Sunday, July 29, 2012

லா பல்மாவில் நடையாக நடந்த கதை - 12

கண்ணாடியில் கவின் பொருட்கள்

முந்தைய பதிவில் அர்குவால் நகரின் ஞாயிற்றுக் கிழமை சந்தைப் பற்றிச் சொல்லி அதோடு அங்கிருக்கும் கண்ணாடியினைக் கொண்டு  கைவினைப் பொருட்கள் செய்யும் ஒரு கலைக்கூடத்தைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தேன். அங்கே ஒரு விளக்கு உருவாவதை ஆரம்பம் முதல் இறுதி வரைப் பார்த்து என் கேமராவில் பதிவு செய்து வந்தேன். அவற்றை இங்கே படக்காட்சிகளாக இணைத்திருக்கின்றேன். உங்கள் ரசனைக்காக..!

கலைக்கூடத்தின் உள்ளே நுழையும் போது  வாசலில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ள பொருட்கள்


விதம் விதமான வர்ணங்களில் கண்ணாடிக் கற்கள்


வேலை ஆரம்பமாகின்றது

கண்ணாடித் துகள்களை சூடாக்கி பந்து போன்ற உருவத்தில் வைத்து மிக அதிகசூட்டிலான அவனுக்குள் வைத்து பந்து போன்ற வடிவத்தில்  முதலில் அமைக்கின்றார்.


நெருப்பு எறிந்து கொண்டிருக்கும் அவன். 


வட்ட வடிவத்தைப் பெறுவதற்காக ...

கவனமாக கையாளப்படும் முறை..


ஆரம்ப நிலையில் உருவான சூடான கண்ணாடிப் பந்தின் மேல் சிறிதாக்கப்பட்ட எரிமலைக் கற்களை சேர்க்கின்றார்.


கண்ணாடிக் கற்கள்


விதம விதமான வர்ணங்களில் வர்ணம் சேர்க்கபப்ட்ட எரிமலைக் கற்கள்

அவனுக்குள் வைத்து கற்களை ஒன்றாக இணைக்கின்றார்

வடிவத்தை சரி செய்கின்றார்.

காற்றினை உள்ளே ஊதி அந்த கண்ணாடிப் பந்தை விரிவடையச் செய்து பெரிதாக்குகின்றார். இதனை பலமுறை செய்யும் போதே இந்தப் வட்ட வடிவம் கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிதாக வடிவமெடுக்கின்றது.

மீண்டும் காற்றினை உள்ளே ஊதுகின்றார்.


கொஞ்சம் விரிவடைந்த கண்ணாடிப் பந்தை குளிர்ச்சியான நீரில் நனைக்கின்றார்.

மீண்டும் அவனுக்குள் வைத்து சூடாக்குகின்றார்.

நெருப்பு நிலா :-)

மீண்டும் மீண்டும் அதே முறையில் மேலும் அளவினை விரிவாக்குகின்றார்

இப்போது மேலும் விரிவடைந்த நிலையில்

எரிமலைக் கற்களும் கண்ணாடித் தூள்களும் இணைந்த வகையில்..

விளக்கு உருவாகின்றது

மீண்டும் அவனுக்குள் வைக்கின்றார்

சூடான விளக்கு


சூடாக இருக்கும் போதே ஆரம்பப்பகுதியைக் கத்தரிக்கோலால் வெட்டிவிடுகின்றார்.

விளக்கு உருவாகி விட்டது

கூர்மையான கத்தியால் சூடாக இருக்கும் போதே வெட்டி எடுத்து தனியாக வைத்து விடுகின்றார்.

ஏறக்குறைய அரை மணி நேரத்தில் ஒரு விளக்கு உருவாகி விடுகின்றது. இதே போல பொம்மைகள், தட்டு பாத்திரங்கள், கிண்ணங்கள் எனப பல தினம் தினம் இங்கே உருவாகிக் கொண்டிருக்கின்றன.


