Monday, April 22, 2019

ரொமேனியா பயணம் - 23- சிந்தனைகள்

நான்கு நாட்கள் ருமேனியாவின் தலைநகர் Bucharest மற்றும் துறைமுகப்பட்டினம் Constanta என இந்த ஈஸ்டர் விடுமுறை நல்ல வகையில் கழிந்தது.
புக்கரெஸ்ட் நகரில் இருந்த நான்கு நாட்களும் இந்த இன மக்களின் இன்றைய நிலையை ஓரளவு அறிந்து கொள்ள முடிந்தது. கம்யூனிஸ ஆட்சிக்குப் பின்னர் பல மாறுதல்களைச் செய்ய வேண்டும் என முயற்சித்தாலும் பொருளாதார மேம்பாடுகளைச் சரியாக முன்னெடுக்காத நாடு என்றே எண்ணத் தோன்றுகிறது.
நாட்டின் மொத்த மக்கள் தொகை 20 லட்சம். ரொமேனியர்களில் பலர் ஐரோப்பாவின் பல நாடுகளுக்கும் குறிப்பாக மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் அமெரிக்காவிற்கும் புலம் பெயர்ந்து விட்டார்கள். அங்கேயே வேலை செய்து கொண்டு தங்கள் குடும்பத்தையும் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். உள்ளூரில் வேலை இல்லா திண்டாட்டமும் உயர்வாகவே இருக்கின்றது.
தொழில் வாய்ப்பும் குறைவு.. தொழில்நுட்ப வளர்ச்சியும் குறைவு...இந்த சூழலில் ருமேனிய மக்களின் பொருளாதார மேம்பாடு என்பது பெரிதாக சொல்லிக் கொள்ளும் வகையில் இல்லை. வணிகம் சிறப்பாக இல்லாததால் அயல் நாட்டு மக்களையும் காண முடியவில்லை. குறிப்பாக ஏறக்குறைய எல்லா தலைநகரங்களிலும் இருக்கும் சீனர்கள், சீனர்களின் கடைகள் இங்கு ஒன்றை கூட நான் பார்க்கவில்லை.
அடிப்படையில் மக்கள் மிக அன்பாக பழகுகிறார்கள். தெரியாத விஷயங்களை கேட்டால் உடன் வந்து தயங்காமல் உதவுகின்றார்கள். ஆசிய மக்களைப் போன்று நண்பர்களுடன் கூடி மகிழ்ந்து உறவாடும் மக்களாக இவர்கள் இருக்கின்றார்கள். இது மேற்கு ஐரோப்பிய கலாச்சாரத்தில் இருந்து சற்று மாறுபட்டதாகவே இருக்கின்றது.
மிகத் தீவிரமாக அமெரிக்க மோகம் வளர்ந்து வருவது இங்கு தெரிகின்றது. இது ரொமேனியா மக்களின் பண்டைய கலாச்சார பண்புகளை மறக்கச் செய்துவிடும் என்று அபாயமும் தெரிகின்றது.
இங்கு உள்ள அருங்காட்சியகங்கள் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகங்களின் பட்டியலில் நிச்சயமாக இடம்பெறவேண்டும். இங்குள்ள அரும்பொருட்கள் ஐரோப்பிய வரலாற்று மற்றும் பண்பாட்டு விழுமியங்களை வெளிப்படுத்தும் புராதன சின்னங்களாக இருக்கின்றன.
புக்கரெஸ்ட் விமான நிலையம் சிறியது. ஆகையினால் பயணிகள் அலைமோதிக் கொண்டு இருப்பதைக் காண முடிகின்றது. இந்த நாட்டில் பெருமளவில் பொருளாதார மேம்பாடு நிச்சயமாக தேவை. ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் பெற்றிருப்பதால் இதற்கான சாத்தியக்கூறுகள் படிப்படியாக நிகழலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
அழகிய இயற்கை சூழல், எனக்கு பிடித்த வகையில் பல அருங்காட்சியகங்கள், குறைந்த விலையில் பொதுப் போக்குவரத்து என்பது கவர்ச்சிகரமான அம்சங்கள்.
பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் இருந்தாலும் கூட அத்தகைய சூழலிலும் தங்கள் தாய்மொழி மேல் மிகுந்த ஈடுபாட்டுடனும் பற்றுடனும் இந்த மக்கள் இருக்கின்றார்கள் என்பது இவர்கள் மேல் மேலும் உயர் மதிப்பை அளிக்கின்றது. நாட்டின் எல்லா இடங்களிலும் ருமேனிய மொழியிலேயே எல்லா செய்திகளும் வழங்கப்படுகின்றன. ருமேனிய மொழிக்கு அடுத்து தான் ஜெர்மானிய மொழி மற்றும் ஆங்கில மொழியில் சில விளக்கங்களை ஆங்கங்கே காணமுடிகின்றது.
சுற்றுலாத்துறை எனும் பொழுது இந்த நாடு குறிப்பாக புகாரஸ்ட் நகரம் மேலும் தன்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். குறிப்பாக முக்கிய இடங்கள் இருக்கும் பகுதிகளுக்கான விளம்பரங்கள் முறையாக வழங்கப்பட வேண்டும். ஒவ்வொரு இடத்தையும் தேடி கண்டுபிடித்து செல்வதில் சுற்றுலாப்பயணிகளுக்கு சிரமங்கள் ஏற்படுகின்றன.
ஜெர்மனியில் ஊற்றாகி ஐரோப்பாவின் 10 நாடுகளை கடந்து பயணிக்கும் டனுப் நதி ரொமேனியாவின் நிலத்தை வளப்படுத்தும் ஒரு நதி. ரொமேனியாவைக் கடந்து கருங்கடலில் இந்த நதி கலக்கிறது.
மீண்டும் வாய்ப்பு அமைந்தால் இந்த நாட்டின் வட பகுதி மலைப்பிரதேசங்கள் சென்று பார்த்து வர வேண்டும்... இதன் ஒரு பகுதியாக இருந்து இன்று தனி நாடாக விளங்கும் மால்டோவா நாட்டிற்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் இருக்கின்றது.
-சுபா


No comments:

Post a Comment