Tuesday, August 25, 2015

விரும்பாமல் சென்று.. விரும்பிய டர்பன்..! -27

ஏப்ரல் 8ம் தேதி.

அன்று எங்களுடன் இருந்த மலேசிய நண்பர்கள்  ​மதியம் ஊருக்குப் புறப்பட வேண்டியிருந்தது. நானும் என்னுடன் ஜெர்மனியிலிருந்து வந்திருந்த இந்துவும்  கனடாவிலிருந்து வந்திருந்த ராஜரட்ணம் அவர்களும் மட்டும் மறுநாள் 9ம் தேதி டர்பனிலிருந்து புறப்படும் வகையில் திட்டம்.

ஆக, அன்றைய 8ம் தேதியில் எங்கு சென்று என்ன பார்த்து வரலாம் என்று முதல் நாள் மாலையே திட்டம் ஒன்றினை தயாரித்திருந்தேன். அதன் படி காலை உணவுக்குப் பின்னர் ஹோட்டலிலிருந்து புறப்பட்டு டர்பனின் புதிய ஸ்டேடியம் சுற்றிப்பார்த்து விட்டு டர்பனின் புறநகர்ப்பகுதியில் இருக்கும் பொட்டேனிக்கல் கார்டனில் சில மணி நேரங்களைச் செலவிடலாம் என்பது என் திட்டம். முதல் நாள் எங்களை அழைத்துச் சென்ற அதே டாக்ஸி ஓட்டியைத் தொடர்பு கொண்டு அவரையே இந்த பயணத்திற்கு முன் பதிவு செய்திருந்தேன்
.


2010 அனைத்துலகக் காற்பந்துப் போட்டி நிகழ்ந்த  ஸ்டேடியம் இது. 54,000 பேர் அமரக்கூடிய இட வசதி கொண்டது. மோஸஸ் மபீடா ஸ்டேடியம் என்பது இதன் பெயர். பிரத்தியேகமாக உலகக் காற்பந்து போட்டி நிகழ்வுக்காக கட்டப்பட்டது இந்த ஸ்டேடியம்.



ஸ்டேடியம் மட்டுமல்லாது இந்த ஸ்டேடியத்தின் முன் பகுதியில் அமைந்திருக்கும் கேபிள் கார் வழி பயணித்து மேலே சென்று அங்கிருந்து டர்பன் நகரை பார்த்து ரசிக்கலாம். நாலா புறமும் டர்பன் நகரத்தின் தோற்றத்தைத் தெளிவாகக் காணும் வகையில் இந்த மேற்பகுதி அமைந்துள்ளது. இங்கு செல்வதற்கென்று   கட்டணம் கட்டி டிக்கட் பெற்றுக் கொள்ள வேண்டும்.  இந்த கேபிள் காரில் ஒரு பயணத்தில் ஏறக்குறைய 16 பேர் செல்லும் வகையில் இட வசதி உண்டு.



நாங்கள் அடுத்து பொட்டேனிக்கல் கார்டன்ஸ் செல்ல வேண்டிய அவசரம் மனதில் இருந்ததால் ஏறக்குறைய 15 நிமிடங்கள் அங்கே எங்கள் நேரத்தைச் செலவழித்து டர்பனின் அழகிய காட்சியைக் கண்டு ரசித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டோம். பொட்டானிக்கல் கார்டன்ஸ்  டர்பனின் க்வாசூலு-நாட்டல் பகுதியில் அமைந்துள்ளது.  37 ஏக்கர் நிலப்பரப்பு அளவைக் கொண்டது இது.

ஆப்பிரிக்காவின் மிகப் பழமையான வாழும் பொட்டானிக்கல் கார்டன்ஸ் என்ற பெருமை இதற்கு உண்டு.

இவ்வளவு பெரிய நிலப்பகுதியைச் சுற்றிப் பார்க்க நிச்சயம் 2 மணி நேரங்கள் தேவைப்படும் என முடிவு செய்து கொண்டோம்.



முதலில் உள்ளே நுழைந்ததுமே எப்படி .. எங்கு தொடங்கி எங்கு முடிப்பது என ஒவ்வொருவரும் யோசித்துக் கொண்டு நிற்க எங்களை நாடி வந்தார் விஷ்ணு.

விஷ்ணு பெருமான் அல்ல..  அங்கு பணி புரியும் தமிழ் பின்புலத்தைக் கொண்ட ஒரு இளைஞர்.


தொடரும்..
சுபா

Thursday, August 13, 2015

விரும்பாமல் சென்று.. விரும்பிய டர்பன்..! -26

சந்தைக்குச் சென்று பொருள் வாங்கப் பிடிக்காதவர்கள் யாரும் இருக்கின்றார்களா?  எந்த ஊராகட்டும், எந்த இனமாகட்டும் எந்த நாடாகட்டும்.
மனிதர்களுக்குப் புதிய பொருட்களை வாங்குவது என்பதில் அலாதிப் பிரியம் உண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது.

