Sunday, November 1, 2009

மலாகா(ஸ்பெயின்) சுற்றுலா - செப்ட்-அக்டோபர் 2009 - 1

ஸ்பெயின் ஐரோப்பிய நாடுகளில் ஒன்று; வரலாற்று நோக்கில் மிகப்பல சரித்திர நிகழ்வுகளைக் கண்ட நாடு. அதில் அண்டலூசிய எனும் பகுதி ஏறக்குறைய 17% ஸ்பெயினின் நிலப்பகுதியைக் குறிப்பது (தீவுகளைச் சேர்க்காமல்) அதில் மலாகா ஒரு துறைமுகப்பட்டிணம்.







எங்கள் பயணம் ஸ்டுட்கார்ட்டிலிருந்து மலாகா நோக்கி நேராக தெற்கு நோக்கிச் செல்லாமல் முதலில் ஹம்பெர்க் (ஜெர்மனி) சென்று பின்னர் அங்கிருந்து மலாகா (ஸ்பெயின்) செல்லும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. ஸ்டுட்கார்ட்டிலிருந்து ஹம்பெர்க்கிற்கு ஏறக்குறை 800 கிமீ தூரம். அதிலும் வடக்கு நோக்கிய பயணம். பயன நிறுவனத்தின் ஏற்பாடு இது. ஹம்பெர்கிலிருந்து பின்னர் மலாகாவிற்கு பயணம். ஒரு சில பயணிகளை மற்றும் ஏற்றிச் செல்வதற்கு பதிலாக அருகிலுள்ள ஏனைய ஐரோப்பிய நாடுகளிலிருந்து மலாகா பயணிக்கும் பலர் ஹம்பெர்க்கிலிருந்து புறப்படும் வகையில் இந்தப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்பதை விமானத்தில் பயணித்த பல மொழி பேசும் பயணிகளைப் பார்த்த போது புரிந்தது. இதுவும் ஒரு வியாபார உத்தி தானே.







ஏறக்குறைய 3 மணி நேர பயணம். மதியம் 2 மணிக்கு விமான நிலயத்தை அடைந்து பின்னர் அங்கேயே முன்கூட்டியே ஏற்பாடு செய்திருந்த வாடகைக் காரை எடுத்துக் கொண்டு நான் என் தங்கும் விடுதி நோக்கி புறப்பட்டேன். இங்கு ஒரு முக்கிய விஷயத்தைக் குறிப்பிட வேண்டும். அண்டலூசியா விஸ்தாரமான மிகப் பெரிய நிலப்பரப்பில் அமைந்த பகுதி. ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்கு பயணிக்க பேருந்து ரயில் இவற்றிற்கு பதிலாக விட ஒரு வாகனத்தை வாடகைக்கு எடுத்துக் கொள்வது சிறப்பு. எங்கள் தங்கும் விடுதி இருக்கும் இடம் எஸ்டாபோனா. இது மலாகாவிலிருந்து ஏறக்குறைய 80 கிமீ தூரம் உள்ள நகரம். இடையிலேயே புவன்ஜிரொலா, மார்பெயா போன்ற சற்றே பெரிய நகரங்களைக் கடந்து கடற்கரையோர நெடுஞ்சாலையில் மத்திய தரைக்கடலை ரசித்த வாரே பயணித்த போது காலையிலிருந்து பயணித்த அலுப்பு மறைந்து விட்டது.







எஸ்டபோன ஒரு சிறிய நகரம்; குறிப்பாக நான் தங்கியிருந்த தங்கும் விடுதி கடற்கரையை ஒட்டிய வண்ணம் அமைந்த ஒரு இடம். காலைத் தழுவ வரும் அலைகளில் நடப்பது, அதிகாலை கடற்கரையில் ஜோகிங் ஓட்டம்,, மாலை நெடுந்தூரம் அலைகளில் நடந்து செல்வது என்று பொதுவாகவே எங்கள் 14 நாள் விடுமுறையின் ஒவ்வொரு நாளின் சில மணி நேரங்கள் கடற்கரை அலைகளோடு கழிந்தன.

Thursday, November 1, 2007

பீஸாவும் பீட்ஸாவும் பார்போமா - இத்தாலி பயணக் குறிப்பு -6

சனிக்கிழமை காலை உணவை முடித்தபின்னர் Pisana Palace லிருந்து check-out செய்துவிட்டு ரோம் நகரத்திற்கு புறப்பட்டு விட்டேன். எனது குறிப்பில் முதலில் இருந்தது Vatican City.



