உலகின் மிக அழகான பகுதியில் சில மணி நேரங்களைக் கழிக்க விருப்பமா..? ஒரு சில பெயர்களைத் தான் பட்டியலிடவேண்டும் எனச் சொன்னால்அதில் கண்டிப்பாக சுக்கோத்தை நேஷனல் பார்க் பெயரை நான் குறிப்பிடுவேன். யுனெஸ்கோவினால் பாதுகாக்கப்படும் ஒரு பகுதியாக இது உள்ளது.
இப்பகுதியே 11 லிருந்து ம் 14ம் நூற்றாண்டு வரை மிகப் புகழ்பெற்று விளங்கிய சுக்கோத்தை பேரரசின் தலைநகரமாக விளங்கிய பகுதி. கோட்டை மதில் சுவர் சுற்றி வளைத்து கட்டப்பட்ட ஒரு பகுதி இது . 2 கிமீ தூரம் தூரம் கிழக்கிலிருந்து மேற்கு வரையும் 1.6கிமீ தூரம் வடக்கிலிருந்து தெற்கு வரையும் இந்த மதில் சுவர் சுற்றி வளைத்துள்ள பகுதிக்குள் அடங்கும்.
இந்த நேஷனல் பார்க் உள்ளே வாகனங்கள் செல்ல முடியாது. பயணிகள் பயணிக்க வாடகை சைக்கிள் வண்டிகள் உள்ளன. அல்லது கால்நடையாக செல்லலாம். எது விருப்பமோ அந்த வகையில் இந்தப் பகுதியை சுற்றி வலம் வரலாம். உள்ளே சென்று பார்க்க கட்டணம் தேவை.
எங்கள் பயண வழிகாட்டி எங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு சைக்கில் என ஏற்பாடு செய்து விட்டார். கட்டணமும் முன்னரே கட்டியிருந்தமையால் எல்லோரும் ஒரு இடத்திலிருந்து இணைந்து எங்கள் பயணத்தைத் தொடங்கினோம்.
உள்ளே நுழைந்ததுமே ஒரு சுவர்க்கபுரிக்குள் நுழைந்து விட்ட பிரமிப்பு.
புத்த விகாரைகளின் கலை அழகில் உள்ளே வரும் ஒவ்வொருவரும் மனதைப் பறிகொடுப்பர். அப்படி ஒரு வார்த்தைகளால் விவரிக்க இயலாத அழகு அப்பகுதி.
ஆங்காங்கே பசுமையான புல் தரைகள். அங்கொன்றும் இங்கொன்றுமாக புத்த விகாரைகள். பார்க்கும் இடமெல்லாம் புத்தரின் எழில் மிகு வடிவச் சிலைகள். அமர்ந்த நிலையில்.. நின்ற நிலையில்.. தியான வடிவில்..
மிகப் பெரிதாக.. பெரிதாக.. சிறிதாக.. மிகச் சிறிதாக.. பல் வேறு அளவுகளில்.. பார்க்கும் இடமெல்லாம் புத்தர் சிலைகள்.
இவை மட்டுமா.. ஆங்காங்கே தாமரைக் குளங்கள். அத்தாமரைக் குளங்களில் மலர்ந்திருக்கும் தாமரை மலர்களும் அல்லி மலர்களும் அதீத அழகின் வெளிப்பாடுகள் என்று சொன்னால் அது மிகையில்லை.
13ம் நூற்றாண்டு வாக்கில் சுக்கோத்தை புகழின் உச்சியில் இருந்த காலம். இப்பிராந்தியத்தில் மிக முக்கியமான வர்த்தக மையமாகவும் சுக்கோத்தை விளங்கியது. கைமர் பேரரசின் ஆட்சியும் மிக வலுவுடன் இருந்த காலம் அது. கைமர் அரசின் பலம் கொஞ்சம் கொஞ்சமாக பெருக அது சுக்கோத்தை அரசை பாதிக்கத் தொடங்கியது. சில வரலாற்றாசிரியர்கள் சுக்கோத்தை பேரரசின் பலம் 12ம் நூற்றாண்டு வாக்கிலேயே குறைய ஆரம்பித்தது எனக் குறிப்பிடுகின்றனர்.
சில வரலாற்றாசிரியர்கள் சுக்கோத்தை பேரரசே தாய்லாந்தின் ஒருங்கினைக்கப்பட்ட ஒரு பேரரசு என்ற ஆட்சி நிலையை முதன் முதலில் உருவாக்கியது எனக் குறிப்பிடுகின்றனர். அதற்கு முன் வரை பல சிறிய சிறிய அரசுகள் இன்றைய தாய்லாந்தின் வெவ்வேறு பகுதிகளைத் தனித்தனியாக ஆட்சி செய்து கொண்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
மன்னர் ராம் காம்ஹெங் சுக்கோத்தை நகரை மேலும் மிக விரிவாக்கிப் பெரிதாக்கினார். இம்மன்னனின் ஆட்சிகாலத்தில் வடக்கு மேற்கு தெற்கு கிழக்கு என நால் திசைகளிலும் விரிந்து பரவியது இந்தப் பேரரசு. தேரவாத புத்ததை ஆட்சி சமயமாக அதிகாரப்புர்வ சமயமாகப் பிரகடனப்படுத்தினார் மன்னர்.
இந்த மன்னர் அரசியலில் மட்டும் சாதனை புரியவில்லை. இன்றைய தாய் எழுத்தினை வடிவமைத்து
உருவாக்கியவரும் இந்த மன்னரே. இது 1238ம் ஆண்டில் நிகழ்ந்த ஒரு வரலாற்று முகியத்துவம் வாய்ந்த நிகழ்வு.
இப்படி பல பெருமைகளுடன் செழித்து வளர்ச்சி பெற்று வந்த சுக்கோத்தை அரசு தனது மாட்சியை இழக்கும் துரதிஷ்ட நிலையும் ஏற்பட்டது. அதனை நான் அடுத்த பதிவில் காண்போம்.இப்போது சைக்கிளில் இந்த நேஷனல் பார்க்கை சுற்றி வருவோமே..:-)
1 comment:
வணக்கம் சகோ தங்களை காண வலைச்சரம் வழியாக வந்தேன் இவ்வளவு அழகான விளக்கவுரைகளுடன் பயணக்குறிப்பு அருமை.
நான் காண விரும்பும் நாடுகளில் தாயாலாந்தும் ஒன்று தங்களது பதிவில் இணைத்துக்கொண்டேன்
தங்களுக்கு நேரமிருப்பின் எமது குடிலுக்கும் வருகை தரவும்
நாளை 11.02.2015 எனது பதிவு (Germany Part - 3) காண வருகவென அழைக்கின்றேன்.
அன்புடன்
தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி.
Post a Comment