Friday, November 6, 2009

மலாகா(ஸ்பெயின்) சுற்றுலா - செப்ட்-அக்டோபர் 2009 - 5

4ம் நாள்: கஸாரஸ்







கஸாரஸ் எங்கள் தங்கும் விடுதியிலிருந்து (எஸ்டாபோனாவிலிருந்து) வடக்கு நோக்கி ஏறக்குறைய 30 நிமிட பயணத்தில் அமைந்துள்ள ஒரு சற்று மலைப்பாங்கான நகரம். இந்த நகரமும் வெள்ளை கிராமங்களுக்குப் பிரசித்தி பெற்ற ஒன்று.







இந்த வெள்ளை கிராமத்தில் வீடுகளுக்கிடையே நடப்பது மிக சுவாரசியமான ஒரு அனுபவம். வாகனத்தை ஓரிடத்தில் வைத்து விட்டு நடக்க ஆரம்பித்தோம். வீடுகளைச் சுற்றி படிகள். படிகளில் அடுத்தடுத்து இறங்கி கீழே சென்றால் சிறிய நகரம். அங்கிருந்து மேலும் படிகளில் சுற்றி வளைந்து நடந்து மேலேறினால் ஒரு பழம் கோட்டை. இந்த கோட்டை 12ம் நூற்றாண்டில் ரோமானியர்கள் ஆட்சியின்போது கட்டப்பட்டது. இப்போது கோட்டையின் சிதிலமடைந்த பகுதியே பிரமாண்டமாக தூரத்திலிருந்து பார்த்தாலும் காணும் வகையில் அமைந்துள்ளது.







இந்த கோட்டையின் அருகில் ஒரு 12ம் நூற்றாண்டு தேவாலயமும் உள்ளது. இதன் பழைய மண்டபத்தை மாற்றி புதிய தேவாலயம் இப்போது அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோட்டையின் தனிச் சிறப்பு என்னவென்றால் இங்கிருந்து பார்த்தால் கீழுள்ள மலைத்தொடர்கள், கிப்ரால்டா, மற்றும் ஆப்பிரக்க கண்டத்தின் உச்சி வரை ஒருவர் காணலாம். முன்னர் இது தற்காப்புக்கு மிக முக்கியமன ஒரு பகுதியாக இருந்திருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.




இந்த நகரில் எங்களை மிகக் கவர்ந்த மற்றொரு விஷயம் இங்கு இக்கோட்டையை ஒட்டி அமைந்திருக்கும் புதைகுழிகள். ஜெர்மனியில் இடுகாடு (cemetry) மிக அழகாக ஒரு பூந்தோட்டம் போல பராமரிக்கப்படுவதைப் பார்த்திருக்கிறேன். பல முறை அங்கு நடப்பதற்காகச் சென்றிருக்கிறோம். இங்கு மிக வித்தியாமசமாக, இந்த வெள்ளை கிராமத்து வீடுகள் போலவே அடுக்கடுக்காக வெள்ளைச் சதுரங்கள்.







ஒருவரது பூதவுடலைத் தாங்கிய பெட்டியை இந்த சதுரங்களுக்குள் வைத்து மூடி வைத்து விடுகின்றனர். ஒவ்வொரு சதுர அறைக்கும் ஒரு எண்; தங்கும் விடுதி எண் போல. அதன் முகப்பில் இறந்தவரின் பெயர் திகதி, சில குறிப்புக்கள் இப்படிப் சில செய்திகள். அதோடு பூக்களினால் அலங்கரித்து இந்த இடத்தை மிக அழகாக பராமரித்தும் வருகின்றனர்.







இது அதிசயமான ஆனால் மிக அழகான ஒரு இடம். இந்த நகரத்திற்கு வருபவர்கள் கட்டாயம் இங்கு வந்து நேரில் காண வேண்டிய ஒன்று என்றும் சொல்லலாம்.







ஆலீவ் எண்ணெயில் சமைக்கப்பட்ட பதார்த்தம், ஆலீவ் விதைகள் சாலாட்டுடன் உணவில் சேர்த்து உண்பது என்பது இங்குள்ள சமையல் கலையாக இருக்கின்றது. இத்தாலி, கிரேக்கம் போன்று ஆலீவ் எண்ணை இங்கு சமையலில் மிக முக்கிய அங்கம் வகிக்கின்றது. ஒரு வகையில் ஆலீவ் எண்ணையில் சமைத்து பழகியவர்களுக்கு வேறு மாற்று எண்ணையை சமையலில் உபயோகிப்பதில் நிச்சயமாக விருப்பம் இருக்காது. எனக்கும் இது பொருந்தும். ஆலீவ் எண்ணெய் உணவு பதார்த்தங்களோடு கலந்து சிறந்த சுவையை வழங்கக்கூடியது. இந்த நகரில் ஆங்காங்கே சாலைகளில் வீடுகளில் ஆலீவ் மரங்கள் உள்ளன. பச்சை மற்றும் பழுத்த கரும் ஆலீவ்களை மரத்தில் பார்க்க முடிகின்றது.



No comments:

Post a Comment