Sunday, June 20, 2021

பிரெஞ்சு காலை உணவு

 பிரெஞ்சு காலை உணவு.. மாலாவுடன் Mala Poli .. croissant, cafe e au lait .. இவ்வளவையும் சாப்பிட்டு முடித்தேனா என்று கேட்கக்கூடாது நண்பர்களே. சும்மா போட்டோவுக்கு ஒரு போஸ். எல்லோரும் நம்பி விடவும்.

நேற்று காலை ஜெர்மனியிலிருந்து சாலை வழியாக ஏழு மணி நேர பயணத்திற்குப் பின் பாரிஸ் வந்தடைந்தோம். பாரிசில் சில முக்கிய வரலாற்று சின்னங்களை பார்வையிட்ட பின்னர் அங்கிருந்து 133 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஓர்லியன்ஸ் நகருக்கு வந்திருக்கின்றேன். இங்கு நண்பர் Sam Vijay சாம் விஜய், மாலா வீட்டில் இனிய காலை உணவு.





Saturday, June 19, 2021

லூவ்ர அருங்காட்சியகம் வளாகம்

 1190ம் ஆண்டில் கோட்டையாக கட்டப்பட்டு பின்னர் 16ஆம் நூற்றாண்டிலிருந்து அரசு மாளிகையாகத் திகழ்ந்து வரும் இன்று லூவ்ர அருங்காட்சியகம் இருக்கும் வளாகம்.




எகிப்திலிருந்து பரிசாகப் பெற்ற ஒபெலிஸ்க்

 பிரான்ஸ் எகிப்திலிருந்து பரிசாகப் பெற்ற ஒபெலிஸ்க். கிரேக்க தெய்வங்களின் சிற்பங்கள் சூழ பிரமாண்டமாக நிற்கும் காட்சி. - பாரிஸ்








பாரிஸ் லூவ்ர அருங்காட்சியகம்

 பாரிஸ் லூவ்ர அருங்காட்சியகம்..

அடுத்த சில நாட்கள் பிரான்சில்.






Wednesday, March 4, 2020

ஊர் சுற்றிப்புராணம் - கடலூரில் ஒரு நாள் -4

எங்கள் படகை எதிர்த்துக் கொண்டு எழும்பிய பேரலை முன் பகுதியை முழுமையாக நனைத்துவிட, நாங்கள் அதற்குள் ஒருவழியாக சுதாரித்துக் கொண்டு படகில் நின்று கொண்டோம். நான் படகில் சுதாரித்துக் கொண்டு நின்றதைக் கவனித்த மீனவ நண்பர், ’நீங்கள் சமாளிக்கும் விதம் சரியான முறைதான்.. எப்படி இப்படித் தான் நிற்கவேண்டும் படகில் என்று தெரியும்’ என ஆச்சரியத்துடன் கேட்டார். நான் அவரைப் பார்த்து பதிலேதும் சொல்லாமல் சிரித்துக் கொண்டேன். இளம் வயதில் உயர்கல்வி முடித்ததும் நான் மலேசியாவிலிருந்தபோது ஒரு வார காலம் மாணவர்களுக்கான ராணுவ பயிற்சி மேற்கொண்டிருந்தேன். அப்போது கடலில் பாதுகாப்பாகப் பயணம் செல்லும் சில வழிமுறைகளைக் கற்றிருந்தேன். அது இன்றுவரை மனதில் பதிந்திருப்பதும், ஆபத்தான வேளைகளில் அந்தப் பயிற்சிகள் உடனே நமக்கு கை கொடுப்பதும் இயல்புதானே.

எங்கள் படகு மேலும் சென்று கொண்டே இருந்தது. அலைகளின் அழுத்தம் அதிகரிக்க, அதிகரிக்க, திரும்பிச் செல்வோம் என்று முடிவெடுத்துத் திரும்பத் தொடங்கினோம். அந்த சமயத்தில் பரங்கிப்பேட்டை மீனவ துறைமுகப் பகுதியைத் தாண்டி மேலும் சற்று தூரம் வந்திருந்தோம். தூரத்தில் கலங்கரை விளக்கமும் கண்களில் தென்பட்டது.