பெரும்பாலும் ஷாப்பிங் செல்வது என்றாலே ஏதோ பெண்களுக்கான விசயம் போல ஒரு சிலர் கேலி செய்து பேசுவதை நான் கேள்விப்பட்டிருக்கின்றேன். அது என்னவோ.. எனது நட்புச் சூழலில் உள்ளவர்களும் சரி.. புதிதாக இணைந்து கொள்பவர்களும் சரி. ஆண் பெண் என்ற பாகுபாடு இன்றி ஷாப்பிங் செய்வதில் விருப்பம் உள்ளவர்களாகவே இருக்கின்றனர். இந்த முறை பயணத்திலும் அப்படித்தான்.

நாங்கள் மதிய உணவு முடித்து விக்டோரியா சாலை சந்தைக்கு வாகனத்தை செல்லக் கேட்டுக் கொண்டோம். அங்கே 90 நிமிடங்கள் செலவிடலாம் என்ற வகையில் திட்டமிட்டிருந்தோம்.

முதலில் நாங்கள் உள்ளே நுழைந்ததுமே கைவினைப்பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளே அதிகம் இருந்தன அதில் ஒரு கடைக்குள் அனைவருமே நுழைந்தோம்.அதில் குறிப்பாக எல்லோரையும் மிகக் கவரந்தவை எனச் சொன்னால் பெண்கள் கழுத்தில் அணியும் ஆப்பிரிக்க மணிச்சரங்கள் தாம்  எல்லோருமே ஒவ்வொருவருக்கும் பிடித்தவைகளை பார்த்து விலை பேரம் பேசி  எடுத்துக் கொண்டோம். கனடாவிலிருந்து வந்த நண்பர் ராஜரட்ணம் தன் துணைவியாருக்கும் சேர்த்து என்னை தேர்ந்தெடுக்கச் சொன்னார். நான்கைந்து வர்ணங்களில் நீண்ட சரம் போன்ற கழுத்து மணிகளை எனக்கும் வாங்கிக் கொண்டேன்.



அதே கடையிலேயே ஆப்பிரிக்க கைவினைப் பொருட்களும் இருந்தமையால் பொன்னியும் திரு,சண்முகமும் மனித உருவச் சிற்பங்களை தேர்ந்தெடுகக் விரும்பினர். அவர்களுக்குத் தேவையானதையும் தேடிப் பார்த்து பலவிதமான பொம்மை சிற்பங்களைப் பார்த்து எவை பொருத்தமாக இருக்கும் என தேடுவது சற்றே சிரமமாக இருந்தது. ஏனெனில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையானவை. நானும்  என் வீட்டு அலங்காரத்திற்காக ஒரு ஜோடி ஆப்பிரிக்க மனிதர் சிலைகளை வாங்கிக் கொண்டேன். இவை மரத்தால் செய்யப்பட்டவை.

பின்னர் அங்கிருந்து அடுத்த பகுதிக்குச் சென்றால் முதல் கடையை விட இங்கேமேலும் பல கைவினப் பொருட்கள் முந்தைய கடையை விட விலை  குறைவாக இருந்தமையை உணர்ந்தோம். இங்கே ஏறக்குறைய எல்லோருமே வாழை இலைகளால் செய்யப்பட்ட சுவர் ஓவியங்களை வாங்கிக் கொண்டோம். இவை எளிமையாக அதே வேளை மிக வித்தியாசமான கைவினைப்ப்பொருட்களாக இருந்தமையால் எங்கள் அனைவரின் கவனத்தையும் இவ்வோவியங்கள் ஈர்த்தன.

ஒவ்வொரு  நாட்டிலும் அந்த நாட்டு மக்களின் தனித்துவத்தை வெளிப்படுத்தும் கைவினைப்பொருட்கள் சுற்றுப்பயணிகளைக் கவரும் அம்சங்களில் ஒன்று. அதிலும் தென்னாப்பிரிக்கா போன்ற இயற்கை வளம் நிறைந்த நாட்டில் இயற்கை வளங்களைக் கொண்டு செய்யப்பட்ட கைவினைப்பொருட்கள் கண்களையும் கருத்தையும் கவர்பவை
.


அதே விக்டோரியா சாலை சந்தையில் ஒரு கடையில் தென்னாப்பிரிக்க தமிழ்பெண்மனி ஒருவரின் கடைக்கும் சென்றோம். அவர் மளிகைப் பொருட்கள் விற்கும் கடையை நடத்தி வருகின்றார். அவருக்குத் தமிழ் பேசத்தெரியாது ஆங்கிலத்தில் மட்டுமே எங்களுடன் உரையாடினார்.



மேலும் சில நிமிடங்கள் எனச் சுற்றிப் பார்த்து விட்டு சந்தையிலிருந்து புறப்பட்டோம். அன்றைய ஒரு நாள் பயணம் மாறுபட்ட அனுபவங்களை எங்களுக்கு வழங்கியிருந்தது.

மாலை ஆறு மணியளவில் எங்கள் தங்கும் விடுதிக்கு வந்து சேர்ந்தோம். மாலைப் பொழுது அங்கேயே நண்பர்களுடன் கதை பேசிக் கொண்டிருந்ததில் மிக இனிமையாகக் கழிந்தது.

தொடரும்..

