Friday, February 27, 2015

பாரீசீல் இன்று - விமான நிலைய சம்பவம் 27.2.2015

இன்று மதியம்.. 2 மணி வாக்கில்.. ஒரு வார கால அலுவலக பயணம் முடித்து பாரீசிலிருந்து ஸ்டுட்கார்ட் திரும்ப பாரீஸ் CDG விமான நிலையத்தில் செக் இன் செய்துவிட்டு ஒரு சிறிய உணவகத்தில் சாண்ட்வீச் ஒன்றை வாங்கிக்கொண்டு வந்து ஒரு மேசையில் அமர்ந்து  அலுவலகப் பணிகளை தொடர்ந்து கொண்டிருந்தேன்.

விமான நிலையத்தில்   Free WIFI  இணையத் தொடர்பு கிடைத்ததில் நேரத்தை வீணாக்காமல் சில பணிகளைமுடித்து விடலாம் என மூழ்கியிருந்த வேளையில்..

திடீரெனெ ஒரு பரபரப்பு.

சில காவல் அதிகாரிகள் கையில் நீண்ட துப்பாக்கியை ஏந்தியவண்ணம் மெதுவாக நடந்து வர சில விமான நிலைய  அதிகாரிகள் அவர்களுக்கு முன்னே வந்து கொண்டிருந்தனர். நான் அமர்ந்திருந்த பகுதியில் பலர் இருந்தார்கள். சிலர் சாப்பிட்டுக் கொண்டும்.. குழந்தைகளை மடியில் வைத்து தூங்க வைத்துக் கொண்டும்.. கதை பேசிக் கொண்டும்.. கணினியில் படம் பார்த்துக் கொண்டும் பாட்டு கேட்டுக் கொண்டும் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் தங்கள் உலகில் மூழ்கியிருந்தோம்.

விமான நிலையாதிகாரிகள் எங்கள் பகுதிக்கு வந்து மிக அமைதியாக மிகப் பணிவுடன்.. 'இப்பகுதியை உடனடியாக மூடுகின்றோம். தயவு செய்து காலி செய்யவும்'.  என குறிப்பிட்டனர். வரிசையாக முப்பதுக்கும் மேற்பட்ட காவல் அதிகாரிகள்.. ஒவ்வொருவர் கையிலும் துப்பாக்கி..



வேறு எதுவும் கேட்காமல் ஒவ்வொருவரும் தத்தம் உடமைகளை எடுத்துக் கொண்டு அந்த இடத்தைக் காலி செய்தோம்.  வரிசையாக ஏர்போர்ட் கடைகளுக்குள் சென்று அவர்களிடமும் தெரிவிக்க கடைகளை இழுத்து மூடத்தொடங்கி விட்டனர் ஊழியர்கள்.

சற்று தூரம் நடந்த எனக்கு என்ன விஷயம் என கேட்டு தெரிந்து கொள்வோம் என ஆவல்..

ஒரு அதிகாரியை நெருங்கி ஆங்கிலத்தில் பேசி என்ன நடக்கின்றது.. என விசாரித்தேன்.

நாங்கள் அமர்ந்திருந்த  பகுதிக்கு அருகில் ஒரு பயணப் பை, உரிமையாளரில்லாமல் தனியாக இருந்திருக்கின்றது. அறிவிப்புக்கள் தந்த பின்னரும் யாரும் அதனைக் கோராத நிலையில் இது ஒரு பயங்கரவாத சதித்திட்டத்துடன் தொடர்புடையதாக இருக்கலாமோ என சிலருக்கு ஐயம் வர அதிகாரிகளைத் தொடர்பு கொண்டிருக்கின்றனர். ஆக அந்தப் பையினுள் ஏதேனும் வெடிகுண்டுகள் இருக்கலாம் என்ற ஐயத்தில் அதனை அப்புறப்படுத்த வெடி குண்டு நீக்கும் பணி அதிகாரிகளும் காவல் துறையினரும் வந்து சேர்ந்து விட்டனர்.



இவ்வாண்டு ஜனவரி மாதம்  பாரீசை உலுக்கிய charlie hebdo  விஷம் உடனே ஞாபகத்திற்கு வந்தது. ஏதாவது அசம்பாவிதம் நடக்குமோ என்ற எண்ணம் மனதில் தோன்றாமல் இல்லை.  ஆயினும் காவல் அதிகாரிகள் இருக்கும் தைரியத்தில் செக்க்யூரிட்டி க்ளியரன்ஸ் செய்து விட்டு உள்ளே வந்து விட்டேன். அதனை அடுத்து 2 மணி நேரங்கள் ..   எந்த செய்தியும் கிடைக்கவில்லை..  நான் ஊர் திரும்ப வேண்டிய விமானமும் வந்து சேர களைப்பு மிகுதியுடன்.. கடநத் 5 நாட்களின் கூடுதல் பணிச் சுமை தந்த களைப்பும், அதோடு குளிரும் சேர விமானத்திலேயே தூங்கி விட்டேன்.

இன்றைய பயண அனுபவம் .. இதுவும் ஒரு வித்தியாசமான வகை அனுபவமாகவே அமைந்தது..!

குறிப்பு- என் செல்போனில் எடுத்த புகைப்படங்கள்.

No comments:

Post a Comment