கடலூரில் கடற்கரையோரத்தில் ஏராளமான மக்கள் வழிபாட்டில் உள்ள ஆலயங்கள் இருப்பதைப் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். புத்து மாரியம்மன் கோயில், முத்தாலம்மன் கோயில், பூரணி அம்மன் கோயில், கங்கை அம்மன் கோயில், அங்காளம்மன் கோயில், வெல்லாரி அம்மன் கோயில் என அங்கிருக்கும் ஒவ்வொரு மக்கள் வழிபடும் கோயில்களுக்கும் சென்று பார்த்து அவற்றின் சிறப்புகளைப் பதிவு செய்ய வேண்டும் என்ற பேராவல் எனக்கு இருந்தது. ஆனால் அதற்கு ஒரு நாள் போதாது என்பது தெள்ளத் தெளிவு.தூரத்திலிருந்து தெரிந்த சில கோயில்களின் கோபுரப் பகுதிகளை மட்டும் பார்த்துக்கொண்டேன்.

படகுப் பயணத்தில் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று அலையாத்தி காடுகள் தான். குவியல் குவியலாகக் குட்டி தீவுகளாக இந்த அலையாத்தி காடுகள் அமைந்திருக்கின்றன. ’பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கின்றது’ என்று நான் சொன்னவுடன், படகை அலையாத்திக் காடுகளுக்கு அருகில் கொண்டு சென்று நான் மரங்களைத் தொட்டு ரசித்து மகிழ ஒரு வாய்ப்பினையும் வழங்கினார் அந்த மீனவ நண்பர். படகினை அப்படியே நிறுத்திவிட்டு அங்கேயே படகில் இருந்தபடியே அலையாத்திக் காடுகளை ரசித்துக் கொண்டிருக்க வேண்டும்போல் மனதில் கொள்ளை ஆசை எனக்கு. ஆனாலும் நேரம் கடந்து கொண்டே இருந்ததாலும், அன்றே நாங்கள் சென்னைக்குத் திரும்ப வேண்டும் என்ற திட்டம் இருந்ததாலும், படகுப் பயணத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்ற அவசரமும் எனக்கு இருந்தது.

இத்தகைய இயற்கை வளமும் எழிலும் நிறைந்த கடலூர் பகுதியை ஒரு சுற்றுலாத் தலமாக உருவாக்காமல் வைத்திருக்கிறார்களே, என்று எனக்கு வியப்பு தான் தோன்றியது. கடலூர் போன்ற வளமிக்க ஒரு ஊரும் உழைக்கும் மக்களும் அழகிய இயற்கையும் ஐரோப்பாவிலும் அல்லது ஏனைய ஆசிய நாடுகளிலும் அமைந்திருந்தால் அதனை இந்நேரத்திற்கு மிகப்பெரிய சுற்றுலாத்தலமாக மாற்றி இருப்பார்கள். அதனால் அவ்வூர் மக்களுக்கும் மிகப்பெரிய பொருளாதார மேன்மை கிடைத்திருக்கும். ஆனால் இங்கு நான் கண்டதோ எதிர்மாறான ஒரு நிலைதான். இது துரதிஷ்டமே!

எங்கள் படகுப் பயணத்தை முடித்துக்கொண்டு எங்களை அழைத்துச் சென்ற மீனவ நண்பருக்கு நன்றி கூறிக்கொண்டு, அவரது தொடர்பு எண்ணையும் எடுத்துக்கொண்டு விடைபெற்றுத் திரும்பினோம். கடலூரில் மேலும் சில நண்பர்களைச் சந்தித்து நகர்ப் பகுதியிலும் பயணம் செய்துவிட்டு தம்பி ஜானகிராஜா அளித்த தேநீர் விருந்தையும் சுவைத்துவிட்டு இரவு அங்கிருந்து புறப்பட்டோம். ஒருநாள் பயணம் தான் என்றாலும் கூட கடலூரில் நான் சென்ற படகுப் பயணம், வித்தியாசமான அனுபவமாக, மகிழ்ச்சியளித்த பயணங்களில் ஒன்றாகவே அமைந்தது.