சுபா

Saturday, August 8, 2015

விரும்பாமல் சென்று.. விரும்பிய டர்பன்..! -25

டர்பன் நகரிலேயே  10 நிமிட வாகன பயணத்தில் அடையும் தூரத்தில் தான் அந்த இந்திய உணவகம் இருந்தது. எங்களுடன் வந்த திரு.சண்முகம் மட்டும் கீழே இருந்த  Fish & Chips  சாப்பிட சென்று விட ஏனைய 8 பேரும் மேலே இந்திய உணவகத்துக்கு சென்று சேர்ந்தோம். சுமாரான அலங்காரம் எனக் குறிப்பிடும் வகையில் உணவகத்தின் அலங்காரம் இருந்தது.

எங்கள் ஒவ்வொருவருக்கும் தேவையான உணவை ஆர்டர் செய்து விட்டு நாங்கள் ஆர்வத்துடன் பேச ஆரம்பித்தோம். அங்கிருந்த 8 பேரில் 4 பேர் மலேசிய தமிழர்கள். நான் மலேசிய தமிழர் தான் என்ற போதிலும் வாழ்வது ஜெர்மனி என்ற வகையிலும் கடந்த ஏறக்குறைய 17 ஆண்டுகள்  மலேசிய மண்ணை விட்டு அயலகத்திலேயே வாழ்வதாலும் மலேசிய சமூக நிலை அரசியல் என்பது பற்றி பேச ஆரம்பித்தோம்.

நான் மலேசியாவில் பிறந்து வளர்ந்த காலத்தில் தமிழ்ச்சமூகத்தின் பிரிவுகள் எனும் போது இலங்கைத் தமிழர்கள் இந்தியத் தமிழர்கள் என்ற வகையிலான குறிப்பிடத்தக்க, மிகத் தெளிவான பாகுபாடு இருக்கும்.  இதைத் தவிர சாதி அமைப்புக்களின் வேறுபாடு என்பது குறிப்பிடத்தக்க வகையில் அப்போது இருக்கவில்லை. ஆனால் தற்சமயம் நிலை மிக மாறி விட்டது. பல சாதி அமைப்புககள் மிக வெளிப்படையாகவே சாதிப்பெயரை வைத்து சங்கங்கள் நடத்துவதும் அதனால் பல குழுச்சண்டைகள் எழுவதும் என்ற வகையிலான சமூகக் கேடு மலேசியாவின் சில குறிப்பிடத்தக்க மானிலங்களில் சூழ்ந்திருக்கின்றது.

மலேசியாவைப் பொறுத்தவரை மலேசிய தமிழர்கள் தமிழக நிலை அதன் தாக்கம் என்பதை மிக ஆழமாக உள்வாங்கும் சமூகமாக  இருக்கின்றனர். பொருளாதார நிலையும் வாழ்க்கைத் தரமும் வேறுபாடானது என்ற போதிலும் பல மலேசியத் தமிழர்கள் இந்தியா வந்து இறைவழிபாட்டு நேர்த்திக்கடன் செய்வதும், ஆண்டு இறுதி இசை விழாவில் கலந்து கொள்வது, திருமணத்திற்கோ அல்லது வேறு குடும்ப வைபவங்களுக்கோ துணிமணிகள் வாங்குவதற்கும்  என்ற நிலை இருக்கின்றது. ஒரு சில மலேசியர்கள் தங்கள் மகன்களுக்கு தமிழகத்துப் பெண்களை மணமுடிப்பதும் இப்பொழுதும் நடைமுறையில் இருப்பதுதான்.


மலேசிய தமிழர்களைப் பொறுத்தவரையில் தமிழக சினிமாவின் தாக்கம் என்பது மிக மிக ஆழமானது. வாரம் ஒரு தமிழ்ப்படம் மலேசிய தொலைக்காட்சியில் ஒலிபரப்பாவது மட்டுமன்றி சினிமா தியேட்டர்களிலும் தமிழ்ப்படங்கள் கோலாலம்பூர், பினாங்கு, ஈப்போ, போன்ற பெரிய நகரங்களில் திரையிடப்படுகின்றன. தமிழ்ப்படங்களை மிக ஆழமாக உள்வாங்கும் சமூகமாக மலேசிய தமிழர்களில் பெரும்பாலோர் இருக்கின்றமை மறுக்கமுடியாத உண்மை. பலருக்கு தமிழ்ச்சினிமாக்கள் தான் தத்துவக் கூடங்கள், அதில் கூறப்படும் வசனங்கள், நீதிகள் மக்கள் நீதியாக பலர் மனதில் ஆழப்பதிய வைத்துக் கொள்கின்றனர். இதனால் வேண்டத்தகாத சில விசயங்கள் குறிப்பாக சாதிப்பெருமை பேசி பிரிவினை வளர்ப்பது, இளைஞர்கள் மத்தியில் தவறு இழைப்பவனும் ஒரு கதாநாயகனாகலாம் என்ற ஒரு எண்ணம் ஆகியவை தற்சமயம் வளர்ந்திருக்கும் சமூகக் கேடுகள்.


பேசிக்கொண்டிருக்கும் போதே உணவு வந்து விட்டது. உணவின் சுவை மிக நன்றாகவே அமைந்திருந்தது. அப்போதைய பசிக்கு அந்தச் சுவையான உணவு தேவாமிர்தம் போலத்தான் எங்களுக்கு இருந்தது.