1377- லிருந்து Vatican போப்களின் மடங்களாக இருந்து வருகின்றது. வாட்டிக்கனில் முக்கியமாகப் பார்க்க வேண்டியவை St.Peter's Basilica, Vatican Museums, மற்றும் Sistine Chapel ஆகியவையே. பெப்ரவரி 11, 1929- லிருந்து வேட்டிக்கன் ஒரு தனி மாகாணமாகப் பிரகடணப்படுத்தப்பட்டது. ரோமானிய சாம்ராஜ்ஜியம் இருந்த காலத்தில் St.Peter Apostle கொல்லப்பட்டார். இவரது உடல் இந்த இடத்தில் தகனம் செய்யப்பட்டது. இதற்கு ஏறக்குறைய 250 ஆண்டுகளுக்குப் பின்னர் Constantine இந்த St.Basilica எனப்படும் உலக பிரமாண்டத்தை அந்த இடத்தில் கட்டினார்.



இப்போது இருக்கும் இந்த Basilica - வை Julius II 1503 - லிருந்து காடினார். இது முழுமையடைய 176 ஆண்டுகள் பிடித்தன. வாட்டிக்கனின் ஒவ்வொரு பகுதியும் இந்த காலகட்டத்தில் முடிவடைந்தன. அதன் பின்னர் தான் Michelangelo தனது 70-வயதில் உலகின் மிகப்பெரிய dome என்று கருதப்படும் இந்த தேவாலயத்தில் dome - ஐ திட்டமிட்டு வடிவமைக்க ஆரம்பித்தார். அவர் இறந்த பின்னரும் அவரது திட்டத்தின் படியே இது முழுமைபடுத்தப்பட்டது.



வாட்டிக்கனை முழுமையாக சுற்றிப்பார்க்க 2 நாட்கள் தேவை. உலகின் பல மூலைகளிலிருந்து இங்கு சுற்றுலா பயணிகள் நிரம்பியிருந்தனர். [ உலகின் எந்த சுற்றுலா மையங்களுக்குச் சென்றாலும் ஜப்பானிய சுற்றுலா பயணிகளைப் பார்க்காமல் இருக்க முடியாது. இவர்களுக்கு எப்படித்தான் நேரம் கிடைக்கின்றதோ தெரியவில்லை..??..:-)] St.Peter's Basilica தேவாலயத்தில் உட்பகுதியில் இருக்கும் ஒவ்வொரு சிலைகளும் கண்களுக்கு விருந்து. மணிக்கணக்கில் அதன் கலை நயத்தைப் பார்த்துக் கொண்டேயிருக்கலாம்.

அன்றைக்கு மறுநாள் சிறப்பு நிகழ்ச்சிக்காக ஆப்பிரிக்க நடனக் குழு ஒன்று அங்கு வந்திருந்தனர். மறுநாள் நடைபெறவிருக்கும் நிகழ்வுக்காக இவர்களின் ஒத்திகை ஒன்றும் வாசலிலேயே நிகழ்ந்து கொண்டிருந்தது. அதனைப் பார்த்து விட்டு கோட்டையின் ஒரு மூலையில் வந்து அமர்ந்தேன். எனது பக்கத்தில் அமர்ந்திருந்த ஒருவரை நோக்கி இரண்டு இத்தாலிய காவலர்கள் நெறுங்கிக் கொண்டிருந்தனர். அதனைப் பார்த்தவுடன் தனது பையைத் தூக்கிக் கொண்டு மெதுவாக நழுவ ஆரம்பித்தான் இந்த 30 வயது மதிக்கத்தக்க இளைஞன். அவனைத் தடுத்து நிறுத்தி இத்த்தாலியில் காவலர்கள் விசாரிக்க அது புரியாததால் ஆங்கிலத்தில் விசாரிக்க ஆரம்பித்தனர். குரேஷியாவிலிருந்து போதிய பயணச்சீட்டுகளோ விசாவோ இல்லாமல் அகதியாக வந்திருக்கின்றான் இந்த இளைஞன். அவனிடம் தேவையான விஷயங்களை விசாரித்து அவனை தங்களோடே கூட்டிசென்று விட்டனர். சற்று நேரத்தில் எனக்குப் பக்கத்தில் வேறொரு இத்தாலிய வயோதிகர் வந்து அமர்ந்தார். இத்தாலியில் என்னிடம் வேட்டிக்கனின் அழகை விமர்சிக்க ஆரம்பித்தார். எனக்குப் புரியவில்லை என்று ஆங்கிலத்தில் சொன்னவுடன், சைகையிலேயே என்னிடம் மிக சுவாரசியமாக விளக்க ஆரம்பித்தார். [ சைகை மொழியை ஒரு பாடமாக எடுத்துப் படிக்காமல் போய்விட்டோமே என்று மனதுக்குள் என்னையே திட்டிக் கொண்டேன்..:-) ] அவரிடம் சற்று உரையாடிவிட்டு, அதாவது சைகையிலேயே பேசிவிட்டு ரோம் நகரின் மற்றொரு அதிசயமான கொலோசியத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

Thursday, October 11, 2007

இத்தாலி - Sardinia - Sept 02-09, 2007



விடுமுறைக்காக நான் எங்காவது செல்லும் போது அதிலும் குறிப்பாக புதிய நாடு அல்லது புதிய இடங்களுக்குச் செல்லும் போது மறக்காமல் குறிப்புக்களைச் சேகரிப்பது வழக்கம். புகைப்படங்கள் மற்றும் ஒளிப்படங்கள் சேகரித்தலும் இதில் அடங்கும். சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் இந்தக் குறிப்புக்களை நோக்கும் போது விடுமுறையின் இனிய நினைவுகள் மனதில் நிழலாடுவது ஒரு தனி சுகம்.