கடலூரில் அறிந்துகொள்ள இன்னும் ஏராளம் இருக்கின்றது. நிச்சயம் அடுத்த பயணத்தில் படகுப் பயணத்தோடு மக்களோடு மக்களாக அங்கேயே ஓரிரு நாள் தங்கி இருந்து அவர்கள் உணவையும் சுவைத்து, மக்களின் வழிபாட்டு வாழ்வியல் கூறுகளையும், மீனவ மக்களின் தொழில் வாழ்க்கையும் பதிவு செய்ய வேண்டும் என்ற பேரார்வம் எனக்கு இருக்கின்றது.

இந்த ஊர் சுற்றிப் புராணம் மீண்டும் தொடரும்.. மற்றுமொரு இடத்திலிருந்து..!

சுபா
















Saturday, February 29, 2020

ஊர் சுற்றிப்புராணம் - கடலூரில் ஒரு நாள் -3

23.1.2020

(கடலூருக்கு நான் சென்று வந்த ஊர் சுற்றிப் புராணத்தை இடையில் சில நாட்கள் தொடர முடியவில்லை... இப்போது விட்ட இடத்திலிருந்து தொடர்கிறேன்.. படகில் எங்களோடு சேர்ந்து வாருங்கள்..)

முதல் பாடல் மனதில் ஒலித்துக் கொண்டிருக்கும் போதே மேலும் ஒரு படகுப் பாடல் மனதில் ஒலிக்கத் தொடங்கியது....

’வசந்த கால நதிகளிலே
வைரமணி நீரலைகள்’

பாடல் இனிமை தான்..
ஆனாலும் திரைப்படத்தில் பாடல் காட்சி பயங்கரமானதாயிற்றே... எங்கே.. படத்தில் வருவது போல் படகிலிருந்து நாம் கடலில் விழுந்து அசம்பாவிதம் ஆகிவிடக்கூடாதே என்று மனதிற்குள் ஒரு எச்சரிக்கை ஒலி..
பாடல் ஓடிக் கொண்டிருக்கும் வானொலியை நிறுத்துவது போல மனத்திரையில் ஓடிய பாடல் காட்சியையும் நிறுத்திக்கொண்டேன்.

படகு சற்று வேகமாகப் பயணிக்கத் தொடங்கியது. எங்களை அழைத்து வந்த அந்த மீனவ நண்பரும் அவரது உறவினரான அந்த இளைஞனும் எங்களுடன் பேசிக்கொண்டே படகைச் செலுத்திக் கொண்டு வந்தனர். ஒரு நீளமான கம்பு நுனியில் துணி ஒன்று கட்டப்பட்டிருந்தது. அதைக் கொண்டு போய் கடலில் ஒரு இடத்தில் குத்தி நிறுத்தினார். இதுதான் கொடி. இப்படி கடலில் செல்லும் போது நாங்கள் இந்தக் கொடியைக் குத்தி நிறுத்தி விட்டுச் செல்வோம். படகு கடலுக்குள் சென்றிருக்கின்றது என்பதற்கு இது அடையாளமாகும் என்று விளக்கினார்.

தொடர்ந்து பயணித்துக் கொண்டிருந்தோம். திடீரென்று துள்ளிக் குதிக்கும் நூற்றுக்கணக்கான மீன்கள். வெள்ளி நிறத்தில் பளிச் பளிச்சென கண்களை கவர்ந்தன. உடனே எல்லோரும் புகைப்படம் எடுப்போம் என முயற்சித்தோம்.. ஆனால் கண்களுக்குத் தெரியும் காட்சி புகைப்படக்கருவிக்குத் தெரிவதில்லை. இத்தகைய மீன் துள்ளும் எழில் காட்சிகளைக் கண்களால் நேரில் காண்பதுதான் இதனை முழுமையாக ரசிப்பதற்கு உள்ள ஒரே வழி. அதனை அன்று கண்ணாரக் கண்டு மகிழ்ந்தோம்.

படகு மீண்டும் சென்று கொண்டே இருந்தது. தோழி ரேச்சலுக்கு டைட்டானிக் படம் நினைவுக்கு வந்துவிட்டது. டைட்டானிக் ஹீரோ போல நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார். பெரியவர்கள் கூட குழந்தைகள் ஆகிப்போவது இத்தகைய பயணங்களில் தான். நானும் அதற்கு விதிவிலக்கல்ல.