மதிய உணவை முடித்து அங்கிருந்து புறப்பட்டோம். அன்றைய நாளின் எங்கள் பயணத்தின் இறுதி நிகழ்வாக என் பட்டியலில் இருந்தது விக்டோரியா சாலை சந்தை.

தொடரும்

சுபா

Thursday, August 6, 2015

விரும்பாமல் சென்று.. விரும்பிய டர்பன்..! -24

சில நிமிடங்களில் நாங்கள் பயணித்து வந்த இரு வாகனங்களிலும் ஏறி டர்பனின் மற்றொரு மையச் சாலையில் இருக்கும் Old Court House  அருங்காட்சியகம் வந்து சேர்ந்தோம்.

பழமையான கட்டிடம். ஆயினும் மிக நேர்த்தியாகவே காட்சியளித்துக் கொண்டிருக்கின்றது. டர்பன் நகரின் மிகப் பழமையான பொது மக்களுக்கான பயன்பாட்டில் இருந்த கட்டிடம் என்ற பெருமையும் இதற்கு உண்டு.



இந்த கட்டிடத்தில் தான் முன்னர்  ஆப்பிரிக்க மக்கள் டர்பன் நகருக்குள் வருவதற்கான அனுமதியும் நகரை விட்டு வெளியே செல்வதற்கான அனுமதியும் வழங்கப்பட்டது. இது என்ன கொடுமை என்று கேட்கத் தோன்றுகின்றது அல்லவா? கருப்பின மக்களின் அவர்களது சொந்த நாட்டில் உள்ள ஒரு நகரத்தில் அவர்கள் வந்து செல்ல ஆங்கிலேய காலணித்துவ அரசின் அதிகாரிகளிடம் அதிகாரப்பூர்வ அனுமதி பெற்றே அவர்கள் இருக்க வேண்டிய சூழல் அன்று நிலவியது.



இக்கட்டிடம் ஒரு நீதிமன்றமாகவும் முன்னர் இயங்கியது. இதே கட்டிடத்தில் தான் ஒரு சமூக சீர்திருத்தவாதியாக இருந்த  காந்தியை அவர் தலையில் முண்டாசு (Turban)   கட்டியிருந்தார் என்பதற்காக அறையை விட்டு வெளியேறும்படி அவரை விசாரித்த நீதிபதி உத்தரவிட்ட நிகழ்வும் நடந்தேறியது.

இந்த  அருங்காட்சிகத்தின் சிறப்பு விசயங்களாக இரண்டினை நான் குறிப்பிடுவேன்.

ஒன்று ஆப்பிரிக்க மக்களுக்கும் வெள்ளையர்களுக்கும் இடையில் இருந்த நிற பேதத்தை அலசும் வகையிலான பல பத்திரிக்கை சான்றுகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. அதில் ஆச்சரியப்படுத்தும் பல தகவல்கள் இருக்கின்றன. உதாரணமாக

  • கருப்பர்கள் வெள்ளையர்களை வெறுக்கின்றார்களா? 
  • வெள்ளையர்களுக்கு நடைபெற்ற திருமணத்தில் கலந்து கொண்ட ஒரு கருப்பின மாணவ தம்பதியர் பற்றிய செய்தி
  • வெள்ளையர்கள் கருப்பர்களை வெறுக்கின்றார்களா?

என்பது போன்ற செய்திகள் அடங்கிய பத்திரிக்கைச் செய்திகளைக் குறிப்பிடலாம்.



கீழ்த்தளத்தில் இவ்வகையான பல செய்தித்தாட்கள் மட்டுமின்றி ஆப்பிரிக்க நாட்டின் கைவினைப் பொருட்கள் சின்னங்கள் ஆகியனவும் இருகின்றன. அதில் உலகக் காற்பந்து நிகழ்வில் ஆப்பிரிக்க மக்களை மட்டுமன்றி உலக மக்கள் அனைவரையும் கவர்ந்த ஊவுஸெல்லாவும் இருக்கின்றது.

மேல்தளத்தில் இருக்கும் கண்காட்சிப் பகுதி மிகப் பிரமாண்டமானது. அக்கால நிலையில் மக்கள் குடியிறுப்புப் பகுதி, மருத்துவ அறை, விவசாயத்தைக் காட்டும் வகையிலான  காட்சி அமைப்பு, அறிவியல் கூடம். தையல் நிலையம் என்பது போன்ற அமைப்புக்களை உருவாக்கி வைத்திருக்கின்றனர். இப்பகுதி இந்த அருங்காட்சியகத்திற்கு வரும் அனைவருக்கும் நிச்சயமாகப் பார்க்கப் பிடிக்கும் ஒரு பகுதி என்றே கூறுவேன்.



நாங்கள் இங்கிருந்து ஒவ்வொரு அறையாகச் சென்று பார்த்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று மின்சாரம் நின்றுவிட்டது. அருங்காட்சியகக் கட்டிடம் முழுமையும் இருட்டாக ஆகிவிட மெதுவாக ஒவ்வொருவராக படிகளில் இறங்கி வர ஆரம்பித்தோம். கீழ்ப்பகுதியில் அதற்குள் கதவுகள் திற்க்கப்பட்டு வெளிச்சம் உள்ளே வந்ததால் பிரச்சனையின்றி கீழிறங்கி வந்து சேர்ந்தோம்.