அந்த வகையில் கடந்த வாரம் 7 நாட்கள் கிடைத்த விடுமுறையில் இத்தாலியின் தீவுகளில் ஒன்றான சார்டீனியாவிற்கு சென்றிருந்தேன். இந்த அழகிய தீவின் சில புகைப்படங்களும் தகவல்களும் இதோ.



முதலில் இந்த தீவைப்பற்றிய சிறு குறிப்பு:
தீவின் பெயர் - சார்டீனியா
மக்கள் தொகை - 1,700,000
பயன்பாட்டு மொழி - இத்தாலி, சார்டீனியா



இது இணையத்தில் சுட்ட படம்..:-)

இயற்கையின் அழகு.

தூய்மையான கடற்கறைகள் தான் இந்த தீவிற்கு அதிகமான ஐரோப்பிய சுற்றுப் பயணிகளை கவர்கின்றன.

கால்கியரி (காலியரி என்று சொல்ல வேண்டும்) - இந்த தீவின் தலைநகரின் மையப் பகுதி.



நகரின் மத்தியில் அமைந்திருக்கும் வர்த்தக நிலையங்கள்.




எலியைத் தாங்கிக் கொண்டிருக்கும் பூனை. அதிசயம் தானே!



எலியோடு சேர்ந்து பூனையும் உணவு உண்ணும் காட்சி. (இது பயிற்சி அளிக்கப்பட்ட பூணை தான்.)

பெக்கரீனோ மற்றும் பியோரே சார்டோ சீஸ் வகைகள் இந்த தீவின் சிறப்பு.




ஆலீவ் மரங்களில் ஆலீவ் காய்கள். இந்த தீவு முழுவதும் எல்லா இடங்களிலும் ஆலீவ் மரங்கள் செழித்து வளர்வதை காணலாம்.




ஆலீவ், ஆலீவ் எண்ணெய் மற்றும் உள்நாட்டு வைன். சுற்றுலாப் பயணிகள் வாங்கிச் செல்வதற்காக.





இந்த தீவின் பழங்குடியினர் நூராகியர்கள். கி.மு.1800லிருந்து கி.மு 500 இந்த மக்களின் நாகரிகம் இந்த தீவில் செழிப்பாக இருந்துள்ளது. அதன் சில சுவடுகள் இப்போதும் இந்த தீவின் பல இடங்களில் அகழ்வாராய்ச்சியின் வழி கண்டு பிடிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்தப் படம் ' சு நுராசியி' கிராமத்தைக் காட்டுவது. இங்கே ஒரு அகழ்வாராய்ச்சி நிலையமும் அங்கு கண்டு பிடிக்கப்பட்ட பல தடயங்களும் தொல் பொருள் அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ளன.



அகழ்வாராய்ச்சி நிலைய அதிகாரி விளக்கம் தருகின்றார். பின் புறத்தில் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட ஒரு கோட்டையின் சில பகுதிகள். இந்த அதிகாரி நான் அடிப்படையில் மலேசிய நாட்டைச் சேந்த்தவர் என்று தெரிந்தவுடன் மிகவும் ஆச்சரியப்பட்டார். குறிப்பாக இந்த அகழ்வாராய்ச்சி நிலையத்திற்கு வருகை புரியும் முதல் மலேசியர் நான் என்று கூறி மகிழ்ந்தார். எனக்கும் ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி.



மேலேயுள்ள இந்த வகை சிறிய குட்டி வாகனங்கள் இங்கு பொருட்களை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்படுகின்றன. இவை 3 சக்கரங்களைக் கொண்டவை. பொதுவாக பச்சை மற்றும் நீல நிறத்திலும் ஒரு சில இப்படி பல வர்ணங்களிலும் உள்ளன.



இந்த தீவில் முக்கிய உணவு பீஸாவும் கடல் உணவுகளும் தான். எல்லா சிறிய பெரிய நகரங்களிலும் pizzaria உணவு அங்காடிகள். தொடர்ந்து சில நாட்கள் பீஸா சாப்பிட்டதில் அடுத்த ஒரு மாதத்திற்கு பீஸாவைப் பற்றி நினைக்கக் கூடாது என்றே முடிவெடுத்துவிட்டேன்.