எங்களை அழைத்து வந்த மீனவ நண்பர் படகு இயந்திரத்தை எப்படி இயக்குவது என எனக்கு காட்டுவதாகக் கூறி அழைத்தார். அருகில் சென்று அவர் சொல்லிக் கொடுத்த வகையில் பயிற்சி எடுத்துக்கொண்டேன். தோழி ரேச்சல் எங்களிருவரையும் பார்த்து கிண்டல் செய்யத் தொடங்கிவிட்டார். எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் போல படகுப்பயணமா... நீங்கள்தான் எம்ஜிஆர் என்று அந்த மீனவ நண்பரைச் சுட்டிக்கட்டி அவரை கேலி செய்யத் தொடங்க, படகில் எல்லோரும் வயிறு குலுங்கச் சிரித்தோம். அந்த மீனவ நண்பரின் முகமெல்லாம் வெட்கம். அந்தக் காட்சியும் சூழலும் நட்பு உணர்ச்சியும் என் மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தன.

எங்கள் படகு கடந்து சென்ற பகுதியில் ஏராளமான மீன்பிடி படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இது, இதுநாள்வரை நான் கண்டிராத ஒரு புது உலகம் போல எனக்குக் காட்சி அளித்தது. நான் கற்பனை செய்து பார்க்காத தமிழகத்தின் ஒரு பகுதி. வானமும் கடலும் நீலமாகக் காட்சியளிக்க, கரையோரத்தில் இருந்த எண்ணற்ற படகுகள் வர்ணஜாலம் காட்டிக்கொண்டு வரிசையாக நின்று கொண்டிருந்தன. படகுகளின் பெயர்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமாக, ஆனால் அதே வேளை நாம் அறிந்த பெயர்களாக வைக்கப்பட்டிருந்தன.’ ஸ்ரீசெந்தில்குமரன், ஸ்ரீ முத்துமாரியம்மன், குமரன், மதுரைவீரன், சாந்தி’ என்ற பெயர்களுடன் அன்மைகால ’புள்ளிங்கோ’ வரை என படகுகள் அடையாளப் பெயர்களுடன் அழகழகாய் காட்சி அளித்தன.

கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் தங்கள் படகுகளுக்கு அழகிய வர்ணம் தீட்டி அதற்கு தனித்துவமாக ஒரு பெயரும் சூட்டி தங்களது படகுககளை மிகக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள்கின்றனர் என்பது புரிந்தது. கடற்கரையோர மீனவர்களின் வாழ்க்கையில் படகுகள் மிக உயர்ந்த முக்கியத்துவத்தைப் பெறுகின்றன. கடற்கரையோர வாழ்க்கை என்பது தனித்துவம் மிக்கது. நெய்தல் நிலப் பண்புகளைக் குறிப்பாக தமிழகத்தின் கடற்கரையோர வரலாற்று நிகழ்வுகளை ஆராய வேண்டும் என்ற தீவிரம் என் மனதிற்குள் ஆழ வேரூன்றி கிளைவிட்டு விரிய ஆரம்பித்தது.

வரலாற்று ஆர்வலர்களால் இன்று அதிகம் பேசப்படாத, அறியப்படாத தமிழகத்தின் நெய்தல் நிலப் பகுதியை அறிந்துகொள்ளவேண்டும் என்ற சிந்தனை மனதிற்குள் ஓடிக் கொண்டிருக்கும் போது திடீரென்று ஒரு பேரலை நாங்கள் சென்ற படகினைத் தாக்கியது. படகின் முன் பகுதியில் இருந்த தம்பி ஜானகிராஜா எழும்பி படகை நனைத்த அலையினால் முழுவதுமாக நனைந்து விட, படகில் இருந்த நாங்களும் அதிர்ந்து போனோம்.










தொடரும்
சுபா

Monday, February 17, 2020

ஊர் சுற்றிப்புராணம் - கடலூரில் ஒரு நாள் -2


23.1.2020

ஊர்சுற்றிப் புராணத்தில் கடலூருக்குச் சென்ற செய்திகளை​ப்​ பத்து நாட்களுக்கு முன்பு பகிர்ந்திருந்தேன். இடையில் அதனைத் தொடர முடியவில்லை..