இந்த அருங்காட்சியகம் தென்னாப்பிரிக்க மக்களின் ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்கு முன்பான    செய்திகளை அறிந்து கொள்ள உதவியது என்பதில் மறுப்பேதுமில்லை. டர்பன் வருபவர்கள் ஆப்பிரிக்க மக்களின் சமூக நிலை மாற்றங்கள் படிப்படியாக மாற்றம் கண்டமையை அறிந்து  கொள்ள இங்குள்ள ஆவணங்களைப் பார்த்து ஆராய்ந்து அறியலாம்.

மணி ஏறக்குறைய மதியம் ஒன்றரை  தாண்டியிருந்தது. எங்கள் எல்லோருக்குமே பசி. ஒரு இந்திய உணவகமாக தேடிச் செல்வோம் என எல்லோருமே சொல்ல நண்பர் சாம் விஜய் தனது ஆப்பிரிக்க நண்பர் ஒருவருக்கு தொலைபேசியில் அழைத்து பக்கத்தில் இருக்கும் நல்ல உணவகத்தைப் பற்றி விசாரித்தார். அவர் குறிப்பிட்ட முகவரியில் இருந்த உணவகத்திற்கு  எங்கள் பயணம் தொடர்ந்தது.


தொடரும்

சுபா

Saturday, July 25, 2015

விரும்பாமல் சென்று.. விரும்பிய டர்பன்..! -23

குவாமூல அருங்காட்சியகத்தில் நாங்கள் கண்டும் வாசித்தும் தெரிந்து கொண்ட விசயங்கள் மனதில் ஒரு வித தாக்கத்தை தராமல் இல்லை. கருப்பர் இன மக்களின் அடிப்படை மனித  உரிமை என்னும் ஒரு விசயம் இங்கிலாந்தின் காலணித்துவ ஆட்சியின் போது ஒரு பொருட்டாகக் கருதப்படாது அவர்களை வேலை செய்யும் இயந்திரங்களாகவே கருதியமையை வெளிப்படுத்தும் வகையில் இருந்தது என்பதே உண்மை.


குவாமூல அருங்காட்சியகத்திலிருந்து புறப்பட்டு டர்பன் நகரிலேயே இருக்கும் Old Court House  அருங்காட்சியகத்திற்குப் புறப்பட்டோம். அது தான் எனது பட்டியலில் இருந்த அடுத்து பார்க்க வேண்டிய இடமாகவும் இருந்தது. இதற்கு இடையே மதிய உணவை முடித்துக் கொள்ளலாமா என்றும் நண்பர்களுடன் கலந்து பேசியதில் அனைவரும் அடுத்த அருங்காட்சியகத்தைப் பார்துது விட்டு சேர்ந்தே சாப்பிடுவோம் என சம்மதம் தெரிவித்து விட்டனர்.


குழுவாகப் பயணம் செய்யும் போது திட்டமிடுதலில் அவ்வப்போது சில  பிரச்சனைகள் எழலாம். ஒருவருக்கு பிடித்த விஷயம் இன்னொருவருக்குப் பிடிக்காமல் இருக்கலாம். ஒருவர் நீண்ட நேரம் பார்க்க விரும்பும் ஒரு விசயத்தை மர்றொருவர் சிறிது நேரம் மட்டுமே பார்த்து விட்டு செல்ல வேண்டும் என அவசரப் படுத்தலாம். ஒரு சிலர் குறைசொல்லிக் கொண்டே கூட வருவார்கள். இப்படி பல சங்கடங்கள் குழுவாக இணைந்து செல்லும் போது ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆனால் இந்தப் பயணத்தில் அனைவருமே ஒருமித்த கருத்தோடு எல்லா இடங்களையும் பார்த்து வந்தோம் என்பது மகிழ்ச்சியுடன் குறிப்பிட வேண்டிய விசயம். இந்த பயணத்தில் என்னுடன் இணைந்து கொண்ட எட்டு பேருக்குமே எனது பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியல் தேர்வுகளும் பிடித்திருந்தது. நான் ஒவ்வொரு இடத்திற்கும் திட்டமிட்ட கால அவகாசமும் அவர்களுக்குப் பிடித்திருந்தது. இது எனக்கு மட்டுமல்லாது வாகனமோட்டிகளுக்கும் உதவுவதாக அமைந்தது.


ஆக, நினைத்தது போலவே மதிய உணவை சற்று தாமதமாகச் சாப்பிடலாம் என முடிவெடுத்துப் புறப்பட்டோம்.