தலைநகரின் ஒரு முக்கிய சாலையில் உள்ள உடைந்த சாலை விளக்கு. ம்ம்ம்.. இங்கேயும் இப்படிச் சில அசம்பாவிதங்கள் !




இங்கு கத்தரிக்காய்கள் நிறையவே கிடைக்கின்றன. அதிலும் பெரிய மாங்காய் அளவில் சில கத்தரிக்காய்கள்.




இந்த தீவின் சீதோஷ்ணத்திற்கு காக்டஸ் செடிகள் நன்றாக வளர்கின்றன. காக்டஸ் மரத்தில் இவ்வளவு அதிகமாக காய்கள் காய்ப்பதை நான் இதுவரை பார்த்ததில்லை. கனேரியத் தீவுகளில் பல வகையான காக்டஸ் பூக்களைப் பார்க்கலாம். ஆனால் இங்கு இந்த காய்கள் ஆச்சரியமாக மிக அதிகமாக வளர்கின்றன. இந்த காகய்களை இந்த தீவு மக்கள் சாப்பிடுகின்றார்கள். இந்த காய்களை பறிப்பதற்காக நீண்ட ஒரு கருவி இருக்கின்றது. இதனைக் கொண்டு இந்த செடியை தீண்டாமலேயே அவர்கள் பரித்துப் பழங்களை வெட்டி அதன் உள்ளிருக்கும் பகுதியை சாப்பிடுகின்றார்கள்.



இவை மிருகக்கட்சிசாலையில் உள்ள பிளாமிங்கோக்கள் அல்ல. சாலை ஓரங்களில், ஏரிக்களில் ஒற்றைக் காலில் நிற்கும் சுதந்திரப் பறவைகள்.



படங்கள்:சுபா 

Thursday, January 20, 2005

ஜெர்மனி - Muenchen (Munich) -Bayern, Germany. [ 6 - 9 Jan 2005 ] - Part V




1972ம் ஆண்டில் ஒலிம்பிக் விளையாட்டு மூன்ஷன் நகரத்தில் நடைபெற்றது. அதற்காக பிரத்தியேகமாக கட்டப்பட்ட ஒலிம்பிக் விளையாட்டு மையத்தைக் காண காலையிலேயே நண்பர்கள் அனைவரும் கிளம்பி விட்டோம். இந்த ஒலிம்பிக் விளையாட்டு மையத்தின் பக்கத்தில் தான் மூன்ஷனின் தொலைகாட்சி கோபுரம் இருக்கின்றது. முதலில் கோபுரத்திற்குச் சென்று பின்னர் விளையாட்டு மையத்தை பார்வையிடுவதுதான் எங்கள் திட்டமாக இருந்தது.
தொலைகாட்சி கோபுரத்தின் மேலே செல்லுவதற்கு கட்டணம் தேவை. (மலேசியாவில் இரட்டைக் கோபுரத்தின் மேலே செல்வதற்குக் கூட காசு கேட்பதில்லை. ஆனால் இங்கு எங்கு சென்றாலும் நுழைவுக் கட்டணம் கட்டாயம்) கோபுரத்தின் உச்சியிலிருந்து பார்த்தால் ஏறக்குறைய மூன்ஷன் நகரம் முழுவதும் தெரிகிறது. BMW கார் நிறுவனத்தின் தலைமையகம் அருகாமையிலயே உள்ளது. அதன் அருகிலேயே BMW Musuem இருக்கின்றது. பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்ட ஒரு கட்டிடம் இது. தாலைகாட்சி கோபுரத்தின் மற்றொரு பகுதியிலிருந்து பார்த்தால் ஒலிம்பியா பார்க் காட்சியளிக்கின்றது. விளையாட்டு மைதானம், அதனைச் சேர்ந்தார் போல உள்ள ஆறு, பூங்கா ஆகியவை மனதை கொள்ளை கொள்ள வைக்கின்றன.



1972ல் நடைபெற்ற இந்த ஒலிம்பிக் விளையாட்டு நிகழ்வோடு சேர்ந்தார்போல நிகழ்ந்த வன்முறை சம்பவத்தை பலரும் ஞாபகம் வைத்திருக்கக் கூடும். ஆகஸ்டு 26ம் நாள் தொடங்கப்பட்ட விளையாட்டுக்கள் சீராக 10 நாட்கள் தொடர்ந்து கொண்டிருந்த வேளையில் செப்டம்பர் 5ம் தேதி காலையில் 8 பாலஸ்தீனிய தீவிரவாதிகள் விளையாட்டு வீரர்களுக்காக அருகிலேயே அமைக்க ப்பட்டிருந்த ஒலிம்பிக் கிராமத்திற்குள் புகுந்து 2 இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களை கொன்று விட்டு மேலும் 9 பேரை பிணையாக பிடித்துக் கொண்டு சென்று பின்னர் அவர்கள் கொல்லப்பட்டனர். இதனால் ஒலிம்பிக் விளையாட்டு உடனே நிறுத்தப்பட்டது. ஒலிம்பிக் விளையாட்டு வரலாற்றில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிகழ்வு.




