Wednesday, April 22, 2015

விரும்பாமல் சென்று.. விரும்பிய டர்பன்..! -7

பட்டமளிப்பு விழா மதியம் ஒரு மணி வாக்கில் இனிதே முடிவடைந்தது. அதன் பின்னர் சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்த எங்களை எம்டிஎஸ் மண்டபத்தின் முன் பக்கத்தில் இருக்கும் பிரமாண்டமான மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.

உள்ளே நுழையும் போது ஒரு வெள்ளையர்.. கையில் கேமராவுடன் நின்று கொண்டிருந்தவர் என்னைப்பார்த்து நிகழ்ச்சிக்கு வந்த விஐபி யா எனக் கேட்டார். ஆமாம் என்றேன். உடன் இங்கே வாருங்கள் என என் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு போய் வாசலில் இருந்தபெரிய விநாயகர் உருவச் சிலைக்கு முன் ஏற்கனவே அங்கு நின்று கொண்டிருந்த 3 பேருடன் நிற்க வைத்தார். என்ன செய்கின்றார் என முதலில் புரியவில்லை. பின்னர் அங்கு வந்த திரு.மிக்கி செட்டியின் மகள் நிரன், அவர் உள்ளூர் பத்திரிக்கையான  Post  பத்திரிக்கையின் செய்திக்காக படம் பிடிக்க வேண்டும், அதற்காகத்தான் என் விளக்கினார். விஷயம் புரிந்ததும் நானும் அந்த மூவருடன் இணைந்து  கொண்டு புகைப்படத்திற்கு; புன்னகைத்தேன்.

இது முடிந்து உள்ளே சென்றோம். முதல் பகுதியில் இருந்த பெரிய வட்ட மேசைகளில் விருந்தினர்களைப் பொறுப்பாளர்கள் அமர வைத்துக் கொண்டிருந்தனர். நானும் சென்று அவர்கள் காட்டிய பகுதியில் ஏனைய சில நண்பர்களுடன் அமர்ந்து கொண்டேன்.


விருந்தினர்கள்


கலை நிகழ்ச்சிகளுடன் மதிய உணவு என்ற வகையில் ஏற்பாடாகியிருந்தது. மேடையில் பிரமாண்ட உருவத்திலான நர்த்தன விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. சற்றே நேரத்தில் இன்னிசை தொடங்கவிருப்பதற்கான ஆயத்த வேலைகள் தொடங்கின. சரி..  கச்சேரி செய்யவிருக்கின்றார்கள் என நினைத்துக் கொண்டு நண்பர்களுடன் பேச எத்தனிக்கையில் இன்னிசை தொடங்கியது. என்ன ஆச்சரியம்.. தேவாரப் பாடலை மிக நேர்த்தியாக தொடங்கினார் இசைக்கலைஞர் திரு.கதிரேசன். அதன் பின்னர் தொடர்ச்சியாக  சீர்காழி கோவிந்தராசனின் பாடல்கள் எனப் பாடி தமிழிசையால் அந்த மண்டபத்திற்குள் இருந்தோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். அவரோடு அவர் துணைவியார் ஹார்மோனியம் வாசித்துக் கொண்டிருந்தார்கள். இன்னொரு கலைஞரான காமினி அவர்களும் பல அருமையான தமிழ் கீதங்களைத் தொடர்ந்து பாடினார்.


இசைக்கலைஞர் திரு.கதிரேசன், திருமதி.காமினி


ஜனவரி மாதத்தில் மலேசியாவில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மானாட்டில் பெயரளவிற்கும் கூட தொடக்க நிகழ்வில் ஒரு தமிழ்ப்பாடல் இல்லையே என வருந்திய எனக்கு இது மாபெரும் வியப்பை அளித்தது. தென்னாப்பிரிக்க தமிழர்களின் தமிழ் உணர்வு என்னை மகிழ்ச்சியில் திளைக்க வைத்தது என்றே சொல்வேன். இதனை நண்பர்களிடம் சொல்லி என் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டேன்.


நடனக் கலைஞர்


இதனைத் தொடர்ந்து நாட்டிய நிகழ்ச்சி ஆரம்பித்தது. தோடுடைய செவியன் என்ற தேவாரப் பாடலுக்கு அபிநயம் பிடித்தார் ஒரு இளம் மங்கை. மிக நேர்த்தியான நடன அசைவுகள்.  முழு நடனமும் ஒரு சிறு குறையும் சொல்ல முடியாத அளவில்  அத்தனை சிறப்பாக இருந்தது.


எம்டிடிஎஸ் தமிழ் சங்கத் தலைவரும் மண்டபத்தின் உரிமையாளரும் குத்து விளக்கு ஏற்றுகின்றனர்


இதற்கிடையே உணவு பரிமாரப்பட்டது. வந்திருந்த அனைவருக்கும் அன்று மதிய உணவு விருந்து வழங்கப்பட்டது. அன்று அந்த நிகழ்வில் தான் முதன் முதலாக திரு.மிக்கி செட்டியின் மனைவியை சந்தித்தேன். மிக எளிமையாக வந்து பேசினார். அன்று பொதுவாக ஒரு அறிமுகம் என்ற வகையிலேயே எங்கள் அறிமுகம் ஆனது.


திரு.மிக்கி செட்டியின் மகள் நிரன் சான்


சற்று நேரத்தில் சம்போ சிவ சம்போ என்ற பாடல் ஒலிக்க ஒரு இளைஞனும் இளம் பெண்ணும் மேடையில் தோன்றினார்கள். நடனமாடிய அந்த இளம் பெண் நண்பர் திரு.சின்னப்பன் கோகி தம்பதியரின் ஒரே செல்ல மகள் சிவானி. அபாரமான முத்திரைகள். முக பாவனைகள் என என்னை மெய்மறக்கச் செய்தாள் சிவானி. முழு நடனம் முடியும் வரை நடனத்திலேயே என் கருத்தும் கவனமும் இருந்தது. அவ்வளவு லயத்துடன் நடனமாடினாள் சிவானி.



சிவானி இன்னொரு நாட்டியக் கலைஞருடன்
​​
கலை என்பது வாழ்வில் அற்புதமான ஒரு அம்சம். தமிழ் மொழி என்பது பேச்சு வழக்கில் இல்லையென்றாலும் தமிழ் இசை தமிழ் கலை என்ற அளவில் தென்னாப்பிரிக்க மக்களின் இரத்தத்தில் கலந்து இருப்பதை அறிந்து அந்த உணர்வில் என்னை சற்றே மறந்தேன்.

தொடர்வோம்.. டர்பனில்....

சுபா

No comments:

Post a Comment