தமிழகத்திலிருந்து ஜெர்மனிக்குத் திரும்பி விட்டாலும், கதை பாதியிலேயே நிற்கிறதே என்று அவ்வப்போது நினைத்துப் பார்த்தாலும், இப்போதுதான் கதையைத் தொடர ​எனக்கு ​நேரம் கிடைத்தது.
வாருங்கள் ... படகுத்துறையில் என்ன நடந்தது என்பதைக் கொஞ்சம் சொல்கிறேன்.

ராபர்ட் கிளைவ் தங்கியிருந்து ஆட்சிப் பொறுப்பைக் கவனித்துக் கொண்டிருந்த அன்றைய முக்கியத்துவம் பெற்ற அந்தக் கட்டடம் இன்று சிதிலமடைந்த நிலையில் இருக்கின்றது. படிகளில் ஏறி உள்ளே என்ன தெரிகிறது என்று உடைந்த ஜன்னல்கள் வழியாக நானும் ஏனைய தோழர்களும் கவனிக்கத் தொடங்கினோம். உள்ளே ​உள்ளூர் மக்கள் ​சில​ர் தங்கியிருக்கின்றனர் என்பதற்கு​ச்​ சான்றாகப் பாய் படுக்கை​கள்​ ஆங்காங்கே தென்பட்டன.  இந்த பெரிய ​பழம் மாளிகையில் அன்று ஆங்கிலேயர்கள் உள்ளூர் மக்களைத் தங்க அனுமதித்திருக்க மாட்டார்கள்​.​ ஆனால் இன்றோ நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. உள்ளூர் மக்கள் தற்காலிகமாக இங்கே தங்குகிறார்கள் என்ப​தை ​அப்போதைய ​சூழல் வெளிப்படுத்தியது.

வெளியே சில பெண்மணிகள் பாய் போன்ற ஒரு பெரிய துணியை விரித்து அதில் ​கடலிலிருந்து பிடித்து வந்திருந்த ​கடல் உணவு வகைகளை எடுத்து​ப்​ போட்டுக் காய வைத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு பெண்மணி கையில் வலை நிறையச் சிப்பிகளை​க்​ கடலிலிருந்து எடுத்துக் கொண்டு வருவதைப் பார்த்தோம். அவரிடம் போய் அதை அருகாமையில் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் கண்களும் கவனமும் எனக்குப் படகுத்துறை நோக்கியே இருந்தன.

படகுத்துறை அருகில் சென்று அங்கிருந்து ரோபர்ட் ​க்ளைஃப் தங்கியிருந்த அந்த​ப்​ பாழடைந்த மாளிகையை​ப்​ பல கோணங்களில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தேன். சட்டென்று ஒரு ஆணின் குரல். ​"​அம்மா பார்த்து நடங்க.. விழுந்திட போறீங்க..​"​ என.. ​கரிசனம் நிறைந்த குரல்.

கடலுக்குச் செல்லவிருக்கும் படகுகளை வர்ணம் பூசி அழகு படுத்திக் கொண்டிருந்தார்கள் ஒரு சிலர். ஏனையோர் இளைஞர்கள் ஒருவர் மட்டும் 50 வயது மதிக்கத்தக்கவர். அவரிடம் பேச்சுக் கொடுத்தேன். ​"​இந்த​ப்​ படகுகளை​ப்​ பற்றிச் சொல்லுங்கள்​,​ எங்கே செல்கின்றன​"​ என விசாரிக்க​த்​ தொடங்கினேன். அவரது வேலையை ​  எனது பேச்​சு தடை செய்கின்ற​து என்ற எந்த கோபமும் ​இல்லாமல் ​​புன்னகையோடு வந்து விளக்க ஆரம்பித்தார்.

