மலேசியாவைப் பொருத்தவரை தீபாவளிக் கொண்டாட்டம் என்பது இங்கு வாழும் பல்லின மக்களுடன் இணைந்து கொண்டாடுவது தான், ஒவ்வொரு வீட்டிலும் தீபாவளிக்கு முன்னர் வீட்டில் உள்ளவர்கள் செய்கின்ற பலகார வகைகளில் முருக்கு அதிரசம், நெய்யுருண்டை, சீடை போன்றவை கட்டாயம் இடம் பெறும் இவற்றோடு மலாய் பலகாரங்களாக பிஸ்கட் வகைகளும் மாவினால் தயாரிக்கப்படும் சில கார வகை பண்டங்களும் இடம் பெறும்,
இப்படி தயாரிக்கப்படுகின்ற பலகாரங்களைத் தீபாவளியன்று காலையில் வழிபாட்டுக்குப் பின்னர் தான் வீட்டில் உள்ளவர் அனைவரும் உண்ண அனுமதி கிடைக்கும். குடும்பத்தில் உள்ளோர் சாப்பிடுவது என்பதோடு அண்டை வீட்டுக்காரர்களுக்கு இந்தப் பலகாரங்களை ஒரு தட்டில் வைத்துக் கொடுப்பதும் தொடர்ந்து நடைமுறையில் இருக்கின்றது. நம் பக்கத்து வீட்டுக்காரர் ஒரு சீனர், அல்லது மலாய்க்காரர் என்றால் அவர்களுக்குத் தட்டில் பலகாரங்களை வைத்து கொடுக்கும் போது நமக்குப் பரிசாக பேக்கட்டுகளில் பணத்தை வைத்து பரிசாகத் தருவார்கள். அங்பாவ் என்று இதற்குப் பெயர். இதே போல சீனர் பெருநாள், இஸ்லாமிய ரமடான் திருநாள் ஆகிய பண்டிகை நாட்களில் அவர்கள் வீட்டிலிருந்து நமக்குப் பலகாரங்கள் வரும்போது நாமும் அவர்களுக்கு பணத்தை பரிசாக அங்பாவ் பேக்கட்டில் வைத்து கொடுப்போம்.
No comments:
Post a Comment