அகஸ்டா ரௌரிக்கா (Augusta Raurica) தொல்லியல் தளத்தைப் பார்வையிட்டபோது, ஒரு பழங்கால நகரத்தின் கட்டட அமைப்புகளை மட்டுமல்லாமல், அங்கு வாழ்ந்த மக்களின் அன்றாட வாழ்க்கை, சமூக உறவுகள், வணிகம், சமய நம்பிக்கைகள், பொழுதுபோக்கு ஆகியவற்றையும் புரிந்துகொள்ள முடிந்தது. இந்த நகரம் திட்டமிட்ட நகரமைப்புடன் பல்வேறு பொதுப் பயன்பாட்டுப் பகுதிகளைக் கொண்டிருந்தது. அவற்றுள் ஆறு முக்கியப் பிரிவுகள் குறிப்பிடத்தக்கவை. அவற்றை ஒவ்வின்றாகக் காண்போம்.
1. ஆம்பிதியேட்டர் (Amphitheatre) – மக்கள் கூடும் பொழுதுபோக்கு அரங்கம்
பண்டைய ரோமானிய நகரங்களின் அடையாளங்களில் ஒன்றாக ஆம்பிதியேட்டர்கள் விளங்கின. அகஸ்டா ரௌரிக்காவிலும் இத்தகைய பிரம்மாண்டமான திறந்தவெளி அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது. இது பொதுமக்கள் ஒன்றுகூடி பல்வேறு நிகழ்ச்சிகளைக் காணும் முக்கியமான இடமாக இருந்தது.
இங்கு கிளாடியேட்டர்கள் (Gladiators) எனப்படும் போர்வீரர்களுக்கு இடையிலான சண்டைகள், விலங்குகளை வேட்டையாடும் காட்சிகள், வீரதீரச் செயல்களை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்வுகள் நடத்தப்பட்டன. சில நிகழ்ச்சிகளில் காட்டு விலங்குகளும் பயன்படுத்தப்பட்டன. இத்தகைய நிகழ்ச்சிகள் ரோமானிய மக்களின் பொழுதுபோக்கு கலாசாரத்தின் ஒரு பகுதியாக இருந்ததுடன், ஆட்சியாளர்கள் தங்களது செல்வாக்கையும் அதிகாரத்தையும் பொதுமக்களிடம் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பாகவும் அமைந்தன.
ஆம்பிதியேட்டரின் படிநிலை இருக்கை அமைப்பு, ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில் அமர்ந்து நிகழ்ச்சிகளைக் காணும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. இன்றைய விளையாட்டு அரங்குகளின் முன்னோடி வடிவங்களில் ஒன்றாக இத்தகைய ரோமானிய அரங்குகளைக் கருதலாம்.
2. கோயில்களும் நாடக அரங்கும் (Temples and Theatre) – சமயமும் கலை நிகழ்வுகளும்
ரோமானியர்களின் வாழ்க்கையில் சமயம் முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது. ஏராலமான கடவுளர்களை அவர்கள் வழிபட்டனர் என்றால் வியப்பாக இருக்கின்றதா?
அகஸ்டா ரௌரிக்காவிலும் வழிபாட்டிற்காகக் கோயில்களும், பொதுமக்கள் கலை நிகழ்ச்சிகளைக் காண்பதற்கான நாடக அரங்கும் அமைக்கப்பட்டிருந்தன. சமயத் திருவிழாக்கள், கடவுளர்களுக்கான வழிபாடுகள், காணிக்கைகள், சடங்குகள் ஆகியவை அன்றைய சமூக வாழ்வின் அங்கங்களாக இருந்தன.
குறிப்பாக, விலங்குகளைப் பலியிடும் சடங்குகள் (Animal Sacrifices) ரோமானிய சமய வழிபாட்டில் இடம்பெற்றிருந்தன என்பது கவனிக்கத்தக்கது. இச்சடங்குகளில் காளைகள், பசுக்கள், ஆட்டுக்கடாக்கள், செம்மறியாடுகள், பன்றிகள் போன்ற விலங்குகள் பயன்படுத்தப்பட்டன. எந்த விலங்கு பலியிடப்பட வேண்டும் என்பது வழிபடப்படும் கடவுள், சடங்கின் நோக்கம், அதன் முக்கியத்துவம் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபட்டது. பொதுவாகத் திருவிழாக்கள், கடவுளர்களுக்கான சிறப்பு வழிபாடுகள், அரச அல்லது பொதுநல நிகழ்வுகள், நேர்த்திக்கடன் செலுத்துதல் போன்ற சந்தர்ப்பங்களில் இத்தகைய பலியிடும் சடங்குகள் நடைபெற்றன.
விலங்கு பலியிடுதல் என்பது கடவுளர்களுக்கு நன்றி செலுத்துதல், அவர்களின் அருளைப் பெறுதல், சமூகத்தின் நலனுக்காக வேண்டுதல், இயற்கைப் பேரிடர்கள் அல்லது நோய்களிலிருந்து பாதுகாப்புக் கோருதல் போன்ற நம்பிக்கைகளுடன் அது தொடர்புபட்டிருந்தது. சடங்கின் ஒரு பகுதியாக விலங்கின் குறிப்பிட்ட உறுப்புகள் கடவுளுக்குப் படைக்கப்பட்டு, எஞ்சிய இறைச்சி சில நேரங்களில் சடங்கில் பங்கேற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளப்பட்டது.