டர்பன்  நகர சாலையில் இருக்கும் கட்டிடங்களில் சில இங்கிலாந்தின் லண்டன் நகர கட்டிடங்களின் கட்டுமான அமைப்பை ஒத்ததாகவே அமைந்திருக்கின்றன.சாலைகள் விரிவாக தூய்மையாக மிகத் தரமாக அமைந்துள்ளன. ஒரு சாதாரண வார நாளை பிரதிபலிக்கும் வகையில் சாலைகளில் வாகனங்களும் நிறைந்திருந்தன.
ஏறக்குறைய ஏழு நிமிட நேரத்திற்குள் அடுத்த அருங்காட்சியகத்திற்கு  வந்து சேர்ந்தோம். Old Court House - இது தென்னாப்பிரிக்க சூலு கருப்பின மக்கள் கடந்த காலங்களில் அனுபவித்த அவலங்களை வெளிப்படுத்தும் ஆவணங்கள் அடங்கிய  மேலும் ஒரு அருங்காட்சியகம். இங்கு நான் வாசித்து அறிந்து கொண்ட விசயங்கள் அக்கால சூழலில் சூலு கருப்பின மக்கள், ஆங்கிலேயர்,  இந்தியர் ஆகிய மூன்று இனங்களும் வாழ்ந்த சூழலைக் காட்டுவதாக அமைந்தது.

உதாரணமாக,
சூலு கருப்பின மக்கள் ஆங்கிலேயர்களை திருமணம் செய்து கொள்வதும் நிகழ்ந்திருக்கின்றது.
ஆங்கிலேயர்கள் இந்தியர்களை திருமணம் செய்து கொள்வதும் நிகழ்ந்திருக்கின்றது.
ஆனால் மிக மிக அரிதாகவே சூலு கருப்பின மக்கள் இந்தியர்கள் திருமண உறவு நிகழ்ந்தது என்பதை உணர முடிந்தது.

இது யோசிக்க வேண்டிய ஒரு விசயம் தான் அல்லவா?


தொடரும்
சுபா

Wednesday, July 8, 2015

விரும்பாமல் சென்று.. விரும்பிய டர்பன்..! -22

சாதியை வைத்து தீண்டாமை என்னும் கருத்தை வளர்ப்பது ஒரு சமூகக் கேடு. நம் தமிழ்ச் சமூகத்தில் இன்றும் அந்த அவல நிலையை நாம் தினம் தினம் ஏதாவது ஒரு வகையில் ஊடகங்களின் வழியாகவோ அல்லது சுற்று வட்டாரத்திலேயும் கூட கேட்டும் பார்த்தும் அறிந்து வரும் நிலையிலிருந்து விடுபடவில்லை. எல்லா மனிதருக்கும் DNA அறிவியல் கூற்றுப்படி, உடலில் இருக்கும் வித்தியாசங்கள் என்பது மிக மிக மிக சிறியது. விபத்தில் அடிபட்டு உயிருக்குப் போராடும் போதோ, அல்லது உடலில் ஏதாகினும் ஒரு பாகம் சீர் கெட்டு அதனை மாற்ற வேண்டும் என்ற நிலை தோன்றினாலோ அங்கும் கூட சாதி வித்தியாசத்தைப் பார்த்து தனக்கு தன் உயிர் வேண்டாம் என ஒதுக்கி விடவா போகின்றார்கள் சாதிப் பற்றாளர்கள்? சாதிக்கொள்கை.....அதனை கடைபிடிப்போருக்கு சாதியால் தேவைப்பாடும் தீண்டாமை என்னும் கொள்கை ஆகியவை மிகக் கொடுமையானவை. நம் சமூகத்தில் நடைபெறும் அவலங்களுக்கு முக்கிய காரணமாக அமைவதும் சாதி என்னும் இந்தப் பிற்போக்குச் சிந்தனை மனதில் ஆழமாகப் பதிந்திருப்பதே. இந்த சாதிக் கொடுமையைப் போல ஆப்பிரிக்க கருப்பின மக்கள் அனுபவித்த அப்பார்தேட் (Apartheid) பிரிவினைவாதம் என்பதும் ஒரு சமூகக் கேடே!


ஆப்பிரிக்க தேசத்தில் ஆப்பிரிக்க தேசத்து கருப்பின மக்களுக்கு வெள்ளையர்கள் நிறப்பிரிவினையைக் கற்பித்து பல கொடுமைகளைத் தங்களது காலணித்துவ ஆட்சியின் போது இழைத்தனர் என்பது வரலாறு. இதனை எதிர்த்து அம்மக்களுக்காகப் போராடிய நெல்சன் மண்டேலா ஆப்பிரிக்க மக்களின் மனதில் மட்டுமல்லாது உலகில் எல்லோரும் ஒரு குலமே என நினைக்கும் அனைத்து மக்கள் மனதிலும் குடியிருப்பவர் என்பதை நன்கு அறிவோம்.



தென்னாப்பிரிக்க கருப்பின மக்கள்  அப்பார்தேட் கொடுமைகளால் பட்ட அவலங்களை வெளிப்படுத்தும் ஒரு அருங்காட்சியகமே க்வாமூல அருங்காட்சியகம். இந்த அருங்காட்சியகமே எனது பட்டியலில் அடுத்து சென்று காண வேண்டிய ஒன்றாக இருந்தது.

நாங்கள் உம்கேனி சிவாலயத்திலிருந்து புறப்பட்டு டர்பன் மைய நகருக்குள் நுழைந்தோம். மைய நகரின் வளர்ச்சியை வெளிப்படுத்தும் பெரிய உயர்ந்த கட்டிடங்கள், விளையாட்டு மைதானங்கள், வரிசை வரிசையான கடைகள் என இப்பகுதி அந்தநேரத்தில் மிக பிசியாகவே இருந்தது.