அன்புடன்
சுபா

Friday, July 6, 2012

லா பல்மாவில் நடையாக நடந்த கதை - 11



அர்குவால் என்னும் இயற்கை நகரம்

அர்குவால் (Argual) நகரம் லோஸ் லியோனாஸுக்கு மிக அருகில் இருக்கும் மிகப் பழமையான ஒரு சிறு நகரம். இங்கு வீடுகளும் சிறு சிறு கட்டிடங்களும் பொருளாதார வளர்ச்சி காணாத நிலையை எடுத்துக் காட்டும் வகையில் இருப்பதைச் சுற்றுலா பயணிகள் காணலாம். எங்கும் வாழைத் தோட்டங்கள் நிறைந்து கரும்பச்சை கம்பளத்தை விரித்தார் போன்ற தோற்றத்தைத் தரும் ஒரு மலைப்பிரதேசத்தின் கீழ்ப்பகுதியில் இந்த சிறு நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தின் சிறப்பாக சுற்றுலா பயணக் கையேடு குறிப்பிடுவதும் இந்த வளர்ச்சி காணாத பழமை வாய்ந்த வாழ்க்கை நிலையைப் பற்றித்தான். அர்குவால் நகர மையத்தில் கூடும் ஞாயிற்றுக் கிழமை சந்தை குறிப்பிடத்தக்க விஷேஷம் பொறுந்தியதாகவும் எங்களிடம் இருந்த சுற்றுலா கையேடு குறிப்பிடுவதால் இப்பகுதிக்கு அங்கிருந்த ஒரு ஞாயிற்றுக் கிழமை சென்றிருந்தோம்.


Inline image 1
வாழைத் தோட்டங்கள் சூழ காட்சியளிக்கும் அர்குவால் நகரம்

இந்த ஞாயிற்றுக் கிழமை சந்தையின் விஷேசம் இங்கு காணப்படும் வியாபாரிகளின் தோற்றம். அதற்கடுத்து அவர்கள் விற்பனை செய்யும் அலங்காரப் பொருட்கள். இயற்கை சாதனங்களைக் கோண்டு தயாரிக்கப்படும் விதம் விதமான அலங்காரப் பொருட்களை இம்மக்கள் விற்பனைக்கு வைத்து விற்கின்றனர். குறிப்பாக எரிமலை குழம்பிலிருந்து வெடித்துச் சிதறிய கருங்கற்களைக் கொண்டு செய்யப்பட்ட ஜோடியான காதணி, கழுத்துச் சங்கிலி, மோதிரம் செட், எரிமலைக் கற்களைக் கொண்டு செய்யப்பட்ட கை கால் வளையல்கள், பனை மரத்தின் பழம்,  ஆலீவ் பழத்தின் கொட்டை ஆகியவற்றைக் கொண்டு செய்யப்படும் ஆபரணங்கள் என்பவை இதில் அடங்கும்.

Inline image 2
ஹூலா ஹூப் ஆடும் மனிதர், சந்தையிலே மஸாஞ் நிலையம் இப்படி பல வேடிக்கையான மக்களும் காட்சிகளும்..


அது மட்டுமன்றி அலுவேரா (Aloe Vera) இலைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் சோப்பு, முகத்திற்கான க்ரீம்,போன்ற அழகு சாதனப் பொருட்கள், பழங்களினால் தயாரிக்கப்பட்ட ஜேம் வகைகள், வசந்த காலத்து மற்றும் இலையுதிர் காலத்து மலர்களின் சுவை கொண்ட தேன் வகைகள், உலர்ந்த பழங்கள், மோஹோ சட்டினி ஆகியவை இங்கே கிடைக்கின்றன. அன்று மட்டும் சாலை நிறைந்த வாகனங்கள்!