அகஸ்டா ரௌரிக்காவின் சமய வழிபாடுகளில் ரோமானியப் பேரரசின் முக்கியக் கடவுளர்களான ஜூபிட்டர் (Jupiter), ஜூனோ (Juno), மினெர்வா (Minerva) ஆகியோரின் வழிபாட்டு மரபுகளும், உள்ளூர் செல்டிக் கடவுளர்களின் வழிபாடுகளும் இடம்பெற்றிருந்தன. ரோமானியப் பேரரசின் விரிவாக்கத்துடன் பல்வேறு உள்ளூர் சமய நம்பிக்கைகளும் ரோமானிய வழிபாட்டு மரபுகளுடன் இணைந்து காணப்பட்டன.
தமிழ்நாட்டின் சில கிராமப்புற அம்மன், முனியாண்டி, வீரபத்திரன், பேச்சாயி, மாயன் போன்ற தெய்வங்களின் கோயில்களிலும், நாட்டார் தெய்வ வழிபாட்டு மரபுகளிலும் ஆடு, கோழி போன்ற விலங்குகளைப் பலியிடும் வழக்கம் சில சமூகங்களிடையே இன்றும் காணப்படுகிறது. ஜவ்வாதுமலைப்பகுதியில் பன்றியை பலியிட்டு வழிபடும் சடங்கு இன்றும் தொடர்கிறது. திருவிழாக்கள், நேர்த்திக்கடன், நோய் நீங்க வேண்டுதல், ஊரின் பாதுகாப்பு வேண்டுதல் போன்ற காரணங்களுக்காக இத்தகைய சடங்குகள் நடத்தப்படுகின்றன. இதே வழக்கம் தமிழ்ச்சாமிகள் புலம்பெயர்ண்டஹ் மலேசியாவிலும் கூட இன்றும் நடைபெறுகின்றன. எடுத்துக்காட்டாக பினாங்கு மாநிலத்தில் உள்ள ஜாலான் பாரு முனீஸ்வர் ஆலயத்தில் நடைபெறும் விழாக்களைக் கூறலாம்.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ரோமானிய வழிபாட்டு முறைகளையும், தமிழ்நாட்டின் சில நாட்டார் தெய்வ வழிபாட்டு மரபுகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, வெவ்வேறு நாகரிகங்களில் சமய நம்பிக்கைகள் மக்களின் நம்பிக்கைகளோடு ஒரே வகையில் இயங்கியதை உணரலாம்.
3.கடைகள், வணிக வளாகங்கள் (Shops and Commercial Areas) – நகரத்தின் பொருளாதாரச் செயல்பாடுகள்
அகஸ்டா ரௌரிக்கா ஒரு குடியிருப்பு நகரமாக மட்டுமல்லாமல், வணிகச் செயல்பாடுகள் செழித்திருந்த நகரமாகவும் விளங்கியது. நகரின் முக்கிய வீதிகளையும் பொதுப் பகுதிகளையும் ஒட்டிப் பல்வேறு கடைகளும் வணிக நிறுவனங்களும் அமைந்திருந்தன. ரோமானியக் காலத்தில் இத்தகைய சிறிய கடைகள் Tabernae என்று அழைக்கப்பட்டன.
இந்தக் கடைகளில் உணவுப் பொருட்கள், தானியங்கள், மதுபானங்கள், மட்பாண்டங்கள், உலோகப் பொருட்கள், ஆடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன. உள்ளூர் உற்பத்தியாளர்கள் தங்களது பொருட்களை விற்பனை செய்ததுடன், தொலைதூரப் பகுதிகளிலிருந்து வணிகர்கள் கொண்டு வந்த பொருட்களும் இங்கு பரிமாறப்பட்டிருக்கலாம்.
வணிகம் என்பது பொருட்களை வாங்குவதும் விற்பதுமாக மட்டும் இருக்கவில்லை. வணிகர்கள், கைவினைஞர்கள், தொழிலாளர்கள், பணப் பரிமாற்றம் செய்பவர்கள் எனப் பல்வேறு தொழில்களைச் சார்ந்தவர்கள் ஒன்றுகூடும் இடமாகவும் இப்பகுதிகள் அமைந்திருந்தன. நாணய மாற்றம், பொருட்களுக்கான விலை நிர்ணயம், சரக்குகளின் சேமிப்பு, போக்குவரத்து போன்ற செயல்பாடுகளும் நகரின் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையாக இருந்தன.
அகஸ்டா ரௌரிக்காவின் வணிகச் செழிப்பைப் புரிந்துகொள்ளும்போது, மெர்குரி (Mercury) என்ற ரோமானியக் கடவுளின் வழிபாட்டையும் நினைவுகூர வேண்டியுள்ளது. வணிகம், வணிகர்கள், பயணம் ஆகியவற்றுடன் தொடர்புடைய கடவுளாக மெர்குரி கருதப்பட்டார். இந்நகரில் அவருக்கு அதிகமான வழிபாட்டு ஆதரவு இருந்ததாகத் தொல்லியல் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. இதுவே இந்நகரின் வணிக முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கும் வரலாற்றுச் செய்தியாகவும் அமைகிறது.
-சுபா
26/11/2026


.jpg)








