எனது அண்மைய டென்மார்க் பயணம் எனக்கு தனிப்பட்ட வகையில் மிக மன நிறைவை தந்ததொரு பயணம். இதில் எனது நீண்ட கால விருப்பத்தைச் செயல்படுத்த முடிந்தது.
டென்மார்க் நாட்டின் தலைநகரமான கோப்பன்ஹாகன் நகரில் முதலில் இறங்கும் முன் ஜெர்மனி தலைநகரம் பெர்லின் போன்று இருக்கலாம் என்ற எண்ணம் என் மனதில் இருந்தது. விமான நிலையம் விட்டிறங்கி நகர மையம் சென்றடைந்ததும் இது தான் டென்மார்க்கின் தலைநகரமா? சரியான ஊருக்குத்தான் வந்துள்ளோமா என்ற சந்தேகம் வந்து விட்டது.
ஏனென்றால் கோப்பன்ஹாகனில் நான் எதிர்பார்த்த அளவு மக்கள் கூட்டத்தை நெரிசலைக் காணவில்லை. இங்கே ஸ்டுட்கார்ட் நகரத்தில் இருக்கும் கூட்ட நெரிசல் அளவில் கூட மக்களைக் காணவில்லை.
டென்மார்க்கின் மொத்த மக்கள் தொகை 5 மில்லியன் தான் என்று அறிந்து கொண்டேன்
இரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்தால் சைக்கிள் பயணிகள் சர் சர்ரென்று பயணித்துக் கொண்டேயிருக்கின்றனர். எங்கு பார்த்தாலும் மைய சாலைகளில் சைக்கிள் பயணிகள்.
கோப்பன்ஹாகனில் டேனீஷ் அரசின் பெருமையைச் சொல்லும் பிரம்மாண்டமான கட்டிடங்களுக்குக் குறைவில்லை. உறுதியான ஆளுமையை அவை இன்றும் பறைசாற்றுகின்றன. தூய்மையான நகரம்.
இங்கே பொது போக்குவரத்து என்பது பாராட்டும் வகையில் உள்ளது. குறிப்பிட்ட நேரத்திற்கு பேருந்துகளும் ரயில் வண்டிகளும் வந்து விடுகின்றன.
பொது மக்கள் மிக அன்பானவர்கள். எனக்குத்தான் இப்படி வாய்க்கின்றதோ என யோசிக்கும் வகையில் நான் சென்ற இடங்களிலெல்லாம் இனிமையாகப் பேசிப்பழகும் டேனிஷ் மக்கள்.
அதுமட்டுமா.. அங்கு சந்தித்த திரு ஆதவன் குடும்பத்தாரும், ஞானமலர் குடும்பத்தாரும் என்னை அன்பாகக் கவனித்துக் கொண்டதில் அவர்கள் வீட்டுப் பெண் போலவே ஆகிப்போன ஒரு அனுபவம் ஏற்பட்டது எனக்கு. என் கட்டுப்பாடான விடாப்பிடியான செயல்பாடுகளைப் பொறுமையுடன் சகித்துக் கொண்டு என்னை இவர்கள் பார்த்துக் கொண்டனர் என்றே சொல்வேன். இவர்கள் அன்பை மறக்க முடியாது.
எங்கெங்கு காணினும் பசுமை. இயற்கை அழகை கூட்டும் கடற்கரையோரங்கள் .. துறைமுகப்பகுதிகள்.. கப்பல்கள்.. என மனதை இலகுவாக்கும் இயற்கை சூழல் நிறைந்த நாடு டென்மார்க். குட்டி குட்டி தீவுகள் ஆங்காங்கே.. எதனை ரசிப்பது எதனை விடுவது என திகைத்துத்தான் போனேன்.
மல்லேஸ்வரி, ஜனனி இருவருடனும் இன்னமும் கூட நேரம் செலவிட்டிருக்கலாம் என்றும் மனதில் தோன்றுகின்றது.. மீண்டும் வருவேன்.. விட்டுப் போன அருங்காட்சியகங்களையும் சுவடிகளையும் ஒரு காரணமாக வைத்துக் கொண்டு மீண்டும் வருவேன் :-)
1 comment:
தங்கள் பதிவு மூலமாக டென்மார்க்கை ரசித்தோம். நன்றி.
Post a Comment