Inline image 3
அலுவேரா கொண்டு தயாரிக்கப்பட்ட பொருட்கள்


இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டு உள்ளே சென்றால் அங்கே அதிசயமாக கண்ணாடி பொருட்கள் செய்யும் ஒரு கலைக்கூடம் தென்பட்டது. ஹாலந்திலிருந்து வந்து இங்கு வாழும் டோமினிக் என்பர் நடத்தும் ஒரு கண்ணாடி கலைக்கூடம். பூனை, ஆமை, குறுவி பொம்மைகளின் சிறு கண்ணாடி தயாரிப்புக்கள், வீட்டுக்கு பயன்படுத்தும் ஜாடிகள், தொங்கும் விளக்குகள், உணவு பரிமாற தட்டுக்கள், கோப்பைகள் என பல விதமான பொருட்களை கண்ணாடிகளினால் இவரது கூடத்தில் தயாரித்து விற்பனைக்கு வைத்திருக்கின்றார். சரளமாக ஜெர்மன் மொழி பேசுகின்றார். ஸ்பேனிஷ் மொழியும் ஆங்கிலமும் பேசுகின்றார். 


Inline image 4
அலங்காரப் பொருட்கள்.. நானும் கருப்பும் சிவப்பும் சேர்ந்தஅந்த காதணிகளையும் வளையல்களையும் வாங்கிக் கொண்டேன்.

இங்கே சுற்றுப் பயணிகளை மிகக் கவர்வது அவர் நேரடியாக செய்து காட்டும் கண்ணாடி பொருட்கள் உருவாக்கும் ஷோ. நான் அங்கிருந்த போது ஒரு முழு குருவி பொம்மையைச் செய்து முடித்து பின்னர் வீட்டில் பயன்படுத்தக் கூடிய தொங்கும் விளக்கு ஒன்றையும் நேரடியாக உருவாக்கிக் காட்டினார். வெள்ளை கண்ணாடித் துகள்கள் 20 நிமிடத்தில் ஒரு மஞ்சள் நிறத்தில் பல வர்ணங்கள் சேர்த்த ஒரு விளக்காக மாற்றம் காண்டது அதிசம் அல்லவா? இதனை விளக்கும் படக்காட்சி அடுத்த பதிவில்.

தொடரும்...
சுபா

Tuesday, July 3, 2012

லா பல்மாவில் நடையாக நடந்த கதை - 10

சாண்டா க்ரூஸ் - மனதில் நிற்கும் சில காட்சிகள்


சாண்டா க்ரூஸ் துறைமுகம் - நீல வானும் நீல கடற்கரையும்...

பெட்டூனியா மலர்களும் வேறு சில மலர்களைத் தாங்கிய பூச்செடிகளும்  வீடுகளை அலங்கரிக்கின்றன


சாலையோரத்து வீடுகள், பால்கனியில் தொங்கும் பூக்கள் - இவை சாலையை சோலையாக்குகின்றன..


சுபா - சண்டா க்ரூஸ் நகர மைய சாலையில்.. சியாஸ்டா நேரத்தின் போது. சாலையே வெறிச்சோடிப் பொய் விடுகின்றது சியாஸ்டா நேரத்தில்.. மக்கள் மதிய ஓய்வு எடுக்கும் போது கடைகள் 2 மணி நேரங்களுக்கு மூடப்படுவதால் ஆட்கள் நடமாட்டம் சாலையில் மிகக் குறைவே.. 

உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன. சாலையோரம் அமர்ந்து மக்கள் உணவருந்திக் கொண்டும் ஓய்வெடுத்துக் கொண்டும் இருக்கும் காட்சி





ஒரு உணவகம்.. கனேரித் தீவின் கட்டிடக் கலையைப் பிரதிபலிப்பதாக


சுபா - சாண்டா க்ரூஸில்


ஒரு வீட்டின் வாசல் பகுதி. கதவில் மாட்டப்பட்டிருக்கும் மாதா படத்தின் காட்சி ஆசிய நாடுகளில் மக்கள் வீட்டு வாசலில் சுவாமிப் படங்களை மாட்டி தொங்க விட்டிருப்பதைப் போன்றே அமைந்துள்ளது.