இந்த ஒலிம்பிக் விளையாட்டு மைதானப் பகுதி தற்போது உலகளாவிய அளவில் பல நிகழ்வுகள் நடத்துவதற்காகப் பயன்படுகின்றது. ஓய்வு நேர கேளிக்கை விளையாட்டுக்களில் ஈடுபாடு உடையவர்கள் பலர் இங்குள்ள வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
ஜெர்மனியைப் பொறுத்தவரை மூன்ஷன் நகரம் இருக்கின்ற பாயர்ன் மாநிலம், ஜெர்மனியின் ஏனைய மாநிலங்களை விட பணக்கார மாநிலமாக கருதப்படுகின்றது. இங்கு வெளிநாட்டவர்களும் அதிகம். இதற்கு முக்கியக் காரணம் இது ஒரு வர்த்தக மையமாக இருப்பதுதான். இங்கு பொதுமக்கள் பரவலாக சுயமாக வாகனங்கள் வைத்துக் கொள்ள விரும்புவதில்லை. இரயில், அதிவேக இரயில் பஸ் போன்ற பொது போக்குவரத்து சாதனங்கள் மிகச் சிறப்பாக இயங்கி வருவதாலும், கார் வைப்பதற்கான இடவசதி என்பது மிகப் பெரிய பிரச்சனை என்பதாலும் மக்கள் பொது போக்குவரத்து சாதனங்களை விரும்புகின்றார்கள். வர்த்தக மையமாக இருப்பதால் மற்ற ஓய்வு நேர நடவடிக்கைகள் மற்றும் கேளிக்கை நடவடிக்கைகளுக்கு இங்கு பஞ்சமாக இருக்குமோ என்றல் நிச்சயமாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அழகழகான பூங்காக்கள், பிரமிக்க வைக்கும் வர்த்தக மையங்கள், பழமை வாய்ந்த கட்டிடங்கள், தொல்பொருள் காட்சி நிலையங்கள், விளையாட்டு மைதானங்கள், சினிமா, வகை வகையான உணவகங்கள் என்று பல வகையில் திருப்தியளிக்கக்கூடிய அனுபவத்தை வழங்குகின்ற ஒரு நகரம் தான் இது.
மாலை மூன்ஷன் நகரிலிருந்து ஸ்டுட்கார் திரும்பும் போது இந்த நகரை சுற்றிப் பார்க்க நிச்சயமாக 4 நாட்கள் போதாது என்பதை உணர்ந்தோம். இந்த பயணம் இனிமையான நினைவலைகளை எனக்குள் ஏற்படுத்தி என்னை மகிழவைத்தது.

Wednesday, January 19, 2005

ஜெர்மனி - Muenchen (Munich) -Bayern, Germany. [ 6 - 9 Jan 2005 ] - Part IV



சனிக்கிழமை காலையிலேயே ப்ரெட்ஸல் சகிதமாக காலை உணவை முடித்து நாங்கள் மூன்ஷன் நகரின் புறநகர் பகுதியான அம்மர்சீ (Ammersee) ஏரிப் பகுதிக்கு புறப்பட்டோ ம். மூன்ஷன் மையப்பகுதியிலிருந்து விரைவு இரயிலில் இந்த இடத்தை 45 நிமிடத்தில்
அடைந்து விடமுடியும்.


அம்மர்சீ அதன் இயற்கை அழகுக்கு மாத்திரம் புகழ் பெற்ற ஒன்றில்லை. sailing பயிற்சி பள்ளிகள் பல இங்கு இருக்கின்றன. இங்குதான் ஜெர்மனியில் மிகப் பழமையான sailing பள்ளி இருக்கின்றது. இந்த ஏரியை சாதாரணமாக எடை போட்டு விட முடியாது. கடலைப் பார்ப்பது போல நீண்டு பரவி இருக்கின்றது அம்மர்சீ.



