Friday, July 6, 2012

லா பல்மாவில் நடையாக நடந்த கதை - 11



அர்குவால் என்னும் இயற்கை நகரம்

அர்குவால் (Argual) நகரம் லோஸ் லியோனாஸுக்கு மிக அருகில் இருக்கும் மிகப் பழமையான ஒரு சிறு நகரம். இங்கு வீடுகளும் சிறு சிறு கட்டிடங்களும் பொருளாதார வளர்ச்சி காணாத நிலையை எடுத்துக் காட்டும் வகையில் இருப்பதைச் சுற்றுலா பயணிகள் காணலாம். எங்கும் வாழைத் தோட்டங்கள் நிறைந்து கரும்பச்சை கம்பளத்தை விரித்தார் போன்ற தோற்றத்தைத் தரும் ஒரு மலைப்பிரதேசத்தின் கீழ்ப்பகுதியில் இந்த சிறு நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தின் சிறப்பாக சுற்றுலா பயணக் கையேடு குறிப்பிடுவதும் இந்த வளர்ச்சி காணாத பழமை வாய்ந்த வாழ்க்கை நிலையைப் பற்றித்தான். அர்குவால் நகர மையத்தில் கூடும் ஞாயிற்றுக் கிழமை சந்தை குறிப்பிடத்தக்க விஷேஷம் பொறுந்தியதாகவும் எங்களிடம் இருந்த சுற்றுலா கையேடு குறிப்பிடுவதால் இப்பகுதிக்கு அங்கிருந்த ஒரு ஞாயிற்றுக் கிழமை சென்றிருந்தோம்.


Inline image 1
வாழைத் தோட்டங்கள் சூழ காட்சியளிக்கும் அர்குவால் நகரம்

இந்த ஞாயிற்றுக் கிழமை சந்தையின் விஷேசம் இங்கு காணப்படும் வியாபாரிகளின் தோற்றம். அதற்கடுத்து அவர்கள் விற்பனை செய்யும் அலங்காரப் பொருட்கள். இயற்கை சாதனங்களைக் கோண்டு தயாரிக்கப்படும் விதம் விதமான அலங்காரப் பொருட்களை இம்மக்கள் விற்பனைக்கு வைத்து விற்கின்றனர். குறிப்பாக எரிமலை குழம்பிலிருந்து வெடித்துச் சிதறிய கருங்கற்களைக் கொண்டு செய்யப்பட்ட ஜோடியான காதணி, கழுத்துச் சங்கிலி, மோதிரம் செட், எரிமலைக் கற்களைக் கொண்டு செய்யப்பட்ட கை கால் வளையல்கள், பனை மரத்தின் பழம்,  ஆலீவ் பழத்தின் கொட்டை ஆகியவற்றைக் கொண்டு செய்யப்படும் ஆபரணங்கள் என்பவை இதில் அடங்கும்.

Inline image 2
ஹூலா ஹூப் ஆடும் மனிதர், சந்தையிலே மஸாஞ் நிலையம் இப்படி பல வேடிக்கையான மக்களும் காட்சிகளும்..


அது மட்டுமன்றி அலுவேரா (Aloe Vera) இலைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் சோப்பு, முகத்திற்கான க்ரீம்,போன்ற அழகு சாதனப் பொருட்கள், பழங்களினால் தயாரிக்கப்பட்ட ஜேம் வகைகள், வசந்த காலத்து மற்றும் இலையுதிர் காலத்து மலர்களின் சுவை கொண்ட தேன் வகைகள், உலர்ந்த பழங்கள், மோஹோ சட்டினி ஆகியவை இங்கே கிடைக்கின்றன. அன்று மட்டும் சாலை நிறைந்த வாகனங்கள்!


Inline image 3
அலுவேரா கொண்டு தயாரிக்கப்பட்ட பொருட்கள்


இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டு உள்ளே சென்றால் அங்கே அதிசயமாக கண்ணாடி பொருட்கள் செய்யும் ஒரு கலைக்கூடம் தென்பட்டது. ஹாலந்திலிருந்து வந்து இங்கு வாழும் டோமினிக் என்பர் நடத்தும் ஒரு கண்ணாடி கலைக்கூடம். பூனை, ஆமை, குறுவி பொம்மைகளின் சிறு கண்ணாடி தயாரிப்புக்கள், வீட்டுக்கு பயன்படுத்தும் ஜாடிகள், தொங்கும் விளக்குகள், உணவு பரிமாற தட்டுக்கள், கோப்பைகள் என பல விதமான பொருட்களை கண்ணாடிகளினால் இவரது கூடத்தில் தயாரித்து விற்பனைக்கு வைத்திருக்கின்றார். சரளமாக ஜெர்மன் மொழி பேசுகின்றார். ஸ்பேனிஷ் மொழியும் ஆங்கிலமும் பேசுகின்றார். 


Inline image 4
அலங்காரப் பொருட்கள்.. நானும் கருப்பும் சிவப்பும் சேர்ந்தஅந்த காதணிகளையும் வளையல்களையும் வாங்கிக் கொண்டேன்.

இங்கே சுற்றுப் பயணிகளை மிகக் கவர்வது அவர் நேரடியாக செய்து காட்டும் கண்ணாடி பொருட்கள் உருவாக்கும் ஷோ. நான் அங்கிருந்த போது ஒரு முழு குருவி பொம்மையைச் செய்து முடித்து பின்னர் வீட்டில் பயன்படுத்தக் கூடிய தொங்கும் விளக்கு ஒன்றையும் நேரடியாக உருவாக்கிக் காட்டினார். வெள்ளை கண்ணாடித் துகள்கள் 20 நிமிடத்தில் ஒரு மஞ்சள் நிறத்தில் பல வர்ணங்கள் சேர்த்த ஒரு விளக்காக மாற்றம் காண்டது அதிசம் அல்லவா? இதனை விளக்கும் படக்காட்சி அடுத்த பதிவில்.

தொடரும்...
சுபா

No comments:

Post a Comment