இன்று புத்தகத்தை வாசிப்பதிலும் ஓய்வெடுப்பதிலும் சில மணி நேரங்கள் கழிந்தன. நாங்கள் வாடகைக்கு எடுத்திருந்த வாகனம் கொஞ்சம் பிரச்சனை செய்ததால் அதனை மாற்ற வேண்டியிருந்தது. மரபெயாவில் இந்த வாகன நிறுவனத்துக்குச் சொந்தமான ஒரு கிளை இருந்ததால் அங்கு செல்வது என முடிவு செய்து மதியம் பயணித்தோம்.
மரபெயா எஸ்டபோனாவிலிருந்து ஏறக்குறைய 16 கிமீ தூரத்தில் உள்ள மற்றொரு கடற்கரை நகரம். புவஞ்ஞிரோலாவை விட மிக நேர்த்தியாக இந்நகரம் உள்ளது என்றே சொல்லலாம். சுற்றுப் பயனிகளை மையமாக வைத்து வர்த்தகங்கள் இயங்குகின்றன. பொருட்களின் விலையும் இங்கு சற்று அதிகம் என்றே தோன்றுகின்றது. அதோடு இங்கு சவூதிய அராபிய ஷேக்குகள் பலர் தங்கள் விடுமுறை இல்லங்களை வைத்துள்ளனராம். அதிகமாக இந்த நகரில் பயணிக்காவிட்டாலும் மதிய உணவை முடித்து வாகனத்தையும் மாற்றிக் கொண்டு மீண்டும் எங்கள் தங்கும் விடுதிக்குத் திரும்பினோம். இரண்டு நாட்களுக்குப் பிறகு மீண்டும் மரபெயாவிற்கு மாலையில் வந்திருந்தோம். ப்ளமின்கோ எனும் நாட்டியத்தைக் கண்டு ரசிக்க.
ப்ளமின்கோ நாட்டியம் மனதைக் கொள்ளை கொள்ளும் ஒரு நாட்டியம். ஏழிலிருந்து எட்டு பேர் கொண்ட குழுவினர். அதில் நான்கு நடனக்காரர்கள்; 4 இசைக்கலைஞர்கள் இடம் பெற்றிருக்கின்றனர்.
கால் பாதங்களை இசைக்கேற்ப தரையில் தட்டி ஆடுவதே இதன் அடிப்படை. அழகிய பெண்களும் ஆண்களும். நளினமான உடல் கட்டுடன் நேர்த்தியான உடையணிந்து இந்த நடனத்தை ஆடுகின்றனர். ஒவ்வொரு முறை ஆடும் போதும் அவர்கள் தங்கள் மனதில் தோன்றிய வகையில் ஆடுகின்றனர். இசைக் கலைஞர் பாடும் இசையில் இலயித்து தங்களை மறந்து இவர்கள் ஆடுவது நன்றாகத் தெரிகின்றது.
நாங்கள் சென்ற இந்த நாட்டிய நிகழ்ச்சி ஒரு குடிசைத் தொழில் போன்ற அமைப்பில் நடத்தப்பட்டு வரும் ஒரு இடம். வருகையாளர்கள் அமர சிறிய நாற்காலி தருகின்றனர். அருந்துவதற்கு பானமும் வாங்கிக் கொள்ளலாம். 90 நிமிட நாட்டியத்தை நம்மை மறந்து பார்த்து ரசிக்கலாம். ஸ்பெயின் அதிலும் அண்டாலூசிய செல்பவர்கள் ஒரு முறை ப்ளாமின்கோ நடனத்தை பார்த்தே ஆக வேண்டும். விக்கிபீடியாவில் ப்ளமென்கோ பற்றி அறிய http://en.wikipedia.org/wiki/Flamenco.
ப்ளமென்கோ நாட்டியம் ஆடும் பெண்கள் அணியும் ஆடைகள் மிக அழகானவை. உதாரணத்திற்கு சில படங்கள். இவை புவஞ்ஜிரோலா தெரு கடைகளில் எடுக்கப்பட்ட படங்கள்.
No comments:
Post a Comment