சாண்டா க்ரூஸ் - நகரின் மையப் பகுதி.. கட்டிடங்கள் சாலை ஓரத்தில்..அவற்றின் அமைப்பு..


எல் சல்வடோர் தேவாலயம்


எல் சல்வடோர் தேலாயத்திற்கு முன் புறம் மலரால் அலங்கரிக்கப்பட்ட ஒரு சிலுவை (ஒரு புறம் முழுதும் மஞ்சள் நிறப் பூக்கள்)

அதே சிலுவையின் மறு புறம் முழுதும் சிவப்பு நிற மலர்களால் அலங்காரம்..

தொடரும்..

சுபா













Sunday, July 1, 2012

லா பல்மாவில் நடையாக நடந்த கதை - 9


சாண்டா க்ரூஸ்



லா பல்மா தீவின் தலைநகரம் சாண்டா க்ரூஸ். இத்தீவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது இந்நகரம். கடற்கரை துறைமுக நகரம் இது. மே மாதம் 3ம் நாள் 1493ம் ஆண்டில் Alonso Fernández de Lugo இத்தீவைக் கைப்பற்றி உருவாக்கிய நகரம். ஏனைய கனேரி தீவிகளைப் போலவே இத்தீவும் கடற்கொள்ளையற்களின் தொல்லைகளுக்கு உட்படுத்தப்பட்ட ஒரு நகரம். அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்குமிடையிலான வர்த்தகப் போக்குவரத்துக்கு முக்கியமாக விளங்கிய, விளங்கிவரும் ஒரு துறைமுக நகரம் இது.



வரலாற்று ஆய்வாளர்களின் கருத்துப்படி இது மிகப்பழமையான ஒரு நகரமாகக் கருதப்படுகின்றது. பழங்குடி மக்கள் வாழ்ந்தமைக்கான தடயங்களையும் இப்பகுதியில் தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.

1553ம் ஆண்டு ஜூலை 21ம் நாள் இந்தத் தீவை 700 பேர் கொண்ட ப்ரென்ச் படை ஆக்கிரிமித்தது. 9 நாள் நடைபெற்ற போரில் இந்த நகரத்தையே முற்றிலும் அழித்துச் சென்றது இப்படை. இந்த அழிவுக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட நகர் தான் இப்போது உள்ள சாண்டா க்ரூஸ். அதற்குப் பின்னர் இந்த நகரம் ஒரு துறைமுக நகரமாக விரிவாக வளர்ச்சியடைந்ததோடு அக்கால கட்டத்தில் உலகிலேயே மூன்றாவது மிக முக்கிய துறைமுகமாக விளங்கியது என்பது வியக்க வைக்கின்றது.

நாங்கள் லா பல்மாவில் இருந்த நாட்களில் மூன்று முறை சாண்டா க்ரூஸ் சென்று வந்தோம். ஒரு தலைநகருக்குரிய எல்லா அம்சாங்களும் உள்ள ஒரு சிறு நகரம் இது. பொருட்காட்சி சாலைகள், நகர மையம், டவுன் ஹால், கத்தோலிக்க தேவாலயங்கள், வரலாற்று சின்னமாகத் திகழும் கட்டிடங்கள், தற்கால வாழ்க்கை முறைக்குத் தேவையான நவீன அங்காடிக் கடைகள், உணவகங்கள், சாலையோர இசைக் கலைஞர்கள், வரலாற்றில் இடம் பெறுபவர்களின் சிலைகள் என்று பார்க்க நிறைய அம்சங்கள் நிறைந்த ஒரு நகரம் இது.