அம்மர்சீக்கு அருகாமையில் மலையுச்சியில் மிகப்பழமை வாய்ந்த பாரோக் வடிவமைப்பிலான ஒரு தேவாலயம் இருக்கின்றது. ஜெர்மனியில் இருக்கின்ற திருத்தல யாத்திரைப் பகுதிகளில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகின்றது. (ஹிந்து சமயத்தில் உள்ளது போன்றே ஜெர்மனியிலும் தீர்த்த யாத்திரை செய்யும் பழக்கம் வழக்கத்தில் இருக்கின்றது. இதனை பற்றி மற்றொரு பதிவில் குறிப்பிட முயற்சிக்கிறேன்) இந்த தேவாலயத்தை அடைவதற்கு மலையை நோக்கி ஏறக்குறைய 1மணி நேரமாவது நடக்க ஧வண்டும். வழியில் பற்பல முக்கிய இடங்களும் இருக்கின்றன. அதில் குறிப்பிட்டு சொல்வதென்றால் நடுவழியில் இருக்கின்ற தேவாலய குருமார்களின் மடத்தைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். பழமை வாய்ந்த கட்டிடம்; மிக நேர்த்தியாக கட்டப்பட்டிருக்கின்றது. முன்பெல்லாம் குருமார்கள் மற்றும் சமய ஆர்வலர்களை மட்டுமே கவர்ந்து வந்த இந்த மலைப் பிரதேசம் இப்போது ஹைக்கிங்
செய்பவர்களுக்குப் பிடித்த பகுதியாக விளங்குகின்றது. ஏரிக்கரையில் நீந்திக் கொண்டும் சத்தமிட்டுக் கொண்டும் இருந்த வாத்துக்களை பார்த்துக் கொண்டே மலையுச்சியை நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.

மலைப்பிரதேசத்தில் இந்த குளிர் காலத்தில் நடப்பது சுலபமான ஒரு விஷயமல்ல என்பதை நடக்க நடக்க தெரிந்து கொண்஧டன். காய்ந்த சருகுகள் தரையெல்லாம் கொட்டிக் கிடப்பதாலும் சில நாட்களுக்கு முன் பெய்த பணி இன்னும் கொஞ்சம் மிஞ்சி இருந்ததாலும் பாதை சில நேரங்களில் வழுக்கிக் கொண்டேயிருந்தது. கொஞ்சம் கவனம் குறைந்தாலும் கீழே விழுந்து விடுவே஡ம். இந்த பயம் இருந்தாலும் மலையின் இயற்கை அழகு மனதை கொள்ளை கொள்வதாகவே இருந்தது. இப்படியே நடந்து குருமார்களின் மடத்தைக் கடந்து ஒரு வழியாக மலையுச்சியில் இருக்கும் தேவாலயத்தை அடைந்தோம்.

அளவில் கொஞ்சம் சிறியதாக இருந்தாலும், தேவாலயத்தின் உட்புறம் மிகப் பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. உள்ளே பார்வையாளர்கள் இருந்தாலும் நிசப்தமாக தியான சிந்தையை தூண்டும் வகையில் அமைதியாக இருந்தது. தேவாலயம் தூய்நமயாக பாதுகாக்கப்படுகின்றது. இதனைப் பார்க்கும் போது தமிழகத்தில் இருக்கும் நமது பழமை வாய்ந்த ஆலயங்களும் இப்படி தூய்மையாக, அமைதி நிலவும் வகையில் பாதுக்காக்கப்பட்டு வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என நினைத்துக் கொண்஧
டன்.

Tuesday, January 18, 2005

ஜெர்மனி - Muenchen (Munich) -Bayern, Germany. [ 6 - 9 Jan 2005 ] - Part III



ஜெர்மனியில் செல்லுமிடமெல்லாம் சைவ உணவு வகைகளுக்கு கொஞ்சமும் பிரச்சனையேயில்லை. அதற்காக தோசை இட்லி சாம்பாரெல்லாம் தேடிக் கொண்டிருக்க முடியாது. அதற்கு மாற்றாக உருளைக் கிழங்கிலும் பச்சை காய்கறிகளிலும் தங்கள் கை வரிசையைக் காட்டுபவர்கள் ஜெர்மானியர்கள். நான் இருக்கின்ற போப்லிங்கன் நகரம் பாடன் உர்ட்டெம்பெர்க் எனும் மாநிலத்தைச் சார்ந்தது. எப்படி இந்தியாவில் தமிழகத்திற்கு கேரளாவிற்கு ஆந்திராவிற்கு என்று தனித்தனியாக சிறந்த உணவு வகைகள் இருக்கின்றதோ அதேபோல ஜெர்மனியிலும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனி ஷ்பெஷல் உணவு வகை உண்டு. உணவு வகைகளில் சிறந்ததாக இந்த பாடன் உர்ட்டெம்பெர்க் மற்றும் முன்ஷன் நகரம் இருக்கும் பாயர்ன்(Bavaria) மாநிலமும் கருதப்படுகின்றன. இதில் என்ன வித்தியாசம் என்றால், பாடன் உர்ட்டெம்பெர்க் மாநிலத்தில் இத்தாலிய சைவ உணவுகளோடு இந்த மாநிலத்திற்கு உரியதான பல சைவ உணவு வகைகளையும் எல்லா உணவு விடுதிகளிலும் பெற்று விட முடியும். ஆனால் பாயர்ன் மாநிலம் அசைவப் பிரியர்களுக்கு அதிகமான வகைகளை வழங்குவதில் சிறந்து விளங்குகின்றது.

