டாக்டர் வள்ளியைப் பற்றி நான் காரைக்குடிக்குச் செல்லும் வரை அதிகமாக அறிந்திருக்கவில்லை. மின்தமிழில் காளைராசன் வழங்கும் சில பதிவுகளில் மட்டுமே ஓரளவிற்கு அவரைப் பற்றி நான் அறிந்து கொண்டிருந்தேன். அதனால் அவரது ஆர்வம் ஈடுபாடு போன்றவை பற்றிய அடிப்படை விஷயங்கள் ஏதும் அறியாமல் இருந்தேன். அவரை சென்று காணும் போது நிச்சயம் பல விஷயங்களைக் குறிப்பாக அவரது துறை, அவரது ஆய்வு அனுபவம், சில குறிப்பிடத்தக்க சாதனைகள் போன்றவற்றை அறிந்து கொள்ள வேண்டும் என்று எண்னியிருந்தேன்.
காலையில் வாகனத்தோடு வந்து சேர்ந்த அவரிடம் த.ம.அ பற்றி சொல்லிக் கொண்டே பேச ஆரம்பித்து நான் காரிலேயே பதிவு செய்து கொள்ளவா என்று கேட்டவுடன் என்னைப் போலவே ஆர்வத்துடன் சம்மதித்து பேசிக் கொண்டே வந்தார்கள். சில வேளைகளில் நாம் அவருக்கு ஓய்வு கொடுக்க வேண்டுமோ என்று எனக்குத் தோன்றும் பொழுது கேட்ட்டாலும் மறுத்து விட்டு ஆர்வத்துடன் தகவல்களை வழங்கிக் கொண்டே வந்தார்கள். பேட்டியில் மாத்திரமல்ல. எங்கள் பயண திட்டத்தை வளப்படுத்தும் வகையில் முழுதுமாக ஈடுபாட்டுடன் திட்டத்தை செப்பனிட உதவியதோடு நான் அங்கிருந்த மூன்று நாட்களும் என்னுடன் முழுமையாக இருந்தார்கள். நாங்கள் செல்லும் இடங்கள் எல்லாவற்றிற்கும்.. அது காடாக இருந்தாலும்.. பாறையாக இருந்தாலும் சிறு குன்றாக இருந்தாலும் அலுக்காமல் நடந்து வந்து விளக்கம் சொல்லி என்னை மலைக்க வைத்தார் டாக்டர் வள்ளி. சாந்தமான அவரது முகமும் கணிவான பேச்சும், இனிய புன்னகையுடன் கூடிய விளக்கமும் மட்டுமன்றி என் மேல் அவர் காட்டிய அன்பும் என்னை அதிகம் கவர்ந்தன.
நாங்கள் பிள்ளையார்பட்டியில் சுவாமி தரிசனம் முடித்து அங்கிருந்து புறப்பட்டு குன்றக்குடி அடிகளாரைச் சந்திக்க குன்றக்குடி மடம் வந்து சேர்ந்தோம். மடத்தின் அருகாமையில் இருக்கும் மடத்திற்குச் சொந்தமான சில கட்டிடங்கள், அருகாமையில் உள்ள சில தனியார் வீடுகள் போன்றவற்றைக் காட்டி அவற்றிற்கான விளக்கங்களையும் தொடர்ந்து அளித்துக் கொண்டே வந்தார் டாக்டர். வள்ளி. இதனைப் பற்றிய பதிவை மண்ணின் குரலில் இங்கே வெளியிட்டுள்ளேன். http:// voiceofthf.blogspot.de/2012/ 02/blog-post_05.html
குன்றக்குடி மடத்தில் மடத்தைச் சார்ந்தோர் எங்களை வரவேற்று அடிகளாரிடம் அழைத்து சென்றனர். முன்னரே காளைராசன் மடத்தில் எங்கள் வருகையைக் குறிப்பிட்டு அறிவித்திருந்தமையால் அடிகளாரைச் சந்தித்து உரையாடுவதில் எந்தச் சிரமமும் எங்களுக்கு ஏற்படவில்லை.
ஏறக்குறைய ஒன்றரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்திருப்போம். அடிகளார் மடத்தின் செயல்பாடுகள், சமூகப்பணிகள் போன்றவற்றை மிகுந்த நட்புடனும் அன்புடனும் எங்களுடன் பரிமாறிக்கொண்டார்கள். த.ம.அ பணிகள் பற்றி நாங்கள் விவரித்தோம். நமது பணிகளைப் பாராட்டியதோடு மேலும் வளர்ச்சி பெற்று இப்பணிகளை நாங்கள் தொடர வேண்டும் என்றும் ஆசி கூறினார்கள்.
இதில் த.ம.அ விற்காகப் பிரத்தியேகப் பேட்டி ஒன்று வேண்டும் என்று கேட்ட போது தயங்காமல் பேட்டியளித்தார். அதனை இரண்டு பகுதிகளாகப் பிரித்து மண்ணின் குரலில் வெளியிட்டிருக்கின்றேன்.
முதல் பகுதி: http://voiceofthf.blogspot. de/2012/01/blog-post.html
இரண்டாம் பகுதி: http://voiceofthf. blogspot.de/2012/03/blog-post_ 10.html
குன்றக்குடி சைவத்திருமடம் சமூகப் பணிகளில் தன்னை முற்றும் முழுதுமாக ஈடுபடுத்திக் கொண்டு மக்கள் நலனுக்காக இயங்கும் ஒரு இயக்கமாகத் திகழ்கின்றது. இதன் சேவைகள் பற்றி மேலும் மேலும் அறிந்து கொள்ளும் போது மனம் மகிழ்ந்தேன். பொது மக்கள் கல்வி மேம்பாடு, கல்வி மையம், சிறு தொழில், விவசாயம், தொழில் முன்னேற்றம், மருத்துவம் என பல வகைகளில் மக்களின் வாழ்க்கை தேவையறிந்து செயல்படும் ஒரு நிறுவனமாகத்தான் இத்திருமடம் உள்ளது.
எனது இளம் வயதில் ஒரு இலக்கிய விழாவில் குன்றக்குடி அடிகளார் (இப்போதைய சுவாமிகளுக்கு முந்தியவர்) அவர்களைச் சந்தித்திருக்கின்றேன். அவரது நீண்ட இனிய தமிழ் சொற்பொழிவை கேட்டது இன்னமும் மனதில் நிலைத்திருக்கின்றது. அவ்ரைப் போலவே தற்போது மடத்தினை நிர்வாகிக்கும் சுவாமிகளும் தமிழ் புலமை நிறைந்த சிறந்த தமிழறிஞராக இருந்து கல்விக்கும் மக்களின் சமூக நலனிற்கும் தொண்டாற்றி வருகின்றார்.
தொடரும்...
அன்புடன்
சுபா
No comments:
Post a Comment