சாண்டா க்ரூஸ் நகரத்தின் வீடுகளின் கட்டிட அமைப்பு ஒரே வகையாக அமைந்திருப்பதையும் முன்பக்கத்தில் பால்கனி வைத்து அதில் பூக்கள் கொண்டு அலங்கரித்திருப்பதையும் நகர் முழுதும் காணலாம். இவ்வகை கட்டிடக் கலை இங்கு ப்ரத்தியேகமாக அமைந்துள்ளதோடு இது சுற்றுலா பயணிகளைக் கவரும் ஒரு அம்சமாகவும் திகழ்கிறது. என்னைப் போலவே பலர் கேமராவின் லென்ஸைத் திருப்பி மாற்றி படம் எடுத்துக் கொண்டு செல்வதைப் பார்த்துக் கொண்டே நானும் பல படங்களை எடுத்துக் கொண்டேன்.



லா பல்மா தீவு முழுதுமே மிகத் தூய்மையாக, சாலைகளில் எங்கனுமே குப்பைகளைப் பார்க்க முடியாத படி நேர்த்தியாகப் பாதுகாக்கப்படுகின்றது. தலைநகரத்திலும் இதே நிலைதான். சாலைகள், கடைத்தெருக்கள், துறைமுகப்பகுதி, உணவகத்தின் சுற்றுச் சூழல் எல்லாமே மிகத் தூய்மையாக அமைந்து மிக ரம்மியமான அனுபவத்தை உருவாக்குவதாக அமைந்துள்ளது.

சாண்டா க்ரூஸ் நகர மத்தியில் வரலாற்றுச் சின்னங்களும் கட்டிடங்களும் அமைந்துள்ள பகுதியில் தான் 16, 17ம் நூற்றாண்டு பழமை வாய்ந்த கட்டிடங்கள் பல இருக்கின்றன. கனேரி தீவுகளுக்கே உறிய கட்டிடக் கலை அமைப்பை காட்டும் அழகான கட்டிடங்கள் இவை. பொதுவாகவே வெள்ளை நிறத்திலும் இடைக்கிடையே எரிமலைக் கற்களை இணைத்த கரும் பகுதிகளும் இணைந்ததாக அமைவது கனேரித் தீவுகளின் கட்டிடக் கலை. இந்த வகை கட்டிடங்கள் சூழ்ந்ததாக இப்பகுதியில் பல கட்டிடங்கள், தேவாலயங்கள் ஆகியவை இருக்கின்றன.



இப்பகுதியில் தான் டவுன் ஹால் கட்டிடமும் உள்ளது. இக்கட்டிடம் 16ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. அரசர் இரண்டாம் பிலிப் அவர்களின் காலத்தைச் சார்ந்தது. டவுன் ஹால் கட்டிடத்தின் எதிர் புறத்தில் எல் சல்வடோர் தேவாலயம் இருக்கின்றது. கத்தோலிக்க கிறிஸ்துவ சமய வழிபாடுகள் இன்றளவும் இத்தேவாலயத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

லா பல்மா செல்பவர்கள் சாண்டா க்ரூஸ் நகரைச் சுற்றிப்பார்ப்பதற்காக ஒரு நாள் ஒதுக்கிக் கொள்ளலாம். நகரின் அருகாமையிலேயே அமைந்துள்ள மலைப்பகுதிக்கு நடைப்பயணம் செய்வதற்கும் வாய்ப்புக்கள் உள்ளதால் நகரைச் சுற்றிப் பார்த்து நடைப்பயணமும் மே|ற்கொண்டு வரலாம். சாண்டா க்ரூஸில் தான் இத்தீவின் விமான நிலையமும் அமைந்துள்ளது. துறைமுகம், விமான நிலையம், வர்த்தகம், கலை பண்பாட்டு விஷயங்கள் என பல வகையில் முக்கியத்துவம் கொண்டதாகத் திகழ்கின்றது சாண்டா க்ரூஸ்.

தொடரும்..

சுபா