்தின் குறிப்புக்களிலிருந்து அறிந்து கொள்ள முடிகின்றது.  தொடர்ந்து ப்ளேக் நோய் தாக்கியதால் மடத்தில் தங்கியிருந்த மாணவர்களில் பலர் நோயினால் வாடி மறைந்தனர். ஆயினும் இந்த மடம் 8ம் நூற்றாண்டு தொடங்கி 12ம் நூற்றாண்டு வரை விரிவான வளர்ச்சி கண்டது. இப்பகுதியை ஸ்கேண்டினேவியாவிலிருந்து வந்த வைக்கிங் என்று ஆங்கிலத்தில் நாம் குறிப்பிடும் கடற்கொள்ளையர்கள் குறைந்தது ஏழு முறையாவது தாக்கியுள்ளனர்.  அதுமட்டுமல்லாது ஐரிஷ் படை 27 முறை இப்பகுதியில் தாக்குதல் நடத்தியும் இது வீழ்ச்சியடையவில்லை. கி.பி.9ம் நூற்றாண்டு வாக்கில் இங்கிருந்த மரக்கட்டிடங்கள் மாற்றம் செய்யப்பட்டு இங்கு கற்கோயில்கள் உருவாக்கப்பட்டன.




இந்த மடாலயம் இருக்கும் பகுதியில் ஒரு கேத்திட்ரல், ஏழு தேவாலயங்கள், 3 பெரிய கற்சிலுவைகள் மற்றும் இறந்தோரின் சமாதிகள் ஆகியன இருக்கின்றன. இங்குள்ள சமாதிகளில் கேலிக் குறியீடுகள் பொறிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

இப்பகுதியில் இருக்கும் Cross of the Scriptures அயர்லாந்தின் மிக முக்கிய வரலாற்றுச் சின்னங்களுள் ஒன்றாகத் திகழ்வது. இதன் அசல் வடிவம் அங்கேயே உள்ள அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு வெளிப்புறத்தில் அதன் மாதிரி வடிவம் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.



இந்தச் இலுவை ஏனைய கத்தோலிகக் சிலுவையிலிருந்து மாறுபட்ட வடிவத்தைக் கொண்டது. 4 மீட்டர் உயரம் கொண்டது.  கற்சிலுவையான இதில் ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் காட்சிகளும், ஏசு கிறிஸ்து இறுதியாக தன் நம்பிக்கையாளர்களுடன் உணவு உண்ணும் காட்சியும் பின்னர் ஏசு கிறிஸ்து மீண்டெழும் காட்சியும் செதுக்கப்பட்டுள்ளன. கேலிக் குறியீடுகளும் அலங்காரங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன.



எங்கள் சுற்றுலா பயணிகள் குழு இங்கே சென்றடைந்த போது  மாலை 4 மணியாகியிருந்தது. முதலில் இங்கிருக்கும் அருங்காட்சிகயத்தினுள் சென்று அங்கே க்ளோன்மெக்னோய்ஸ் கத்தோலிக்க சமய  மடம் பற்றிய வரலாற்றுச் செய்திகளை அறிந்து கொண்டோம். பின்னர் வெளியே வந்து க்ளோன்மெக்னோய்ஸ் மடத்தின் தேவாலயங்கள், சமாதிகள் ஆகியனவற்றைப் பார்த்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்.

க்ளோன்மெக்னோய்ஸ் மடம் இருக்கும் பகுதி மிக ரம்மியமானது. தூரத்தில் ஓடும் ஓடைகள்... புல் மேயும் அழகிய பசுக்கள்... குளிர்ச்சியான காற்று என மனதிற்கு பசுமையை வாரி வழங்கியது இயற்கை சூழல். அப்பகுதில் ஏறக்குறைய இரண்டு மணி நேரங்களைச் செலவிட்டு விட்டு அங்கிருந்து புறப்பட்டோம்.




அன்றைய மாலை எங்களுக்கு கோல்வேய் நகரிலேயே தங்குவதற்கான  வசதி சுற்றுலா நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பேருந்தில் ஏறி அமர்ந்ததும்  எப்போது தங்கும் விடுதி வரும் என்று ஆவலுடன் சாலையை நோக்கிக் கொண்டிருந்தேன். எங்கள் பேருந்தும் சற்று நேரத்தில் அழகியதொரு கிராமப்பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியின் வாசலில் வந்து நின்றது.


தொடரும்...
சுபா