பொரித்த பன்றி இறைச்சி, கொஞ்சம் பச்சை காய்கறிகள், மற்றும் உள்நாட்டு பியர் இங்கு மிகப் பரவலாக எல்லா உணவகங்களிலும் கிடைக்கக்கூடிய ஒன்று. அதோடு சால்மன் மீன், வைன், இவற்றோடு காய்கறிகள் கொண்ட ஒரு வகை உணவும் உண்டு. பன்றி மாடு, கோழி, வான்கோழி இறைச்சி வகைகளில் பல வகையான உணவுகளை இங்குள்ள உணவகங்கள் வழங்குகின்றன. மீன் வகைகள் கொஞ்சம் ஷ்பெஷல் என்று தான் கூற வேண்டும்.
பாயர்ன் மாநிலத்தின் புகழ் கூறும் மற்றொரு உணவு வகை ப்ரெட்ஸல் என அழைக்கப்படும் ஒரு வகை ரொட்டி.


இது இந்த மாநிலத்தில் தான் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டதாக ஜெர்மானியர்கள் கூறுகின்றார்கள். (ப்ரேட்ஸலைப் பற்றி சற்று அறிந்து கொள்ள http://en.wikipedia.org/wiki/Brezel) ஜெர்மனியின் எல்லா இடங்களிலும் இந்த வகை ரொட்டி கிடைத்தாலும், இதன் மிகச் சுவையான இந்த ரொட்டியை பாயர்னிலும் பாடன் உர்ட்டெம்பெர்க் மாநிலத்திலும் தான் பெற முடியும். முதன் முதலில் இந்த ரொட்டியைச் சாப்பிடுபர்களுக்கு ஒரு வித்தியாசமான சுவையைக் காட்டுவதால் இது பிடிக்காமல் போய்விடக் கூடும். ஆனால் பழகி விட்டால் ப்ரெட்ஸல் இல்லாமல் காலை உணவே இல்லை என சொல்லும் அளவிற்கு பழகி விடுவோம். இந்த ரொட்டியில் உள்ள சிறப்பு அதன் மேலே பூசப்படும் ஒரு விதமான பொருள் தான். இதன் சுவை கொஞ்சம் துவர்ப்பாகவும் இருக்கும். ரொட்டியின் மேல் உப்புத் துகள்கள் சேர்க்கப்பட்டிருக்கும். பட்டர் சேர்த்து சாப்பிடும் போது இதன் சுவையே தனிதான்.

சாதரணமாக சிறிய அளவில் ஜெர்மனி முழுதும் கிடைக்கக்கூடிய இந்த ப்ரெட்ஸல், அக்டோபர் மாதம் மட்டும் மூன்ஷன் நகரில் ஒரு பெரிய பீஸா அளவிற்கு கடைகளில் கிடைக்கும். இந்த பெரிய ப்ரெட்ஸலை ஒருவரால் நிச்சயமாக சாப்பிட்டு முடிக்க முடியாது.
மூன்ஷன் வந்திருப்பதால் இந்த நகரத்தின் ஸ்பெஷல் தான் சாப்பிட வேண்டும் என்று முடிவெடுத்து மெனு அட்டையில் எனக்குப் பிடித்த உணவைத் தேடினேன். ஒரு சைவ உணவு அகப்பட்டது. அடுத்த பதினைந்து நிமிடத்தில் எனது உணவு வந்து சேர்ந்தது. பெரிய அளவிலான ஒரு உருளைக் கிழங்கு இரண்டாக பிரிக்கப்பட்டு வேகவைத்து வருக்கப்பட்டு அதோடு காய்கறிகளை சோயா சோஸ் சேர்ந்து மெலிதாக வருத்து வைத்திருந்தார்கள். உணவை சுவைக்க ஆரம்பித்தோம். சுவை பிரமாதம்.

Friday, January 14, 2005

ஜெர்மனி - Muenchen (Munich) -Bayern, Germany. [ 6 - 9 Jan 2005 ] - Part II



மூன்ஷன் நகர மத்தியிலேயே அமைந்திருக்கும் பெரிய பூங்கா இந்த இங்லீஷ் கார்டன். சுமார் 900 ஏக்கர் நிலப்பரப்பில் பச்சை பசேலென்று அமைந்திருக்கும் இந்த பூங்கா அதன் தனித்துவத்தால் வருவோரைக் கவரும் வகையில் அமைந்திருக்கின்றது. இங்குள்ள சீனக் கோபுரம், ஏரி, அதில் அழகாக மிதந்து வரும் அன்னப்பறவைகள், விதம் விதம஡ன வாத்துக்கள் போன்றவை இந்த பூங்காவின் அழகை மேலும் ரசிக்க வைக்கின்றன. கோடை காலத்தில் இந்த பூங்காவிற்கு மேலும் ஒரு சிறப்பு அம்சம் ஒன்றும் இருக்கின்றது. இந்தப் பூங்காவின் ஒரு பகுதியில் கோடையில் நிர்வாண சூரியக் குளியல் செய்வதற்காக மக்கள் கூடுவதும் வழக்கம். நகரின் மையப் பகுதியான ஓடன்ப்லாட்ஸ் பகுதியிலிருந்து மூன்ஷன் நகர தெற்கு எல்லை வரை இந்த பூங்கா நீண்டு அமைந்திருக்கின்றது. செல்ல செல்ல இந்த பூங்கா விரிவாகிக் கொண்டே வருகின்றது; மாலைப் பொழுதை இயற்கையோடு கலந்து அனுபவிப்பதற்கு சிறந்த இடம் இந்தப் பூங்கா. ஐரோப்பாவில் உள்ள மிகப் பெரிய பூங்காவாக இந்த இங்லீஷ் கார்டன் அமைந்துள்ளது.