குவாமூல அருங்காட்சியகம் அமைந்திருக்கும் இக்கட்டிடம் முன்னர் அப்பார்தேட் கொடுமைகளை இழைத்த பல வெள்ளையர்களால்  வெறுக்கத்தக்க ஒரு அலுவலக கட்டிடமாக இருந்தது. இதற்குக் காரணம் இந்தக் கட்டிடமே  முன்னர் தென்னாப்பிரிக்க கருப்பின மக்களின் சமூக நல மையமாக (Department of Native Affairs)  அமைந்திருந்தது. ஆனால் இன்றோ அக்காலத்தில் நிகழ்ந்த பல மனித உரிமை மீறல் விசயங்களை வெளிப்படுத்தும் ஆவணங்களைப் பாதுகாக்கும் முக்கிய கட்டிடமாகத் திகழ்கின்றது. இதுதான் காலத்தின் கோலம்!



இது ஒரு இரண்டு மாடிக் கட்டிடம்.  உள்ளே நுழைந்ததும் வலது பக்கம் அலுவலகம் அமைந்திருப்பதைக் காணலாம். இடது பக்கம் நுழைந்தால் அருங்காட்சியகத்தின் சேகரிப்புக்களைக் காணலாம். அக்கால நிகழ்வுகளை உருவகப் படுத்திக் காட்டும் காட்சிகள் இங்கு மூலைகளில் வடிவமைக்கப்பட்டும் வைக்கபப்ட்டுள்ளன. சுவர்களில் சில முக்கிய நிகழ்வுகளைப் பிரதிபலிக்கும் பழைய புகைப்படங்களும் மாட்டப்பட்டிருக்கின்றன. மேல் மாடியிலும் தொடர்ச்சியாக பலபுகைப்படங்கள், ஆவணங்கள் காட்சிப் பொருட்கள் ஆகியன வைக்கப்பட்டிருக்கின்றன.

இந்த அருங்காட்சியகத்தின் பெயர் இதன் முதல் மேலாளரான திரு JS Marwick என்பவரின் பெயரைக் கொண்டிருக்கின்றது. இவர் தான் 7000 சூலு (தென்னாப்பிரிக்க கருப்பர் சமூகத்தில் ஒரு சமூகத்தினர்) அடிமைகளை கெத்தோக்களிலிருந்து தென்னாப்பிரிக்க போரின் போது வெளியேற்றி காப்பாற்றியவர். 1927ம் ஆண்டில் இந்தக் கட்டிடம் வடிவமைக்கப்பட்டது.


ஆய்வு மாணவர்களுக்கு மட்டுமன்றி அப்பார்தேட் கொடுமைகளைப் பற்றி அறிந்து கொள்ள விழைபவர்களுக்கும் இந்த அருங்காட்சியகம் மிக முக்கிமான ஒரு இடம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

அங்கு ஏறக்குறைய 1 மணி நேரம் இருந்து பல தகவல்களை வாசித்தும் பார்த்தும் புரிந்து கொண்டும்,  புகைப்படங்களும் எடுத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டோம். எங்கள் வாகனம் அடுத்து டர்பன் நகரிலேயே இருக்கும் மற்றுமொரு இடத்திற்குப் பயணமானது.

தொடரும்

சுபா

Monday, July 6, 2015

விரும்பாமல் சென்று.. விரும்பிய டர்பன்..! -21

காந்தி நினைவு இல்லத்திலிருந்து புறப்படும் போது எனக்கு மட்டுமல்ல. என்னுடன் வந்திருந்த ஏனைய 8 பேரும் கூட காந்தி தொடர்பான சிந்தனைகளிலேயே மூழ்கியிருந்தோம் என்று தான் சொல்ல வேண்டும். காந்தி டர்பனில் வாழ்ந்த காலங்களில் அவர் தனது வாழ்க்கைப் பாதையை புதிதாக வடித்துக் கொண்டார். ஆப்பிரிக்காவில் இந்திய மக்களுக்கு இழைக்கப்பட்ட நடைமுறை பாரபட்ஷமானது  கொடியது. அதே வேளை இந்தியாவில் மக்கள் தன் சொந்த நாட்டிலேயே கூட அன்னியரின் ஆளுமைக்கு உட்பட்டு தனது சுயமரியாதையை இழந்து அடிமையாக இருக்கும் நிலை அவரது வாழ்க்கைப் பாதையையே மாற்றி அமைத்தது. ஒரு வக்கீலாக தொழில் புரிய சென்ற காந்தி இந்திய தேசத்து மக்களை அடிமைத்தனத்திலிருந்து வெளியேற்றி மக்கள் வாழ்க்கை நலம்பெற உதவவேண்டும் என்ற சிந்தனை பெற்றவராய் 20 வருடங்கள் கடந்து புதிய மனிதராய் தான் இந்தியா திரும்பினார்.