ஒவ்வொரு படகும் அழகாக​த்​ தூய்மை செய்யப்பட்டு வர்ணம் பூசப்பட்டு அவை இந்த சோழமண்டல கடற்கரை வெளிப்பகுதியில் வடக்கு நோக்கிச் சென்று அங்கு எல்லோரும் ஒன்றுகூடி ஒரு மிகப்பெரிய மீன் பிடிக்கும் கப்பலில் பயணம் செல்வார்களாம். தயாரிப்பு வேலை என்பது சாதாரணமல்ல​.​ மிகுந்த பொருட்செலவு அதில் உள்ளது என்று விரிவாகத் தகவல்களை வழங்கினார். ஒருமுறை கடலுக்குள் செல்லும் மீன்பிடிக்கும் கப்பலில் ஏறக்குறைய ரூபாய் ​6 லட்சத்திற்கான பொருட்கள் இருக்குமென்றும்​,​ மீன் பிடித்துக் கொண்டு வரும் பொழுது அது ஏறக்குறைய 15 லட்சம் ரூபாய் பெறுமானமுள்ள சரக்குகளாக இருந்தால்தான் அவர்களுக்கு அதில் லாபம் காண முடியும் என்றும் விளக்கினார். இவ்வளவு பணச்செலவு ஆகின்ற ​வேலையாக இருக்கின்றதே ​இந்த​ மீன்பிடித்தொழில், என்று நானும் தோழர்களும் பேசிக்கொண்டோம்.​ என்னுடன் வந்த தோழர்கள் அவர்களுக்குத் தெரிந்த தகவல்களையும் கூடுதலாக எனக்கு விளக்கினர்.​ ​​மிகப்பெரிய பொருட்செலவும்​,​ அதேவேளை வருமானமும் தரக்கூடிய ஒரு தொழில் இது என்று நினைத்தபோது இந்த​ப்​ புதிய செய்திகளை அறிந்து கொண்ட மகிழ்ச்சி மனதிலிருந்தது.
 ​
கடற்கரையோர மீனவர்களது வாழ்க்கை என்பது ​நகர்ப்புற மக்களுக்குத் தூரமான விசயமாகவே இருக்கின்றது. ​ சந்தையில் மீன் வாங்கி சுவையாக மணக்க மணக்கக் குழம்பு வைத்துச் சாப்பிட விரும்பும் நாம் மீன்களைப் பிடிக்கக் கடலுக்குச் செல்லும் மீனவ நண்பர்களின் வாழ்க்கையை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லையே என நினைத்துக் கொண்டேன். நெய்தல் நில வாழ்க்கை ஆராயப்பட வேண்டியது​!​ ​

படகுகளின் பக்கத்தில் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்பி அங்குச் சென்றேன். தோ​ழி ரேச்சல் ​​"படகு சவாரி செல்கிறீர்களா​"​ என்று ஆவலைத் தூண்டும் வகையில் கேட்டார். இப்படி யாரும் சொல்லி விட்டால் போதுமே​...​ எனக்கு கண்டிப்பாகப் போக வேண்டும் என்று மனதில் ஆசை முளைத்து விடும். ​"​இந்த​ப்​ படகில் செல்ல முடியுமா? நீங்கள் வேலையாக இருக்கிறீர்களே​" என்று அந்த மீனவ நண்பரைக் கேட்டேன்​.

எந்த​த்​ தயக்கமும் இல்லை. ​"​வாங்க அழைத்துக்கொண்டு செல்கிறேன்​",​ என்று சொல்லி எங்களைப் படகில் வரவேற்று ஏற்றுக் கொண்டார். சற்றும் எதிர்பார்க்கவில்லை இந்த அன்பான அழைப்பை. என்னுடன் தோழி ரேச்சல், தம்பி ஜானகிராஜன் உடன்வர அந்த மீனவ நண்ப​ர் தனது உறவினர் ஒரு இளைஞரையும் அழைத்துக்கொண்டு நாங்கள் ​ஐவராக படகுப் பயணத்தைத் தொடங்கினோம்.

​படகின் எந்திரத்தை அந்த இளைஞர் ஆரம்பிக்க, படகு மெல்ல நகரத் தொடங்கியது. ​தமிழ் சினிமாக்களில் வருகின்ற எம்ஜிஆர் பாடல் ​என் ​மனதில் ஒலிக்கத் தொடங்கியது.

ஓடும் மேகங்களே
ஒருசொல் கேளீரோ..