ஐரோப்பிய நகரான இந்த மூன்ஷனில் அமைந்துள்ள இந்த பூங்காவில் ஆசியாவின் கலை நுனுக்கத்தை எடுத்துக் காட்டும் குறிப்பிடத்தக்க ஒரு இடமும் இருக்கின்றது. "Haus der Kunst" என்றழைக்கப்படும் கலைக்கூடத்தின் பக்கத்தில் அழகான ஒரு ஜப்பானிய உணவகம் அமைந்துள்ளது. Mitsuo Normura என்ற ஜப்பானியர் ஒருவர் தான் இந்த உணவகத்தை ஒலிம்பிக் விளையாட்டு இந்த நகரில் 1972ல் நடந்த பொழுது கட்டினாராம்.


இந்த உணவகத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால் ஒவ்வொரு மாதத்தின் 2ம் மற்றும் 4ம் வார இறுதி நாட்களில் மதியம் 3லிருந்து 5 வரை தேநீர் அருந்தும் வைபவம் இங்கு நடைபெறுமாம். இந்த சிறப்பு நிகழ்ச்சிக்கு ஆதாரமாக இருப்பது என்ன விஷயம் என்பது தெரியவில்லை. இந்த உணவகத்திற்குப் பக்கத்திலேயே அமைந்திருக்கின்றது கண்ணைக் கவரும் வகையில் கட்டப்பட்டுள்ள சீன கோபுரம். மூன்ஷன் நகரத்திலேயே பிரபலமாக wildest beer garden in Munich என அழைக்கப்படும் பகுதி இது. கோடை காலத்தில் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும் இந்த இடம் நாங்கள் சென்றிருந்த அந்த மாலை வேளையில் விண்டர் குளிர் காரணத்தால் ஆட்கள் யாருமின்றி அமைதியாக காட்சியளித்துக் கொண்டிருந்தது.

கோடைகாலத்தில் பெரும்பாலும் சூரிய வெளிச்சம் இரவு 10 மணி வரை இருக்கும்; அப்போது இந்த திறந்த மண்டபமான இந்த சீன கோபுரத்தில் மட்டும் 7000 பேர் அமரக்கூடிய வகையில் நாற்காலிகளை அமைத்திருப்பார்களாம்.



இதனைத் தாண்டி வரும் வழியில் பழங்கால அரசவை மண்டபங்களை நினைவு படுத்தும் வகையில் அமைந்திருக்கும் மானோபெறோஸ் மண்டபம் அமைந்திருக்கின்றது. இதன் மேலே சென்று பார்த்தால் மூன்ஷன் நகரத்தின் பெரும்பாலான முக்கிய நினைவுச் சின்னங்களையெல்லாம் பார்த்து விட முடிகின்றது. இந்த மண்டபம் இசை பிரியர்களுக்கு உகந்த இடம் போலத் தெரிகின்றது. பல இனத்தைச் சார்த்த மக்களும் அவர்களுக்குத் தெரிந்த இசைக் கருவிகளை இசைத்துக் கொண்டு (தரையில் சிறிய பெட்டி அல்லது தொப்பியை வைத்து விடுகிறார்கள், காசுக்காகத்தான்) வருவோரை இசையால் மகிழ்விக்கின்றனர். இந்திய உருவச் சாயலுடன் ஒருவர் ஹார்மோனியம் போன்ற ஒரு இசைக் கருவியை கையில் ஏந்தியவாறு வாசித்துக் கொண்டிருந்தார். நாங்கள் அங்கிருந்த சமயத்தில், மண்டபத்தின் நுழைவாயிலுக்குச் சற்று தள்ளி ஜெர்மானியர் ஒருவர் புல்லாங்குழல் போன்ற ஒரு இசைக்கருவியை வாசித்துக் கொண்டிருந்தார்.

இதனை பார்த்த திருப்தியுடனும், நடந்த களைப்பினாலும் அங்கிருந்த ஒரு ஜெர்மானிய பாரம்பரிய உணவு விடுதியில் இரவு/மாலை உணவுக்காக நுழைந்தோம்.