பல வேளைகளில் நமது சொந்த இடத்திலிருந்து பெயர்ந்து புதிய இடத்தில் வாழும் போது நமக்கு நம்மைப் பற்றி கிடைக்கும் தரிசனம் மிக உன்னதமானதாகவே அமைந்து விடுகின்றது. இதனை உணர்வோர் தமக்கும் தன் நாட்டிற்கும் மக்களுக்கும் ஏதாவது ஒரு வகையில் பயன்மிக்க செயல்களைச் செய்து வாழ்க்கைக்கு ஒரு அர்த்ததை உருவாக்குகின்றனர். இதனை அறியாத சிலரோ வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும்  பொருளற்றதாக்கி வீணாக்கி விடுகின்றனர்.

எங்கள் பயணம் அங்கிருந்து டர்பனின் மையப்பகுதியை நோக்கிச் செல்ல ஆரம்பித்தது. அடுத்து என் பட்டியலில் இருந்தது டர்பன் நகரில் இருக்கும் ஒரு அழகிய சிவாலயம்.



(Umgeni Siva Temple) உம்கெனி சிவாலயம் டர்பன் நகரில் இருக்கும் பழமையான ஆலயங்களில் ஒன்று.  இது 1910ம் ஆண்டில் கட்டப்பட்டது. இந்த ஆலயத்தின் முகவரி 535 Umgeni Rd, Durban, 4001, South Africa.



தமிழகத்தின் புதுக்கோட்டையிலிருந்து டர்பனுக்கு வந்த ராமசாமி கொத்தனார் பிள்ளை என்பவர் கட்டிய ஆலயம் இது.  1885ம் ஆண்டில் இவர் ஒரு வழிப்போக்கராக டர்பன் நகருக்கு கப்பலில் வந்து சேர்ந்தார்.  டர்பன் நகரத்தில் கட்டிட நிர்மாணிப்பாளராக பணி புரிந்து கொண்டிருந்த இவர் ஆலயங்களை வடிவமைக்கும் முயற்சியிலும் இறங்கினார். கட்டிடக் கலை என்று மட்டுமல்லாமல் கலை ஆர்வமும் இலக்கியம் படைப்பதில் ஆர்வமும் கொண்டிவராக இவர் இருந்தார். டர்பன் நகரில் இவர் நாடகங்களைத் தயாரித்து மேடையேற்றியிருக்கின்றார். 1863ல் தமிழகத்தில் பிறந்து பின்னர் 1885ம் ஆண்டில் டர்பன் வந்த பிறகு  1927 வரை இங்கேயே இருந்து மேலும் சில இந்து ஆலயங்களையும் வடிவமைத்து கட்டியிருக்கின்றார். 1927ம் ஆண்டில் மீண்டும் தமிழகம் திரும்பிய இவர் 1938ம் ஆண்டில் மறைந்தார்.

இவர் தென்னாப்பிரிக்காவில் கட்டிய ஏனைய இந்து ஆலயங்களின் பட்டியல் கீழ் வருமாறு.

1. பால சுப்ரமண்ய ஆலம் - 1910  Dundee
2.கே.ஆர்.பிள்ளை தனியார் ஆலயம் - 1924 Redhill, Durban
3.ரயில்வே  பாரெக்ஸ் ஸ்ரீ எம்பெருமான் ஆலயம் - 1924 Durban
4.சிவ சுப்ரமண்ய ஆலயம் - 1912 Mount Edgecombe
5.சிவ சுப்ரமண்ய ஆலயம்  - 1915 Pietermaritzburg
6.சிவ சுப்ரமண்ய ஆலயம் - 1893 Port Elizabeth
7.உம்பிலோ ஸ்ரீ அம்பலவாணர் ஆலயம் - சுப்ரமணியர் ஆலயம் - 1905 Durban

உம்கெனி ஆலயத்தின் வாசலில் நுழையும் போது நெடிய சிவபெருமான் உருவச் சிலை வாசலிலேயே இருப்பதைக் காணலாம்.  உள்ளே இடது புறத்தில் சிறிய பூங்காவும் வலது புறத்தில் தென்னந்தோப்பும் அமைந்திருப்பது இந்த கோயில் வளாகத்தை மிக ரம்மியமாக காட்சியளிக்கச் செய்கின்றது.



ஆலயத்தின் உள்ளே புகைப்படம் எடுக்க அனுமதி கிட்டவில்லை. எனவே வெளிப்புறத் தோற்றத்தை மட்டுமே என்னால் புகைப்படம் பதிய முடிந்தது.

ஆலயம் மூன்று பகுதிகளாக அமைந்திருக்கின்றது. அலுவலக கட்டிடம் ஒன்றும் இடது புறத்தில் அமைந்திருக்கின்றது. நாங்கள் சென்றிருந்த சமயத்தில் ஆலய குருக்களும் உள்ளே இருந்தார். ஆகையால் சில நிமிடங்கள் அவருடன் பேசியதில் அவர் இலங்கைத் தமிழர் என்பதை அறிந்து கொண்டோம். வாசலில் இரண்டு மயில்கள் அங்கும் இங்கும் நடை பழகிக் கொண்டிருந்தன. இந்த ரம்மியமான காட்சியை பார்த்து சுவாமி வழிபாடும் செய்து  விட்டு அங்கிருந்து எனது பட்டியலில் இருந்த அடுத்த இடத்திற்குப் பயணமானோம்.


தொடரும்..
சுபா